Monday, July 6, 2015

01.21 – கடவூர் - (திருக்கடையூர்)


01.21 –
கடவூர் - (திருக்கடையூர்)



2008-02-09
திருக்கடவூர்
-----------------------
(அறுசீர் விருத்தம் - "மா மா மா மா மா மா" வாய்பாடு - 1-4 சீர் மோனை)



1)
"சூலம் ஏந்தும் அரனே
.. சுட்டெ ரிக்கும் கண்ணா
நீலம் ஒளிரும் கண்டா
.. நிகரில் லாத ஒருவா
ஓலம்" என்ற டைந்த
.. உண்மைப் பத்தர்க் காகக்
காலன் மாள உதைத்த
.. கடவூர் அமுதே போற்றி.



ஒருவன் - ஒப்பற்றவன்;
ஓலம் - அபயம் வேண்டி அழைத்தல் (cry of lamentation, appeal; exclamation entreating succor in distress);
அடைதல் - சரண்புகுதல் (to take refuge in);
பத்தர் - பக்தர்; இங்கே மார்க்கண்டேயர்;
கடவூர் அமுது - திருக்கடவூரில் உறையும் அமிர்தம் போன்ற சிவன்;


குறிப்பு:
தருமபுர ஆதீன உரையில் - அப்பர் தேவாரம் - திருக்குறுந்தொகை - 5.1.8 பாடல் விளக்கத்திலிருந்து: "சிவபிரானை ஒருவன் என்றல் உபநிடத வழக்கு. முழுமுதல் என்னுங் கருத்தை உடையது”.
அப்பர் தேவாரம் - 6.55.8 - ".... ஊழி ஏழான ஒருவா போற்றி ...";
அப்பர் தேவாரம் 5.1.8 - ".... அம்பலத் துள்நி றைந்துநின் றாடும் ஒருவனே";
திருவாசகத்தில் திருவண்டப் பகுதியில் 43-வது அடி - "ஒருவன் என்னும் ஒருவன் காண்க";



2)
"அலைக்கும் கங்கை ஆற்றை
.. அணியும் சிவனே" என்று
மலர்க்கொத் தோடு வணங்கும்
.. மார்க்கண் டேயர் உயிரே
இலக்கென் றோடி வந்த
.. எமனை உதைத்துப் பத்தர்
கலக்கம் தீர்த்துக் காத்த
.. கடவூர் அமுதே போற்றி.



அலைத்தல் - அலைமோதுதல் (to dash);
இலக்கு - குறிப்பொருள் (target);



3)
"அருணை வடிவாய் நிற்கும்
.. அரனே கழுத்தில் நீல
வருணச் சிவனே" என்று
.. மார்க்கண் டேயர் வாழ்த்தும்
தருணம் வந்த எமனைத்
.. தரையில் வீழ உதைத்துக்
கருணை புரிந்து காத்த
.. கடவூர் அமுதே போற்றி.



அருணை - அருணாசலம்; அண்ணாமலை;
வருணம் - வர்ணம் - நிறம்;
தருணம் - சமயம்; பொழுது;



4)
"விமலா வேதா வெள்ளை
.. விடைமேல் ஏறும் சிவனே
அமரர் தலைவா" என்னும்
.. அன்பர் என்றும் வாழ
எமனை எட்டி உதைத்த
.. இறைவா திங்க ளோடு
கமழும் கொன்றை சூடும்
.. கடவூர் அமுதே போற்றி.



விமலன் - மலம் அற்றவன்;
வேதன் - வேதம் உரைப்பவன்;
விடை - எருது;
அமரர் - தேவர்;



5)
குடலை நிறையப் பூவைக்
.. கொண்டு வந்(து)அன் போடு
"சுடலைப் பொடியைப் பூசும்
.. தூயா உமைக்கோர் பாதி
உடலைத் தந்தோய் கா"என்(று)
.. உரைக்கும் அன்பர் துயரக்
கடலைக் கடக்க உதவும்
.. கடவூர் அமுதே போற்றி.



குடலை - பூக்குடலை;
சுடலை - சுடுகாடு;
சுடலைப்பொடி - திருநீறு;
தந்தோய் - தந்தவனே;



6)
"எங்கும் உறையும் இறைவா
.. இடரைக் களைவாய்" என்று
தங்கை கூப்பும் அன்பர்
.. சஞ்ச லத்தைத் தீர்க்கப்
பொங்கிக் காலன் மாளப்
.. புடைத்த அரனே புனிதா
கங்கை பாயும் சடையாய்
.. கடவூர் அமுதே போற்றி.



தங்கை - தம் கை - தமது கையை;
சஞ்சலம் - நடுக்கம்; துன்பம்;
பொங்குதல் - கோபித்தல்;
மாளுதல் - சாதல்; அழிதல்;
புடைத்தல் - அடித்தல்;



7)
அரியும் காணா அடியை
.. அன்பால் வணங்கும் பத்தர்
மரியும் வேளை என்று
.. வந்த காலன் தீது
புரியும் முன்னர் அவனைப்
.. புடைத்துக் காத்த ஈசா
கரிய கண்டா தூயா
.. கடவூர் அமுதே போற்றி.



அரி - ஹரி;
பத்தர் - பக்தர் - இங்கே மார்க்கண்டேயர்;
மரிதல் - இறத்தல்; (பெருமாள் திருமொழி 10.5 - "வலிவணக்கு .... சிலைவணக்கி மான்மரிய எய்தான் தன்னை....");
மரியும் வேளை - இறக்கும் நேரம்;
புடைத்தல் - அடித்தல்;
கரிய கண்டன் - நீலகண்டன்;
தூயன் - தூயவன்; புனிதன்;


(சம்பந்தர் தேவாரம் - 2.31.7 -
"ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறிய லூரே.)



8)
மலையை ஆட்டும் இலங்கை
.. மன்னன் செருக்க ழித்த
தலைவ; மார்க்கண் டேயர்
.. தம்மைக் காத்துக் காலன்
குலைய உதைத்த கோனே;
.. குங்கி லியத்தை ஏற்றிக்
கலயர் வழிபட் டுய்ந்த
.. கடவூர் அமுதே போற்றி.



மலை - கயிலை மலை;
தலைவ - தலைவனே என்ற விளி;
குலைதல் - அழிதல் (to be annihilated, destroyed, put an end to);
காலற் குலைய உதைத்த கோனே - காலனை உதைத்த தலைவனே; (அப்பர் தேவாரம் - 6.80.1 - “பாரானை.... காலற் செற்ற சீரானை ...”);
கலயர் - குங்கிலியக் கலய நாயனார்;



9)
"குழலாள் உமைஓர் கூறா
.. கோனே சிவனே" என்று
தொழலே குறியாய் இருந்த
.. தொண்டர்க் காக எமனை
அழலாய் நின்ற நாளில்
.. அயன்மால் இருவர் அறியாக்
கழலால் உதைத்துக் காத்த
.. கடவூர் அமுதே போற்றி.



குழல் - கூந்தல்;
உமை ஓர் கூறன் - அர்த்தநாரீஸ்வரன்;
கோன் - அரசன்;
தொழல் - தொழுதல்;
அழல் - நெருப்பு;
அயன் - பிரமன்;
மால் - திருமால்;
கழல் - திருவடி;


(சம்பந்தர் தேவாரம் - 3.22.9 -
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்(கு)
ஆர்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.


தருமை ஆதீன உரையிற் காணும் விளக்கம்: ".....பிரமன் முடியையும் திருமால் அடியையும் தேடிக் காணமாட்டாமை ஏனைய பதிகங்கள் குறிக்க, இப்பதிகம் இருவரும் காணாத சேவடி என்று மட்டும் குறிக்கிறது. அதன் கருத்து, திருமாலால் காணமுடியாத அடி பிரமனாலும் காணமுடியாது என்பதாம். அநுபலப்தியால் பெறவைப்பான் 'கார்வணன் நான்முகன் காணுதற்கொணாச் சீர்வணச் சேவடி' யென்று; அடியே காணாதார் முடிகாண மாட்டாமையும் பெற வைத்தமையறிக." )



10)
வழியை விட்டு நீங்கள்
.. வந்தால் உய்வீர் என்றே
மொழியும் மதங்கட் கெட்டா
.. முக்கண் முதல்வா காலன்
அழியக் காலால் உதைத்தோய்
.. அன்பர் முன்செய் வினைகள்
கழியக் கருணை செய்யும்
.. கடவூர் அமுதே போற்றி.



வழி - மார்க்கம்;
உதைத்தோய் - உதைத்தவனே;
முன் செய்வினைகள் - முன்னர்ச் செய்த வினைகள்;


(சம்பந்தர் தேவாரம் - 1.11.5 - "ஆயாதன சமயம்பல அறியாதவன்..." - இறையுண்மையையும் இறையிலக்கணத்தையும், அளவையானும், அநுபவத்தானும் உள்ளவாறு ஆராயாதனவாகிய ஏனைச் சமயங்களால் சிறப்பியல்பை அறியப்பெறாதவன்.)



11)
பொய்யில் லாத அன்பர்
.. பூவும் நீரும் கொண்டு
செய்யும் பூசை ஏற்றுத்
.. திருத்தா ளாலே எமனை
நையப் புடைத்துக் காத்து
.. நலம்செய் சிவனே சூலம்
கையில் ஏந்தும் அரனே
.. கடவூர் அமுதே போற்றி.



சிவம் - நன்மை (goodness, prosperity, auspiciousness);
சிவன் - மங்கலம் (நன்மை) உடையவன் (வடமொழிப் பொருள்); சிவந்த மேனி உடையவன் (தமிழ்ச்சொல்லாகக் கொண்டால் வரும் பொருள்);
(அப்பர் தேவாரம்: திருமுறை 4.112.9 - "சிவன்எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்");



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
கடவூர் - திருக்கடையூர் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=639 )



No comments:

Post a Comment