Tuesday, May 6, 2025

P.406 - புகலூர் - கொடியில் எருதையுடை

2017-07-24

P.406 - புகலூர்

---------------------------------

(நாலடிமேல் ஈரடி வைப்பு - யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க)

முற்குறிப்புகள்:

1. படிப்போர் வசதிக்காகப் பாடல்களில் சில இடங்களில் சீர்களிடையே புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. புணர்ச்சியைக் கருத்திற்கொண்டு நோக்கினால் இப்பாடல்களில் சந்தம் கெடாமையை அறியலாம். உதாரணம்: அடிகள் அரவினொடு = அடிக ளரவினொடு; முடியில் நிலவுபுனை = முடியி னிலவுபுனை;

2. மேல்வைப்பாக வரும் இரண்டு அடிகளின் பொருளை முதற்பாடலின் விளக்கத்தில் காண்க. மற்றப் பாடல்களிலும் அதே மேல்வைப்பு அடிகளே வருகின்றன.


1)

கொடியில் எருதையுடை

அடிகள் அரவினொடு

முடியில் நிலவுபுனை ஈசன்

நெடிய கயிலைமலை வாசன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


கொடியில் எருதையுடை அடிகள் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய கடவுள்;

அரவினொடு முடியில் நிலவு புனை ஈசன் - திருமுடிமேல் பாம்பையும் திங்களையும் அணிந்த ஈசன்;

நெடிய கயிலைமலை வாசன் - உயர்ந்த கயிலைமலையில் உறைபவன்;

அரன் ஊர் அணி ஆர் புகலூரே - ஹரன் என்ற திருநாமம் உடைய சிவபெருமான் உறையும் தலம் அழகிய திருப்புகலூர்; (அணி - அழகு);

பரவிப் பணிவார் கவலாரே - அப்பெருமானைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்குக் கவலை இல்லை; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);


2)

குயிலை அனையமொழி

கயலை அனையவிழி

மயிலை அனையவுமை பங்கன்

கயிலை மலையிலுறை துங்கன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


குயிலை அனைய மொழி, கயலை அனைய விழி, மயிலை அனைய உமை பங்கன் - குயில் போன்ற இன்மொழியும் கயல்மீன் போன்ற கண்ணும், மயில் போன்ற சாயலும் உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்; (அனைய - ஒத்த);

கயிலைமலையில் உறை துங்கன் - கயிலைமலைமேல் உறைகின்ற பெரியோன்; (துங்கன் - உயர்ந்தவன்; பெரியோன்);


3)

கடலில் எழுகொடிய

விடமும் அமுதமென

மிடறு கருகவுண வல்லான்

கடையும் முதலுமவன் நல்லான்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


கடலில் எழு கொடிய விடமும் அமுதம் என, மிடறு கருக உண வல்லான் - பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சையும் அமுதம் என்று, கண்டம் கறுக்கும்படி உண்ண வல்லவன்;

கடையும் முதலும் அவன் நல்லான் - அந்தமும் ஆதியும் ஆனவன், நல்லவன்;


4)

கால காலனொரு

சூலம் ஏந்துமிறை

ஆல நீழலமர் அண்டன்

நீல வண்ணமணி கண்டன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


காலகாலன் - காலனுக்குக் காலன் ஆனவன்;

ஒரு சூலம் ஏந்தும் இறை - சூலபாணி;

ஆல-நீழல் அமர் அண்டன் - கல்லாலின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;

நீல வண்ணமணி கண்டன் - நீலநிற மணி திகழும் கண்டத்தை உடையவன்; (வண்ணமணி - 1. வண்ண மணி; / 2. வண்ணம் அணி);


5)

ஆற்றை அஞ்சடையில்

ஏற்ற முக்கணிறை

கூற்று மாளவுதை காலன்

ஏற்றன் ஆருலவு சூலன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


ஆற்றை அம்-சடையில் ஏற்ற முக்கண்-இறை - கங்கையை அழகிய சடையில் ஏற்ற முக்கட்பெருமான்;

கூற்று மாள உதை காலன் - நமனைக் காலால் உதைத்து அழித்தவன்;

ஏற்றன், ஆர் உலவு சூலன் - இடப-வாகனன்; கூர்மை பொருந்திய சூலத்தை உடையவன்; (ஆர் - கூர்மை);


6)

வம்பு வாளிமதன்

அம்பொன் ஆகமெரி

நம்பன் நீறுபுனை தூயன்

உம்பர் ஏத்துகயி லாயன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


வம்பு-வாளி மதன் அம்பொன் ஆகம் எரி நம்பன் - வாசனை மிக்க அம்புகளை உடைய மன்மதனது உடலை எரித்த சிவபெருமான்; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு ); (ஆகம் - உடல்); (அம்பொனாகமெரி - சந்தம் கருதி ன் மிகாது வந்தது);

நீறு புனை தூயன் - திருநீற்றை அணியும் தூயவன்;

உம்பர் ஏத்து கயிலாயன் - தேவரெல்லாம் வழிபடும் கயிலைமலை நாதன்;


7)

காடு வாழுமிறை

சூடு மாலையென

ஆடு நாகமணி தேவன்

பாடு நாலுமறை நாவன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


காடு வாழும் இறை - சுடுகாட்டில் இருக்கும் இறைவன்;

சூடு-மாலை என ஆடு-நாகம் அணி தேவன் - சூடுகின்ற மாலையாக, அசைகின்ற பாம்பை அணிந்த தேவன்;

பாடு நாலுமறை நாவன் - நால்வேதத்தைப் பாடிய திருநாவன்;


8)

மலையை எறிசிதடன்

அலற விரலையிடு

தலைவன் அரையிலதள் ஆர்த்தான்

தலையில் அரவுமதி சேர்த்தான்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


மலையை எறி-சிதடன் அலற விரலை இடு தலைவன் - கயிலைமலையைப் பெயர்த்து வீசியெறிய முயன்ற அறிவிலியான இராவணன் அலறும்படி தன் திருப்பாத-விரலை ஊன்றிய தலைவன்; (சிதடன் - அறிவிலி; குருடன்; பித்தன்);

அரையில் அதள் ஆர்த்தான் - அரையில் தோலைக் கட்டியவன்; (அதள் - தோல்); (ஆர்த்தல் - கட்டுதல்);

தலையில் அரவு மதி சேர்த்தான் - திருமுடிமேல் பாம்பையும் திங்களையும் ஒன்றாக வாழவைத்தவன்;


9)

கரியின் உரிவைபுனை

பெரியன் இருவரெதிர்

எரியின் உருவினொடு சென்றான்

அரிய அடிபணிய நின்றான்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


கரியின் உரிவை புனை பெரியன் - ஆனைத்தோலைப் புனையும் பெரியவன்;

இருவர் எதிர் எரியின் உருவினொடு சென்றான் - திருமால் பிரமன் இவர் இருவர்முன் ஜோதி வடிவினில் சென்றவன்;

அரிய அடி பணிய நின்றான் - அவ்விருவரும் அவர்களால் அறிதற்கு அரிய திருவடியைப் பணியுமாறு ஓங்கி நின்றவன்;


10)

வஞ்ச நெஞ்சருரை

நஞ்சை நீங்கிடுமின்

அஞ்சல் என்றருளும் அத்தன்

குஞ்சி மீதுமத மத்தன்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


வஞ்ச நெஞ்சர் உரை நஞ்சை நீங்கிடுமின் - மனத்தில் வஞ்சத்தை வைத்தவர்கள் சொல்லும் விஷம் கலந்த பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;

அஞ்சல் என்று அருளும் அத்தன் - அடியவர்களுக்கு அபயம் அருள்கின்ற தந்தை;

குஞ்சி மீது மதமத்தன் - திருமுடிமேல் மணம் மிக்க ஊமத்தமலரை அணிந்தவன்; (குஞ்சி - தலை; ஆண்களின் தலைமயிர்);


11)

மணியை மிடறுதனில்

அணியும் இறைமுதுமை

பிணிகள் இலனுவமன் இல்லான்

திணிய மலையுமொரு வில்லான்

.. அரனூர் அணியார் புகலூரே

.. பரவிப் பணிவார் கவலாரே.


மணியை மிடறுதனில் அணியும் இறை - கண்டத்தில் நீலமணியை அணியும் இறைவன்;

முதுமை பிணிகள் இலன் - மூப்பும் பிணியும் இல்லாதவன்; (பிணி - நோய்; பந்தம்);

உவமன் இல்லான் - உவமை அற்றவன்;

திணிய மலையும் ஒரு வில்லான் - உறுதிமிக்க மேருமலையையும் ஒரு வில்லாக ஏந்தியவன்; (திணிய - திண்ணிய);



பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:

1. நாலடிமேல் ஈரடி வைப்பு -

முதல் நாலடிகள் ஓர் எதுகை. அடுத்த ஈரடிகள் ஓர் எதுகை.

தனன தனதனன

தனன தனதனன

தனன தனதனன தானா

தனன தனதனன தானா

.. தனனா தனனா தனதானா

.. தனனா தனனா தனதானா

என்ற சந்தம்.

"தனன தனதனன" என்ற அமைப்பு "தான தானதன" என்று சில பாடல்களில் வரும்.

அடி-3 அடி-4 இவற்றில் அடி ஈற்றில் இயைபுத் தொடையும் அமைந்தது.

மேல்வைப்பாக வரும் ஈரடிகளான அடி-5 அடி-6 இவற்றில் அடி ஈற்றில் இயைபுத் தொடையும் அமைந்தது.


2. இந்தப் பாடலின் முதல் மூன்று அடிகளின் சந்தத்தைச் சேர்ந்து ஒரே அடி போல நோக்கினால் - "தனன தனதனன தனன தனதனன தனன தனதனன தானா" - என்ற சந்தம் உடைய அடி அமைப்பு - வடமொழி யாப்பில் "வனலதிகா" - vanalatikA - என்று வழங்கப்பெறுகின்றது.

3. சிருங்கேரி சங்காராசாரியர் - பாரதி தீர்த்தர் இயற்றிய ஒரு விஷ்ணு துதி -

கருட கமன தவ சரண கமல மிஹ மனஸி லஸது மம நித்யம் ||

.. மம தாபமபாகுரு தேவ

.. மம பாபமபாகுரு தேவ ||

இதன் ஓர் ஒலிவடிவம்: https://www.youtube.com/watch?v=lIRiG6DKT9o


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.041 - மனமே நீ மிருகங்கள்

2017-07-22

V.041 - "மனத்துக்கு ஒரு மடல்"

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


1)

மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த

வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்

இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்

தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?


வனமே, இனமே - இவற்றில் ஏ - வினா ஏகாரம்;

கேட்டல் - 1. செவிக்குப் புலனாக்குதல்; 2. ஏற்றுக்கொள்ளுதல்;


2)

பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற

குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்

நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா

வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!


காத்தல் - 1. பாதுகாத்தல்; 2. அனுஷ்டித்தல்;

திரிதல் - உழல்தல்; குணம் கெடுதல்;

வீழ்தல் - விழுதல்;

நிணம் - மாமிசம்; இங்கே உடலைக் குறித்தது;

நரகு அடையா-வணம் காக்கும் - நரகத்தில் வீழாதபடி காக்கின்ற;


3)

மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்

பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!

வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்

கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!


மாற்றுமனம் - Mind replacement;

வந்திலையே - வரவில்லையே;

பொருதுதல் - போரிடுதல்;

மாற்றத்தை - வார்த்தையை; (மாற்றம் - வார்த்தை; பரிகாரம்);

நல்லார் கருத்து உறையும் கருத்தன் அவன் கழல் வாழ்த்தக் கற்று உய்யாய் - நல்லவர்கள் சிந்தையில் உறைகின்ற தலைவனான சிவபெருமான் திருவடியை வாழ்த்தக் கற்று உய்வாயாக; (கருத்தன் - கர்த்தா - தலைவன்);


4)

காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்

நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்

தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்

சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!


காமம் - ஆசை;

புணை - தெப்பம்;

தாமம் - கயிறு; மாலை; வடம்;

சேமம் - க்ஷேமம் - இன்பம்; நல்வாழ்வு;


5)

ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,

இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி

இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!

வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!


ஒரு போதன் - ஒப்பற்ற ஞானவடிவினன்;

இருபோதும் - 1. இரண்டு பொழுதிலும்; 2. இருப்பாயாக; அதுவே போதும்;

ஒருபோதும் இடர் இல்லை - என்றும் துன்பம் இல்லை;

வருகாலம் - வினைத்தொகை - எதிர்காலம்;


6)

கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு,

"சுடலையென்றும் பிரியாதாய் துணை"யென்று சுரர்வேண்ட,

நடலையின்றி உண்டருள்செய் நம்பா,என் மனத்துக்கோர்

மடலையின்று வரைந்தேன்,இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!


கடைந்தக்கால் - கடைந்தபொழுது;

கடுநஞ்சம் - கொடிய விஷம்;

சுடலை - சுடுகாடு;

நடலை - வஞ்சம்; பொய்; துன்பம்;

நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - விரும்பப்படுபவன்; விரும்பத்தக்கவன்;

மடல் - ஏடு; ஓலை;

வரைதல் - எழுதுதல்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.405 - ஆலவாய் (மதுரை) - பொங்கராத் தாரென

2017-07-03

P.405 - ஆலவாய் (மதுரை)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(வடமொழி யாப்பில் - ஸ்ரக்விணீ (sragviNI - स्रग्विणी ) என்ற பெயருடைய சந்தம்)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமார் அகிலொடு")

(அச்யுதாஷ்டகம் - "அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்")


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

பொங்கராத் தாரெனப் பூண்டவன் போற்றினார்

தங்களைக் காத்திடும் சங்கரன் மான்விழி

மங்கையோர் பங்கினான் வானிலாச் சூடினான்

அங்கையில் தீயினான் ஆலவாய் ஐயனே.


பொங்கு-அராத் தார் எனப் பூண்டவன் - சீறும் பாம்பை மாலையாக அணிந்தவன்;

போற்றினார்-தங்களைக் காத்திடும் சங்கரன் - வணங்கும் அன்பர்களைக் காக்கின்ற சங்கரன்;

மான்விழி மங்கை ஓர் பங்கினான் - மான் போன்ற பார்வையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;

வான்-நிலாச் சூடினான் - வானத்தில் விளங்கும் அழகிய வெண்-திங்களைச் சூடியவன்; (வானிலா = 1. வான் நிலா; 2. வால் நிலா); (வான் - வானம்; அழகு); (வால் - வெண்மை);

அங்கையில் தீயினான் - கையில் நெருப்பை ஏந்தியவன்;

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


2)

ஏறுமோர் ஊர்தியா ஏறினான் எம்பிரான்

நாறுபூங் கொன்றையான் நாரியோர் கூறினன்

நீறுசேர் மேனியான் நெற்றியிற் கண்ணினான்

ஆறுசேர் வேணியான் ஆலவாய் ஐயனே.


ஏறும் ஓர் ஊர்தியா ஏறினான் எம்பிரான் - இடபத்தையும் ஒப்பற்ற வாகனமாக விரும்பி ஏறியவன் எம் தலைவன்; (ஊர்தியா - ஊர்தியாக);

நாறு-பூங்கொன்றையான் - மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவன்;

நாரி ஓர் கூறினன் - உமையை ஒரு கூறாக உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.112.3 - "மங்கைகூறினன்");

நீறு சேர் மேனியான் - திருமேனிமேல் திருநீற்றைப் பூசியவன்;

நெற்றியில் கண்ணினான் - நெற்றிக்கண்ணன்;

ஆறு சேர் வேணியான் - கங்கையைச் சடையில் தரித்தவன்; (வேணி - சடை);

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


3)

பூதியார் மார்புமேற் பூணநூல் தாங்கினான்

பாதியோர் பெண்ணினான் பாரிடம் கொள்ளியைச்

சோதியென் றேந்திடும் போதினிற் கூத்தினன்

ஆதியாய் அந்தமாம் ஆலவாய் ஐயனே.


பூதி ஆர் மார்புமேல் பூணநூல் தாங்கினான் - திருநீறு திகழும் மார்பின்மேல் பூணூல் அணிந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.121.5 - "பொறிகிளர் பூணநூல் புரள");

பாதி ஓர் பெண்ணினான் - உமைபங்கன்;

பாரிடம் கொள்ளியைச் சோதி என்று ஏந்திடும் போதினில் கூத்தினன் - பூதகணங்கள் கொள்ளியை விளக்காக ஏந்திடும் இருளில் திருநடம் செய்பவன்; (சோதி - விளக்கு);

ஆதிஆய் அந்தம் ஆம் ஆலவாய் ஐயனே - முதல் ஆகி முடிவும் ஆகின்றவன், திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


4)

வெங்கரித் தோலினைப் போர்த்தவன் வேதமும்

அங்கமும் பாடினான் ஆலநீ ழற்பிரான்

அங்கயற் கண்ணியோர் பங்கினான் ஆரமா

அங்கமும் பூண்டவன் ஆலவாய் ஐயனே.


வெங்கரித் தோலினைப் போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவன்;

வேதமும் அங்கமும் பாடினான் - நால்வேதங்களையும் ஆறு-அங்கங்களையும் ஓதியவன்;

ஆலநீழல் பிரான் - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;

அங்கயற்கண்ணி ஓர் பங்கினான் - மீனாட்சியை ஒரு பங்காக உடையவன்;

ஆரமா அங்கமும் பூண்டவன் - எலும்பையும் மாலையாக அணிந்தவன்; (ஆரம் - மாலை); (அங்கம் - எலும்பு);

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


5)

ஏகனாய் நின்றவன் வேகமார் ஏற்றினன்

நாகநாண் வீக்கினான் நம்பினார் நற்றுணை

பாகமோர் பாவையான் பார்வையால் மன்மதன்

ஆக(ம்)நீ றாக்கினான் ஆலவாய் ஐயனே.


ஏகனாய் நின்றவன் - ஒருவன் ஆனவன்; (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - அடி-5 - "ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க");

வேகம் ஆர் ஏற்றினன் - விரைந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவன்; (அப்பர் தேவாரம் - 4.66.8 - "வேகமார் விடையர் போலும்");

நாக-நாண் வீக்கினான் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (வீக்குதல் - கட்டுதல்);

நம்பினார் நற்றுணை - விரும்பி வழிபடும் அடியவர்களுக்கு நல்ல துணை; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);

பாகம் ஓர் பாவையான் - பெண்ணை ஒரு பாகத்தில் வைத்தவன்;

பார்வையால் மன்மதன் ஆகம் நீறு ஆக்கினான் - நெற்றிக்கண்ணால் பார்த்துக் காமனது உடலைச் சாம்பலாக்கியவன்;

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


6)

காரணன் காமனைக் கண்ணினாற் காய்ந்தவன்

வாரணங் கொன்றுதோல் மார்புறப் போர்த்தவன்

ஆரணங் கொன்றிடும் பூரணன் புண்ணியன்

ஆரணம் பாடினான் ஆலவாய் ஐயனே.


காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணம் ஆனவன்;

காமனைக் கண்ணினால் காய்ந்தவன் - மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தவன்;

வாரணம் கொன்று தோல் மார்பு உறப் போர்த்தவன் - யானையைக் கொன்று அதன் தோலை மார்பில் படும்படி போர்வையாகத் தரித்தவன்;

ர்-அணங்கு ஒன்றிடும் பூரணன் - (ஆரணங்கு =) அரிய தெய்வமாகிய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன், நிறைவானவன்; (அப்பர் தேவாரம் - 5.18.9 - "காரணன் கடம்பந்துறை மேவிய ஆரணங்கொரு பாலுடை மைந்தனே");

புண்ணியன் - புண்ணிய வடிவினன்;

ஆரணம் பாடினான் - வேதங்களைப் பாடியவன்; (ஆரணம் - வேதம்);

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


7)

என்பரா மாலையான் எண்ணிலாப் பேரினான்

தென்பரங் குன்றினான் தீயினார் அம்பினால்

முன்புரஞ் சுட்டவன் மூப்பிலான் முன்னிடும்

அன்பருக் கன்பினான் ஆலவாய் ஐயனே.


என்பு அரா மாலையான் - எலும்பையும் பாம்பையும் மாலையாக அணிந்தவன்;

எண்-இலாப் பேரினான் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;

தென்-பரங்குன்றினான் - அழகிய திருப்பரங்குன்றத்தில் உறைபவன்;

தீயின் ஆர் அம்பினால் முன் புரம் சுட்டவன் - தீப் பொருந்திய ஒரு கணையால் முன்பு முப்புரங்களை எரித்தவன்;

மூப்பு இலான் - என்றும் இளமையோடு இருப்பவன்;

முன்னிடும் அன்பருக்கு அன்பினான் - தியானிக்கும் அன்பர்களுக்கு அன்பு உடையவன்; (முன்னுதல் - கருதுதல்; நினைதல்);

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


8)

மாமலைக் கீழிலங் கைக்குமன் வாடவே

தூமலர்த் தாள்விரல் வைத்தவன் தோத்திரம்

நாமமே பாடவாள் நல்கினான் தாலியா

ஆமைசேர் மார்பினான் ஆலவாய் ஐயனே.


மாமலைக்கீழ் இலங்கைக்கு மன் வாடவே - இலங்கைக்கு அரசனான இராவணன் கயிலைமலையின் கீழே வருந்தும்படி; (மன் - அரசன்);

தூ-மலர்த்தாள்-விரல் வைத்து - தூய மலர் போன்ற திருவடியின் விரல் ஒன்றை ஊன்றி (நசுக்கி);

அவன் தோத்திரம் நாமமே பாட வாள் நல்கினான் - (பின்) அந்த இராவணன் ஈசனது துதிகளையும் திருநாமத்தையும் பாடக் கேட்டு அவனுக்கு ஒரு வாளையும் கொடுத்தவன்;

தாலியா ஆமை சேர் மார்பினான் - மார்பில் ஆமையோட்டினைத் தாலியாக அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.53.5 - "மருப்பும் ஆமைத் தாலியார்");

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


9)

மூத்தவன் மாலயன் வாழ்த்துமோர் தீத்திரள்

பார்த்தனைக் காக்கவோர் பன்றியைக் கொன்றவன்

தீர்த்தமார் செஞ்சடைச் சேவகன் நாகநாண்

ஆர்த்தமா வில்லினான் ஆலவாய் ஐயனே.


மூத்தவன் - மிகத் தொன்மையானவன்;

மால் அயன் வாழ்த்தும் ஓர் தீத்திரள் - திருமாலும் பிரமனும் போற்றிய ஒப்பற்ற தீப்பிழம்பு;

பார்த்தனைக் காக்க ஓர் பன்றியைக் கொன்றவன் - பன்றி உருவில் வந்த மூகாசுரனைக் கொன்று அர்ஜுனனைக் காத்தவன்;

தீர்த்தம் ஆர் செஞ்சடைச் சேவகன் - கங்கையைச் சிவந்த சடையில் தாங்கியவன், வீரன்; (தீர்த்தம் - பரிசுத்தம்; நீர்); (சேவகன் - வீரன்);

நாக-நாண் ஆர்த்த மா-வில்லினான் - மேருமலையைப் பெரிய வில்லாக வளைத்து அவ்வில்லில் வாசுகி என்ற நாகத்தை நாணாகக் கட்டியவன்;

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


10)

பொக்கமார் நெஞ்சினார் பொய்களைத் தள்ளுமின்

முக்கணா மூவரின் முந்தினாய் என்றிடத்

துக்கமார் பாவ(ம்)மாய் தூயவன் சுந்தரன்

அக்கணிந் தாடுவான் ஆலவாய் ஐயனே.


பொக்கம் ஆர் நெஞ்சினார் பொய்களைத் தள்ளுமின் - வஞ்சம் நிறைந்த நெஞ்சத்தினர் சொல்லும் பொய்ம்மொழிகளை நீங்கள் மதிக்கவேண்டா; (பொக்கம் - வஞ்சகம்; குற்றம்);

"முக்கணா, மூவரின் முந்தினாய்" என்றிடத் - "முக்கண்ணனே, மூவரினும் மேலானவனே" என்று வாழ்த்தினால்;

துக்கம் ஆர் பாவம் மாய் தூயவன் - துக்கம் விளைக்கும் வல்வினைகளை அழித்தருளும் நிர்மலன்; (ஆர்த்தல் - பிணித்தல்); (ஆர்தல் - நிறைதல்); (மாய்த்தல் - அழித்தல்);

சுந்தரன் - அழகன்; சொக்கன்;

அக்கு அணிந்து ஆடுவான் - எலும்பை அணிந்து திருநடம் செய்பவன்; (அக்கு - எலும்பு);

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


11)

கோளரா கூவிளம் கொன்றையார் வேணியன்

காளகண் டத்தினன் காதலார் நெஞ்சினால்

நீளவும் போற்றினார் நீரினாற் சூழ்ந்தபார்

ஆளநல் கெம்பிரான் ஆலவாய் ஐயனே.


கோள்-அரா, கூவிளம், கொன்றை ஆர் வேணியன் - கொடிய பாம்பு, வில்வம், கொன்றை இவற்றைச் சடையில் அணிந்தவன்; (கோள் - கொடிய); (கூவிளம் - வில்வம்);

காள-கண்டத்தினன் - நீலகண்டன்;

காதல் ஆர் நெஞ்சினால் நீளவும் போற்றினார் நீரினால் சூழ்ந்த பார் ஆள நல்கு எம்பிரான் - பக்தி நிறைந்த நெஞ்சத்தால் இடைவிடாது வழிபடும் அன்பர்கள் கடல் சூழ்ந்த உலகத்தை ஆளுமாறு அவர்களுக்கு அருள்புரியும் எம்பெருமான்;

ஆலவாய் ஐயனே - திருஆலவாயில் உறைகின்ற தலைவனான சிவபெருமான்;


பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" என்ற சந்தம்.

வடமொழி யாப்பில் "ஸ்ரக்விணீ" (sragviNI - स्रग्विणी ) என்ற பெயரில் அழைக்கப்பெறும் சந்தம்; அடிதோறும் "குரு-லகு-குரு" என்ற அமைப்பு நான்கு முறை வரும்.

தேவாரத்தில் - சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்"; சம்பந்தர் தேவாரம் - 3.33.3 - தாமலார் போலவே தக்கனார் வேள்வியை"


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Wednesday, April 30, 2025

P.404 - கடவூர் - காத ஓடிவரு வன்னமன்

2017-06-17

P.404 - கடவூர்

---------------------------------

(சந்தக் கலித்துறை - தானதான தனதானன தானன தானா தனதானா;

அறுசீர்ச் சந்தவிருத்தம் என்றும் நோக்கலாம்;

சில பாடல்களில் முதற்சீர் "தனனதான" என்றும் வரலாம்);

(சம்பந்தர் தேவாரம் - 1.2.1 - "குறிகலந்தவிசை பாடலினான்நசை")

(சம்பந்தர் தேவாரம் - 1.2.3 - "பண்ணிலாவும் மறைபாடலினான்")


1)

காதஓடி வருவன்னமன் மாள்வுற அன்று கழலார்க்கப்

பாதம்வீசி அடியாருயிர் காத்தவர் பாம்பைப் புனைமார்பர்

மாதராளை ஒருபாலுடை மேனியர் மன்னும் இடமென்பர்

காதலாளர் கருதித்தொழு தேத்திட ஆரும் கடவூரே.


காத ஓடி வரு வன்-நமன் மாள்வுற அன்று கழல் ஆர்க்கப் பாதம் வீசி அடியார் உயிர் காத்தவர் - கொல்ல ஓடி வந்த கொடிய வலிய கூற்றுவனே மாளுமாறு அச்சமயத்தில் திருப்பாதத்தை வீசி மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; (காதுதல் - கொல்தல்);

பாம்பைப் புனை மார்பர் - பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவர்;

மாதராளை ஒருபாலுடை மேனியர் மன்னும் இடம் என்பர் - உமையை ஒரு பக்கத்தில் உடைய திருமேனியர் உறையும் தலம் ஆவது;

காதலாளர் கருதித் தொழுது ஏத்திட ஆரும் கடவூரே - அன்பர்கள் விரும்பித் தொழுது போற்றிட நிறையும் திருக்கடவூர்;


2)

நடலையின்றி அடிவாழ்த்திய மாணியை நண்ணும் நமனாரே

படவுதைத்த அடிகள்பலி தேர்ந்துழல் பண்பர் பரமேட்டி

சுடலைநீறு துதைமார்பினில் நூலணி தூயர் இடமென்பர்

கடலெழுந்த முகிலேதொடு கோபுரம் ஆரும் கடவூரே.


நடலை இன்றி அடி வாழ்த்திய மாணியை நண்ணும் நமனாரே பட உதைத்த அடிகள் - வஞ்சம் இன்றித் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய காலனே அழியும்படி உதைத்த கடவுள்;

பலி தேர்ந்து உழல் பண்பர் பரமேட்டி - பிச்சையேற்று உழலும் பண்பினர், பரமர்;

சுடலை நீறு துதை மார்பினில் நூல் அணி தூயர் இடம் என்பர் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய மார்பில் பூணூல் அணிந்த தூயவர் உறையும் தலம் ஆவது;

கடல் எழுந்த முகிலே தொடு கோபுரம் ஆரும் கடவூரே - கடலில் தோன்றிய மேகமே தொடுமாறு உயர்ந்த கோபுரம் பொருந்திய திருக்கடவூர்.


3)

அரியஅன்பர் உயிருக்கரண் ஆனவர் ஆடல் புரிநாதர்

பெரியதேவர் கழலைப்பல வானவர் பேணப் புரமூன்றும்

எரியுமாறு மலையைச்சிலை ஆக்கிய ஈசர் இடமென்பர்

கரியமேகம் அணவும்படி நீள்பொழில் ஆரும் கடவூரே.


அரிய அன்பர் உயிருக்கு அரண் ஆனவர் - மார்க்கண்டேயர் உயிரைக் காத்தவர்; (பக்தர்களைக் காப்பவர்);

ஆடல் புரி நாதர் - கூத்தர்;

பெரிய-தேவர் கழலைப் பல வானவர் பேணப் - மகாதேவர் திருவடியைப் பல தேவர்களும் போற்ற அவர்களுக்கு இரங்கி;

புரம் மூன்றும் எரியுமாறு மலையைச் சிலை ஆக்கிய ஈசர் இடம் என்பர் - முப்புரங்களும் எரியும்படி மேருமலையை வில்லாக வளைத்த ஈசனார் உறையும் தலம் ஆவது;

கரிய மேகம் அணவும்படி நீள்-பொழில் ஆரும் கடவூரே - கரிய மேகம் தொட உயரும் சோலை திகழும் திருக்கடவூர். (அணவுதல் - அணுகுதல்);


4)

நலமிலங்கு மலராலடி வாழ்த்திய நம்பி உயிர்காத்தார்

சலமிலங்கு மதிசூடிய தாழ்சடை அண்ணல் தனியேற்றர்

வலமிலங்கு மழுவாளினர் மாதொரு பங்கர் மகிழூராம்

கலயர்முன்பு புகையால்தொழு தேத்திய சீரார் கடவூரே.


நலம் இலங்கு மலரால் அடி வாழ்த்திய நம்பி உயிர் காத்தார் - மார்க்கண்டேயரைக் காத்த வரலாறு;

சலம் இலங்கு மதி சூடிய தாழ்சடை அண்ணல் - கங்காதரர், சந்திரசேகரர், ஜடாதாரி;

தனி ஏற்றர் - ஒப்பற்ற இடப வாகனம் உடையவர்;

வலம் இலங்கு மழுவாளினர் - வலக்கையில் வெற்றியுடைய மழுவாயுதத்தை ஏந்தியவர்; (வலம் - வலப்பக்கம்; வெற்றி; வலிமை);

மாது ஒரு பங்கர் மகிழ் ஊர் ஆம் - உமைபங்கர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கலயர் முன்பு புகையால் தொழுது ஏத்திய சீர் ஆர் கடவூரே - குங்கிலியக்-கலய நாயனார் முன்பு தூபத்தால் வழிபாடு செய்த வளமும் புகழும் மிகுந்த திருக்கடவூர்;


5)

நறையிலங்கு மலர்போற்கழ லால்நமன் மாள உதைசெய்தார்

இறையிலங்கு வளையாளையி டத்தினில் ஏற்ற பெருமானார்

மறையிலங்கு திருநாவினர் மாமணி கண்டர் மகிழூராம்

கறையிலங்கு கடியார்பொழில் சூழ்கவின் ஆரும் கடவூரே.


நறை இலங்கு மலர்போல் கழலால் நமன் மாள உதைசெய்தார் - வாசமலர் போன்ற திருவடியால் கூற்றுவன் அழியுமாறு உதைத்தவர்; (நறை - தேன்; வாசனை);

இறை இலங்கு வளையாளை இடத்தினில் ஏற்ற பெருமானார் - முன்கையில் வளை அணிந்த உமையை இடப்பக்கத்தில் ஏற்ற பெருமான்; ( இறை - முன்-கை);

மறை இலங்கு திருநாவினர் - வேதம் ஓதியவர்;

மா-மணி-கண்டர் மகிழ் ஊர் ஆம் - அழகிய நீலகண்டர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கறைலங்கு கடிர் பொழில் சூழ் கவின் ஆரும் கடவூரே - அடர்ந்த, மணம் கமழும், சோலை சூழ்ந்த அழகிய திருக்கடவூர்; (கறை - இருள்); (கடி - வாசனை);


6)

தேனிலங்கு மலரால்தொழு தாருயிர் காத்த திருவாளர்

ஊனிலங்கு தலையிற்பலி ஏற்பவர் உம்பர்க் கொருநாதர்

வானிலங்கு மதியம்புனை செஞ்சடை மைந்தர் மகிழூராம்

கானிலங்கு பொழிலிற்கரு வண்டிசை பாடும் கடவூரே


தேன் இலங்கு மலரால் தொழுதார் உயிர் காத்த திருவாளர் - தேன் நிறைந்த பூக்களைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவர், திருவுடையவர்;

ஊன் இலங்கு தலையில் பலி ஏற்பவர் - புலால் நாறும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவர்;

உம்பர்க்கு ஒரு நாதர் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர்;

வான் இலங்கு மதியம் புனை செஞ்சடை மைந்தர் மகிழ் ஊர் ஆம் - வானத்தில் விளங்கும் சந்திரனைச் செஞ்சடையில் அணிந்த அழகர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கான் இலங்கு பொழிலில் கருவண்டு இசை பாடும் கடவூரே - மணம் கமழும் சோலையில் கரிய வண்டுகள் இசைபாடுகின்ற திருக்கடவூர். (கான் - வாசனை);


7)

காமனைக்கண் அழலால்சுட வல்லவர் காலிற் கழலார்த்தார்

நாம(ம்)நித்தம் நவில்மாணியை நண்ணிய கூற்றை உதைநம்பர்

மாமரத்தை இருகூறிடு வேலவன் அத்தர் மகிழூராம்

காமரத்தை வரிவண்டுகள் ஆர்த்தடை சோலைக் கடவூரே.


காமனைக் கண் அழலால் சுட வல்லவர் - மன்மதனை நெற்றிக்கண் நெருப்பால் சுட்டவர்;

காலில் கழல் ஆர்த்தார் - காலில் கழலை அணிந்தவர்;

நாமம் நித்தம் நவில் மாணியை நண்ணிய கூற்றை உதை நம்பர் - அப்பெருமானார் திருநாமத்தை எப்பொழுதும் சொல்லி வழிபட்ட மார்க்கண்டேயரை நெருங்கிய நமனை உதைத்தவர், நம்பன் என்ற திருநாமம் உடையவர்;

மாமரத்தை இரு-கூறிடு வேலவன் அத்தர் மகிழ் ஊர் ஆம் - சூரசம்ஹாரத்தின்போது, சூரபதுமன் மாமரத்தின் உருவில் நின்றபோது, அதனை வேல்விட்டு இரண்டாகப் பிளந்த முருகனுக்குத் தந்தையாரான ஈசர் விரும்பி உறையும் ஊர் ஆகும்; (சம்பந்தர் தேவாரம் - 1.96.4 - "அத்தர் அன்னியூர்ச் சித்தர்");

காமரத்தை வரிவண்டுகள் ஆர்த்து அடை சோலைக் கடவூரே - காமரம் (சீகாமரம்) என்ற பண்ணை வரியுடைய வண்டுகள் ஒலித்து அடைகின்ற சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


8)

புத்தியின்றி அருவெற்பெறி கோன்வலி பொன்றக் கழலூன்றிப்

பத்துவாய்கள் பலநாளிசை பாடுதல் கேட்டுப் படையீந்தார்

மத்தயானை அதனீருரி மூடிய மார்பர் மகிழூராம்

கைத்தலத்தில் அயிலேந்திய காலனை வீட்டும் கடவூரே.


புத்தியின்றி அருவெற்பு எறி கோன்-வலி பொன்றக் கழல் ஊன்றிப் - அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த இலங்கை மன்னனான இராவணனது வலிமை அழியும்படி திருவடியை ஊன்றி அவனை நசுக்கி;

பத்து வாய்கள் பலநாள் இசை பாடுதல் கேட்டுப் படை ஈந்தார் - பின் அவனது பத்துவாய்களும் பலகாலம் இசைபாடித் துதிக்கக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்தவர்;

மத்தயானை அதன் ஈருரி மூடிய மார்பர் மகிழ் ஊர் ஆம் - மதயானையின் உரித்த தோலைப் போர்வையாகப் போர்த்தவர் விரும்பி உறையும் ஊர் ஆகும்;

கைத்தலத்தில் அயிலேந்திய காலனை வீட்டும் கடவூரே - கையில் சூலத்தை ஏந்திய காலனை அழித்த திருக்கடவூர்; (கைத்தலம் - கை); (அயில் - இங்கே, சூலம்); (வீட்டுதல் - அழித்தல்);


9)

நீலவண்ணன் நறுமாமலர் மேலினன் நேடித் தொழநின்றார்

ஏல(ம்)நாறு குழலாளையி டத்தினில் ஏற்ற இருள்கண்டர்

மேலர்மேலர் மலரம்பெறி வேளுடல் வேவ விழிசெய்தார்

காலகாலர் கருதும்பதி காமரு சோலைக் கடவூரே.


நீலவண்ணன் நறுமாமலர் மேலினன் நேடித் தொழ நின்றார் - கரிய மாலும் வாசத்-தாமரைமேல் உறையும் பிரமனும் தேடித் தொழும்படி ஜோதிவடிவில் நின்றவர்;

ஏலம் நாறு குழலாளை இடத்தினில் ஏற்ற இருள்கண்டர் - வாசக்குழலியான உமையை இடப்பாகம் ஏற்ற நீலகண்டர்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (நாறுதல் - மணம் கமழ்தல்);

மேலர் மேலர் - மேலானவர்க்கும் மேலானவர்; தேவதேவர்; (அப்பர் தேவாரம் - 6.55.7 - "மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி");

மலர்-அம்பு எறி வேள் உடல் வேவ விழிசெய்தார் - மலர்க்கணையை எய்த மன்மதனது உடம்பு சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவர்;

காலகாலர் கருதும் பதி காமரு சோலைக் கடவூரே - காலகாலரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


10)

வீதிநின்று பலபொய்யுரை பேசிடு வீணர் தமைநீங்கும்

பூதிபூசி அடியைப்புகழ் வார்துயர் போக்கும் பெருமானார்

மேதிஏறு நமனைக்குமை செய்தவர் வேலை விடமுண்டார்

காதிலங்கு குழையார்பதி காமரு சோலைக் கடவூரே.


வீதி நின்று பல பொய்யுரை பேசிடு வீணர்தமை நீங்கும் - தெருவில் நின்று பல பொய்களைப் பேசுகின்ற வீணர்களை விட்டு நீங்குங்கள்;

பூதி பூசி அடியைப் புகழ்வார் துயர் போக்கும் பெருமானார் - திருநீற்றைப் பூசித் திருவடியைத் துதிக்கும் பக்தர்களது துயரத்தைத் தீர்க்கும் பெருமானார்; (பூதி - திருநீறு);

மேதி ஏறு நமனைக் குமை செய்தவர் - எருமையை வாகனமாக உடைய கூற்றுவனை அழித்தவர்; (மேடி - எருமை); (குமை - அழிவு);

வேலை-விடம் உண்டார் - கடல்நஞ்சை உண்டவர்; (வேலை - கடல்);

காது இலங்கு குழையார் பதி காமரு சோலைக் கடவூரே - காதில் விளங்கும் குழையை அணிந்த சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


11)

பண்ணிலங்கு தமிழாற்பதம் ஏத்திடு பத்தர் பவ(ம்)மாய்ப்பார்

எண்ணிலெங்கும் வருவார்வட வாலமர் ஈசர் உமைநேசர்

தண்ணிலங்கு மதியார்சடை மேல்இள நாகம் தனைவைத்தார்

கண்ணிலங்கு நுதலார்பதி காமரு சோலைக் கடவூரே.


பண் இலங்கு தமிழால் பதம் ஏத்திடு பத்தர் பவம் மாய்ப்பார் - பண் பொருந்திய இசைத்தமிழான தேவாரத்தைப் பாடி வழிபடும் பக்தர்களது பிறவிப்பிணியைத் தீர்ப்பவர்;

எண்ணில் எங்கும் வருவார் - எங்கிருந்து பக்தர்கள் தியானித்தாலும் அங்கே வந்து அருள்பவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.40.6 - "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கேயென்று அருள்புரியும் எம்பெருமான்");

வடவால் அமர் ஈசர் - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி; (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");

உமைநேசர் - உமைக்குக் கணவர்;

தண் இலங்கு மதி ஆர் சடைமேல் இள-நாகம்தனை வைத்தார் - குளிர்ச்சி பொருந்திய சந்திரன் இருக்கும் சடையின்மேல் இளம்பாம்பையும் அணிந்தவர்;

கண் இலங்கு நுதலார் பதி காமரு சோலைக் கடவூரே - நெற்றிக்கண்ணரான சிவபெருமானார் விரும்பி உறையும் தலம் அழகிய சோலை சூழ்ந்த திருக்கடவூர்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------