Tuesday, August 24, 2021

05.15 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)

05.15 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)


2014-12-28

கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்) (நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.81.1 - "சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை");

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.50.1 - "விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே");



1)

பண்ட ரங்கனைப் பார்வதி பங்கனை

அண்டர் அண்டனை அன்பின் உருவனைக்

கொண்டற் கண்டனைக் கொண்டீச் சரவனைத்

தொண்ட ராய்த்தொழு வார்க்கிலை துன்பமே.


பண்டரங்கன் - பாண்டரங்கக் கூத்தாடுவோன்; (பாண்டரங்கம் - கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்த போது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது);

அண்டர் அண்டனை - தேவதேவனை;

கொண்டற்கண்டன் - மேகம் போன்ற நிறம் திகழும் கண்டத்தை உடையவன் - நீலகண்டன்; (கொண்டல் - மேகம்); (திருக்கோவையார் - 23.10 - "திண் டோட்கொண்டற் கண்டன்...");

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

தொண்டராய்த் தொழுவார்க்கு இலை துன்பமே - தொண்டர்களாகி வணங்குபவர்களுக்குத் துன்பம் இல்லை;


2)

சூல னைப்புலித் தோலனை முப்புரி

நூல னைப்பத்து நூறு பெயரனைக்

கோல வார்சடைக் கொண்டீச் சரவனை

ஏலு மாறு வணங்குவார்க் கின்பமே.


சூலனைப் புலித்தோலனை முப்புரி நூலனைப் - சூலபாணியைப், புலித்தோல் ஆடை அணிந்தவனை, பூணூல் திகழும் மார்பினனை;

பத்து நூறு பெயரனை - ஆயிரம் திருநாமங்கள் உடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.56.11 - "பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரனை...");

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

ஏலுமாறு வணங்குவார்க்கு இன்பமே- இயன்றவகையில் (/ பொருந்துமாறு) வணங்கும் பக்தர்களுக்கு இன்பமே; (அப்பர் தேவாரம் - 5.43.9 - "கால மான கழிவதன் முன்னமே ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்");


3)

மன்றில் ஆடியை மாதவர் நெஞ்சினில்

நின்ற சோதியை நெற்றியிற் கண்ணனைக்

குன்ற வில்லியைக் கொண்டீச் சரவனைச்

சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே.


மன்றில் ஆடியை - அம்பலக் கூத்தனை;

மாதவர் நெஞ்சினில் நின்ற சோதியை - பெரும் தவத்தோர் நெஞ்சில் குடிகொண்ட ஜோதிவடிவினனை;

நெற்றியில் கண்ணனைக் குன்ற வில்லியைக் - நெற்றிக்கண் உடையவனை, மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே - சென்று வழிபட்டால் தீவினை நீங்கும்;


4)

பெற்றம் ஏறும் பிரானைப் பெருவிடம்

துற்ற கண்டனைத் தூமதி சூடியைக்

குற்றம் இல்லியைக் கொண்டீச் சரவனைப்

பற்றி னார்தம் பழவினை பாறுமே.


பெற்றம் ஏறும் பிரானைப் - இடப வாகனனை; (பெற்றம் - இடபம்);

பெருவிடம் துற்ற கண்டனைத் - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை; (துற்றுதல் - உண்ணுதல்);

தூமதி சூடியைக் - சந்திரனைச் சூடியவனை;

குற்றம் இல்லியைக் - மாசற்றவனை;

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

பற்றினார்தம் பழவினை பாறுமே - சரணடைந்த பக்தர்களது பழைய வினை அழியும்; (பாறுதல் - அழிதல்);


5)

போதை இட்டடி போற்றிய வானவர்

வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக்

கோதை பங்கனைக் கொண்டீச் சரவனை

வேத னைத்தொழ வீடும் வினைகளே.


போதை இட்டு அடி போற்றிய வானவர் வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக் - பூக்களைத் தூவி வழிபட்ட தேவர்களது துன்பத்தை தீர்த்த, மேருவில் ஏந்தியவனை; (போது - மலர்); (வாதை - துன்பம்); (வரை - மலை); (சிலை - வில்);

கோதை பங்கனைக் - உமைபங்கனை; (கோதை - பெண்கள் தலைமயிர்; பெண்);

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

வேதனைத் தொழ வீடும் வினைகளே - வேதநாயகனை வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);





6)

நாறு கூவிளம் நாகம் இளமதி

ஏறு செஞ்சடை ஏந்தலை மேனியிற்

கூறு பெண்ணனைக் கொண்டீச் சரவனைக்

கூறு வாரைக் குறுகா வினைகளே.


நாறு கூவிளம் நாகம் இளமதி ஏறு செஞ்சடை ஏந்தலை - மணம் கமழ் வில்வம், பாம்பு, பிறைச்சந்திரன் இவற்றையெல்லாம் சிவந்த சடையின்மேல் அணிகின்ற தலைவனை; (கூவிளம் - வில்வம்); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);

மேனியிற் கூறு பெண்ணனைக் - திருமேனியில் ஒரு பாதி பெண் ஆனவனை;

கொண்டீச்சரவனைக் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

கூறுவாரைக் குறுகா வினைகளே - துதிக்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா; (குறுகா - அடையா; நெருங்கா); (குறுகுதல் - அணுகுதல்);


7)

அமரர் கோனை அடிதொழு மாணிக்கா

நமனைச் செற்றருள் நம்பனை மஞ்ஞையூர்

குமரன் தாதையைக் கொண்டீச் சரவனை

விமல னைத்தொழ வீடும் வினைகளே.


அமரர் கோனை - தேவர்கள் தலைவனை;

அடிதொழு மாணிக்கா நமனைச் செற்றருள் நம்பனை - வணங்கிய மார்க்கண்டேயரைக் காப்பதற்காகக் காலனை உதைத்த நம்பனை; (மாணிக்கா - மாணிக்காக - மார்க்கண்டேயருக்காக); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

மஞ்ஞை ஊர் குமரன் தாதையைக் - மயில்மேல் ஏறும் முருகனுக்குத் தந்தையை; (மஞ்ஞை - மயில்); (ஊர்தல் - ஏறுதல்; ஏறிநடத்துதல்);

கொண்டீச்சரவனைக் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

விமலனைத் தொழ வீடும் வினைகளே - தூயனை வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);


8)

இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன்

முடிபத் திற்றிட ஊன்றிய மூர்த்தியைக்

கொடிமேல் ஏற்றனைக் கொண்டீச் சரவனை

அடிக ளைத்தொழும் அன்பருக் கின்பமே.


இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன் - இடிபோலப் பெருமுழக்கம் செய்து அழகிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய; (சம்பந்தர் தேவாரம் - 1.112.8 - "எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன் முழுவலி யடக்கிய முதல்வனகர்");

முடி பத்து இற்றிட ஊன்றிய மூர்த்தியைக் - பத்துத்தலைகளும் நசுங்கும்படி பாதவிரலை ஊன்றிய பெருமானை; (இறுதல் - அழிதல்);

கொடிமேல் ஏற்றனை - இடபச் சின்னம் உடைய கொடியை உடையவனை;

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற சிவபெருமானை;

அடிகளைத் தொழும் அன்பருக்கு இன்பமே. - இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு இன்பமே; (அடிகள் - கடவுள்);


9)

அரவின் மேல்துயில் அச்சுதன் நான்முகன்

பரவ நின்ற பரஞ்சுட ரைத்திங்கள்

குரவம் சூடிய கொண்டீச் சரவனை

விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே


அரவின்மேல் துயில் அச்சுதன் நான்முகன் பரவ நின்ற பரஞ்சுடரைத் - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமால் பிரமன் இருவரும் (அடிமுடி தேடிப்) போற்றுமாறு ஓங்கிய மேலான சோதியை;

திங்கள் குரவம் சூடிய - சந்திரனையும் குராமலரையும் சூடிய;

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற சிவபெருமானை;

விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே - அடையும் பக்தர்களது கொடியவினை அழியும்; (விரவுதல் - அன்பு கலந்து ஒன்றாதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.94.5 - "பரவு வாரையு முடையார் ... விரவு வாரையு முடையார்");


10)

அல்லி ருக்கும் அகத்தினர் பொய்ம்மொழி

புல்லர் புன்னெறி அல்லற் புகுத்துமால்

கொல்லை ஏற்றனைக் கொண்டீச் சரவனைச்

சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே.


அல் இருக்கும் அகத்தினர் - வஞ்சமும் அறியாமையும் நிறைந்த மனத்தை உடையவர்கள்; (அல் - இருள்; அறியாமை; மயக்கம் (Confusion, delusion)); (அகம் - மனம்);

பொய்ம்மொழி புல்லர் புன்னெறி - பொய்களையே உரைக்கும் கீழோர்களது சிறுநெறிகள்;

அல்லற் புகுத்துமால் - அல்லலில் சேர்க்கும்; (ஆல் - அசைச்சொல்);

கொல்லை ஏற்றனை - இடப வாகனனை; (கொல்லை ஏறு - 1. "கொல்லேறு" என்பது ஐகாரச் சாரியை பெற்று , "கொல்லை ஏறு" என நின்றது. 2. கொல்லை - முல்லைநிலக்காடு; முல்லை நிலத்துக்குரிய இடபம். முல்லைக்குத் திருமால் தெய்வமாதலால் திருமாலை ஏறாக உடையவன் என்றும் அமையும்);

கொண்டீச்சரவனைச் சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே - திருக்கொண்டீச்சரத்துப் பெருமானைத் துதிப்பவர்களது பழவினைகள் தீரும்;


11)

ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை

நாட்டம் மூன்றுடை யானை நகையினாற்

கோட்டை மூன்றெரி கொண்டீச் சரவனைப்

பாட்டி னால்தொழு வார்வினை பாறுமே.


ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்குத் திரியும் ஒப்பற்றவனை;

நாட்டம் மூன்று உடையானை - முக்கண்ணனை; (நாட்டம் - கண்);

நகையினால் கோட்டை மூன்று எரி கொண்டீச்சரவனைப் - சிரிப்பினால் முப்புரங்களை எரித்த திருக்கொண்டீச்சரத்துப் பெருமானை; (நகை - சிரிப்பு );

பாட்டினால் தொழுவார் வினை பாறுமே - துதிகள் பாடி வழிபடுவார்களது வினைகள் அழியும்; (பாறுதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.5 - ".. .. வேற்காடு பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர் ஓட்டி னார்வினை யொல்லையே.");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment