Saturday, February 22, 2025

P.354 - கன்றாப்பூர் - உம்பனை முப்புரங்கள்

2016-08-18

P.354 - கன்றாப்பூர்

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")


1)

உம்பனை முப்பு ரங்கள் ஒருங்கெரி வீழ ஒற்றை

அம்பினை ஏவி னானை அணிதிகழ் கொன்றை சூடும்

நம்பனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

வம்பவிழ் மலர்கொண் டேத்த வல்வினை மாயு மன்றே.


உம்பனை - மேலானவனை; (உம்பன் - மேலோன்);

முப்புரங்கள் ஒருங்கு எரி வீழ ஒற்றை அம்பினை ஏவினானை - மூன்று கோட்டைகளும் ஒரே சமயத்தில் தீயில் விழும்படி ஓர் அம்பைச் செலுத்தியவனை;

அணிதிகழ் கொன்றை சூடும் நம்பனைக் - அழகிய கொன்றைமலரைச் சூடிய சிவனை; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பன் தன்னை - திருக்கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பன் என்ற நாமம் உடைய ஈசனை;

வம்பு அவிழ் மலர் கொண்டு ஏத்த வல்வினை மாயுமன்றே - மணம் கமழும் மலர்களால் வழிபட்டால் வலிய வினைகள் அழியும்;


2)

வேதனைத் தேவர் போற்றும் விமலனைத் தோடி லங்கு

காதனைச் சடையின் மீது கதிர்மதி அரவம் சூடும்

நாதனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைக்

காதலால் ஏத்து வார்தம் கடுவினை கழலு மன்றே.


வேதனைத் - வேதங்களின் வடிவாயுள்ளவனை, அல்லது வேதங்களை அருளிச்செய்தவனை;

தேவர் போற்றும் விமலனைத் - வானோr வணங்கும் தூயனை; ("வேதனைத்-தேவர்" என்று சேர்த்து, "வருத்தமுற்ற தேவர்கள்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

தோடு இலங்கு காதனை - ஒரு காதில் தோடு அணிந்தவனை;

காதலால் ஏத்துவார்தம் - அன்பால் துதிப்பவர்களது;

கடுவினை கழலுமன்றே - கொடிய வினைகள் நீங்கும்; (கடுமை - கொடுமை); (கழல்தல் - நீங்குதல்);


3)

வானவர் தமக்கி ரங்கி வார்கடல் நஞ்சு தன்னைப்

போனகம் செய்த கோனைப் புனிதனை ஆல நீழல்

ஞானனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தேனலர் தூவி வாழ்த்தத் தீவினை தீரு மன்றே.


போனகம் செய்தல் - உண்ணுதல்; (போனகம் - உணவு);

வார்-கடல் - நீண்ட கடல்;

ஆல-நீழல் ஞானனை - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை; (ஞானன் - ஞானவடிவினன்);

தேன்-அலர் - வாசமலர்கள்;


4)

மட்டினை யுடையம் பெய்த மதனுடல் நீறு செய்த

சிட்டனை ஊணி ரக்கும் செல்வனை இருளில் ஆடும்

நட்டனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

இட்டமாய் ஏத்து வார்தம் இருவினை மாயு மன்றே.


மட்டினையுடை அம்பு எய்த - வாசனை உடைய அம்பினை (மலர்க்கணையை) எய்த; (மட்டு - வாசனை; தேன்);

மதன் உடல் நீறு செய்த சிட்டனை - மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய மேலானவனை; (மதன் - காமன்); (சிட்டன் - சிஷ்டாசாரம் உடையவன்; சிரேஷ்டன்);

ஊண் இரக்கும் செல்வனை - உணவை யாசிக்கும் செல்வனை; (ஊண் - உணவு);

இருளில் ஆடும் நட்டனை - இருளில் ஆடுகின்ற கூத்தனை;

இட்டம் - இஷ்டம்; விருப்பம்;


5)

தக்கனைத் தலைய ரிந்த தலைவனை ஆல வாயிற்

சொக்கனை அக்க ணிந்த தூயனைப் பலிதி ரிந்த

நக்கனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தக்கநன் மலரிட் டேத்தித் தாழ்பவர் தாழ்வி லாரே.


தக்கனைத் தலை அரிந்த தலைவனை - தக்கன் வேள்வியை அழித்து அவன் தலையை வெட்டிய தலைவனை;

ஆலவாயிற் சொக்கனை - மதுரையில் உறையும் சொக்கப்பெருமானை;

அக்கு அணிந்த தூயனைப் - எலும்பை மாலையாக அணிந்த தூயவனை;

பலி திரிந்த - பிச்சை ஏற்றுத் திரிந்த;

நக்கன் - திகம்பரன்;

தக்க நன்-மலர் இட்டு ஏத்தித் தாழ்பவர் தாழ்வு இலாரே - தகுந்த நல்ல பூக்களைத் தூவி வணங்கும் அடியவர்களுக்கு ஒரு குறையும் இல்லை; (தாழ்வு - குற்றம்; துன்பம்; வறுமை);


6)

வில்லென மலையை ஏந்தி மேவலர் எயில்கள் எய்ய

வல்லனை அடிய வர்க்கா வன்னமன் தனையு தைத்த

நல்லனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைச்

சொல்லிநை கின்ற அன்பர் தொல்வினை தொலையு மன்றே.


மேவலர் எயில்கள் எய்ய வல்லனை - பகைவர்களது முப்புரங்களை எய்த விரனை; (மேவலர் - பகைவர்); (எயில் - கோட்டை); (வல்லன் - வல்லவன் - ஆற்றல் உடையவன்);

அடியவர்க்கா வன்-நமன்-தனை உதைத்த நல்லனை - மார்க்கண்டேயருக்காகக் கொடிய கூற்றுவனை உதைத்த நல்லவனை;

சொல்லி நைகின்ற அன்பர் தொல்வினை தொலையுமன்றே - போற்றி உள்ளம் உருகுகின்ற பக்தர்களது பழவினைகள் அழியும்;


7)

பதியென உம்பர் போற்றும் பரமனை ஈறி லாத

நிதியனைத் தோளில் தூய நீற்றனைச் சென்னி மீது

நதியனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

துதிசெயும் அன்பர் தங்கள் தொல்வினை தொலையு மன்றே.


பதி என உம்பர் போற்றும் பரமனை - தலைவன் என்று தேவர்களால் போற்றப்படும் பரமனை;

ஈறு இலாத நிதியனை - முடிவில்லாத அருள்நிதியை; அளவில்லாத திரு உடையவனை;

தோளில் தூய நீற்றனை - புஜங்களில் தூய திருநீற்றைப் பூசியவனை;

சென்னிமீது நதியனை - கங்காதரனை;

தொல்வினை - பழவினை;


8)

தூயனை இகழ்ந்து வெற்பைத் தூக்கினான் தனைநெ ரித்த

தேயனை அந்தி வான்போல் செய்யனைத் தேவர் கட்கு

நாயனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தூயநன் மலர்கொண் டேத்தத் தொல்வினை தொலையு மன்றே.


தூயன் - தூயவன்; புனிதன்;

இகழ்ந்து வெற்பைத் தூக்கினான்-தனை நெரித்த - ஏசிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கிய; (வெற்பு - மலை);

தேயன் - தியானிக்கப்படுபவன்;

அந்தி-வான் போல் செய்யனை - மாலை-நேரத்து வானம் போலச் செம்மேனி உடையவனை; (செய் - செம்மை);

தேவர்கட்கு நாயனை - தேவர்களுக்குத் தலைவனை; (நாயன் - தலைவன்; கடவுள்);


9)

அம்புய னோடு மாலும் அடிமுடி நேடி வாடி

எம்பிரான் என்று போற்ற எல்லையில் எரிய தான

நம்பியைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைக்

கும்பிடும் அன்பர் தங்கள் கொடுவினை தீரு மன்றே.


அம்புயன் - தாமரையில் உறையும் பிரமன்;

நேடி - தேடி;

எம் பிரான் - எம் தலைவன்;

எல்லை இல் எரிஅது ஆன நம்பியை - அளவு இல்லாத சோதி ஆகிய ஈசனை; (நம்பி - ஆணிற் சிறந்தவன்; கடவுள்);


10)

நெஞ்சினில் இருளை வைத்த நீசர்சொல் உரைகொள் ளேன்மின்

வெஞ்சின ஏற தேறும் விமலனை மிடறு தன்னில்

நஞ்சனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

வஞ்சனை இன்றி வாழ்த்த வல்வினை மாயு மன்றே.


நீசர் சொல் உரை கொள்ளேன்மின் - கீழோர் சொல்லும் சொற்களை நீங்கள் மதிக்கவேண்டா;

வெஞ்-சின ஏறுஅது ஏறும் விமலனை - கொடிய கோபம் உடைய இடபத்தை வாகனமாக உடைய, தூயனை;

மிடறு தன்னில் நஞ்சனை - கண்டத்தில் விடத்தை மறைத்தவனை;


11)

வாசனை மிக்க கொன்றை மலரணி சடையி னானைத்

தேசனைத் ஈசன் தன்னைச் செருக்குடைத் தக்கன் வேள்வி

நாசனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைப்

பூசனை செய்வார்க் கில்லை புவிமிசைப் பிறவி தானே.


தேசனை - ஒளிவடிவினனை;

செருக்குடைத் தக்கன் வேள்வி நாசனை - ஆணவம் மிக்க தக்கன் செய்த வேள்வியை அழித்தவனை;

பூசனை செய்வார்க்கு இல்லை புவிமிசைப் பிறவிதானே - வழிபடும் பக்தர்கள் இம்மண்ணுலகில் மீண்டும் பிறவாத நிலை பெறுவார்கள்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment