Tuesday, May 21, 2024

08.02.195 - புகலி (காழி) - இனலைத் தருமிப் பிறவி - (வண்ணம்)

08.02.195 - புகலி (காழி) - இனலைத் தருமிப் பிறவி - (வண்ணம்)

2016-06-26

08.02.195 - இனலைத் தருமிப் பிறவி - புகலி (காழி)

------------------

(வண்ணவிருத்தம்;

தனனத் தனனத் தனனத் தனனத்

தனனத் தனனத் .. தனதான)

(அமைவுற் றடையப் - திருப்புகழ் - திருத்தணிகை)


இனலைத் தருமிப் பிறவித் தளையற்

.. .. றிருளற் றிடுநற் .. கதிதாராய்

.. இருமைப் பயனைத் தருநற் றமிழிட்

.. .. டிருபொற் கழலைத் .. தொழுதேனே

கனலைத் துடியைப் பரசுப் படையைக்

.. .. கரம்வைத் துரிகட் .. டியநாதா

.. கடலிற் சிலைமத் திடுமச் சுரரைக்

.. .. கருதிக் கறையைத் .. தரிநேயா

கனவெற் பதனிற் கணைவைத் தெயிலைக்

.. .. கடிதிற் சுடநக் .. கருள்வோனே

.. கமலத் தயனுக் கலையிற் றுயிலக்

.. .. கருடக் கொடியற் .. கரியானே

புனலைக் குரவைப் பிறையைப் பணியைப்

.. .. புரிபொற் சடையிற் .. புனைவோனே

.. புதல்வர்க் கமுதைப் பருகத் தருமப்

.. .. புரிசைப் புகலிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

இனலைத் தரும் இப் பிறவித் தளை அற்று,

.. .. இருள் அற்றிடு நற்கதி தாராய்;

.. இருமைப் பயனைத் தரு நற்றமிழ் இட்டு

.. .. இரு-பொற்கழலைத் தொழுதேனே;

கனலைத், துடியைப், பரசுப் படையைக்

.. .. கரம் வைத்து, உரி கட்டிய நாதா;

.. கடலிற் சிலை-மத்து இடும் அச் சுரரைக்

.. .. கருதிக் கறையைத் தரி-நேயா;

கன-வெற்பு-அதனிற் கணை வைத்து, எயிலைக்

.. .. கடிதிற் சுட நக்கு அருள்வோனே;

.. கமலத்து அயனுக்கு, அலையில் துயில்-அக்

.. .. கருடக் கொடியற்கு அரியானே;

புனலைக், குரவைப், பிறையைப், பணியைப்,

.. .. புரி-பொற்சடையிற் புனைவோனே;

.. புதல்வர்க்கு அமுதைப் பருகத் தரும் அப்

.. .. புரிசைப் புகலிப் பெருமானே.


இனலைத் தரும் இப்-பிறவித் தளைற்று, ருள் அற்றிடு நற்கதி தாராய் - துன்பத்தைத் தருகின்ற இந்தப் பிறவிப்பிணி நீங்கி, அஞ்ஞான இருள் அழியும் நல்ல கதியை அருள்வாயாக; (இனலை - இன்னலை; இடைக்குறை விகாரம்); (அறுதல் - இல்லாமற் போதல்); (இருள் - அஞ்ஞானம். அதன் நீக்கம் இம்மையில் (இப்பிறவியில்) நிகழ்வது. பிறவாமை - மறுமை இன்பம்;)

இருமைப் பயனைத் தரு நற்றமிழ் இட்டு ரு-பொற்கழலைத் தொழுதேனே - இம்மை மறுமை இன்பங்களைத் தரும் நல்ல தமிழ்ப்பாமாலைகளைச் சூட்டி உன் இரு-பொன்னடிகளை வணங்கினேன்; (சம்பந்தர் தேவாரம் - 2.66.7 - "இருமைக்கும் உள்ளது நீறு"); (நற்றமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன); (சம்பந்தர் தேவாரம் - 3.24.1 - "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை"); (சம்பந்தர் தேவாரம் - 2.107.11 - "ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப் பாடலாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே");


கனலைத், துடியைப், பரசுப் படையைக் கரம் வைத்து, ரி கட்டிய நாதா - நெருப்பை, உடுக்கையை, மழுவாயுதத்தைக் கையில் ஏந்தித், தோலை ஆடையாகக் கட்டிய தலைவனே; (துடி - உடுக்கை); (பரசு - மழு); (படை - ஆயுதம்); (உரி - தோல்); (கட்டுதல் - உடுத்தல்);

கடலில் சிலை-மத்து டும் அச்-சுரரைக் கருதிக் கறையைத் தரி-நேயா - பாற்கடலில் ஒரு மலையை மத்தாக நட்டுக் கடைந்த அந்தத் தேவர்கள் உய்யும்பொருட்டுக் கறையைக் கண்டத்தில் அணிந்த அன்பனே; (சிலை - மலை);


கன-வெற்பு-தனில் கணை வைத்து, யிலைக் கடிதில் சுட நக்கு அருள்வோனே - பெரிய மேருமலையில் ஓர் அம்பைப் பிணைத்து, முப்புரங்களை விரைந்து எரிக்கச் சிரித்து அருளியவனே; (கனம் - பருமன்; பெருமை); (வெற்பு - மலை); (எயில் - மதில்); (கடிதில் - விரைவாய்); (நகுதல் - சிரித்தல்);

கமலத்து அயனுக்கு, லையில் துயில்- க்-கருடக் கொடியற்கு அரியானே - தாமரைப்பூவில் இருக்கும் பிரமனுக்கும், கடலலைமேல் பள்ளிகொள்பவனும் கருடக்கொடியை உடையவனுமான திருமாலுக்கும் அறிய ஒண்ணாதவனே; (அயன் - பிரமன்); (கொடியற்கு - கொடியன்+கு - கொடியனுக்கு);


புனலைக், குரவைப், பிறையைப், பணியைப், புரி-பொற்சடையில் புனைவோனே - கங்கையைக், குராமலரைப், பிறைச்சந்திரனை, நாகத்தைச், சுருண்ட பொன் போன்ற சடையில் அணிந்தவனே; (குரவு - குராமலர்); (பணி - நாகம்); (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

புதல்வர்க்கு அமுதைப் பருகத் தரும் அப்-புரிசைப் புகலிப் பெருமானே - ஆளுடைய பிள்ளையாரான காழிப் பிள்ளையார்க்கு ஞானப்பாலைப் பருகத் தந்த, மதில் சூழ்ந்த அந்தப் புகலியில் (சீகாழியில்) உறைகின்ற பெருமானே; (புரிசை - மதில்); ("அப்-புரிசைப் புகலி" என்றதில் "" - பண்டறிசுட்டு); ("பருகத் தருமப் புரிசைப் புகலிப் பெருமானே" - "தரு" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு - "பருகத் தரு" & "தருமப் புரிசைப் புகலிப் பெருமான்" என்று இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்; "பருகத் தந்த, தருமம் மிக்க, மதில் சூழ்ந்த புகலியில் உறையும் பெருமானே");


வி. சுப்பிரமணியன்

--------------- ---------------


07.50 - வாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம்) - பண்டிமையோர் அசுரர்

07.50 - வாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம்) - பண்டிமையோர் அசுரர்

2016-06-11

07.50 - வாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம்)

----------------------

(சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.62.1 - "கண்பொலி நெற்றியினான்")

(சுந்தரர் தேவாரம் - 7.100.1 - "தானெனை முன்படைத்தான்")


1)

பண்டிமை யோரசுரர் கடை பாற்கடல் கக்குவிடம்

உண்டிருள் மாமிடறன் உமை ஒன்றிய மேனியினான்

தண்டிரை ஆர்சடைமேல் பிறை தாங்கி விரும்புமிடம்

வண்டறை பூம்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.


பதம் பிரித்து:

பண்டு இமையோர் அசுரர் கடை பாற்கடல் கக்கு விடம்

உண்டு இருள் மா மிடறன்; உமை ஒன்றிய மேனியினான்;

தண் திரை ஆர் சடைமேல் பிறை தாங்கி விரும்பும் இடம்,

வண்டு அறை பூம்பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.


பண்டு இமையோர் அசுரர் கடை பாற்கடல் கக்கு விடம் உண்டு இருள் மா மிடறன் - முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடல் கக்கிய நஞ்சை உண்டு கருமை திகழும் அழகிய கண்டத்தை உடையவன்;

உமை ஒன்றிய மேனியினான் - அர்த்தநாரீஸ்வரன்;

தண் திரை ஆர் சடைமேல் பிறை தாங்கி விரும்பும் இடம் - குளிர்ந்த கங்கை பொருந்திய, அலைகள் ஒலிக்கின்ற சடையின்மேல் சந்திரனைத் தாங்கியவன் விரும்பி உறையும் தலம்;

வண்டு அறை பூம்பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - வண்டுகள் ரீங்காரம் செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;


2)

மான்பிடி கையுடையான் மலை மங்கையொர் பங்குடையான்

மீன்பொலி யுங்கொடிவேள் உடல் வெந்தற நோக்கியவன்

தேன்பொலி கொன்றைமலர் திகழ் செஞ்சடை அண்ணலிடம்

வான்பொழில் சூழ்ந்தழகார் திரு வாஞ்சிய நன்னகரே.


மான் பிடி கை உடையான் - கையில் மானைத் தரித்தவன்;

மலைமங்கை ஒர் பங்கு உடையான் - மலைமகளை ஒரு பாகமாக உடையவன்; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

மீன் பொலியும் கொடி வேள் உடல் வெந்து அற நோக்கியவன் - மீன்கொடியை உடைய மன்மதனது உடல் வெந்து சாம்பலாகும்படி பார்த்தவன்; (மீன்கொடி - மகரக்கொடி - மகர கேதனம்);

தேன் பொலி கொன்றைமலர் திகழ் செஞ்சடை அண்ணல் இடம் - தேன் நிறைந்த கொன்றைப்பூக்களைச் சிவந்த சடையில் அணிந்த ஈசன் உறையும் தலம்;

வான் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு வாஞ்சிய நன்னகரே - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;


3)

விண்மலர் தூவியடி தொழு வேதியன் நஞ்சுதனை

உண்மணி ஆர்மிடறன் விடை ஊர்ந்திடும் ஓர்தலைவன்

தண்மதி யோடரவம் தரி தாழ்சடை அப்பனிடம்

வண்வயல் சூழ்ந்தழகார் திரு வாஞ்சிய நன்னகரே.


விண் மலர் தூவி அடி-தொழு வேதியன் - விண்ணவர்கள் பூக்கள் தூவித் திருவடியை வணங்குகின்ற வேதியன்; (வேதியன் - வேதப்பொருள் ஆனவன்; வேதங்களைப் பாடியருளியவன்; வேதிப்பவன்);

நஞ்சுதனை உண் மணி ஆர் மிடறன் - விடத்தை உண்ட நீலமணி கண்டன்;

விடை ஊர்ந்திடும் ஓர் தலைவன் - இடப-வாகனம் உடைய ஒப்பற்ற தலைவன்;

தண்-மதியோடு அரவம் தரி தாழ்சடை அப்பன் இடம் - குளிர்ந்த திங்களையும் பாம்பையும் தாழும் சடையில் தரித்த எம் தந்தை உறையும் தலம்;

வண்-வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு வாஞ்சிய நன்னகரே - வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த அழகிய திருவாஞ்சியம் ஆகும்;


4)

குழையு(ம்) மனத்தடியார் துதி கூற இரங்கியவர்

பிழைவினை தீர்த்தருள்வான் ஒரு பெண்ணமர் மேனியினான்

உழையெரி ஏந்தியவன் மறை ஓதிய நாவனிடம்

மழைநுழை சோலையணி திரு வாஞ்சிய நன்னகரே.


குழையும் மனத்து அடியார் துதி கூற, இரங்கி அவர் பிழை வினை தீர்த்தருள்வான் - உருகும் மனத்தை உடைய பக்தர்கள் துதிகளைப் பாடி வழிபட, அவர்களுக்கு இரங்கி அவர்களது குற்றங்களையும் வினைகளையும் தீர்ப்பவன்; (பிழைவினை - பிழையும் வினையும்; உம்மைத்தொகை);

ஒரு பெண் அமர் மேனியினான் - மாதொரு பாகன்;

உழை எரி ஏந்தியவன் - மானையும் தீயையும் கையில் ஏந்தியவன்;

மறை ஓதிய நாவன் இடம் - வேத-நாவன் உறையும் தலம்;

மழை நுழை சோலை அணி திரு வாஞ்சிய நன்னகரே - மேகங்கள் நுழைகின்ற சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;


5)

மாசறு நெஞ்சினனாய்த் தொழு மாணி தனக்கிடர்செய்

பாச நமன்படவே உதை பைங்கழல் எந்தைமிகு

தேசன் அயன்சிரத்தில் பலி தேர்ந்துழல் வானதிடம்

வாச மலர்ப்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.


மாசு அறு நெஞ்சினன் ஆய்த் தொழு மாணிதனக்கு இடர்செய் - குற்றமற்ற மனம் உடையவனாகி வழிபட்ட மார்க்கண்டேயருக்கு துன்பம் செய்த;

பாச-நமன் படவே உதை பைங்கழல் எந்தை - பாசத்தை ஏந்திய காலனே மாளும்படி அக்கூற்றுவனை உதைத்த திருவடியை உடைய எம் தந்தை;

மிகு தேசன் - மிகுந்த ஒளி உருவினன்;

அயன் சிரத்தில் பலி தேர்ந்து உழல்வானது இடம் - பிரமனது மண்டையோட்டில் பிச்சையேற்று உழல்கின்ற பெருமான் உறையும் தலம்;

வாச-மலர்ப்பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;


6)

அரியவன் இன்றமிழால் தொழும் அன்பின ருக்கெளியன்

பெரியவன் எம்மிறைவன் பிறை பேணிய வேணியினான்

கரியுரி போர்த்தபரன் மணி கண்டன் அமர்ந்தவிடம்

வரியளி ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.


அரியவன் - மிகவும் அரியவன்;

இன்-தமிழால் தொழும் அன்பினருக்கு எளியன் - இனிய தமிழ்ப்-பாமாலைகள் பாடி வணங்கும் அன்பர்களால் எளிதில் அடையப்படுபவன்;

பெரியவன் எம் இறைவன் - எல்லாரினும் பெரியவன் எம் கடவுள்;

பிறை பேணிய வேணியினான் - சடையில் பிறையை அணிந்தவன்; (பேணுதல் - வழிபடுதல்; போற்றுதல்; பாதுகாத்தல்); (வேணி - சடை);

கரி உரி போர்த்த பரன் - யானைத்தோலைத் தன் மார்பு சுற்றிப் போர்த்த பரமன்;

மணிகண்டன் அமர்ந்த இடம் - நீலகண்டன் விரும்பி உறையும் தலம்; (சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்");

வரி அளி ஆர் பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - வரிவண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;


7)

முன்னமன் போற்றிசெய்ய அருள் முக்கணன் நற்கழலே

உன்னிய அன்பருளம் உறை உத்தமன் நீள்மதியார்

சென்னியன் முப்புரத்தைப் பொடி செய்த மலைச்சிலையான்

மன்னிய ஊர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.


முன் நமன் போற்றிசெய்ய அருள் முக்கணன் - முன்பு தன்னை வழிபட்ட இயமனுக்கு அருள்செய்த முக்கண் இறைவன்; (இயமன் ஈசனை வழிபட்டதைத் திருவாஞ்சியத் தலபுராணத்திற் காண்க);

நற்கழலே உன்னிய அன்பர் உளம் உறை உத்தமன் - அப்பெருமானது நல்ல திருவடிகளையே தியானிக்கும் அன்பர்களின் உள்ளத்தில் உறையும் உத்தமன்;

நீள்மதி ஆர் சென்னியன் - வளர்மதியைத் தலையில் அணிந்தவன்;

முப்புரத்தைப் பொடி செய்த மலைச்சிலையான் மன்னிய ஊர் - முப்புரங்களை அழிக்க மேருமலையையே வில்லாக ஏந்தியவன் உறையும் தலம்;

பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;


8)

வெஞ்சின வாளரக்கன் உயர் வெற்பை இடந்தவன்வாய்

அஞ்சினொ டஞ்சுமழ விரல் அன்றிறை ஊன்றியவர்

செஞ்சுடர் மேனியினார் பிறை சேர்சடை ஈசரிடம்

மஞ்சண வும்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே.


வெஞ்சின வாள் அரக்கன் - கடும் சினம் உடைய, கொடிய அரக்கனான இராவணனன்;

உயர் வெற்பை இடந்தவன் வாய் அஞ்சினொடு அஞ்சும் அழ விரல் அன்று இறை ஊன்றியவர் - உயர்ந்த கயிலைமலையைப் பேர்த்த இராவணனது பத்து வாய்களும் அழும்படி முன்பு ஒரு விரலைச் சற்றே ஊன்றியவர்;

செஞ்சுடர் மேனியினார் - செந்தீப் போன்ற திருமேனி உடையவர்;

பிறை சேர் சடை ஈசர் இடம் - பிறைச்சந்திரனைச் சூடிய சடையை உடைய ஈசர் உறையும் தலம்;

மஞ்சு அணவும் பொழில் சூழ் திரு வாஞ்சிய நன்னகரே - மேகம் பொருந்தும் சோலைகள் சூழ்ந்த திருவாஞ்சியம் ஆகும்;


9)

நாரணன் மாமலரான் இவர் நண்ண வொணாச்சுடரான்

ஆரணன் ஆலநிழல் அமர் ஆரியன் வானவர்செய்

தேரதன் அச்சிறவும் நகை செய்தெயில் அட்டபிரான்

வாரண ஈருரியான் இடம் வாஞ்சிய நன்னகரே.


நாரணன் மாமலரான் இவர் நண்ண ஒணாச் சுடரான் - திருமாலாலும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனாலும் அடிமுடி அடைய இயலாத சோதி வடிவன்;

ஆரணன் ஆலநிழல் அமர் ஆரியன் - வேதியன், கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருந்த தட்சிணாமூர்த்தி; (ஆரணம் - வேதம்); (ஆரியன் - ஆசாரியன்);

வானவர் செய் தேர்அதன் அச்சு இறவும், நகை செய்து எயில் அட்ட பிரான் - தேவர்கள் செய்த தேரின் அச்சு (அந்தத் தேரில் ஈசன் திருவடியை வைத்து ஏறியதும்) முரிந்துவிழக் கண்டு, சிரித்து முப்புரங்களையும் எரித்த பெருமான்;

வாரண ஈர்-உரியான் இடம் வாஞ்சிய நன்னகரே - யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்திய பெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம் ஆகும்;


10)

நாவமர் நற்றமிழால் உமை நாதனை ஏத்தகிலார்

கூவி அழைத்திடுவார் அவர் கூறிடு பொய்விடுமின்

பூவிடு வார்க்கருளும் பொடி பூசிய ஈசனிடம்

வாவியில் வாளையுகள் திரு வாஞ்சிய நன்னகரே.


நா அமர் நல்-தமிழால் உமைநாதனை ஏத்தகிலார் - நாவில் பொருந்தும் நல்ல தமிழால் (தேவாரம் திருவாசகம் முதலியன) உமாபதியைத் துதிக்கமாட்டார்;

கூவி அழைத்திடுவார் அவர் கூறிடு பொய்விடுமின் - (தம் நெறிக்கு வாரும் எனத் தினமும்) கூவி அழைக்கும் அவர்கள் சொல்லும் பொய்களை மதிக்கவேண்டா;

பூ இடுவார்க்கு அருளும் பொடி பூசிய ஈசன் இடம் - திருவடியில் பூக்கள் தூவி வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்றவனும் திருநீற்றைப் பூசியவனும் ஆன ஈசன் உறையும் தலம்;

வாவியில் வாளைகள் திரு வாஞ்சிய நன்னகரே - குளத்தில் வாளை-மீன்கள் பாயும் திருவாஞ்சியம் ஆகும்;


11)

மாமனின் வேள்விதனை அழி மஞ்சன் இருஞ்சடையன்

தாமணி சாந்தமெனப் பொடி தாங்கி நிதம்தமிழார்

பாமணி மாலைகளால் தொழு பத்தர்க ளுக்கினியன்

மாமணி கண்டனிடம் திரு வாஞ்சிய நன்னகரே.


மாமனின் வேள்விதனை அழி மஞ்சன் - மாமனான தக்கன் செய்த வேள்வியை அழித்த வீரன்; (மஞ்சன் - மைந்தன் - வீரன்);

இரும்-சடையன் - பெரிய சடையை உடையவன்; (இருமை - பெருமை);

தாம் அணி சாந்தம் எனப் பொடி தாங்கி - தாங்கள் அணியும் சந்தனம் போலத் திருநீற்றை அணிந்து; (சாந்தம் - சந்தனம்); (தாங்குதல் - அணிதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.51.2 - "தோளின்மேல் ஒளி-நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற");

நிதம் தமிழ் ஆர் பா மணி மாலைகளால் தொழு பத்தர்களுக்கு இனியன் - நாள்தோறும் தமிழ் பொருந்திய அழகிய பாமாலைகளால் வழிபடும் பக்தர்களுக்கு இனியவன்;

மா மணிகண்டன் இடம் திரு வாஞ்சிய நன்னகரே - அழகிய நீலகண்டம் உடைய பெருமான் உறையும் தலம் திருவாஞ்சியம் ஆகும்;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு :

  • சந்த விருத்தம் - "தானன தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.

  • அடிகளின் முதற்சீர் - "தானன" என்பது "தனதன" என்றும் வரலாம்.

  • "தானன" என்ற சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், அதனை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும் - (தனதனனா / தனாதனனா

  • இரண்டாம் / நாலாம் சீர் - "தானதனா" என்பது "தானதானா" என்றும் வரலாம்.

  • இச்சந்தத்தைத் “தானன தானதனா தனதானன தானதனா” என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.

  • இப்பாடல்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணத்திற்கும் பொருந்தும் - ("தானன தானன தானன தானன தானதனா" என்று நோக்கினால்).


2) மதிசூடி 2.47 - "நாலும றைப்பொருளாய்" என்று தொடங்கும் திருவாஞ்சியப் பதிகமும் இச்சந்தமே ஆயினும் அப்பதிகத்தில் மோனை அமையும் இடம் சற்றே வேறுபடும்.


3) சம்பந்தர் தேவாரம் - 3.61.11 - "திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை மேயவனைத்"

சம்பந்தர் தேவாரம் - 3.62.1 - "கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண்மழுவான்"


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, May 20, 2024

08.02.194 - கழுமலம் (சீகாழி) - படிமிசை வாழ்வில் - (வண்ணம்)

08.02.194 - கழுமலம் (சீகாழி) - படிமிசை வாழ்வில் - (வண்ணம்)

2016-06-11

08.02.194 - படிமிசை வாழ்வில் - கழுமலம் (சீகாழி)

------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தனதன தான

தனதன தான .. தனதான)

(அகரமு மாகி யதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


படிமிசை வாழ்வில் நலிவுறு மாறு

.. .. பழவினை சூழும் .. அடியேனும்

.. பகைவினை மாய அகநெகிழ் வோடு

.. .. பதமலர் ஓத .. அருளாயே

வடிமழு வாளும் இலைநுனை வேலு(ம்)

.. .. மறியெரி யோடு .. தரியீசா

.. வளர்மதி ஏறு சடைமிசை நாறு

.. .. மலரிள நாகம் .. அணிவோனே

அடிதொழு பாடல் அளவில தாக

.. .. அவணொரு பாலர் .. அழுபோதில்

.. அவர்களி கூர இருவித ஞான

.. .. அமுதளி மாது .. மணவாளா

கடிமலர் நாடு வரியளி பாடு

.. .. கவினுறு சோலை .. புடைசூழும்

.. கழுமல(ம்) மேய விடையமர் ஈச

.. .. கரியுரி மூடு .. பெருமானே.


பதம் பிரித்து:

படிமிசை வாழ்வில் நலிவுறுமாறு

.. .. பழவினை சூழும் .. அடியேனும்,

.. பகை-வினை மாய அகநெகிழ்வோடு

.. .. பதமலர் ஓத .. அருளாயே;

வடி-மழு வாளும், இலை-நுனை வேலு(ம்),

.. .. மறி எரியோடு .. தரி-ஈசா;

.. வளர்மதி ஏறு சடைமிசை நாறு

.. .. மலர் இள-நாகம் .. அணிவோனே;

அடிதொழு பாடல் அளவிலது ஆக

.. .. அவண் ஒரு பாலர் .. அழு-போதில்,

.. அவர் களி-கூர இருவித ஞான

.. .. அமுது அளி- மாது .. மணவாளா;

கடிமலர் நாடு வரி-அளி பாடு

.. .. கவினுறு சோலை .. புடைசூழும்

.. கழுமல(ம்) மேய விடை அமர் ஈச;

.. .. கரி-உரி மூடு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

படிமிசை வாழ்வில் நலிவுறுமாறு பழவினை சூழும் அடியேனும் - இவ்வுலக வாழ்க்கையில் துன்புறும்படி பழைய வினைகள் வந்து சூழ்கின்ற அடியேனும்; (படி - பூமி); (நலிவுறுதல் - துன்புறுதல்);

பகை-வினை மாய, அகநெகிழ்வோடு பதமலர் ஓத அருளாயே - பகைக்கின்ற வினைகள் எல்லாம் அழிய, மனம் உருகி, மலர் போன்ற உன் திருவடிகளைப் பாட அருள்வாயாக; (பகைவினை - 1. பகைக்கின்ற வினைகள்; 2. பகையும் வினையும்); (அகநெகிழ்வு - மனம் உருகுதல்); (ஓதுதல் - பாடுதல்; சொல்லுதல்);

வடி-மழுவாளும், இலை-நுனை வேலும், மறிரியோடு தரிசா - கூர்மையான மழுவையும், இலை போன்ற முனைகளை உடைய சூலத்தையும், மான்கன்றையும், தீயையும் ஏந்திய ஈசனே; (வடி - கூர்மை); (இலை நுனை - இலை போன்ற முனை); (மறி - மான் கன்று); (எரி - நெருப்பு);

வளர்-மதி ஏறு சடைமிசை நாறு மலர் இளநாகம் அணிவோனே - வளர்கின்ற சந்திரன் ஏறிய சடையின்மேல் மணம் கமழும் மலர்களையும் இளம்-பாம்பையும் அணிந்தவனே; (நாறுதல் - மணம் கமழ்தல்);

அடிதொழு பாடல் அளவு இது ஆ, அவண் ஒரு பாலர் அழு-போதில் - உன் திருவடியைப் போற்றுகின்ற பாட்டுகள் எண்ணற்றவை ஆகும்படி அங்கு ஒப்பற்ற குழந்தை (திருஞான சம்பந்தர்) அழுத சமயத்தில்; (அவண் - அவ்விடம்; அவ்விதம்); (ஒரு - ஒப்பற்ற); (பாலர் - குழந்தைப்பருவத்தில் இருந்த திருஞானசம்பந்தர்);

அவர் களி-கூர, இருவித ஞான அமுது அளி- மாது மணவாளா - அவர் மகிழும்படி, பரஞானம் அபரஞானம் என்ற இரண்டும் அவர் பெற, அவருக்கு ஞானப்பால் அளித்த உமைக்குக் கணவனே; (களிகூர்தல் - மகிழ்ச்சி மிகுதல்); (பெரிய புராணம் - "உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்");

கடி-மலர் நாடு வரி-ளி பாடு கவினுறு சோலை புடை சூழும் கழுமல(ம்) மேய விடைமர் ஈச - வாசமலர்களை நாடுகின்ற, வரிகளை உடைய வண்டுகள் இசை பாடுகின்ற அழகிய பொழில்கள் சூழ்ந்த கழுமலத்தில் (சீகாழியில்) உறைகின்ற, இடபவாகனம் உடைய ஈசனே; (கடி - வாசனை); (வரி - 1. கோடு; 13. இசை; 14. இசைப்பாட்டு); (அளி - வண்டு);

கரி-ரி மூடு பெருமானே - யானைத்தோலைப் போர்த்த பெருமானே; (கரி - யானை); (உரி - தோல்); (மூடுதல் - போர்த்தல்);


வி. சுப்பிரமணியன்

--------------- ---------------


08.02.193 - கழுமலம் (சீகாழி) - வந்தென் பழவினை - (வண்ணம்)

08.02.193 - கழுமலம் (சீகாழி) - வந்தென் பழவினை - (வண்ணம்)

2016-06-05

08.02.193 - வந்தென் பழவினை - கழுமலம் (சீகாழி)

------------------

(வண்ணவிருத்தம்;

தந்தந் தனதன தந்தந் தனதன

தந்தந் தனதன .. தனதான)

(வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை - திருப்புகழ் - திருத்தணிகை)


வந்தென் பழவினை என்றுந் துயர்மிக

.. .. வஞ்சம் புரிதர .. அதனாலே

.. மங்குந் தமியனும் உன்றன் புகழ்சொலி

.. .. மண்டுங் களிபெற .. அருளாயே

கந்தங் கமழடி அன்பன் றனதிடர்

.. .. கண்டந் தகனுயிர் .. செகுகாலா

.. கஞ்சன் கரியவன் அஞ்சும் படியெரி

.. .. கம்பந் திருவுரு .. எனவானாய்

சந்தந் திகழ்தமிழ் கொண்டுன் கழல்தொழு

.. .. சம்பந் தரின்மொழி .. மகிழ்வோனே

.. சங்கந் தனில்முன(ம்) நின்றுந் தடைவிடை

.. .. தந்துந் தமர்மிடி .. களைவோனே

சந்தந் திகழ்மலர் சிந்துங் கடியது

.. .. தங்குங் கழுமலம் .. உறைவோனே

.. தண்சந் திரனர வொன்றுஞ் சடையின

.. .. சங்கங் கரமணி .. பெருமானே.


பதம் பிரித்து:

வந்து என் பழவினை என்றும் துயர் மிக

.. .. வஞ்சம் புரிதர அதனாலே

.. மங்கும் தமியனும், உன்றன் புகழ் சொலி,

.. .. மண்டும் களி பெற அருளாயே;

கந்தம் கமழ்-அடி அன்பன் தனது இடர்

.. .. கண்டு, அந்தகன் உயிர் செகு காலா;

.. கஞ்சன் கரியவன் அஞ்சும்படி எரி-

.. .. கம்பம் திருவுரு என ஆனாய்;

சந்தம் திகழ்-தமிழ் கொண்டு உன் கழல் தொழு

.. .. சம்பந்தரின் மொழி மகிழ்வோனே;

.. சங்கம்-தனில் முன(ம்) நின்றும், தடைவிடை

.. .. தந்தும், தமர் மிடி களைவோனே;

சந்தம் திகழ்-மலர் சிந்தும் கடியது

.. .. தங்கும் கழுமலம் உறைவோனே;

.. தண்-சந்திரன் அரவு ஒன்றும் சடையின;

.. .. சங்கம் கரம் அணி பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

வந்து என் பழவினை என்றும் துயர் மிக வஞ்சம் புரிதர, அதனாலே மங்கும் தமியனும், - என் பழவினைகள் வந்து எந்நாளும் துயரமே மிகும்படி வஞ்சம் புரிய, அதனால் வாட்டமுறுகின்ற தமியேனும்; (வந்து என் பழவினை - என் பழவினை வந்து); (புரிதர - புரிய; தருதல் - துணைவினை); (மங்குதல் - வாடுதல்; வாட்டமுறுதல்);

உன்ன் புகழ் சொலி, மண்டும் களி பெற அருளாயே - உன்னுடைய புகழைப் பாடி, மிகுந்த இன்பம் பெற அருள்வாயாக; (மண்டுதல் - அதிகமாதல்; நெருங்குதல்); (சொலி - சொல்லி; இடைக்குறை விகாரம்); (களி - மகிழ்ச்சி);

கந்தம் கமழ்-அடி அன்பன் தனது இடர் கண்டு, ந்தகன் உயிர் செகு காலா - வாசம் கமழும் மலரடியைப் பணிந்த பக்தனான மார்க்கண்டேயனுடைய துன்பத்தைக் கண்டு, எமனே மாளுமாறு உதைத்தவனே, காலகாலனே; (அந்தகன் - எமன்); (செகுத்தல் - கொல்லுதல்);

கஞ்சன் கரியவன் அஞ்சும்படிரி-கம்பம் திருவுரு எனனாய் - பிரமனும் திருமாலும் அஞ்சுமாறு அவர்களிடையே பிரகாசிக்கும் ஒளித்தூண் உருவத்தில் நின்றவனே; (கஞ்சன் - பிரமன்; (கஞ்சம் - தாமரை); (கரியவன் - திருமால்); (எரி கம்பம் - எரிகின்ற கம்பம்; எரிதல் - பிரகாசித்தல்; கம்பம் - தூண்);

சந்தம் திகழ் தமிழ் கொண்டுன் கழல் தொழு சம்பந்தரின் மொழி மகிழ்வோனே - சந்தம் மலிந்த தமிழ்ப்பாமாலைகளால் உன் திருவடியைத் தொழுத திருஞான சம்பந்தரின் வாக்கான தேவாரத்தை விரும்பிக் கேட்பவனே; (சந்தம் - செய்யுளின் ஓசைநயம்);

சங்கம்-தனில் முனம் நின்றும், தடைவிடை தந்தும், தமர் மிடி களைவோனே - முன்பு மதுரையில் புலவர் சங்கத்தில் (சபையில்) சென்று நின்றும், புலவர் எழுப்பிய ஆட்சேபணைகளுக்குச் சமாதானம் தந்தும் (விடை கொடுத்தும்), உன் அடியவரான தருமியின் வறுமையை நீக்கியவனே; (உம் - இதனை அசைச்சொல்லாகவும் கொள்ளலாம்); (தருமிக்குப் பொற்கிழி அருளிய படலத்தைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க); (சங்கம் - கூட்டம்; சபை; தமிழ்ச்சங்கம்; புலவர்கள் சங்கம்); (தடைவிடை - தடைக்கு விடை - ஆக்ஷேபத்திற்குச் சமாதானம்); (தமர் - அடியவர்); (மிடி - வறுமை);

சந்தம் திகழ் மலர் சிந்தும் கடி-து தங்கும் கழுமலம் உறைவோனே - அழகிய பூக்கள் பரப்புகின்ற வாசனை நிலைத்துத் தங்கிய திருக்கழுமலத்தில் (சீகாழியில்) உறைகின்றவனே; (சந்தம் - அழகு); (சிந்துதல் - பரப்புதல்); (கடி - வாசனை); (கழுமலம் - சீகாழியின் 12 பெயர்களில் ஒன்று);

தண்-சந்திரன் அவு ஒன்றும் சடையின - குளிர்ந்த சந்திரனும் பாம்பும் ஒன்றுகின்ற சடையினனே; (ஒன்றுதல் - ஒன்றுசேர்ந்து இருத்தல்);

சங்கம் கரம் அணி பெருமானே - கையில் வளையல் அணிந்த (அர்த்தநாரீஸ்வரனான) பெருமானே; (சங்கம் - வளையல்; கைவளை);


வி. சுப்பிரமணியன்

--------------- ---------------