Friday, March 24, 2023

07.14 – கண்டீஸ்வரம் (நெல்லிக்குப்பம் அருகே) - தாளத்தினைக் கையேந்திய

07.14 – கண்டீஸ்வரம் (நெல்லிக்குப்பம் அருகே)

2015-12-15

கண்டீஸ்வரம்

(ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில்)

(இத்தலம் கடலூர் - பண்ருட்டி இடையே நெல்லிக்குப்பம் அருகே உள்ளது)

------------------

(கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்")

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா");


1)

தாளத்தினைக் கையேந்திய தளிர்மேனியள் காண

மேளத்தினைக் கணமார்த்திட வெங்காட்டினில் ஆடி

காளத்தினை மிடறேந்திறை கண்டீச்சரத் தண்ணல்

தாளைத்தினம் தொழுவார்வினை தழல்சேர்விற காமே.


* தாளத்தினைக் கையேந்திய தளிர்மேனியள் - "ஹஸ்த தாளாம்பிகை" - இத்தலத்து இறைவி திருநாமம்;


தாளத்தினைக் கை ஏந்திய தளிர்மேனியள் காண - கையில் தாளத்தை ஏந்திய, தளிர்போல் மேனி உடைய உமை காண;

மேளத்தினைக் கணம் ஆர்த்திட வெங்காட்டினில் ஆடி - பலவிதத் தோற்கருவிகளைப் பூதகணங்கள் வாசிக்கச், சுடுகாட்டில் ஆடியவன்; (வெங்காடு - சுடுகாடு);

காளத்தினை மிடறு ஏந்து இறை - கருமையைக் கண்டத்தில் தாங்கும் இறைவன்; (காளம் - கருமை; நஞ்சு); (மிடறு - கண்டம்);

கண்டீச்சரத்து அண்ணல் தாளைத் தினம் தொழுவார் வினை தழல் சேர் விறகு ஆமே - திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் சிவபெருமான் திருவடியை நாள்தோறும் வணங்கும் அடியவர்களுடைய வினைகள் தீ சேர்ந்த விறகு ஆகும் ( = சாம்பல் ஆகும்);


(அப்பர் தேவாரம் - 4.11.3 -

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லைஆம்

பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே);


2)

செவிநாசிகண் உடல்வாயெனும் இவையைந்தையும் வென்ற

தவர்நால்வருக் காலின்புடை அறமோதிய தலைவர்

கவினார்பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேய

சிவனார்கழல் தொழுவார்வினை தீசேர்விற காமே.


செவி நாசி கண் உடல் வாய் எனும் இவை ஐந்தையும் வென்ற - ஐம்புலன்களையும் வென்ற; (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் இங்குச் சொல்லப்பட்டன); (அப்பர் தேவாரம் - 5.47.7 - "மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்து ஆக்கும் ஐவர்");

தவர் நால்வருக்கு ஆலின்புடை அறம் ஓதிய தலைவர் - சனகாதி முனிவர்கள் நால்வருக்குக் கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருளை ஓதிய தலைவர்; (தவர் - தவசியர்); (ஆல் - கல்லால மரம்);

கவின் ஆர் பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேய - அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கண்டீஸ்வரத்தில் உறையும்; (சூழ்தரு - சூழ்; தருதல் - ஒரு துணைவினை);

சிவனார் கழல் தொழுவார் வினை தீ சேர் விறகு ஆமே - சிவபெருமானார் திருவடியை வணங்கும் அடியவர்களுடைய வினைகள் தீ சேர்ந்த விறகு ஆகும் ( = சாம்பல் ஆகும்);


3)

கொடியாரிடை மடவாளொரு கூறாகிய கூத்தன்

இடியார்குரல் எருதேறிய இறைவன்மறை நாவன்

கடியார்பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேயான்

அடியார்பழ வினையாயின அழல்சேர்விற காமே.


கொடி ஆர் இடை மடவாள் ஒரு கூறு ஆகிய கூத்தன் - கொடி போன்ற சிற்றிடை உடைய உமை ஒரு பாகம் ஆன கூத்தன்;

இடி ஆர் குரல் எருது ஏறிய இறைவன் - இடி போன்ற குரலை உடைய இடபத்தை ஊர்தியாக உடைய இறைவன்;

மறை நாவன் - வேதம் ஓதியவன்;

கடி ஆர் பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேயான் - மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருக்கண்டீஸ்வரத்தில் உறைபவன்;

அடியார் பழவினை ஆயின அழல் சேர் விறகு ஆமே - அப்பெருமான் அடியவர்களுடைய வினைகள் தீ சேர்ந்த விறகு ஆகும் ( = சாம்பல் ஆகும்);


4)

நீரார்சடை அதன்மேல்வளர் நிலவைப்புனை நிமலன்

கூரார்மழு மறியேந்திய குழகன்விடைக் கொடியன்

காரார்பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேயான்

சீரார்கழல் தினமுந்தொழத் தீராவினை விடுமே.


நீர் ஆர் சடை அதன்மேல் வளர் நிலவைப் புனை நிமலன் - கங்கை பொருந்திய சடையின்மேல் வளரும் திங்களை அணிந்த நின்மலன்;

கூர் ஆர் மழு மறி ஏந்திய குழகன் - கூர்மை பொருந்திய மழுவையும் மான்கன்றையும் கையில் ஏந்தியவன்;

விடைக் கொடியன் - இடபக்கொடி உடையவன்;

கார் ஆர் பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேயான் - கருமை பொருந்திய (அடர்ந்த) சோலைகள் சூழ்ந்த திருக்கண்டீஸ்வரத்தில் உறைபவன்;

சீர் ஆர் கழல் தினமும் தொழத் தீரா வினை விடுமே - அப்பெருமானின் பெருமை மிக்க திருவடிகளைத் தினமும் வழிபட்டால், தீராத வினைகளெல்லாம் நீங்கும்;


5)

வெண்மால்விடை ஒன்றேறிய விகிர்தன்திரை ஆரும்

தண்மாநதி அடைவேணியன் தழலேந்திய கையன்

கண்மூன்றுடை அடிகள்கவின் கண்டீச்சரம் மேயான்

ஒண்மாண்கழல் தொழுவார்களைத் தொடராவினை தானே.


வெண் மால் விடை ஒன்று ஏறிய விகிர்தன் - வெண்மையான பெரிய இடபத்தை ஊர்தியாக உடையவன், விகிர்தன் என்ற திருநாமம் உடையவன்; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);

திரை ஆரும் தண் மா நதி அடை வேணியன் - அலை மிக்க குளிர்ந்த பெரிய கங்கையை அடைத்த சடையை உடையவன்; (வேணி - சடை);

தழல் ஏந்திய கையன் - தீயைக் கையில் ஏந்தியவன்;

கண் மூன்று உடை அடிகள் - முக்கண் உடைய கடவுள்;

கவின் கண்டீச்சரம் மேயான் ஒண் மாண் கழல் தொழுவார்களைத் தொடரா வினைதானே - அழகிய திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானுடைய ஒளி பொருந்திய மாட்சிமையுடைய கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் அன்பர்களை வினை தொடராது; (கவின் கண்டீச்சரம் - "ஆர்" என்ற சொல்லை வருவித்துக்கொள்க; "கவின் ஆர் கண்டீச்சரம்" - அழகிய கண்டீஸ்வரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.128.1 - அடி-6 - "ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்"); (திருக்குறள் - 3 - "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்");


6)

முண்டத்தினில் வெண்ணீறணி முதல்வன்தனி விடையன்

அண்டத்தவர் உயிர்வாழ்ந்திட அருநஞ்சினை உண்டு

கண்டத்தினில் கறையேற்றவன் கண்டீச்சரம் மேய

துண்டப்பிறை முடியான்கழல் தொழுவார்க்கிலை துயரே.


முண்டத்தினில் வெண்ணீறு அணி முதல்வன் - நெற்றியில் வெண்மையான திருநீற்றைப் பூசிய முதல்வன்; (முண்டம் - நெற்றி); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.9 - "திருமுண்டம் தீட்ட மாட்டாது" - "திரு" என்றது, "விபூதி" என்னும் பொருட்டாய்த், திருநீற்றை உணர்த்திற்று);

தனி விடையன் - ஒப்பற்ற இடப ஊர்தியன்;

அண்டத்தவர் உயிர்வாழ்ந்திட அருநஞ்சினை உண்டு கண்டத்தினில் கறையேற்றவன் - எல்லாரும் உயிர்வாழ்வதற்காக, உண்ணுவதற்கு அரிய விடத்தை உண்ட நீலகண்டன்; (அண்டம் - பூமி, வானம், பிரபஞ்சம்);

கண்டீச்சரம் மேய துண்டப்பிறை முடியான் கழல் தொழுவார்க்கு இலை துயரே - திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் சந்திரசேகரன் திருவடியை வணங்கும் அன்பர்களைத் துயரம் அணுகாது; (துண்டப் பிறை முடி - பிறைத்துண்டம் அணிந்த திருமுடி);


7)

நாமந்தனை மறவாத்தவர் நசியாதுயிர் வாழச்

சேமந்தரு பெருமான்நறை திகழுங்கணை எய்த

காமன்றனைப் பொடிசெய்தவன் கண்டீச்சரம் மேயான்

தூமென்மலர்ப் பாதந்தனைத் தொழுவார்க்கிலை துயரே.


நாமந்தனை மறவாத் தவர் நசியாது உயிர் வாழச் சேமம்-தரு பெருமான் - திருநாமத்தை மறவாமல் எப்போதும் நினைந்து வழிபட்ட தவசிரேஷ்டரான மார்க்கண்டேயர் அழிவின்றி என்றும் உயிர்வாழ அருள்புரிந்த பெருமான்; (தவர் - தவசி); (நசிதல் - அழிதல்; நசித்தல் - சாதல்); (சேமம் - க்ஷேமம் - காவல்);

நறை திகழும் கணை எய்த காமன்-தனைப் பொடி செய்தவன் - வாசம் திகழும் மலர்க்கணையை எய்த மன்மதனைச் சாம்பல் ஆக்கியவன்;

கண்டீச்சரம் மேயான் தூ மென்மலர்ப் பாதம்-தனைத் தொழுவார்க்கு இலை துயரே - திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானின் தூய மென்மையான மலர் போன்ற பாதங்களை வணங்கும் அன்பர்களைத் துயரம் அணுகாது;


8)

தலைபத்துடை மதியற்றவன் தடவெற்பதன் கீழே

அலறத்திரு விரலிட்டவர் அரையிற்புலித் தோலர்

கலைபற்றிய கையார்கவின் கண்டீச்சரம் மேயார்

அலரிட்டவர் அடிவாழ்த்திடும் அடியார்க்கிடர் இலையே.


தலை பத்து உடை மதி அற்றவன் தட வெற்பு அதன் கீழே அலறத் திருவிரல் இட்டவர் - பத்துத் தலைகளை உடையவனும் அறிவற்றவனுமான இராவணன் கயிலைமலையின்கீழ் அலறும்படி அம்மலைமேல் ஒரு திருவிரலை ஊன்றி அவனை நசுக்கியவர்; (தட வெற்பு - பெரிய மலை - கயிலைமலை);

அரையில் புலித்தோலர் - அரையில் புலியின் தோலை அணிந்தவர்;

கலை பற்றிய கையார் - மானைக் கையில் பற்றியவர்; (கலை - மான்);

கவின் கண்டீச்சரம் மேயார் - அழகிய திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானார்; (கவின் கண்டீச்சரம் - "ஆர்" என்ற சொல்லை வருவித்துக்கொள்க; "கவின் ஆர் கண்டீச்சரம்" - அழகிய கண்டீஸ்வரம்);

அலர் இட்டு அவர் அடி வாழ்த்திடும் அடியார்க்கு இடர் இலையே - பூக்களைத் தூவி அப்பெருமானாரின் திருவடிகளைப் போற்றும் அடியவர்களுக்கு இடர் இல்லை;


9)

அனமாயுயர் மலரான்நிலம் அகழ்மாலிவர் நேட

முனமாரழல் உருவாகிய முதல்வன்முடி வில்லான்

கனலார்நுதற் கண்ணன்கவின் கண்டீச்சரம் மேயான்

தனைநீர்மலர் கொண்டேத்திடச் சாராவினை தானே.


அனமாய் உயர் மலரான் நிலம் அகழ் மால் இவர் நேட - அன்னமாகி உயர்ந்த பிரமனும், பன்றியாகி நிலத்தை அகழ்ந்த திருமாலும் தேடும்படி; (அனம் - அன்னம் - இடைக்குறை விகாரம்);

முனம் ஆர் அழல் உரு ஆகிய முதல்வன் - முன்னர் அரிய சோதி உருக்கொண்ட முதல்வன்; (முனம் - முன்னம் - இடைக்குறை விகாரம்);

முடிவு இல்லான் - எல்லையற்றவன்; இறப்பு இல்லாதவன்;

கனல் ஆர் நுதற் கண்ணன் - நெருப்புப் பொருந்திய நெற்றிக்கண் உடையவன்;

கவின் கண்டீச்சரம் மேயான்தனை நீர் மலர் கொண்டு ஏத்திடச் சாரா வினை தானே - அழகிய திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானை நீராலும் மலராலும் வழிபடும் பக்தர்களை வினைகள் அணுகமாட்டா;


10)

வெண்ணீறது தரியாருரை வெற்றுச்சொலை விடுமின்

பண்ணார்மொழிப் பாவைக்கொரு பாகம்தரு பரமா

கண்ணார்நுதல் உடையாய்கவின் கண்டீச்சரம் மேயாய்

அண்ணாவருள் புரியாயெனும் அன்பர்க்கிடர் இலையே.


வெண்ணீறு அது தரியார் உரை வெற்றுச்சொலை விடுமின் - திருநீற்றைப் பூசாதவர்களும், பிறர் திருநீறு பூசுவதைப் பொறுக்கமாட்டாதவர்களும் சொல்லும் பொருளற்ற பேச்சை மதிக்கவேண்டா; (தரித்தல் - அணிதல்; பொறுத்தல்);

"பண் ஆர் மொழிப் பாவைக்கு ஒரு பாகம் தரு பரமா - "இனிய மொழி உடைய உமைக்கு ஒரு பாகம் தந்தவனே;

கண் ஆர் நுதல் உடையாய் - நெற்றிக்கண் உடையவனே;

கவின் கண்டீச்சரம் மேயாய் - அழகிய திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானே;

அண்ணா அருள்புரியாய்" எனும் அன்பர்க்கு இடர் இலையே - அண்ணலே, தந்தையே, அருள்வாயாக" என்று வாழ்த்தி வணங்கும் பக்தர்களுக்கு இடர் இல்லை;


11)

ஒருமாமலர் குறைவுற்றிட உடனேமலர்க் கண்ணைத்

திருமாலிட ஆழிப்படை அருள்செய்தவன் செருச்செய்

கருமானதன் உரிபோர்த்தவன் கண்டீச்சரம் மேய

பெருமானடி தொழுவார்நலம் பெறுவார்பிற வாரே.


ஒரு மா மலர் குறைவு உற்றிட உடனே மலர்க் கண்ணைத் திருமால் இட ஆழிப்படை அருள்செய்தவன் - (ஆயிரம் தாமரைமலர்களில்) ஒரு பூக் குறையக் கண்டு, உடனே தன் மலர்க்கண்ணையே இடந்து பூவாக இட்டுத் திருமால் அருச்சிக்கவும், மகிழ்ந்து அவனுக்குச் சக்கராயுதத்தைக் கொடுத்தவன்; (இதனைத் திருவீழிமிழலைத் தலவரலாற்றில் காண்க);

செருச்செய் கருமான் அதன் உரி போர்த்தவன் - போர் செய்த யானையின் தோலைப் போர்த்தவன்; (கருமான் - கரிய மிருகமான யானை); (சம்பந்தர் தேவாரம் - 3.78.6 - "செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்து");

கண்டீச்சரம் மேய பெருமான் அடி தொழுவார் நலம் பெறுவார் பிறவாரே - திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமான் திருவடிகளை வழிபடும் அன்பர்கள் நன்மை எய்துவர்; இனிப் பிறவி எய்தமாட்டார்;


பிற்குறிப்புகள்:

1) திருக்கண்டீஸ்வரம் - ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில் - இந்தக் கோயில், கடலூர் பண்ருட்டி இடையே நெல்லிக்குப்பம் என்ற ஊரை அடுத்து உள்ளது.

2) இந்தக் கோயிலில் பலகையில் - "வடுகூர் என்ற பாடல் பெற்ற தலம் இது" என்று எழுதியிருக்கக் காணலாம். ஆனால், விழுப்புரம் புதுச்சேரி இடையே உள்ள "திருவாண்டார் கோயில்" என்ற தலத்தையே "வடுகூர்" என்று மற்ற நூல்களெல்லாம் கூறுகின்றன.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment