Sunday, July 5, 2015

01.18 – ஓணகாந்தன்தளி


01.18 –
ஓணகாந்தன்தளி



2008-01-27
திரு ஓணகாந்தன்தளி
-------------------------
(எண்சீர் விருத்தம் - 'மா மா மா மா' அரையடி வாய்பாடு - 1-5 சீர்களில் மோனை)
(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.5.1 - 'நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு')



1)
உலகில் பொருள்மேல் மிக்க ஆசை
.. உற்றுத் தினமும் உழன்று ழன்று
நிலைகெட் டிழிய நினைப்ப தேனோ
.. நிலைக்கும் பெரும்செல் வம்பெற் றுய்யச்
சுலப மான வழியிங் குண்டே
.. தூய மதியின் அருகில் கங்கை
உலவும் சடையை உடைய ஈசன்
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
உலகில் பொருள்மேல் மிக்க ஆசை உற்றுத் தினமும் உழன்று உழன்று
நிலைகெட்டு இழிய நினைப்பது ஏனோ? நிலைக்கும் பெரும் செல்வம் பெற்று உய்யச்
சுலபமான வழி இங்கு உண்டே; தூய மதியின் அருகில் கங்கை
உலவும் சடையை உடைய ஈசன் ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.



2)
மற்ற வர்மேல் பொறாமை கொண்டு
.. வாழ்வில் என்றும் மேலும் மேலும்
குற்றங் கள்செய் துழல்வ தொன்றே
.. குறியாய்க் கொண்டு கெடுவ தேனோ
நெற்றி விழியா கங்கைச் சடையா
.. நீல கண்டா என்னும் பத்தர்க்(கு)
உற்ற துணையாய் வரும்எம் மானின்
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
மற்றவர்மேல் பொறாமை கொண்டு வாழ்வில் என்றும் மேலும் மேலும்
குற்றங்கள் செய்து உழல்வது ஒன்றே குறியாய்க் கொண்டு கெடுவது ஏனோ?
"நெற்றி விழியா; கங்கைச் சடையா; நீல கண்டா" என்னும் பத்தர்க்கு
உற்ற துணையாய் வரும் எம்மானின் ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


(அப்பர் தேவாரம் - 6.95.9 - "குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்...")



3)
அண்டை அயலார் போல வாழ
.. ஆசை கொண்டு மதியி ழந்து
கண்ட கண்ட செயல்கள் செய்து
.. காலம் போக்கிக் கண்ட தென்ன
அண்டம் எரிக்கும் ஆல காலம்
.. அதனை அள்ளி அமுதைப் போல
உண்ட பெருமான் கோயில் கொள்ளும்
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
அண்டை அயலார் போல வாழ ஆசை கொண்டு, மதி இழந்து,
கண்ட கண்ட செயல்கள் செய்து காலம் போக்கிக் கண்ட(து) என்ன?
அண்டம் எரிக்கும் ஆல காலம் அதனை அள்ளி அமுதைப் போல
உண்ட பெருமான் கோயில்கொள்ளும் ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


அண்டம் - உலகம்; பிரபஞ்சம்;
கோயில்கொள்ளுதல் - வாழுமிடமாகக் கொள்ளுதல் (To take up abode i);

4)
பெரிதும் பொருள்மேல் ஆசை கொண்டு
.. பிறருக் குதவா தென்றும் தீமை
புரிதல் ஒன்றே குறியாய்ப் போது
.. போக்கிக் கண்ட தென்ன முன்னம்
அரிய ஓலை ஒன்றி னாலே
.. அடிமை ஆன நாவ லூரர்
உரிமை யோடு பாடிப் போற்றும்
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
பெரிதும் பொருள்மேல் ஆசை கொண்டு பிறருக்கு உதவாது என்றும் தீமை
புரிதல் ஒன்றே குறியாய்க் காலம் போக்கிக் கண்டது என்ன? முன்னம்
அரிய ஓலை ஒன்றினாலே அடிமை ஆன நாவலூரர்
உரிமையோடு பாடிப் போற்றும் ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


நாவலூரர் - சுந்தரர்;
சுந்தரர் தேவாரம் - திருமுறை.பதிகம் - 7.5.1: 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' - ஓணகாந்தன்தளி ஈசனைப் பொன் வேண்டிச் சுந்தரர் வஞ்சப்புகழ்ச்சி அமையப் பாடிப் பொன் பெற்றார்.



5)
அடையாப் பொருள்மேல் ஆசை யாகி
.. அறிவி ழந்து செய்யும் பாவம்
படையாய் வருமே சற்றும் எண்ணிப்
.. பாரா திருந்து கெடுவ தேனோ
சடையான் சடைமேல் திங்கள் கங்கை
.. தாங்கி மலையான் மகளோர் பங்கன்
உடையான் அன்பர்க் கரணா னானின்
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
அடையாப் பொருள்மேல் ஆசை ஆகி, அறிவு இழந்து, செய்யும் பாவம்
படையாய் வருமே; சற்றும் எண்ணிப் பாராதிருந்து கெடுவது ஏனோ?
சடையான், சடைமேல் திங்கள் கங்கை தாங்கி, மலையான் மகள் ஓர் பங்கன்,
உடையான், அன்பர்க்கு அரண் ஆனானின் ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


சடையான் - சடையை உடையவன் - சிவன்;
சடைமேல் திங்கள் கங்கை தாங்கி - சடைமீது சந்திரனையும் கங்கையையும் தாங்கியவன்;
உடையான் - சுவாமி (Master, lord);
அரண் ஆனானின் - பாதுகாவல் ஆனவனுடைய;



6)
போதும் என்ற எண்ணம் இன்றிப்
.. பொருள்மேல் கொண்ட ஆசை யாலே
தீது புரிந்து தினமும் பாவம்
.. திரட்டி நரகில் வீழ்வ தேனோ
பாது காக்கும் அன்னை நீயே
.. பரமா என்று பத்தர் அன்போ(டு)
ஓதும் பெருமான் மேவு கின்ற
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
போதும் என்ற எண்ணம் இன்றிப் பொருள்மேல் கொண்ட ஆசையாலே
தீது புரிந்து தினமும் பாவம் திரட்டி நரகில் வீழ்வ(து) ஏனோ?
"பாதுகாக்கும் அன்னை நீயே பரமா" என்று பத்தர் அன்போடு
ஓதும் பெருமான் மேவுகின்ற ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


அன்போடு ஓதும் - பக்தியோடு பாடும்;
மேவுதல் - உறைதல் (to abide, dwell);



7)
நமக்குத் தேவை பணமென் றெண்ணி
.. நாளும் அதையே தேடி மூட்டை
சுமக்கும் கழுதை போல்தி ரிந்து
.. தொய்ந்து நிலைகெட் டிழிவ தேனோ
எமைக்கா என்னும் பத்தர்க் கெல்லாம்
.. இனிதே அருளும் முக்கண் ஈசன்
உமைக்கி டத்தைத் தந்தான் மேவும்
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
நமக்குத் தேவை பணம் என்(று) எண்ணி நாளும் அதையே தேடி மூட்டை
சுமக்கும் கழுதை போல் திரிந்து தொய்ந்து நிலைகெட்டு இழிவ(து) ஏனோ?
"எமைக் கா" என்னும் பத்தர்க்கு எல்லாம் இனிதே அருளும் முக்கண் ஈசன்
உமைக்கு இடத்தைத் தந்தான் மேவும் ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


மூட்டை சுமக்கும் கழுதை - தான் சுமக்கிற மூட்டையில் உள்ளதைக் கழுதை அனுபவியாது.
உமைக்கு இடத்தைத் தந்தான் - பார்வதிக்கு உடலின் இடப்பாகத்தை அளித்தவன் - சிவன்;



8)
நிலையில் லாத பணத்தின் மேலே
.. நிறைய ஆசை கொண்டு மாய
வலையில் மதியில் லாத மான்போல்
.. வலியச் சென்று விழுவ தேனோ
மலையின் அடியில் இலங்கை மன்னன்
.. வாட விரலை ஊன்றும் ஈசன்
உலகங் களுக்கோர் தலைவன் உறையும்
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
நிலை இல்லாத பணத்தின் மேலே நிறைய ஆசை கொண்டு, மாய
வலையில் மதி இல்லாத மான் போல் வலியச் சென்று விழுவ(து) ஏனோ?
மலையின் அடியில் இலங்கை மன்னன் வாட விரலை ஊன்றும் ஈசன்,
உலகங்களுக்(கு) ஓர் தலைவன் உறையும் ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


மாயம் - வஞ்சனை; மாயை;
"மாய வலையில் சென்று விழுவது" என்பதை 'இறக்குமாறு வலையில் சிக்கிக்கொள்வது" என்றும் பொருள்கொள்ளலாம்;



9)
பெயரும் பணமும் தினமும் தேடிப்
.. பெரிதும் உழன்று மிகவும் வாடி
அயரும் வாழ்வும் வாழ்வு தானோ
.. அரியும் அயனும் அன்று மிகவும்
முயன்றும் அடியும் முடியும் காணா
.. முடிவில் லாத நெருப்புத் தூணாய்
உயரும் ஒருவன் மேவு கின்ற
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
பெயரும் பணமும் தினமும் தேடிப் பெரிதும் உழன்று மிகவும் வாடி
அயரும் வாழ்வும் வாழ்வு தானோ? அரியும் அயனும் அன்று மிகவும்
முயன்றும் அடியும் முடியும் காணா முடிவு இல்லாத நெருப்புத் தூணாய்
உயரும் ஒருவன் மேவுகின்ற ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


பெயர் - புகழ்;
அயர்தல் - தளர்தல்;



10)
விதைத்த வினைகள் இன்று வந்து
.. விளைக்கும் இன்னல் தீர வேண்டில்
மதத்து மனத்தில் இருளை வைத்து
.. வழிகெட் டலைவோர் தங்கட் கெட்டான்
பதத்தைப் பரவும் பத்தர்க் காகப்
.. பாய்ந்து வந்த நமனைக் காலால்
உதைத்த முக்கட் பரமன் மேவும்
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
விதைத்த வினைகள் இன்று வந்து விளைக்கும் இன்னல் தீர வேண்டில்,
மதத்து மனத்தில் இருளை வைத்து வழிகெட்டு அலைவோர் தங்கட்கு எட்டான்,
பதத்தைப் பரவும் பத்தர்க்காகப் பாய்ந்து வந்த நமனைக் காலால்
உதைத்த முக்கட் பரமன் மேவும் ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


மதத்தல் - மதங் கொள்ளுதல் (To be furious, as by fanaticism); செருக்குதல் (To be arrogant); மயங்குதல் (To be bewildered);
எட்டான் - எட்டாதவன்; அடைய இயலாதவன்;
பதம் - திருவடி;
பரவுதல் - துதித்தல்;
பத்தர்- இங்கே, மார்க்கண்டேயர்;



11)
எமையாள் ஈசா எருதில் ஏறும்
.. இறைவா கங்கைச் சடையாய் ஏத்தும்
இமையோர் தம்மைக் காக்க நஞ்சை
.. எடுத்துண் டவனே முப்பு ரங்கள்
தமையோர் நகையால் சாம்பல் ஆக்கும்
.. சங்க ராவென் பார்க்க ருள்செய்
உமையாள் பங்கன் இனித மர்ந்த
.. ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.



பதம் பிரித்து:
"எமை ஆள் ஈசா; எருதில் ஏறும் இறைவா; கங்கைச் சடையாய்; ஏத்தும்
இமையோர்தம்மைக் காக்க நஞ்சை எடுத்(து) உண்டவனே;
முப்புரங்கள்தமை ஓர் நகையால் சாம்பல் ஆக்கும் சங்கரா" என்பார்க்(கு) அருள்செய்
உமையாள் பங்கன் இனிது அமர்ந்த ஓணகாந்தன்தளி சேர் நெஞ்சே.


எமை ஆள் ஈசா - எம்மை (எங்களை) ஆளும் ஈசனே;
இமையோர் - தேவர்கள்;
நகை - சிரிப்பு;
உமையாள் பங்கன் - உமையை ஒரு கூறாக உடையவன்;
ஒருவா - ஒருவனே - ஒப்பற்றவனே - (சம்பந்தர் தேவாரம் - 3.41.1 - 'கருவார் கச்சித் , திருவே கம்பத் தொருவா...');



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

ஓணகாந்தன்தளி - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=180 )

No comments:

Post a Comment