Saturday, November 23, 2019

P.250 - பிரம்மதேசம் - ஒருமதிக் கீற்றினை

2014-10-14

P.250 - பிரம்மதேசம்

(பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் - தாமிரபரணிநதியின் வடக்கே அம்பாசமுத்திரம் அருகுள்ள தலம்)

--------------------------------

(12 பாடல்கள்)

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

ஒருமதிக் கீற்றினை உச்சி வைத்தவன்

இருநதிச் சடையினன் ஏத்தும் அன்பருக்(கு)

அருநிதி ஆகிய ஐயன் தன்னிடம்

பெருமதில் புடையணி பிரம தேசமே.


ஒரு மதிக்-கீற்றினை உச்சி வைத்தவன் - பிறையைத் திருமுடிமேல் சூடியவன்;

இருநதிச் சடையினன் - கங்கையைச் சடையில் தரித்தவன்; (இருநதி - பெரிய நதி - கங்கை);

ஏத்தும் அன்பருக்கு அருநிதி ஆகிய ஐயன் தன் இடம் - துதிக்கும் பக்தர்களுக்கு அரிய செல்வம் ஆன தலைவன் உறையும் தலம்;

பெருமதில் புடை அணி பிரமதேசமே - பெரிய மதிலால் சூழப்பெற்ற பிரமதேசம் ஆகும்; (புடை - பக்கம்);


2)

வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு தாளினார்

மஞ்ஞையின் மேல்வரு மைந்தன் தாதையார்

மைஞ்ஞவில் மிடற்றினர் மதியம் சூடிய

பிஞ்ஞக னாரிடம் பிரம தேசமே.


வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு தாளினார் - கொடிய எமனுடைய உயிரை (உதைத்து) அழித்த திருப்பாதர்; (ஞமன் - நமன் - கூற்றுவன்); (தாள் - பாதம்);

மஞ்ஞையின்மேல் வரும் மைந்தன் தாதையார் - மயில்மேல் ஏறி வரும் முருகனுக்குத் தந்தையார்; (மஞ்ஞை - மயில்); (சுந்தரர் தேவாரம் - 7.86.1 - "விடையின்மேல் வருவானை");

மைஞ்-ஞவில் மிடற்றினர் - கருமை திகழும் கண்டத்தை உடையவர்; (மை - கருமை); (ஞவில் - நவில்; நவில்தல் - தாங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.60.4 - "மைஞ்ஞவில் கண்டன் தன்னை");

மதியம் சூடிய பிஞ்ஞகனார் இடம் பிரமதேசமே - சந்திரனை அணிந்த, பிஞ்ஞகன் என்ற திருநாமம் உடைய, சிவபெருமானார் உறையும் இடம் பிரமதேசம் ஆகும். (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);


3)

கோணிய பிறையினன் கொடும்ப வக்கடல்

தோணியை ஒத்தவன் சுடலை நீற்றினன்

ஊணிடும் என்றுழல் ஒருவன் மாதிடம்

பேணிய கோனிடம் பிரம தேசமே.


கோணிய பிறையினன் - வளைந்த பிறையை அணிந்தவன்; (கோணுதல் - வளைதல்); (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "கோணிய பிறைசூடியை");

கொடும்-பவக்கடல் தோணியை ஒத்தவன் - கொடிய பிறவிக்கடலைக் கடப்பதற்குத் தெப்பம் போன்றவன்; (பவம் - பிறவி); (தோணி - ஓடம்); (கடற்றோணி - கடலைக் கடப்பிக்கின்ற தெப்பம்; உருபும் பயனும் உடன்தொக்க தொகை);

சுடலை நீற்றினன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன்;

"ஊண் இடும்" என்று உழல் ஒருவன் - "பிச்சை இடுங்கள்" என்று யாசித்து உழலும் ஒப்பற்றவன்; (ஊண் - உணவு);

மாது இடம் பேணிய கோன் இடம் பிரமதேசமே - உமையை இடப்பாகமாக விரும்பிய தலைவன் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்; (பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்); (கோன் - தலைவன்; நாதன்);


4)

சிறப்புறு செந்தமிழ் செப்பி நாள்தொறும்

மறப்பில ராய்அடி வணங்கு வார்வினை

அறப்பரிந் தருள்பவன் அந்த மில்லவன்

பிறப்பிலி உறைவிடம் பிரம தேசமே.


சிறப்புறு செந்தமிழ் செப்பி நாள்தொறும் மறப்பிலராய் அடி வணங்குவார் வினை அறப் பரிந்து அருள்பவன் - சிறந்த தமிழ்ப்பாமாலைகளை ஓதித் தினமும் மறவாமல் திருவடியை வணங்கும் பக்தர்களது வினை தீர இரங்கி அருள்பவன்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);

அந்தம் இல்லவன் பிறப்பிலி - சாதலும் பிறத்தலும் இல்லாதவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.112.8 - "அந்தமில்லவன் ஆடானை");

உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;


5)

நாருடை யார்க்கருள் நல்கும் நல்லவன்

கூருடை மழுவினன் கோல வெண்பிறை

நீரடை செஞ்சடை நிமலன் ஆயிரம்

பேருடை யானிடம் பிரம தேசமே.


நார் உடையார்க்கு அருள் நல்கும் நல்லவன் - அன்பர்களுக்கு அருளும் நல்லவன்; (நார் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.41.11 - "நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்");

கூருடை மழுவினன் - கூர்மையான மழுவை ஏந்தியவன்;

கோல வெண்பிறை நீர் அடை- செஞ்சடை நிமலன் - அழகிய வெண்திங்களும் கங்கையும் பொருந்திய செஞ்சடையை உடைய தூயன்;

ஆயிரம் பேர் உடையான் - ஆயிரம் திருநாமங்கள் உள்ளவன்;

டம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;


6)

முத்தியை நல்கிடும் முதல்வன் முக்கணன்

மத்தம ணிந்தவன் மதுரை மன்னவன்

மொத்தினை ஏற்றவன் முன்னம் நஞ்சையுண்

பித்தனி ருப்பது பிரம தேசமே.


முத்தியை நல்கிடும் முதல்வன் - முக்தியை அளிக்கும் முதல்வன்;

முக்கணன் - மூன்று கண்கள் உடையவன்;

மத்தம் அணிந்தவன் - ஊமத்தமலரைச் சூடியவன்;

மதுரை மன்னவன் மொத்தினை ஏற்றவன் (முன்னம்) - முன்னொருநாள் பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டவன்; (மொத்து - அடி); (முன்னம் - இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைக்கலாம்);

முன்னம் நஞ்சைண் பித்தன் - முன்பு ஆலகாலத்தை உண்ட பேரருளாளன்; (பித்தன் - சிவன் திருநாமம் - பேரருளாளன்);

ருப்பது பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;


7)

நறைமலர் நாள்தொறும் நம்பி இட்டவர்

குறையறப் பல்வரம் கொடுக்கும் அன்பினன்

அறைபுனல் கூவிளம் அரவம் வெள்ளிளம்

பிறையணிந் தானிடம் பிரம தேசமே.


நறைமலர் நாள்தொறும் நம்பி இட்டவர் குறை அறப் பல்வரம் கொடுக்கும் அன்பினன் - தினமும் வாசமலர்களைத் தூவி விரும்பி வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் குறையெல்லாம் தீரும்படி பலவரங்களைக் கொடுக்கும் அன்புடையவன்; (நறை - தேன்; வாசனை); (நம்புதல் - விரும்புதல்);

அறை-புனல் கூவிளம் அரவம் வெள்-இளம்-பிறை அணிந்தான் - அலைமோதி ஒலிக்கின்ற கங்கை, வில்வம், பாம்பு, வெண்மையான இளந்திங்கள் இவற்றைச் சூடியவன்; (அறைதல் - ஒலித்தல்; அலைமோதுதல்); (கூவிளம் - வில்வம்);

இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;


8)

விண்ணவ ருந்தொழு வெற்பி டந்தவன்

திண்ணிய தோள்நெரி செய்த தாளினார்

வெண்ணிற விடையினர் விமலர் பங்கினில்

பெண்ணமர்ந் தாரிடம் பிரம தேசமே.


விண்ணவரும் தொழு வெற்பு இடந்தவன் திண்ணிய தோள் நெரிசெய்த தாளினார் - (மண்ணுலகோரும்) வானவரும் வணங்கும் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது வலிய புஜங்களை நசுக்கிய திருப்பாதர்; (விண்ணவரும் - தேவர்களும்; உம் - எச்சவும்மை); (வெற்பு - மலை); (நெரிசெய்தல் - நசுக்குதல்);

வெண்ணிற விடையினர் - வெள்ளை எருதை வாகனமாக உடையவர்;

விமலர் - பரிசுத்தர்;

பங்கினில் பெண் அமர்ந்தார் - ஒரு பங்கில் உமையை விரும்பியவர்; ( அமர்தல் - விரும்புதல்);

இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;


9)

கரியவன் நான்முகன் காணொ ணாதவோர்

எரியவன் ஒருகணை ஏவி ஒன்னலர்

திரியரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள்

பெரியவன் உறைவிடம் பிரம தேசமே.


கரியவன் நான்முகன் காணொணாத ஓர் எரியவன் - திருமால் பிரமன் இவர்களால் காண இயலாத ஒப்பற்ற ஜோதி; (காணொணாத - காண ஒணாத; தொகுத்தல்விகாரம், இடைக்குறைவிகாரம்); (ஓர் - ஒப்பற்ற);

ஒரு கணை ஏவி, ஒன்னலர் திரி-அரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள் பெரியவன் - ஓர் அம்பை எய்து, பகைவர்களது, எங்கும் திரிந்த முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி செய்த பெருமான்; (ஒன்னலர் - பகைவர்); (திரியரண் - திரிந்த அரண்கள்);

உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;


10)

குற்றமி குத்தவர் கூறும் பொய்ம்மொழி

வெற்றுரை இடரினில் வீழ்த்தும் நீங்குமின்

பெற்றமு கந்தவன் பேணு வார்க்கருள்

பெற்றியன் உறைவிடம் பிரம தேசமே.


குற்றம் மிகுத்தவர் கூறும் பொய்ம்மொழி வெற்றுரை இடரினில் வீழ்த்தும் - குற்றம் மிகுந்தவர்கள் சொல்கின்ற பொய்களும் பயனற்ற வார்த்தைகளும் துன்பத்தில் தள்ளும்;

நீங்குமின் - ஆதலால், அவற்றை / அவர்களை நீங்குங்கள்;

பெற்றம் உகந்தவன் - இடபவாகனத்தை விரும்பியவன்; (பெற்றம் - இடபம்; எருது); (உகத்தல் - விரும்புதல்);

பேணுவார்க்கு அருள் பெற்றியன் - போற்றி வழிபடுபவர்களுக்கு அருள்கின்ற தன்மை உடையவன்; (பெற்றி - இயல்பு; பெருமை);

உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;


11)

கருதிவந் தேத்திடக் கவலை தீர்ப்பவன்

பொருதுவெங் கரியுரி போர்த்த மார்பினன்

எருதணி கொடியினன் இலந்தை நீழலைப்

பெரிதுகந் தானிடம் பிரம தேசமே.


கருதி வந்து ஏத்திடக் கவலை தீர்ப்பவன் - விரும்பி வந்து வழிபடும் பக்தர்களுடைய கவலையைத் தீர்ப்பவன்;

பொருது வெங்கரி-உரி போர்த்த மார்பினன் - போர் செய்த கொடிய யானையின் தோலை மார்பில் போர்த்தவன்; (பொருதல் - போர்செய்தல்); (கரி - யானை); (உரி - தோல்);

எருது அணி கொடியினன் - இடபக்கொடி உடையவன்;

இலந்தை நீழலைப் பெரிது உகந்தான் - இலந்தைமரத்தின் கீழே விரும்பி இருப்பவன்; (* இலந்தை - இத்தலத்தின் தலவிருட்சம்); (சம்பந்தர் தேவாரம் - 3.115.1 - "ஆலநீழ லுகந்த திருக்கையே");

இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும்;


12)

துணிமதிக் கண்ணியைச் சூடு சுந்தரன்

மணியணி மிடற்றினன் மங்கை பங்கினன்

பணியணி மார்பினன் பாதம் பற்றினார்

பிணியறுப் பானிடம் பிரம தேசமே.


துணி-மதிக்-கண்ணியைச் சூடு சுந்தரன் - பிறையைக் கண்ணி போலச் சூடிய அழகன்; (துணி - துண்டம்); (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

மணி அணி மிடற்றினன் - நீலமணியை அணிந்த கண்டத்தை உடையவன்;

மங்கை பங்கினன் - உமையொருபங்கன்;

பணி அணி மார்பினன் - பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவன்; (பணி - நாகம்);

பாதம் பற்றினார் பிணி அறுப்பான் - திருவடியைச் சரண் அடைந்தவர்களுடைய பந்தங்களையும் நோய்களையும் நீக்குபவன்; (பிணி - பந்தம்; நோய்);

இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

P.249 - மூவலூர் - மகிழ்வென நாடொறும்

2014-09-13

P.249 - மூவலூர்

(மயிலாடுதுறையை அடுத்து உள்ள தலம்)

----------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் விளம் விளம் விளம் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே");

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்");


1)

மகிழ்வென நாடொறும் வஞ்சவைம் புலன்களின் வழியில் ஏகி

அகழ்குழி விழுந்திடர் அடைவது தீர்ந்திட அடையென் நெஞ்சே

புகழ்மிகு திருப்பெயர் புகல்பவர் வழித்துணை புனலி னோடு

முகிழ்மதி சூடிய முக்கணன் மேவிய மூவ லூரே.


மகிழ்வு என நாள்தொறும் வஞ்ச ஐம்புலன்களின் வழியில் ஏகி - இன்பம் என்று எண்ணித் தினமும் வஞ்சமுடைய ஐம்புலன்களின் வழியிலேயே சென்று;

அகழ்-குழி விழுந்து இடர் அடைவது தீர்ந்திட அடைன் நெஞ்சே - அகழ்ந்த குழியில் விழுந்து அல்லல் அடைவது நீங்கிட, என் நெஞ்சமே (மூவலூரை) அடைவாயாக; (அகழ்தல் - தோண்டுதல்);

புகழ் மிகு திருப்பெயர் புகல்பவர் வழித்துணை - புகழ் மிக்க திருநாமத்தைச் சொல்பவர்க்கு வழித்துணை ஆனவன்; (* மார்க்கசகாயேஸ்வரர் - மூவலூரில் ஈசன் திருநாமம்);

புனலினோடு முகிழ்மதி சூடிய முக்கணன் மேவிய மூவலூரே - கங்கையோடு இளந்திங்களைச் சூடிய முக்கண்ணன் எழுந்தருளியிருக்கும் மூவலூரை; (முகிழ்த்தல் - அரும்புதல்; தோன்றுதல்);


2)

தளைவினை தருதுயர் தானழி வெய்திடச் சாரென் நெஞ்சே

வெளைவிடை ஊர்தியன் வெம்புலித் தோலினன் மேரு வில்லி

வளையணி மாதிடம் மகிழ்பரன் கூவிளம் வன்னி மத்தம்

முளைமதி சூடிய முக்கணன் மேவிய மூவ லூரே.


தளை-வினை தரு-துயர் தான் அழிவெய்திடச் சார் என் நெஞ்சே - பந்தித்த வினைகள் தரும் துன்பம் அழிய (மூவலூரை) அடை என் மனமே; (தளைத்தல் - பந்தித்தல்); (சார்தல் - அடைதல்);

வெளைவிடை ஊர்தியன் - வெண்ணிறை எருதை வாகனமாக உடையவன்; (வெளை - வெள்ளை; இடைக்குறை விகாரம்);

வெம்புலித் தோலினன் - கொடிய புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்;

மேருவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

வளை அணி மாது இடம் மகிழ்-பரன் - வளையலை அணியும் உமையை இடப்பாகமாக விரும்பிய பரமன்;

கூவிளம் வன்னி மத்தம் முளை-மதி சூடிய முக்கணன் மேவிய மூவலூரே - வில்வம், வன்னியிலை, ஊமத்தமலர், இளந்திங்களைச் சூடிய முக்கண்ணன் எழுந்தருளியிருக்கும் மூவலூரை; (கூவிளம் - வில்வம்);


3)

இப்படி இகல்வினை எப்படி நீங்குமென் றெண்ணு நெஞ்சே

செப்பிடு வேன்வழி சென்றடி போற்றிடாய் சேவ தேறும்

ஒப்பிலன் வெங்கரி உரியினைப் போர்த்தவன் உர(ம்)ம லிந்த

முப்புரம் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே.


இப்படி இகல்-வினை எப்படி நீங்கும் என்று எண்ணு நெஞ்சே - இப்படித் தாக்குகின்ற வினையெல்லாம் எப்படித் தீரும் என்று நினை மனமே; (இகல்தல் - பகைத்தல்; தாக்குதல்);

செப்பிடுவேன் வழி, சென்று அடி போற்றிடாய் - வழி சொல்கின்றேன், (மூவலூர்) போய்த் திருவடியை வணங்கு;

சேவது ஏறும் ஒப்பிலன் - இடபவாகனத்தை உடைய ஒப்பற்றவன்;

வெங்கரி-உரியினைப் போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்த்தவன்;

உர(ம்)மலிந்த முப்புரம் எய்தவன் - வலிய முப்புரங்களை ஓர் அம்பினை ஏவி அழித்தவன்;

முக்கணன் மேவிய மூவலூரே - முக்கண்ணன் எழுந்தருளியிருக்கும் மூவலூர்;


4)

வந்திடர் செய்திடு வல்வினை ஆயின மாய வேண்டில்

செந்தமிழ் மாலைகள் செப்பிய நாவொடு சேரென் நெஞ்சே

வெந்தவெண் பொடியணி மேனியன் வேணியன் மேரு வில்லால்

முந்தரண் மூன்றெரி முக்கணன் மேவிய மூவ லூரே.


வந்து இடர் செய்திடு வல்வினை ஆயின மாய வேண்டில் - வந்து துன்பம் தரும் வலிய வினையெல்லாம் அழிய வேண்டுமென்றால்;

செந்தமிழ் மாலைகள் செப்பிய நாவொடு சேர் என் நெஞ்சே - செம்மை பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைப் பாடிச் சென்றடை என் மனமே;

வெந்த வெண்பொடி அணி மேனியன் - சுட்ட வெண்திருநீற்றை மேனியில் பூசியவன்;

வேணியன் - சடையினன்;

மேருவில்லால் முந்து அரண் மூன்று எரி - மேருமலையை வில்லாக ஏந்தி முன்பு முப்புரங்களை எரித்த;

முக்கணன் மேவிய மூவலூரே - முக்கண்ணன் எழுந்தருளியிருக்கும் மூவலூரை;


5)

மரணமும் பிறவியும் வருநிலை மாய்ந்திட வாழ்த்து நெஞ்சே

பிரமனின் தலையினில் பிச்சையை ஏற்றுழல் பித்தன் அத்தன்

சரணமென் றடிதொழும் தன்னடி யார்க்கரண் சாம வேதன்

முரணெயில் மூன்றெரி முக்கணன் மேவிய மூவ லூரே.


மரணமும் பிறவியும் வரும் நிலை மாய்ந்திட, வாழ்த்து நெஞ்சே - இறப்பும் பிறப்பும் தொடர்ந்து வரும் நிலையானது அழிய, மனமே, நீ வாழ்த்துவாயாக;

பிரமனின் தலையினில் பிச்சையை ஏற்று உழல் பித்தன், அத்தன் - பிரமனது மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரியும் பேரருளாளன், நம் தந்தை; (அத்தன் - தந்தை);

சரணம் என்று அடிதொழும் தன் அடியார்க்கு அரண், சாமவேதன் - திருவடியில் சரண்புகுந்த அடியவர்களுக்குக் காவல் ஆனவன், சாமவேதத்தைப் பாடியவன் (சாமகானப் பிரியன்);

முரண்-எயில் மூன்று எரி- முக்கணன் மேவிய மூவலூரே - பகைத்த முப்புரங்களையும் எரித்தவன், நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;


6)

காவலிங் காரெனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே

சேவலங் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் செருந்தி கொக்கின்

தூவலும் சூடிய தூயவன் இமையவர் துயர மாற

மூவரண் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே.


காவல் இங்கு ஆர் எனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே - இங்கே நமக்குப் பாதுகாவல் யார் என்று கவலைப்படுவது ஒழிய, மனமே, நீ எண்ணுவாயாக;

சேவல் அம் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் - அழகிய சேவற்கொடியை உடைய முருகனுக்குத் தந்தை; (சேந்தன் - முருகன்);

செருந்தி கொக்கின்-தூவலும் சூடிய தூயவன் - செருந்திமலரையும் கொக்கிறகையும் முடிமேல் சூடிய தூயன்; (செருந்தி - ஒரு மலரின் பெயர்); (தூவல் - இறகு); (கொக்கின் தூவல் - 1. கொக்கிறகு என்ற மலர்; 2. கொக்குவடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (சம்பந்தர் தேவாரம் - 1.24.6 - "கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார்"); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும்");

இமையவர் துயரம் மாற மூ-அரண் எய்தவன் - தேவர்களது துன்பம் தீர முப்புரங்களையும் ஓரம்பால் எய்தவன்; (மாறுதல் - நீங்குதல்; இல்லையாதல்); (அரண் - கோட்டை);

முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;


7)

படிமிசைப் பல்லிடர் படுவது நீங்கிடப் பணியென் நெஞ்சே

அடிதொழு வானவர்க் கருளிய அங்கணன் அண்ட வாணன்

கொடியிடை மாதொரு கூறினன் குளிர்மதி கொன்றை யோடு

முடிமிசைக் கங்கையன் முக்கணன் மேவிய மூவ லூரே.


படிமிசைப் பல்லிடர் படுவது நீங்கிடப் பணி என் நெஞ்சே - பூமியில் பல துன்பங்களை அனுபவிப்பது ஒழிய, என் மனமே, நீ தொழுவாயாக; (படி - பூமி);

அடிதொழு வானவர்க்கு அருளிய அங்கணன் - வழிபாடு செய்த தேவர்களுக்கு அருள்செய்த அருட்கண் உடையவன்;

அண்டவாணன் - அண்டம் முழுதும் வாழ்நன் (வாழ்பவன்). (வாணன் மரூஉமொழி); (சம்பந்தர் தேவாரம் - 2.7.10 - "அண்டவாணன் அடி கைதொழுவார்க்கில்லை அல்லலே");

கொடி-இடை மாது ஒரு கூறினன் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;

குளிர்மதி கொன்றையோடு முடிமிசைக் கங்கையன் - திருமுடிமேல் குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் கொன்றைமலரையும் கங்கையையும் சூடியவன்;

முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;


8)

துன்னிய வினையவை தொலைவுற வேண்டிடில் துதிசெய் நெஞ்சே

தென்னிலங் கைக்கிறை சென்னிபத் திறநெரி செய்த தேவன்

பன்னருஞ் சீரினன் பாய்புலித் தோலினன் பாவ நாசன்

முன்னொடு பின்னவன் முக்கணன் மேவிய மூவ லூரே.


துன்னிய வினையவை தொலைவுற வேண்டிடில் துதிசெய் நெஞ்சே - நம்மைப் பொருந்திய வினைகள் எல்லாம் அழியவேண்டுமென்று நீ விரும்பினால், மனமே, துதிப்பாயாக; (துன்னுதல் - பொருந்துதல்; அடைதல்; செறிதல்); (வேண்டுதல் - விரும்புதல்);

தென்-இலங்கைக்கு இறை சென்னி பத்து இற நெரிசெய்தேவன் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணனது பத்துத்-தலைகளும் அழிய நசுக்கிய தேவாதிதேவன்; (இறை - அரசன்); (நெரிசெய்தல் - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.86.8 - "நெடுமுடி ஒருபது நெரிசெய்தார்");

பன்னரும்-சீரினன் - பேசுவதற்கு அரிய புகழை உடையவன்; (பன்னரும் - பன்ன அரும்; தொகுத்தல் விகாரம்); (பன்னுதல் - பேசுதல்; பாடுதல்);

பாய்புலித்தோலினன் - பாயும் புலியின் தோலை அணிந்தவன்;

பாவநாசன் - பாவங்களை அழிப்பவன்;

முன்னொடு பின்னவன் - ஆதியும் அந்தமும் ஆனவன்;

முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;


9)

வெம்மலை போல்வினை விலகியின் புற்றிட விரும்பு வாயேல்

கொய்ம்மலர் செந்தமிழ் கொண்டடி இணைதொழக் குறுகு நெஞ்சே

செம்மலர் மேலயன் திரைமிசைத் துயிலரி தேடு சோதி

மும்மலம் அற்றவன் முக்கணன் மேவிய மூவ லூரே.


வெம்-மலைபோல் வினை விலகி இன்புற்றிட விரும்புவாயேல் - கொடிய, மலைபோல் உள்ள வினைகள் நீங்கி இன்பம் பெற விரும்பினால்; (வெம்மை - கடுமை);

கொய்ம்மலர் செந்தமிழ் கொண்டு அடி-இணை தொழக் குறுகு நெஞ்சே - பறித்த பூக்களாலும் செந்தமிழ்ப்-பாமாலைகளாலும் இரு-திருவடிகளை வழிபட, நெஞ்சே, அடைவாயாக; (குறுகுதல் - அணுகுதல்);

செம்மலர் மேலயன் திரைமிசைத் துயில் அரி தேடு சோதி - தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் கடல்மேல் துயிலும் திருமாலும் தேடிய ஜோதிப்பிழம்பு;

மும்மலம் அற்றவன் - தூயன்;

முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;


10)

கிறித்தவம் செய்பவர் கேப்பையில் நெய்யெனல் கேட்க வேண்டா

பறித்தநன் மலர்களைப் பத்தர்கள் இட்டடி பரவும் ஊராம்

எறித்திடு பிறையினன் இமையவர் தேரினில் ஏறி அச்சை

முறித்தெயில் படநகு முக்கணன் மேவிய மூவ லூரே.


கிறித்தவம் செய்பவர்கள் - 1. பொய்த்தவம் செய்பவர்கள்; (கிறி + தவம்) (கிறி - பொய்); 2. வஞ்சித்துக் கேடு செய்பவர்கள்; (கிறித்து + அவம்); (கிறித்தல் - வஞ்சித்தல்); (அவம் - கேடு); (சம்பந்தர் தேவாரம் - 2.23.10 - "புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்"); (அப்பர் தேவாரம் - 6.67.10 - "பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக் கிறிப்பானை");

கேப்பையில் நெய் எனல் - கேழ்வரகில் நெய் ஒழுகுகின்றது என்று சொல்வதை;

கேட்க வேண்டா - அப்பேச்சைப் பொருளாகக் கொள்ளாதீர்கள்;

பறித்த நன்மலர்களைப் பத்தர்கள் இட்டு அடி பரவும் ஊர் ஆம் - புதுமலர்களைத் தூவி அடியவர்கள் போற்றுகின்ற ஊர் ஆவது; (பரவுதல் - துதித்தல்);

எறித்திடு பிறையினன் - ஒளிவீசும் பிறையை அணிந்தவன்; (எறித்தல் - ஒளிவீசுதல்); (அப்பர் தேவாரம் - 4.22.1 - "செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும் சென்னி");

இமையவர் தேரினில் ஏறி அச்சை முறித்து எயில் பட நகு - தேவர்கள் செய்த தேரில் ( / தேவர்களே பாகங்களாக அமைந்த தேரில்) ஏறி, அதன் அச்சை முறித்து, முப்புரங்களும் அழியும்படி சிரித்த; (எயில் - கோட்டை); (படுதல் - அழிதல்); (நகுதல் - சிரித்தல்);

முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூர்;

* "அப்பெருமானைத் தொழுது உய்க" என்பது குறிப்பு;


11)

நாவினில் நாடொறும் நற்பெயர் தாங்கினார் நலிவ றுக்கும்

காவலன் கணைதொடு காமனைக் காய்ந்தவன் கடல்நஞ் சுண்டும்

சாவிலன் தண்மதிச் சடையினன் அந்தகன் தனைய ழித்த

மூவிலை வேலினன் முக்கணன் மேவிடம் மூவ லூரே.


நாவினில் நாடொறும் நற்பெயர் தாங்கினார் நலிவு அறுக்கும் காவலன் - தினமும் ஈசன் நாமத்தைச் சொல்லும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்துக் காப்பவன்; (நலிவு - துன்பம்); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்);

கணைதொடு காமனைக் காய்ந்தவன் - மலர்க்கணை தொடுத்த மன்மதனைச் சாம்பலாக்கியவன்;

கடல்நஞ்சு உண்டும் சாவு இலன் - ஆலகாலத்தை உண்டும் இறவாதவன்;

தண்மதிச் சடையினன் - சடையில் குளிர்ந்த சந்திரனைச் சூடியவன்;

அந்தகன்தனை அழித்த மூவிலை-வேலினன் - அந்தகாசுரனைத் திரிசூலத்தால் குத்தி அழித்தவன்; (அந்தகன் - அந்தகாசுரன்); (மூவிலைவேல் - திரிசூலம்);

முக்கணன் மேவிடம் மூவலூரே - நெற்றிக்கண்ணனான அப்பெருமான் உறைகின்ற இடம் மூவலூர்;. * "அப்பெருமானைத் தொழுது உய்க" என்பது குறிப்பு;


வி. சுப்பிரமணியன்

----------- --------------