06.05 – பலவகை
2012-05-25
06.05.023 - திருத்தமிழ் கற்க! - (மாலைமாற்று)
----------------------------------------
(குறள்வெண்செந்துறை)
மேருவன சீர்வருவ கற்க தேந்தமிழ் வால்விடைய ரேதே
தேரே யடைவில்வாழ் மிதந்தே கற்க வருவர்சீ னவருமே.
பதம் பிரித்து:
மேரு அன சீர் வருவ; கற்க, தேம் தமிழ்; வால் விடையரே தே,
தேரே; அடைவில் வாழ் மிதந்தே; கற்க வருவர் சீனவருமே.
சொற்பொருள் / குறிப்புகள்:
சீர் வருவ - நன்மை, செல்வம், புகழ்,,,, எனப் பலவகைச் சீர்களைச் சுட்டியது. எனவே 'வருவ' என்ற பன்மை வினைமுற்றுப் பெற்றது. ஒருமை பன்மை மயக்கம் என்றும் கொள்ளலாம்.
தேம் தமிழ் - இனிய தமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன;
வால் - வெண்மை;
விடை - இடபம்;
தே - தெய்வம்;
தேரேயடைவில் = 1. தேரே அடைவில்; 2. தேர் ஏய் அடைவில்
தேர் - அறி; (தேர்தல் - அறிதல்; ஆராய்தல்; சிந்தித்தல்);
ஏ - அசை;
ஏய்தல் - பொருந்துதல்; தகுதல்;
அடைவு - துணை; புகலிடம்;
சீனவர் - சீனம் முதலிய நாட்டினர்;
மேரு மலையைப் போலப் பொன்னும் புகழும் நன்மையும் வருவன! (அத்தகைய திருவைத் தரும்) இனிய தமிழைக் கற்க! வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவரே தெய்வம்; அறி; அவரைப் புகலடைந்து அவர் துணையால் (வினைக்கடலுள் ஆழாமல் / இன்பத்தில்) மிதந்து வாழ்! அத்தகைய திருத்தமிழைக் கற்கச் சீனர் முதலிய வெளிநாட்டவரும் வருவர்!
(இலக்கணக் குறிப்பு: அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினைமுற்று:
அ, ஆ - இவ்விரு விகுதியினையும் இறுதியாக உடைய மொழிகள் அஃறிணைப் பன்மைப்படர்க்கை வினைமுற்றும் குறிப்புமுற்றும் ஆம். இவற்றுள் ஆகாரம் எதிர்மறை வினைக் கண்ணது ஆமன்றி உடன்பாட்டு வினைக்கண் வாராது.
உதாரணம்: நடந்தன, நடந்த; நடவாநின்றன, நடவாநின்ற; நடப்பன, நடப்ப; கரியன, கரிய: அவை எனவும் நடந்தில, நடவாநின்றில, நடவா: அவை எனவும் வரும்.)
பிற்குறிப்பு:
மாலைமாற்று - ஆங்கிலத்தில் Palindrome. ஒரு பாடலை எழுத்தெழுத்தாக முதலிலிருந்து இறுதிவரை படித்தாலும், கடையிலிருந்து முதல்வரை படித்தாலும் ஒரே செய்யுளாக அமைவது.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
நல்ல முயற்சி. முயலுவதே வெற்ரி. முயற்சியில் வெற்றிபெற்றால் பெருஞ்சிறப்பு. பெருஞ்சிறப்பைப் பெற்றிருக்கிறார் சிவசிவா
ReplyDeleteThank you.
Delete