Monday, August 23, 2021

05.14 – கன்றாப்பூர்

05.14 – கன்றாப்பூர்


2014-12-28

கன்றாப்பூர் (திருக்கன்றாப்பூர்) (இக்காலத்தில் "கோயில் கண்ணாப்பூர்")

-----------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")


1)

தண்ணாரும் புனல்தங்கும் சடையானைத் தடவரையன்

பெண்ணாரும் மேனியனைப் பிழைசெய்த மதனையெரி

கண்ணாரும் நெற்றியனைக் கன்றாப்பூர் நடுதறியைப்

பண்ணாரும் தமிழ்பாடிப் பணிவார்க்குப் பயமிலையே.


* கன்றாப்பூர் நடுதறி - கன்றாப்பூரில் ஈசன் திருநாமம் 'நடுதறியப்பர்'.


தண் ஆரும் புனல் தங்கும் சடையானைத் - குளிர்ச்சி பொருந்திய கங்கை தங்கிய சடையை உடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "..திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையா ரவர்போலும்..");

தடவரையன் பெண் ஆரும் மேனியனைப் - மலைமகளை ஒரு பாகமாக உடையவனை; (தடவரையன் - பெரிய மலைக்கு அரசன் - இமவான்);

பிழை செய்த மதனை எரி கண் ஆரும் நெற்றியனைக் - குற்றம் செய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணனை;

கன்றாப்பூர் நடுதறியைப் - கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை;

பண் ஆரும் தமிழ் பாடிப் பணிவார்க்குப் பயம் இலையே - இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகள் பாடி வழிபடும் பக்தர்களுக்கு அவன் அபயம் அளிப்பான்;


2)

மினலேந்து முகிலனைய மெல்லிடையாள் பங்கினனை

அனலேந்திக் கணங்களிசை ஆர்க்கநடம் ஆடிதனைக்

கனலேந்து கையானைக் கன்றாப்பூர் நடுதறியைப்

புனலேந்து சடையானைப் புகழ்வார்க்குத் துயரிலையே.


மினல் ஏந்து முகில் அனைய மெல்லிடையாள் பங்கினனை - மின்னலைத் தாங்கும் மேகம் போல் நிறமும் மெல்லிய இடையும் உடைய உமையம்மையை ஒரு பங்காக உடையவனை; (மினல் - மின்னல் - இடைக்குறை);

அனல் ஏந்திக் கணங்கள் இசை ஆர்க்க நடம் ஆடிதனைக் - கொள்ளித் தீயை ஏந்திப் பூதகணங்கள் இசை பாட நடம் ஆடுபவனை; (ஆர்க்க - ஒலிக்க); (ஆடி - ஆடுபவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.98.7 - "..பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.");

கனல் ஏந்து கையானைக் - கையில் நெருப்பை ஏந்தியவனை;

கன்றாப்பூர் நடுதறியைப் - கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை;

புனல் ஏந்து சடையானைப் புகழ்வார்க்குத் துயர் இலையே - கங்கையைச் சடையில் தரித்தவனைத் துதிக்கும் பக்தர்களுக்குத் துயரம் இல்லை;


3)

மறைநாலின் பொருளானை வார்சடைமேல் வளர்கின்ற

பிறையானைப் பிறவாத பெருமானை நஞ்சுண்டு

கறையாரும் மிடற்றானைக் கன்றாப்பூர் நடுதறியை

மறவாது நிதமேத்த வல்லார்கள் நல்லாரே.


மறைநாலின் பொருளானை - நால்வேதப்பொருள் ஆனவனை;

வார்சடைமேல் வளர்கின்ற பிறையானைப் - நீள்சடையின்மீது வரும் பிறைச்சந்திரனைச் சூடியவனை; (பெரியபுராணம் - 12.29.220 - "சென்னி வளர்வெண் பிறையணிந்த சிவனார்")

பிறவாத பெருமானை - பிறப்பு இல்லாத கடவுளை;

நஞ்சு உண்டு கறை ஆரும் மிடற்றானைக் - ஆலகால விடத்தை உண்டு கரிய நிறத்தை ஏற்ற கண்டத்தை உடையவனை;

கன்றாப்பூர் நடுதறியை - திருக்கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

மறவாது நிதம் ஏத்த வல்லார்கள் நல்லாரே - தினமும் எண்ணித் துதிப்பவர்கள் நல்லவரே.


4)

அண்டத்துக் கிப்பாலாய் அப்பாலும் ஆயவனை

முண்டத்தில் நீற்றானை முந்நீரின் நஞ்சத்தைக்

கண்டத்தில் ஏற்றானைக் கன்றாப்பூர் நடுதறியைக்

கண்டத்த அருளென்று கைதொழுவார் கவலாரே.


அண்டத்துக்கு இப்பாலாய் அப்பாலும் ஆயவனை - இப்பிரபஞ்சத்தின் உள்ளும் புறமும் இருப்பவனை; (அப்பர் தேவாரம் - 6.4.3 - ".. பெருநிலநீர் தீவளிஆ காச மாகி அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே");

முண்டம் - நெற்றி;

முந்நீர் - கடல்;

கன்றாப்பூர் நடுதறியைக் கண்டு "அத்த அருள்" என்று கைதொழுவார் கவலாரே - திருக்கன்றாப்பூரில் நடுதறியப்பனைத் தரிசித்துத், "தந்தையே அருள்வாயாக" என்று கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்குக் கவலை இல்லை; (அத்த - அத்தன் என்பதன் அண்மை விளி); (கவலார் - கவலைப்படார்; மனம்வருந்தார்); (கவலுதல் - மனம்வருந்துதல்);


5)

பொங்கரவைத் தாராகப் புனைந்தானைப் போர்செய்த

வெங்கரியின் உரிபோர்த்த விகிர்தனைவெண் திரைமல்கு

கங்கையடை சடையானைக் கன்றாப்பூர் நடுதறியை

மங்கையிடம் மகிழ்வானை வாழ்த்தஅறும் வல்வினையே.


பொங்கு அரவைத் தாராகப் புனைந்தானைப் - சீறும் பாம்பை மாலையாக அணீந்தவனை;

போர்செய்த வெங்கரியின் உரி போர்த்த - போரிட்ட கொடிய யானையின் தோலைப் போர்த்த;

விகிர்தனை - மாறுபட்ட செயலினனை;

வெண் திரை மல்கு கங்கை அடை சடையானைக் - வெண்மையான அலை மிகுந்த கங்கையை அடைத்த சடையை உடையவனை; (அப்பர் தேவாரம் - 4.111.9 - "வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம்");

கன்றாப்பூர் நடுதறியை - திருக்கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

மங்கை இடம் மகிழ்வானை - உமையை இடப்பாகமாக விரும்பியவனை;

வாழ்த்த அறும் வல்வினையே - வாழ்த்தி வழிபட்டால் வலிய வினைகள் தீரும்;


6)

பலதேவர் திரளாகப் பணிந்தேத்த அவர்க்கிரங்கிச்

சிலையாவோர் மலையேந்தித் திரிபுரங்கள் செற்றானைக்

கலையேந்து கையானைக் கன்றாப்பூர் நடுதறியை

மலர்தூவி வழிபடுவார் வல்வினைகள் மாயுமன்றே.


சிலையா ஓர் மலை ஏந்தி - வில்லாக ஒரு மலையை (மேருமலையை) ஏந்தி;

திரிபுரங்கள் செற்றானை - முப்புரங்களை அழித்தவனை;

கலை - மான்;


7)

ஏலமலர்க் குழலாளுக் கிடப்பாகம் ஈந்தானைச்

சீலமிகு பாலனிடம் சீற்றமொடு வந்தடைந்த

காலனுயிர் காலவுதை கன்றாப்பூர் நடுதறியை

நீலமணி மிடற்றானை நினையவினை நெருங்காவே.


ஏலமலர்க்குழலாளுக்கு இடப்பாகம் ஈந்தானைச் - மணம் கமழும், நறுமலர்களைச் சூடிய கூந்தலையுடைய உமாதேவிக்கு தன் திருமேனியில் இடப்பாகத்தைத் தந்தவனை; (ஏலம் - மயிர்ச்சாந்து);

சீலமிகு பாலனிடம் சீற்றமொடு வந்தடைந்த - சிவபக்தியிற் சிறந்த மார்க்கண்டேயரிடம் சீறி வந்தடைந்த;

காலன் உயிர் கால உதை - காலன் தன் உயிரைக் கக்குமாறு அவனை உதைத்த; (காலுதல் - கக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.31.4 - "மடம்படு மலைக்கிறைவன் ... காலனுயிர் காலவொரு காலால் கடந்தவன்...");

கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

நீலமணி மிடற்றானை - நீலகண்டனை;

நினைய வினை நெருங்காவே - மறவாமல் எண்ணி வணங்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா;


8)

பொல்லாத இராவணனைப் பொருப்பின்கீழ் நசுக்கியருள்

வல்லானை நால்வர்க்கு மறைப்பொருளை விரித்துரைக்கக்

கல்லாலின் புடையமர்ந்த கன்றாப்பூர் நடுதறியைச்

சொல்லாலும் செயலாலும் தொழுவார்க்குத் துயரிலையே.


பொல்லாத இராவணனைப் பொருப்பின்கீழ் நசுக்கியருள் வல்லானை - கொடியவனான இராவணனைக் கயிலைமலையின் அடியில் நசுக்கியருளிய, ஆற்றல் உடையவனை; (பொருப்பு - மலை);

மறைப்பொருளை விரித்து உரைக்கக் கல்லாலின் புடை அமர்ந்த - சனகாதியர் நால்வர்க்கு வேதத்தின் பொருளை விளக்கி உரைக்கக் கல்லாலமரத்தின்கீழ் இருந்த;

கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

சொல்லாலும் செயலாலும் தொழுவார்க்குத் துயர் இலையே - மனம், வாக்கு, காயம் இவை மூன்றாலும் வழிபடுபவர்களுக்குத் துயரம் இல்லை; (மனம் என்பது குறிப்பால் பெறப்பெற்றது);


9)

படந்திகழும் பாம்பணையான் பன்றியுருக் கொண்டுநிலம்

இடந்துசென்றும் அயன்விசும்பில் ஏறியும்கா ணாவண்ணம்

கடந்துநின்ற சோதியனைக் கன்றாப்பூர் நடுதறியை

மடந்தையொன்று மேனியனை வாழ்த்தஅறும் வல்வினையே.


படம் திகழும் பாம்பு அணையான் பன்றி உருக்கொண்டு நிலம் இடந்துசென்றும் - படம் உடைய பாம்பைப் படுக்கையாக உடைய திருமால் ஒரு பன்றி உருவில் நிலத்தை அகழ்ந்துசென்றும்; (இடத்தல் - தோண்டுதல்);

அயன் விசும்பில் ஏறியும் - பிரமன் வானிற் பறந்து உயர்ந்தும்; (விசும்பு - ஆகாயம்);

காணாவண்ணம் கடந்து நின்ற சோதியனைக் - அவர்களால் அடைய இயலாதபடி எல்லையின்றி நின்ற ஒளிப்பிழம்பை;

கன்றாப்பூர் நடுதறியை - கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பனை;

மடந்தை ஒன்று மேனியனை - உமை ஒன்றுகின்ற திருமேனி உடையவனை; (ஒன்றுதல் - ஒன்றாகப் பொருந்துதல் - To unite; to coalesce);

வாழ்த்த அறும் வல்வினையே - வாழ்த்தினால் வலிய வினைகளெல்லாம் தீரும்;


10)

புதியவழி எனச்சொல்லிப் புன்னெறிகட் கழைக்கின்ற

மதியிலிகள் வஞ்சத்தில் மயங்கேன்மின் வார்சடைமேல்

கதிர்மதியம் புனைந்தானைக் கன்றாப்பூர் நடுதறியைப்

பதியையடி பணிகின்ற பத்தர்க்குப் பயமிலையே.


புதிய வழி எனச் சொல்லிப் புன்னெறிகட்கு அழைக்கின்ற மதியிலிகள் வஞ்சத்தில் மயங்கேன்மின் - புது மார்க்கம் என்று சொல்லிச் சிறுநெறிகளுக்குக் கூப்பிடுகின்ற அறிவீனர்களது வஞ்சத்தில் மயங்கவேண்டா; (மயங்கேன்மின் - மயங்கேல்+மின்); (மின் - முன்னிலைப் பன்மை விகுதி);

பதியை அடி பணிகின்ற பத்தர்க்குப் பயம் இலையே - தலைவனான சிவபெருமானை வணங்கும் பக்தர்களுக்கு அவன் அபயம் அளிப்பான்;


11)

கவினாரும் பொழில்சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியை

அவிர்வேணி உடையானை அன்போடு தமிழ்பாடிச்

செவியாரச் சீர்கேட்கும் சிந்தையர்க்குப் புவிமீது

தவியாத நிலைதன்னைத் தந்தருள்வான் சங்கரனே.


கவின் ஆரும் பொழில் சூழ்ந்த கன்றாப்பில் நடுதறியை - அழகிய சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பனை;

அவிர்வேணி - அவிர்சடை - பிரகாசிக்கும் சடை; (அவிர்தல் - பிரகாசித்தல்);

உடையானை - உடையவனை; சுவாமியை;

அன்போடு தமிழ் பாடிச் - பக்தியோடு தமிழ்ப் பாமாலைகளைப் பாடி;

செவியாரச் சீர் கேட்கும் சிந்தையர்க்குப் - காதார அவன் புகழைக் கேட்கின்ற மனம் உடையவர்களுக்கு;

புவிமீது தவியாத நிலைதன்னைத் தந்தருள்வான் சங்கரனே - இம்மண்மேல் தவிக்கின்ற நிலையை நீக்கிப், பிறவா நிலையைத் தந்து, சிவலோகம் அருள்வான் சங்கரனாகிய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment