Tuesday, July 30, 2019

03.05.030 – ஒற்றியூர் (திருவொற்றியூர்) - அற்றவர்களுக்கு மிக உற்றவன் - (வண்ணம்)

03.05.030 – ஒற்றியூர் (திருவொற்றியூர்) - அற்றவர்களுக்கு மிக உற்றவன் - (வண்ணம்)

2007-04-02

3.5.30 – அற்றவர்களுக்கு மிக உற்றவன் - (ஒற்றியூர் - திருவொற்றியூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன .. தந்ததான )

(சுத்தியந ரப்புடனெ .. திருப்புகழ் - சுவாமிமலை)


அற்றவர்க ளுக்குமிக உற்றவன்ம ரத்தடியில்

... நற்றவர்க ளுக்கறமு ரைத்தவன்வெ றுப்புநசை

... அற்றவன்உ டுக்கெரிம ழுப்படைத ரித்தவிறை .. கொன்றை சூடி

ஒற்றியுறை உத்தமன்ம டக்கொடியி டத்துறைய

... உச்சிதனில் நற்புனலொ லித்தலைகள் எற்றவர

... வொட்டிமதி வைத்தகயி லைத்தலைவன் நட்டமிடும் .. அண்ட வாணன்

நெற்றிநய னப்பரமன் வெற்பெறிய ரக்கனைநெ

... ரிக்கவிரல் இட்டவன்இ சைக்குமகிழ் பொற்புடையன்

... நித்தன்மத மத்தமணி பித்தன்மணி ஒத்தொளிசெய் .. கண்டன் ஈசன்

சுற்றுமுல கத்தினிடை இப்பிறவி யிற்றினமும்

... அப்பனவ னைத்தொழுது நெக்குருகி அத்தமலி

... சொற்றொடையு ரைக்குமனம் உற்றிடின்வ ருத்தமிலை .. இன்ப மாமே.


பதம் பிரித்து:

அற்றவர்களுக்கு மிக உற்றவன்; மரத்தடியில்

... நற்றவர்களுக்கு அறம் உரைத்தவன்; வெறுப்பு நசை

... அற்றவன்; உடுக்கு எரி மழுப்படை தரித்த இறை; கொன்றை சூடி;

ஒற்றி உறை உத்தமன்; மடக்கொடி இடத்து உறைய,

... உச்சிதனில் நற்புனல் ஒலித்து அலைகள் எற்ற, அரவு

... ஒட்டி மதி வைத்த கயிலைத்-தலைவன்; நட்டமிடும் அண்ட வாணன்;

நெற்றி-நயனப் பரமன்; வெற்பு எறி அரக்கனை

... நெரிக்க விரல் இட்டு, அவன் இசைக்கு மகிழ் பொற்பு உடையன்;

... நித்தன்; மதமத்தம் அணி பித்தன்; மணி ஒத்து ஒளிசெய் கண்டன்; ஈசன்;

சுற்றும் உலகத்தினிடை இப்பிறவியில் தினமும்

... அப்பன்-அவனைத் தொழுது, நெக்குருகி, அத்தம் மலி

... சொற்றொடை உரைக்கும் மனம் உற்றிடின் வருத்தம் இலை, இன்பம் ஆமே.


அற்றவர்களுக்கு மிக உற்றவன் - அன்புடையவர்களுக்கு அன்புடையவன்;

மரத்தடியில் நற்றவர்களுக்கு அறம் உரைத்தவன் - தட்சிணாமூர்த்தியாகிக் கல்லாலின்கீழ் சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசித்தவன்;

வெறுப்பு நசை அற்றவன் - விருப்பு வெறுப்பு இல்லாதவன்; (நசை - விருப்பம்);

உடுக்கு எரி மழுப்படை தரித்த இறை - கையில் உடுக்கை, தீ, மழுவாயுதம் இவற்றை ஏந்தியவன்;

கொன்றை சூடி - கொன்றைமலரை அணிந்தவன்;

ஒற்றி உறை உத்தமன் - திருவொற்றியூரில் உறையும் உத்தமன்;

மடக்கொடி இடத்து உறைய, உச்சிதனில் நற்புனல் ஒலித்து அலைகள் எற்ற - இளங்கொடி போன்ற உமை இடப்பாகத்தில் இருக்கத், தன் திருமுடிமேல் கங்கை ஒலிசெய்து அலைகள் மோத; (எற்றுதல் - மோதுதல்);

அரவு ஒட்டி மதி வைத்த கயிலைத் தலைவன் - பாம்பின் அருகே சந்திரனை வைத்த கயிலைப் பெருமான்;

நட்டமிடும் அண்ட வாணன் - கூத்தாடும் கடவுள்;

நெற்றிநயனப் பரமன் - நெற்றிக்கண்ணுடைய பரமன்;

வெற்பு எறி அரக்கனை நெரிக்க விரல் இட்டு, அவன் இசைக்கு மகிழ் பொற்புடையன் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனை நசுக்க ஒரு விரலை ஊன்றிப், பின் அவன் இசையைக் கேட்டு இரங்கிய குணம் உடையவன்;

நித்தன் - அழிவற்றவன்;

மதமத்தம் அணி பித்தன் - ஊமத்தமலரைச் சூடிய பேரருளாளன்;

மணி ஒத்து ஒளிசெய் கண்டன் - நீலமணி போல் ஒளிரும் கண்டத்தை உடையவன்;

ஈசன் - இறைவன்;

சுற்றும் உலகத்தினிடை இப்பிறவியில் தினமும் அப்பன்-அவனைத் தொழுது, நெக்குருகி, அத்தம் மலி சொற்றொடை உரைக்கும் மனம் உற்றிடின் வருத்தம் இலை, இன்பம் ஆமே - சுற்றுகின்ற இந்தப் பூமியில் இந்தப் பிறவியில் தினந்தோறும் நம் தந்தையான அவனை வணங்கி, நெகிழ்ந்து உருகி, பொருள் மிகுந்த பாமாலைகள் பாடும் மனம் இருந்தால் துன்பம் இல்லை, இன்பமே. (அத்தம் - அர்த்தம் - பொருள்); (சொற்றொடை - சொல் தொடை - பாமாலை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, July 28, 2019

03.05.029 – பொது - நீதியை மறந்து நித்தம் - (வண்ணம்)

03.05.029 – பொது - நீதியை மறந்து நித்தம் - (வண்ணம்)

2007-04-03

3.5.29 - நீதியை மறந்து நித்தம் - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானதன தந்த தத்த

தானதன தந்த தத்த

தானதன தந்த தத்த .. தனதான )

(சேலுமயி லுந்த ரித்த - திருப்புகழ் - சுவாமிமலை)


நீதியைம றந்து நித்தம் ஈனரைய டைந்து சித்த(ம்)

..... நேர்வழிது றந்து சற்று(ம்) .. நினையாமல்

... நேருமிடர் கண்ட யர்த்து வீழுமவ லந்து டைத்து

..... நீர்பரவி நின்றொ லிக்கும் .. அலைசூழும்

மேதினியில் வந்தி றக்கு மாறுசெயும் என்க ணக்கு

..... வேரறவ ரங்கொ டுக்க .. வருவாயே

... வேணியுளொர் மங்கை வைத்து மாதையொரு பங்கி ணைத்து

..... வீணைதனை அங்கை வைத்த .. பெருமானே

ஆதியுனை அன்பு மிக்கு மாணியவ னன்ற ழைக்க

..... ஆருயிர்வ லிந்தி ழுக்க .. வருகாலன்

... ஆவிவிட நன்று தைத்த தாளதனை நெஞ்சி ருத்தி

..... ஆசைமிக இண்டை கட்டி .. இசைபாடி

நாதியென உன்ப தத்தை நாடியதொ ழும்பர் கட்கு

..... நாளுமிக இன்ப ளிக்கும் .. அருளாளா

... நாகமொடெ லும்பு மக்கும் ஆபரணம் என்று வைத்த

..... நாததிரு வைந்தெ ழுத்து .. வடிவோனே.


பதம் பிரித்து:

நீதியை மறந்து நித்தம் ஈனரை அடைந்து, சித்தம்

..... நேர்வழி துறந்து, சற்றும் .. நினையாமல்,

... நேரும் இடர் கண்டு அயர்த்து வீழும் அவலம் துடைத்து,

..... நீர் பரவி நின்று ஒலிக்கும் .. அலை சூழும்

மேதினியில் வந்து இறக்குமாறு செயும் என் கணக்கு

..... வேரற வரம் கொடுக்க .. வருவாயே;

... வேணியுள் ஒர் மங்கை வைத்து, மாதை ஒரு பங்கு இணைத்து,

..... வீணைதனை அங்கை வைத்த .. பெருமானே;

ஆதி உனை அன்பு மிக்கு மாணி அவன் அன்று அழைக்க,

..... ஆருயிர் வலிந்து இழுக்க .. வரு காலன்

... ஆவி விட நன்று உதைத்த தாள் அதனை நெஞ்சு இருத்தி,

..... ஆசை மிக இண்டை கட்டி, .. இசை பாடி,

நாதி என உன் பதத்தை நாடிய தொழும்பர்கட்கு

..... நாளும் மிக இன்பு அளிக்கும் .. அருளாளா;

... நாகமொடு எலும்பும் அக்கும் ஆபரணம் என்று வைத்த

..... நாத; திருவைந்தெழுத்து .. வடிவோனே.


நீதியை மறந்து நித்தம் ஈனரை அடைந்து சித்தம் நேர்வழி துறந்து சற்றும் நினையாமல் - தர்மத்தை மறந்து, என்றும் கீழோரை அடைந்து, மனம் நல்வழியைவிட்டு விலகி, விளைவுகளைச் சிறிதும் நினையாமல்;

நேரும் இடர் கண்டு அயர்த்து வீழும் அவலம் துடைத்து - சம்பவிக்கும் துன்பத்தைக் கண்டு நான் வாடி விழும் அவலத்தை நீக்கி;

நீர் பரவி நின்று ஒலிக்கும் அலை சூழும் மேதினியில் வந்து இறக்குமாறு செயும் என் கணக்கு வேரற வரம் கொடுக்க வருவாயே - நீர் விரிந்து அலை ஒலிக்கின்ற கடலால் சூழப்பெற்ற இவ்வுலகில் முடிவின்றிப் பிறந்து இறக்குமாறு செய்யும் என் வினைக்கணக்கு அடியோடு தீரும்படி வரம் கொடுக்க வந்துஅருள்வாயாக;

வேணியுள் ஒர் மங்கை வைத்து மாதை ஒரு பங்கு இணைத்து வீணைதனை அங்கை வைத்த பெருமானே - சடையுள் கங்கையை வைத்து, உமையை ஒரு பங்காக உடலில் இணைத்துக், கையில் வீணையை ஏந்திய பெருமானே; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - கோளறு பதிகம் - 2.85.1 - "வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி");

ஆதி உனை அன்பு மிக்கு மாணி அவன் அன்று அழைக்க ஆருயிர் வலிந்து இழுக்க வரு காலன் ஆவி விட நன்று உதைத்த தாள் அதனை நெஞ்சு இருத்தி - ஆதியான உன்னை அன்போடு போற்றிய மார்க்கண்டேயரது ஆருயிரைக் கவர வந்த காலனே உயிர் விடும்படி அந்தக் காலனை நன்றாக உதைத்த திருவடியை நெஞ்சில் தாங்கி;

ஆசை மிக இண்டை கட்டி இசை பாடி - அன்போடு இண்டை முதலிய மாலைகள் கட்டிப் பாமாலைகள் பாடி; (இண்டை - மாலைவகைகளில் ஒன்று);

நாதி என உன் பதத்தை நாடிய தொழும்பர்கட்கு நாளும் மிக இன்பு அளிக்கும் அருளாளா - (நீயே) நாதி என்று உன் திருவடியைச் சரணடைந்த அடியார்களுக்கு என்றும் இன்பம் அளிக்கும் அருளாளனே; (நாதி - காப்பாற்றுவோன்);

நாகமொடு எலும்பும் அக்கும் ஆபரணம் என்று வைத்த நாத - பாம்பு, எலும்பு, உருத்திராக்கம் இவற்றை அணியாக மகிழ்ந்த தலைவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.78.7 – "கழன்மல்கு காலினர் வேலினர் நூலர் கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர்" - கண்டி - உருத்திராக்க மாலை),

திருவைந்தெழுத்து .வடிவோனே - பஞ்சாட்சரவடிவம் ஆனவனே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Monday, July 15, 2019

03.06.036 - 03.06.040 - ஓடு - பரியும் - மடக்கு

03.06 – மடக்கு

2008-06-09

3.6.36 - ஓடு - பரியும் - மடக்கு

----------------------------------------

ஓடு கலனா உழல்வான்;சேர் வான்உமை

யோடு; நரியை உருமாற்றி - ஓடு

பரியும் தரும்பரமன், பத்தர்க்குச் சாலப்

பரியும் சிவன்புகழே பாடு.


ஓடு - 1. மண்டையோடு; 2. உடன் (மூன்றாம்வேற்றுமை உருபு ); 3. ஓடுதல்;

பரியும் - 1. குதிரையும்; 2. இரங்கும்;

கலன் - கலம் - பாத்திரம்;

உழலுதல் - அலைதல்;


ஓடு கலனா உழல்வான் - பிரமனது மண்டையாடே பிச்சைப்பாத்திரமாக ஏந்தித் திரிபவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடே கலன் உண்பது ஊர் இடு பிச்சை....")

சேர்வான் உமையோடு - உமையொரு பங்கன்;

நரியை உரு மாற்றி ஓடு-பரியும் தரும் பரமன் - நரியை விரைந்து ஓடவல்ல குதிரைகளாக மாற்றி மதுரையில் தந்தவன்;

பத்தர்க்குச் சாலப் பரியும் சிவன் புகழே பாடு - அன்பர்களுக்கு மிகவும் இரங்கும் சிவபெருமான் புகழையே பாடு;

---------------------

2008-06-19

3.6.37 - மண்மிசை - உள்ளார் - மடக்கு

----------------------------

மண்மிசை மால்மலரோன் காணாத மாநெருப்பாய்

மண்மிசை தாண்டி வளர்இறையை - மண்மிசை

உள்ளார் வழிபட்டால் உய்வார் ஒருநாளும்

உள்ளார் துவள்வார் உழன்று.


மண் - நிலம்; பூமி;

மிசைதல் - 1. உண்ணுதல்;

மிசை - 2. வானம்; 3. ஏழாம்வேற்றுமை உருபு;

மால் - திருமால்;

மலரோன் - தாமரையில் இருக்கும் பிரமன்;

உள்ளுதல் - நினைத்தல்; இடைவிடாது நினைத்தல்;

உள்ளார் - 1. இருப்பவர்; 2. நினையாதவர்;


மண் மிசை- மால், மலரோன் காணாத மா நெருப்பாய் - மண்ணை உண்ட திருமாலும், பிரமனும் (அடி முடி) காணாத பெரிய ஜோதியாகி;

மண், மிசை தாண்டி வளர் இறையை - பூமி, வானம் அனைத்தையும் கடந்து ஓங்கி வளர்ந்த ஈசனை;

மண்மிசை உள்ளார் வழிபட்டால் உய்வார் - பூமியில் இருப்பவர்கள் வணங்கினால் நற்கதி அடைவார்கள்;

ஒரு நாளும் உள்ளார் துவள்வார் உழன்று - (ஈசனை) என்றும் எண்ணாதவர்கள், உலகில் உழன்று வருந்துவார்கள்.

---------------------

2008-06-20

3.6.38 - இழிந்தார்க்கும் - நீரோடு - மடக்கு

-------------------------------------------------

இழிந்தார்க்கும் கேடே இழைக்கு(ம்)மட நெஞ்சே

இழிந்தார்க்கும் ஏத்த அருள்வான் - இழிந்தார்க்கும்

நீரோடு செஞ்சடை நின்மலனைப் பூவோடு

நீரோடு போற்ற நினை.


இழிதல் - 1. இழிவுபடுதல்; தாழ்தல்; 2. இறங்குதல்; வீழ்தல்;

ஆர்த்தல் - ஒலித்தல்;

ஆர்க்கும் - 1. யார்க்கும் - எவருக்கும்; 2. ஒலிக்கும்;

ஏத்துதல் - துதித்தல்;


இழிந்து, ஆர்க்கும் கேடே இழைக்கும் மடநெஞ்சே - இழிந்த குணத்தால், எவருக்கும் தீங்கே செய்ய எண்ணும் பேதைமனமே;

இழிந்தார்க்கும் ஏத்த அருள் - இழிந்தவர்களுக்கும் (அவர்கள் தன்னைத்) துதித்தால் அருள்புரிகின்ற; ("வான் என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைக்க நின்றது; அப்படிக் கொண்டால், அருள்வான் என்றே வினைமுற்றாக இங்குப் பொருள்கொள்ளல் ஆம்);

வான் இழிந்து ஆர்க்கும் நீர் ஓடு செஞ்சடை நின்மலனை - வானிலிருந்து விழுந்து அலைகள் ஒலிக்கும் கங்கை நீர் ஓடுகின்ற சிவந்த சடையை உடைய நிர்மலனான சிவபெருமானை;

பூவோடு நீரோடு போற்ற நினை - பூவும் நீரும் கொண்டு வழிபட நினைவாயாக.

(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.49.5 - "கொல்வாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே");

---------------------

2008-08-26

3.6.39 - குறளை - அருளாயே - மடக்கு

------------------------------------------

குறளை மொழிபவர்சொல் கொள்ளாது நெஞ்சே

குறளை உணர்ந்தய னோடு - குறளை

அருளாயே என்றுதொழும் அச்சுடரை நீயும்

அருளாயே என்னாய் அமர்ந்து.


பதம் பிரித்து:

குறளை மொழிபவர் சொல் கொள்ளாது, நெஞ்சே,

குறளை உணர்ந்து, அயனோடு - குறள்-

"அருளாயே" என்று தொழும் அச்சுடரை, நீயும்

"அருள் ஆயே" என்னாய் அமர்ந்து.


குறளை - கோட்சொல்; நிந்தனை;

கொள்ளுதல் - கருதுதல்; மதித்தல்; பொருட்படுத்துதல்;

குறள் - 1. திருக்குறள்; 2. குறுமை (shortness, dwarfishness); சிறுமை (smallness);

குறள் ஐ - வாமன உருவில் வந்த திருமால்; (- தலைவன்);


குறளை மொழிபவர் சொல் கொள்ளாது, நெஞ்சே - மனமே, நிந்திக்கின்றவர் பேச்சைப் பொருட்படுத்தாமல்;

குறளை உணர்ந்து - திருக்குறள் சொல்லும் நீதிகளை உணர்ந்து;

அயனோடு குறள்-"அருளாயே" என்று தொழும் அச்சுடரை - பிரமனும் வாமனனாக வந்த திருமாலும் "அருள்வாயாக" என்று போற்றிய ஜோதிவடிவான அந்தப் பெருமானை; (அயன் - பிரமன்);

நீயும் "அருள் ஆயே" என்னாய் அமர்ந்து - "அம்மையே! அருள்" என்று நீயும் விரும்பித் துதிப்பாயாக; (ஆய் - தாய்); (அமர்தல் - விரும்புதல்);

---------------------

2008-11-08

3.6.40 - துணையா - நிழலாய் - மடக்கு

------------------------------------------

துணையா எதுவுமிலாத் தூயா உமையாள்

துணையா உடையாய் தொழநல் - துணையா

நிழலாய் வருபவனே நித்தியனே நின்தாள்

நிழலாய் மனம்தாராய் நீ.


துணையா - "துணையாக" என்பதன் கடைக்குறை;

துணை - 1. ஒப்பு; 2. மனைவி; 3. காப்பு (protection);

நிழல் - 1. குளிர்ச்சி; சாயை (shadow); 2. ஸ்தானம் (place)

ஆய்தல் - சிந்தித்தல்; ஆராய்தல்;


துணையா எதுவும் இலாத் தூயா - உனக்கு நிகராக எதுவும் இல்லாத தூயவனே;

உமையாள் துணையா உடையாய் - உமாதேவியை மனைவியாக உடையவனே;

தொழ நல்-துணையா நிழலாய் வருபவனே - தொழுதவர்களுக்கு நல்ல பாதுகாவலாக, (வினைச்சூட்டிலிருந்து காக்கின்ற) குளிர்ச்சியாகி வருபவனே;

நித்தியனே - என்றும் உள்ளவனே;

நின் தாள் நிழல் ஆய் மனம் தாராய் நீ - நீ உன்னுடைய திருவடித்தலத்தைச் சிந்திக்கும் மனத்தை எனக்கு அருள்வாயாக.

---------------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Wednesday, July 10, 2019

P.242 - கடம்பந்துறை - சேய்மதியோடு

2014-08-01

P.242 - கடம்பந்துறை

(கடம்பர்கோயில் - குளித்தலை)

----------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


1)

சேய்மதி யோடு சீறிள நாகம் தேன்மலர் திகழ்திருச் சடையில்

பாய்புனல் தேக்கிப் பகீரதற் கருளும் பரிவினன் அஞ்செழுத் தோதி

ஆய்மலர் தூவி அடிதொழு மாணி ஆவியைக் காத்துவன் கூற்றைக்

காய்கழ லானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


சேய்-மதியோடு சீறு-ள நாகம் தேன்மலர் திகழ்-திருச்சடையில் - இளந்திங்களோடு சீறும் இளம்பாம்பும் தேன் நிறைந்த மலர்களும் திகழ்கின்ற திருச்சடையில்; (சேய் - இளமை); (சம்பந்தர் தேவாரம் - 2.71.7 - "கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடிப்");

பாய்-புனல் தேக்கிப், பகீரதற்கு அருளும் பரிவினன் - பாய்ந்த கங்கையைத் தடுத்து நிறுத்திப் பகீரதனுக்கு அருளிய கருணையினான்;

அஞ்செழுத்து ஓதி, ஆய்-மலர் தூவி, அடிதொழு மாணி ஆவியைக் காத்து, வன்-கூற்றைக் காய்-கழலான் ஊர் - திருவைந்தெழுத்தை ஓதிச் சிறந்த பூக்களத் தூவி வழிபாடு செய்த மார்க்கண்டேயரது உயிரைக் காத்துக், கொடிய நமனை உதைத்த திருப்பாதத்தை உடைய சிவபெருமான் உறைகின்ற தலம்; (ஆய்மலர் - ஆய்ந்த மலர் - சிறந்த பூக்கள்); (மாணி - மார்க்கண்டேயர்);

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை; (சம்பந்தர் தேவாரம் - 1.10.4 - "அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே"); (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "திருமுல்லை வாயில் இதுவே");


2)

புலியதள் உடுத்துப் பொருவிடை ஏறும் புண்ணிய மூர்த்தியே பெண்ணாண்

அலியென ஆன அற்புத அண்ணால் அருளெனும் அன்பருக் கிரங்கி

நலிவினை நீக்கி நலமருள் நம்பன் நம்பெரு மானுறை ஊராம்

கலிகடல் அன்ன காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


"புலி-அதள் உடுத்துப் பொரு-விடை ஏறும் புண்ணிய மூர்த்தியே - "புலித்தோலை ஆடையாகத் தரித்துப் போர்செய்யவல்ல எருதை வாகனமாக ஏறிய புண்ணியனே; (அதள் - தோல்); (பொருதல் - போர்செய்தல்);

பெண் ஆண் அலி என ஆன அற்புத அண்ணா - பெண், ஆண், அலி என்று எல்லாம் ஆன அற்புத அண்ணலே; (அண்ணா - அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது அண்ணா என்று மருவியது); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "அண்ணா உனக்காளாய்");

அருள்" எனும் அன்பருக்கு இரங்கி நலிவினை நீக்கி நலம் அருள் நம்பன் - அருளாய்" என்று இறைஞ்சும் பக்தர்களுக்கு இரங்கி, வருத்துகின்ற வினையைத் (/ துன்பத்தைத்) தீர்த்து நன்மை அருளும் நம்பன்; (நலிதல் - வருத்துதல்); (நலிவு - துன்பம்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத் தக்கவன்);

நம் பெருமான் உறை ஊர் ஆம் - நம் பெருமான் உறையும் தலம்;

கலிகடல் அன்ன காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - ஒலிக்கின்ற கடல் போன்ற காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை; (கலித்தல் - ஒலித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.67.5 - "கடல்போற் காவேரி");


3)

மினலிடை யாளை மேனியிற் பங்கு விரும்பிய எம்மிறை கங்கைப்

புனலடை சடையான் போர்விடை உடையான் பொன்வெளி இருப்பெயில் மூன்றில்

அனலெழு மாறோர் அம்பினை ஏவி அமரரைக் காத்தவன் கையில்

கனல்மழு வானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


மினல்-இடையாளை மேனியில் பங்கு விரும்பிய எம் இறை - மின்னல் போன்ற நுண்ணிடை உடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக விரும்பிய எம் இறைவன்;

கங்கைப்-புனல் அடை- சடையான் - கங்கையாற்றை அடைத்த சடையை உடையவன்;

போர்விடை உடையான் - போர்செய்யவல்ல இடபவாகனம் உடையவன்;

பொன் வெளி இருப்பு-எயில் மூன்றில் அனல் எழுமாறு ஓர் அம்பினை ஏவி அமரரைக் காத்தவன் - தங்கம், வெள்ளி, இரும்பு இவற்றால் செய்யப்பெற்ற முப்புரங்களும் தீப்பற்றி அழிய ஒரு கணையை எய்து தேவர்களைக் காத்தருளியவன்; (வெளி - வெள்ளி; இடைக்குறை விகாரம்); (எயில் - மதில்); (அனல் - தீ);

கையில் கனல் மழுவான் ஊர் - கையில் ஒளிவீசும் மழுவை ஏந்தியவன் உறையும் தலம்; (கனல்தல் - ஜொலித்தல்);

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


4)

தங்கைகள் குவித்துத் தாள்தொழு வார்க்குச் சங்கடம் தீர்த்தருள் கின்ற

சங்கரன் நீறு தாங்கிய மார்பன் தாவிடு மான்மறி ஏந்தி

அங்கையில் மழுவன் அரையினில் அரவன் ஆரழல் போல்திகழ் சடையிற்

கங்கையி னானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


தங்கைகள் - தம் கைகள்;

தாவிடு மான்மறி ஏந்தி - தாவும் மான்கன்றை ஏந்தியவன்;

அரையினில் அரவன் - அரையில் பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

ஆரழல் போல் திகழ் சடை - தீப் போலத் திகழ்கின்ற செஞ்சடை; (அப்பர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையுளானே");

அங்கையில் மழுவன் - கையில் மழுவை ஏந்தியவன்;


5)

சலந்தரி சடையன் தண்மதி சூடி தாள்பணி வார்க்கருள் தந்தை

சலந்தரன் தன்னைத் தடிந்தசக் கரத்தைத் தாமரைக் கண்ணனுக் கீந்த

நலந்திகழ் அண்ணல் நரைவிடை ஏறி நளிர்மல ரான்சிரம் என்ற

கலந்தரித் தானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


சலம் தரி சடையன் - கங்கையைத் தரித்த சடையன்;

தண்மதி சூடி - குளிர்ந்த சந்திரனைச் சூடியவன்;

சலந்தரன் தன்னைத் தடிந்த சக்கரத்தைத் தாமரைக்கண்ணனுக்கு ஈந்த - ஜலந்தராசுரனை அழித்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அளித்த;

நரைவிடை ஏறி - வெண்ணிற இடபத்தை வாகனமாக ஏறியவன்;

நளிர்-மலரான்-சிரம் என்ற கலம் தரித்தான் - குளிர்ந்த தாமரையில் இருக்கும் பிரமனுடைய மண்டையோடு என்ற பிச்சைப்பாத்திரம் ஏந்தியவன்;


6)

பெரியவன் சிறிதிற் சிறியவன் எண்ணில் பேரினன் அரியவன் கண்டம்

கரியவன் நெற்றிக் கண்ணினில் தீயன் கனவிடை ஊர்தியன் எங்கும்

வரியர வேறும் வடிவினன் கயிலை மலையினன் மலைமகள் அஞ்சக்

கரியுரித் தானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


சிறிதிற் சிறியவன் - அணுவினும் நுண்ணியன்;

எண் இல் பேரினன் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;

கன-விடை ஊர்தியன் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;

எங்கும் வரி-அரவு ஏறும் வடிவினன் - திருமேனியில் எங்கும் (= அரையில், மார்பில், சடையில் என்று பல இடங்களில்) வரிகளை உடைய நாகங்கள் ஏறுகின்ற உருவுடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "வரியரவா வந்துநல்காய்");

மலைமகள் அஞ்சக் கரி உரித்தான் ஊர் - உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்தவன் உறையும் தலம்;


7)

ஒருமட மங்கை உடலிடம் கொள்ள உச்சியிற் கங்கையை வைத்தான்

மருவிடும் அன்பர் வல்வினை மாய்த்து வானம ளித்திடும் வள்ளல்

அருவிடம் கண்டு வெருவிய தேவர் அடிதொழ அவர்களுக் கருள்செய்

கருமிடற் றானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


ஒரு மடமங்கை உடல் இடம் கொள்ள - அழகிய உமாதேவி திருமேனியில் இடப்பாகம் ஆக;

மருவுதல் - சார்தல்; (4.66.7 - "வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்");

வெருவுதல் - அஞ்சுதல்;

கருமிடற்றான் - நீலகண்டன்;


8)

எண்ணுதல் இன்றி எழில்மலை பேர்த்த இலங்கையர் மன்னனை நெரித்தான்

உண்ணுதல் ஒண்ணா நஞ்சினை உண்டு விண்ணவர்க் கின்னமு தீந்தான்

ஒண்ணுதல் மங்கை உமையவள் பங்கன் ஒளித்தெய்த காமனைக் காய்ந்த

கண்ணுத லானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


எண்ணுதல் இன்றி எழில்-மலை பேர்த்த இலங்கையர்-மன்னனை நெரித்தான் - (வழிபாடு செய்யும் எண்ணம் இன்றித்) தன் செயலின் விளைவுகளை எண்ணாமல் அழகிய கயிலைமலையைப் பெயர்த்த இலங்கைக்கோனை நசுக்கியவன்; ( நெரித்தல் - நசுக்குதல்);

உண்ணுதல் ஒண்ணா நஞ்சினை உண்டு விண்ணவர்க்கு இன்னமுது ஈந்தான் - ; யாராலும் உண்ண இயலாத ஆலகாலத்தை உண்டு, தேவர்களுக்கு இனிய அமுதை ஈந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.49.9 - "உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி");

ஒண்ணுதல் மங்கை உமையொரு பங்கன் - ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமாதேவியை ஒரு பங்கில் மகிழ்ந்தவன்;

ஒளித்து எய்த காமனைக் காய்ந்த கண்ணுதலான் ஊர் - தன்னை மறைத்துக்கொண்டு மலர்க்கணை எய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன் உறையும் தலம்; (பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணம் - 12.10.158 - " நாளைநீ ஒளித்திருந்தால் எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய்");

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


9)

படந்திகழ் பாம்பைப் பால்மதிப் பாங்கர்ப் பயின்றிட வைத்தவன் பரவை

விடந்திகழ் கண்டன் மேருவில் வீரன் வேதனும் மாயனும் மேல்கீழ்

அடைந்திடத் தேடி அலந்தடி போற்ற ஆரழ லாய்உல கெல்லாம்

கடந்துநின் றானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


படம் திகழ் பாம்பைப் பால்மதிப் பாங்கர்ப் பயின்றிட வைத்தவன் - நாகத்தைத் பல் போன்ற வெண்திங்கள் அருகே இருக்கவைத்தவன்; (பாங்கர் - பக்கம்); (பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்);

பரவை விடம் திகழ் கண்டன் - கடல்விடத்தை உண்டு கண்டத்தில் அணிந்தவன்; (பரவை - கடல்);

வேதனும் மாயனும் மேல்கீழ் அடைந்திடத் தேடி அலந்து அடி போற்ற - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாமல் வருந்தி வணங்கும்படி; (நேடுதல் - தேடுதல்); (அலத்தல் - துன்புறுதல்);

ஆரழலாய் உலகெல்லாம் கடந்து நின்றான் ஊர் - அரிய ஜோதியாகி அண்டங்களையெல்லாம் கடந்து நீண்ட பெருமான் உறையும் தலம்;

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


10)

நறையில தான பொய்ம்மலர் தன்னை நன்மலர் என்றுரை செய்வார்

குறைபல உடைய கொள்கையி னார்தம் கூற்றினை நீர்மதி யேன்மின்

மறைதுதி பாடும் பிறைமதி சூடும் வல்லவன் நல்லவன் கண்டம்

கறையுடை யானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


நறை இலதான பொய்ம்மலர் தன்னை நன்மலர் என்று உரைசெய்வார் - வாசனை இல்லாத பொய்ப்பூவை நல்ல பூ என்று அவர்கள் சொல்வார்கள்; (நறை - தேன்; வாசனை);

குறை பல உடைய கொள்கையினார்தம் கூற்றினை நீர் மதியேன்மின் - பல குற்றங்களை உடைய கொள்கைகளை உடையவர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;

மறை துதிபாடும் பிறைமதி சூடும் வல்லவன் - வேதங்கள் துதிக்கும் சந்திரசேகரன் சர்வ வல்லமை உடையவன்;

நல்லவன், கண்டம் கறை உடையான் ஊர் - நல்லவனும் நீலகண்டனுமான சிவபெருமான் உறையும் தலம்;

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


11)

மெய்யணி நாவர் மிகமகிழ்ந் தேத்தும் வேதியன் விருப்பொடு நாளும்

கொய்யணி மலர்கள் கொண்டடி போற்றில் குறைகளைந் தின்னருள் புரிவான்

மையணி கண்டன் வளர்மதி இண்டை வார்சடைப் புனைசிவன் வளையல்

கையணி வானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


மெய் அணி நாவர் மிக மகிழ்ந்து ஏத்தும் வேதியன் - உண்மையை அணிந்த நாவினர் மிகவும் அன்போடு போற்றும் ஈசன், வேதப்பொருள் ஆனவன், வேதங்களைப் பாடியருளியவன்;

கொய்-அணி மலர்கள் கொண்டு அடி போற்றில் - கொய்த அழகிய பூக்களால் அவன் திருவடியைத் தொழுதால்;

குறை களைந்து இன்னருள் புரிவான் - குறையைத் தீர்த்து இனிது அருள்புரிபவன்;

மை அணி கண்டன் - கருமை திகழும் கழுத்தை உடையவன் - நீலகண்டன்;

வளர்மதி இண்டை வார்சடைப் புனை சிவன் - வளரும் திங்களை இண்டைமாலையாக நீள்சடையில் அணிந்த சிவபெருமான்; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (வார்தல் - நீள்தல்);

வளையல் கை அணிவான் ஊர் - கையில் வளையலை அணிந்தவன் (= அர்த்தநாரீஸ்வரன்) உறையும் தலம்;

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


வி. சுப்பிரமணியன்

-------------------