Wednesday, July 29, 2015

01.30 – கோயில் (தில்லை / சிதம்பரம்)

01.30 – கோயில் (தில்லை / சிதம்பரம்)



2008-04-03
கோயில் (தில்லை / சிதம்பரம்)
---------------------------------
(எழுசீர் விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் விளம் மா" என்ற வாய்பாடு)
(20 பாடல்கள்)



1)
வேகமா ஓடும் வாழ்வினில் பொருளின்
.. மேல்மிக விருப்பொடு நாளும்
போகமே வேண்டிச் சோகமே உற்றுப்
.. பொழுதினைப் போக்கிடும் புன்மை
போகநீ அருளாய் வானவர் எல்லாம்
.. போற்றமா விடத்தினை உண்ட
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



வேகமா - வேகமாக – வேகத்தோடு;
ஏகநாயகன் - எல்லா உலகங்களுக்கும் ஒரே தலைவன்; (சேந்தனார் அருளிய திருவிசைப்பா - 9.5.1 - “ஏகநா யகனை இமையவர்க் கரசை”);


2)
வார்கடல் உலகில் மனிதனாய்ப் பிறந்தும்
.. வல்வினை யேபுரிந்(து) இழிந்து
போகநீ விடுதல் உனக்கழ(கு) ஆமோ
.. பொன்னடி தொழும்அறி(வு) அருளாய்
பேர்களா யிரத்தை நாள்தொறும் சொல்லிப்
.. பிரியமாய் அடியவர் வணங்கும்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



வார் கடல் உலகு - நீண்ட கடல் சூழ்ந்த உலகம்;
பேர்கள் ஆயிரம் - சஹஸ்ரநாமம்;



3)
தேகமே மெய்என்(று) எண்ணுவார் நாளும்
.. செப்பிடும் மொழியினில் மயங்கா(து)
ஆகம மறைகள் சொல்பொருள் உன்னை
.. அனுதினம் போற்றிட அருளாய்
பாகமோர் மாதைக் கொண்டஎம் பரமா
.. பலவடி வங்களில் தோன்றும்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



ஆகம மறைகள் சொல்பொருள் உன்னை - ஆகமங்களும் வேதங்களும் சொல்லும் மெய்ப்பொருளாக உள்ள உன்னை;


4)
தாகமோர் கோடி மனத்தினில் தாங்கித்
.. தாக்கிடும் புலன்களால் கெட்டுப்
போகவே விரையும் என்னையும் உன்றன்
.. பொன்னடி போற்றவைத் தருளாய்
பாகன மொழியாள் பார்வதி யோடு
.. பலபதி எழுந்தருள் பரனே
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



தாகம் ஓர் கோடி - எண்ணற்ற ஆசைகள்;
பாகு அன மொழியாள் - வெல்லப்பாகு போன்ற இனிய மொழி பேசுகின்ற உமாதேவி; (அன - அன்ன என்பது இடைக்குறையாக வந்தது)
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.13.4 - "பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே");



5)
ஏகமாய் நெஞ்சில் ஆசைகள் நிரம்பி
.. இயக்கிட இழிசெயல் செய்து
சேகரித் திட்ட தீவினை எல்லாம்
.. தீர்த்தெனைக் காத்தருள் புரியாய்
மாகரித் தோலைப் போர்வையா உடைய
.. மைந்தனே உயிர்களுக்(கு) எல்லாம்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



ஏகமாய் நெஞ்சில் ஆசைகள் நிரம்பி - நெஞ்சில் ஆசைகள் அதிகம் ஆகி நிறைந்து; (ஏகம் - மிகுதி - Abundance); (நிரம்புதல் - To become full, complete, replete; நிறைதல்);
மாகரித்தோலை - பெரிய ஆண்யானையின் தோலை;
போர்வையா உடைய – போர்வையாக உடைய; (அப்பர் தேவாரம் - 6.86.2 - “உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக வுடையானை”);
மைந்தன் - வீரன்;



6)
வாகனம் மாட மாளிகை என்று
.. வசதியா வாழவே விரும்பி
ஓர்கணம் கூட உன்னடி நினையா(து)
.. உழல்கிறேன் உய்வழி காட்டாய்
நாகமும் நதியும் வெண்பிறை மதியும்
.. நறுமணக் கொன்றையும் புனையும்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



வசதியா - வசதியாக - வசதியோடு;
புனைதல் - தரித்தல்; சூடுதல்; அலங்கரித்தல்;



7)
வேகவே போகும் உடலினை வளர்க்க
.. மிகத்தினம் உழன்றிருந் துக்
சாகரத் தினிலே தத்தளிக் கின்ற
.. தமியனே னுக்(கு)அருள் புரியாய்
மாகறல் மயிலை எனப்பல தலங்கள்
.. மகிழ்ந்துறைந்(து) அடியவர்க்(கு) அருளும்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



மிகத்தினம் உழன்று - மிகவும் தினந்தோறும் அலைந்து; பல நாள்கள் அலைந்து;
இரும் துக்க சாகரம் - பெரிய துன்பக்கடல்; (இருமை - பெருமை - Greatness, largeness, hugeness);
தமியனேனுக்கு - கதியற்ற எனக்கு; (தமியன் என்ற சொல் தன்மையில் (in first person) தமியனேன் என்று வரும்);
மாகறல் மயிலை - திருமாகறல், மயிலாப்பூர் - தேவாரப் பாடல் பெற்ற தலங்களுட் சில;


8)
ஆர்கலி தீர்ப்பார் எனப்பலர் கடையை
.. அடைந்தொரு பயனுமிங் கிலையே
சீர்கழல் இணையைச் சிந்தையில் வைத்துத்
.. தினம்தொழ எனக்(கு)அருள் புரியாய்
தேர்கடா வுதற்குக் கயிலையைப் பெயர்க்கச்
.. சென்றவல் லரக்கனை நெரித்த
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



ஆர் - யார்;
கலி - துன்பம்; வறுமை; தரித்திரம்;
கடை - வாயில் (entrance, gate, outer gateway);
சீர் கழல் - வினைத்தொகை - சிறந்த திருவடி; (சீரடி); (சீர்த்தல் - சிறத்தல்);
கடாவுதல் - செலுத்துதல் (to ride, as an animal; to drive, as a car);
வல்லரக்கன் - வலிய அரக்கனான இராவணன்;



9)
ஈகையி லார்பால் சென்றிரந்(து) இழியா(து)
.. எப்பொரு ளும்தரும் நின்பால்
போகஎன் நெஞ்சை நல்வழிப் படுத்தாய்
.. பூஅமர் அயன்அரி காணா
மாகனல் தூணே கரையிலாக் கருணை
.. வாரியே வானவர் போற்றும்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



ஈகை இலார் - கொடுக்கும் தன்மை இல்லாதவர்;
பால் - இடம்;
பூ அமர் அயன் - தாமரைப் பூவில் இருக்கும் பிரமன்;
மாகனற்றூணே - மா கனல் தூணே - பெரிய ஒளித்தம்பமாகி உயர்ந்தவனே;
கரையிலாக் கருணை வாரி - எல்லையற்ற கருணைக்கடல்;
(சேந்தனார் அருளிய திருவிசைப்பா - திருமுறை 9.5.2 - "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை");



10)
மோகமாய் வழியை அறிகிலார் நாளும்
.. மூடராய் அஞ்செழுத்(து) ஓதா
மூகராய் உழல்வார் பின்செலா(து) உன்பேர்
.. மொழிந்தடி பணிவதற்(கு) அருளாய்
நாகமோர் நாணாப் பூட்டிய வில்லால்
.. நண்ணலர் முப்புரம் எய்த
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



மோகம் - மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி (delusion of mind which prevents one from discerning the truth); ஆசை;
மாய்த்தல் - அழித்தல்;
மோகமாய் வழியை அறிகிலார் - மோகத்தை மாய்க்கும் வழியை அறியாதவர்;
நாளும் - தினந்தோறும்; எப்பொழுதும்;
மூகன் - ஊமை; (பேசுதற்குரியவற்றைப் பேசாதவர்; சொல்லும் கருவியிருந்தும் சொல்லாதவர்);
(திருமந்திரம் - "சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்");
நாகம் ஓர் நாணாப் பூட்டிய வில்லால் நண்ணலர் முப்புரம் எய்த – பாம்பை நாணாகப் பிணைத்த வில்லைக் கையில் ஏந்திப் பகைவர்களது முப்புரங்களையும் எரித்த; (பூட்டுதல் - To fasten, as the string to a bow; நாணேற்றுதல்);
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.19.1 - “புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தால்”);



11)
ஆய்கிற நூல்கள் வற்றையும் ஓதா(து)
.. அழிவழி போய்க்கனி இருக்கக்
காய்கவர்ந்(து) இடரே தொடர்ந்(து)அடைந்(து) அதனால்
.. கவல்கிறேன் காத்தருள் புரியாய்
சாகைஆ யிரமும் மொழிகிற பொருளே
.. தனக்கொரு நிகருமில் லாத
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



ஆய்தல் - ஆராய்தல்; தேடுதல்; சிந்தித்தல்;
ஆய்கிற நூல் - இறைவனை ஆராய்கின்ற நூல்கள்;
(சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - “ஆயாதன சமயம்பல அறியாதவன்” - சுருதி, யுக்தி, அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன்);
கவர்தல் - விரும்புதல்;
கவலுதல் - கவலைப்படுதல்; மனம் வருந்துதல்;
சாகை - வேதநூற்பிரிவு; (சம்பந்தர் தேவாரம் - 2.94.1 - "சாகை ஆயிரம் உடையார்...");



12)
காகமும் எச்சிற் கையினால் ஓட்டாக்
.. கஞ்சரைப் புகழ்ந்திர வாமல்
கோகன கத்தாள் வேண்டுவ தெல்லாம்
.. கொடுக்குமென்(று) அறிந்(து)அடி அடைந்தேன்
தோகைமா மயிலை ஊர்தியா உடைய
.. சுப்பிர மணியனுக்(கு) அத்தா
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



காகமும் எச்சிற் கையினால் ஓட்டாக் கஞ்சரைப் புகழ்ந்து இரவாமல் - எச்சிற்கையால் காக்கையையும் ஓட்டாத உலோபிகளைப் புகழ்ந்து பேசி யாசித்தல் செய்யாமல்; (இரவாமல் / இரவாது - இரத்தல் என்பதன் எதிர்மறை வினையெச்சம்);
கோகனகம் - செந்தாமரை;
ஊர்தியா - ஊர்தியாக – வாகனமாக;
அத்தன் - தந்தை;



13)
சாகவே விரையும் நிலையிலா வாழ்வைச்
.. சதம்என நினைக்கிற மனத்தின்
மோகவேர் அறுத்(து)உன் திருப்புகழ் தன்னை
.. மொழிவதற்(கு) இன்னருள் புரியாய்
மேகநேர் நீலம் மிளிர்கிற கண்டா
.. விண்ணவர் வந்(து)அடி போற்றும்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



சதம் - நித்தியமானது;
மோக வேர் - மோகத்தின் வேர்;
நேர்தல் - ஒத்தல் (to resemble, equal); நேர் - உவமை (Resemblance, similarity, comparison);
மேக நேர் - மேகம் நேர் - மேகம் போன்ற;
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.125.7 - "மேகத்த கண்டன்எண் தோளன்..." - மேகத்தகண்டன் - காளமேகம் போலும் கரிய கண்டத்தை உடையவன்);



14)
மார்கழிப் பனியைக் கீழ்த்திசை தன்னில்
.. வந்(து)உதிக் கிறபக லவனின்
வீழ்கதிர் போக்கி விடுவது போல்என்
.. வினைகளைத் தீர்த்தருள் சோதீ
வார்கணை ஒன்றால் முப்புரம் எரித்த
.. மைந்தனே மதிபுனை நாதா
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



கீழ்த்திசை - கிழக்கு;
பகலவன் - சூரியன்;
வீழ் கதிர் - (பூமியில்) விழுகிற கிரணம் / வெயில்;
தீர்த்து அருள் சோதீ - தீர்த்து அருள்வாய் சோதியே / தீர்த்து அருளும் சோதியே; (சோதீ - சோதி என்பதன் விளி - சோதியே);
வார் கணை - நீண்ட அம்பு;
மைந்தன் - வீரன்;
மதி புனை நாதன் - சந்திரனைச் சூடும் தலைவன்;



15)
பாகலைப் போலக் கசப்பினைக் கொடுக்கும்
.. பழவினை தீர்ந்துவாழ்(வு) இனிக்க
வார்கழல் தன்னை நாண்மலர் கொண்டு
.. வழிபடும் நினைப்பினை அருளாய்
மாகள பம்வெண் நீறென அணிந்து
.. மகிழ்அடி யவர்மனத்(து) உறையும்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



பாகல் - பாகற்காய் (bitter melon);
வார் கழல் - நீண்ட திருவடி;
நாண்மலர் - நாள் மலர் - அன்று மலர்ந்த பூ;
மா களபம் - சிறந்த கலவைச்சாந்து (great perfume / nice sandalwood paste);
வெண் நீறு - வெண்மையான திருநீறு;



16)
ஓர்கதி இல்லேன் உனைஅலால் என்றே
.. உணர்ந்(து)உன(து) அடியிணை தன்னைச்
சேர்கரம் கொண்டு தொழும்அடி யேன்தன்
.. தீவினைக் கட்டறுத்(து) அருளாய்
நாகையில் அதிபத் தர்க்கருள் புரிந்த
.. நம்பனே நாரியோர் பாகா
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



கதி - புகலிடம்;
சேர் கரம் - வினைத்தொகை; - ஒன்றுசேர்த்த கைகள்;
அடியேன்றன் - அடியேன்தன் - அடியேனுடைய;
அதிபத்தர் - 63 நாயன்மார்களுள் ஒருவர். நாகப்பட்டினத்தில் மீனவர் தலைவராக இருந்தவர்; இவர் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க;
நம்பன் - சிவன். (நம்புதல் - விரும்புதல். நம்பன் - விரும்பப்படுபவன்);
நாரி - பெண்; பார்வதி;



17)
தாழ்கரம் கொண்டு தலைவரே எனக்குத்
.. தருகவென்(று) எவரையும் அண்டேன்
ஆழ்கடல் தன்னில் நூக்கினும் அடியார்க்(கு)
.. அருந்துணை அஞ்செழுத்(து) அன்றோ
வாழ்கவென்(று) என்றும் மலரடி தன்னை
.. வழுத்திடும் அறி(வு)எனக்(கு) அருளாய்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



தாழ் கரம் - வினைத்தொகை - தாழ்த்திய கை;
அண்டுதல் - ஆசிரயித்தல் (to have as a support); கிட்டுதல் (to approach);
ஆழ் கடல் - வினைத்தொகை - ஆழ்ந்த கடல் - ஆழமான கடல்;
நூக்குதல் - தள்ளுதல் (to shove, push, thrust aside);
வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்;



திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 5.72.7:
கல்லி னோ(டு)எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன்
நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேன்அன்றே.



18)
ஓர்கணம் கூட உன்நினைப் பின்றி
.. ஒழிவிலா ஆசைக ளாலே
பாகனில் கரிபோல் நான்திரிந் தெய்த்தேன்
.. ரிந்தருள் புரிந்திடாய் இந்து
சேகரா காமன் உடலெரிந் தழியத்
.. தீயுமிழ் கண்ணுத லோனே
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



ஒழிவு இலா - ஓயாத;
பாகன் இல் கரி போல் - பாகன் இல்லாத யானை போல;
திரிதல் - அலைதல்; கெடுதல்; மயங்குதல்;
எய்த்தல் - வருந்துதல்;
ரிந்து அருள்புரிந்திடாய் - இரங்கி அருள்வாயாக;
இந்து சேகரன் - சந்திர சேகரன்; (Wearer of the moon on the crest of His head)
கண்ணுதலோன் - கண் நுதலோன் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

19)
போர்கள்நி கழ்த்தும் ஐவகைப் படைகள்
.. புறம்பெறு மாறுநற் றமிழில்
சீர்களை அமைத்துன் சீர்தனைப் பாடும்
.. சிந்தையைத் தந்தருள் புரியாய்
ஆர்கழல் தொழுத அமரரைக் காக்
.. அன்றெரி விடத்தினை உண்ட
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



போர்கணிகழ்த்தும் - போர்கள் நிகழ்த்தும் - தாக்கும்;
ஐவகைப் படைகள் - ஐம்புலன்கள்;
புறம்பெறுதல் - [முதுகு காணுதல் - to see the back] புறக்கொடையைப் பெறுதல். (To gain victory over one's enemies); (புறக்கொடை - போரில் முதுகுகாட்டுகை);
சீர் - செய்யுளின் ஓர் உறுப்பு; புகழ்; பெருமை;
ஆர்த்தல் - ஒலித்தல்;
ஆர் கழல் - வினைத்தொகை - ஆர்க்கும் கழல் - ஒலிக்கும் கழலை அணிந்த திருவடி;
அமரர் - தேவர்;



20)
வாகன மாக மால்விடை உடையாய்
.. மலரடி இணைதனைப் பணிந்தேன்
மாகடல் போல நின்றுள பண்டை
.. வல்வினை தீர்த்தருள் புரியாய்
கோகர ணத்தாய் திருப்பருப் பதத்தாய்
.. கோதிலா அன்பருள் குடிகொள்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.



மால்விடை உடையாய் - பெரிய இடபத்தை உடையவனே;
மா கடல் - பெருங்கடல்;
பண்டை வல்வினை - பழைய வலிய தீவினைகள்;
கோகரணம் - திருக்கோகரணம் - கருநாடகத்தில் உள்ள தலம்;
திருப்பருப்பதம் - ஸ்ரீசைலம் - ஆந்திரத்தில் உள்ள தலம்;
கோது இலா - குற்றம் அற்ற;
அன்பர் உள் குடிகொள் - பக்தர் மனத்தில் நிலையாகத் தங்கியிருக்கும்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1)
கவிச்சக்கரவர்த்தியும், சிறந்த சிவபக்தருமான திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள், தம் வாழ்வில் இறுதியாக இயற்றிய பாடலின் இறுதியடி
"ஏகநா யகனே தில்லையி லாடும்
.. இறைவனே எம்பெரு மானே"
என்பதாகும்.



(.வே.சா எழுதிய "பிள்ளையவர்கள் சரித்திரம்' என்ற நூலில் தொகுதி-2 பக்கம்-243-இல் இப்பாடல் எழுதப்பெற்ற நிகழ்ச்சியைக் காணலாம்.



மோகமா மடவி திரிந்தரி வையர்தம்
.. முலைக்குவட் டிடைநட மாடித்
தாகமா ராசைத் தருக்குலந் தோறும்
.. தாவுமென் புன்மனக் குரங்கைப்
பாகமார் பத்தி நாண்கொடு கட்டிப்
.. பலிக்குநீ செல்கயான் கொடுத்தேன்
ஏகநா யகனே தில்லையி லாடும்
.. இறைவனே எம்பெரு மானே.



இப்பாடலின் ஈற்றடியைத் தவிர ஏனைய அடிகள், ஆதி சங்கரர் அருளிய சிவானந்தலஹரியில் 20-ஆம் பாடலாக உள்ள 'ஸதாமோஹாடவ்யாம்" என்று தொடங்கும் பாடலின் கருத்தை உள்ளடக்கியன.




சிவானந்தலஹரி - உரை இங்கே: http://www.vidyavrikshah.org/SIVANANDALAHARI.pdf )

1 comment: