Sunday, July 5, 2015

01.14 – பராய்த்துறை - (திருப்பராய்த்துறை)


01.
14
பராய்த்துறை - (திருப்பராய்த்துறை)



2007-12-14
திருப்பராய்த்துறை
------------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் விளம் விளம் - என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 3.32.1 - “வன்னியு மத்தமு மதிபொதி சடையினன்”)



1)
காவிரிக் கரையினில் கவினுறு வயலொடு
பூவிரி சோலைகள் பொலிகிற பராய்த்துறைத்
தேவினை நாள்தொறும் சிந்தைசெய் அடியவர்
தீவினை தீர்ந்திடும் செல்வமும் சேருமே.



கவின் உறு - அழகிய;
பூ விரி சோலைகள் - பூக்கள் மலரும் சோலைகள்;
பராய்த்துறைத் தேவினை - திருப்பராய்த்துறையில் உறையும் தெய்வத்தை - சிவபெருமானை;



2)
பொன்னியின் கரையினில் பூமலர் சோலையும்
தென்னையும் வயல்களும் செழிக்கிற பராய்த்துறை
மன்னனை வழிபடு மனமுடை அடியவர்
முன்வினை ஆயின முடிந்துறும் செல்வமே.



பொன்னி - காவிரி;
பூமலர் சோலை - பூக்கள் மலர்கின்ற பொழில்;
பராய்த்துறை மன்னன் - திருப்பராய்த்துறையில் உறையும் சிவன்;
உறும் செல்வம் - செல்வம் வந்தடையும்;



3)
நற்புனற் காவிரி நதிக்கரை வளமிக
நெற்பயிர் வயல்களில் நிறைகிற பராய்த்துறைக்
கற்பகத் தருவினைக் கைதொழும் அடியவர்
வெற்பன பழவினை விடும்வரும் செல்வமே.



பராய்த்துறைக் கற்பகத் தருவினை - திருப்பராய்த்துறையில் உள்ள ற்ப மரத்தை - வேண்டுவன அளிக்கும் சிவனை;
வெற்பு அன பழவினை விடும் - மலை போன்ற பழைய வினைத்தொகுதி நீங்கும்; (அன – அன்ன – இடைக்குறையாக வந்தது);
(சம்பந்தர் தேவரம் - 3.49.6 –
மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.)



4)
கழனியில் எங்கணும் கரும்புநெல் தென்னைகள்
நிழல்தரும் சோலைகள் நிரம்பிய பராய்த்துறைத்
தழலுருச் சங்கரன் தாள்தொழும் அடியவர்
பழவினை பற்றறும் பல்கிடும் செல்வமே.



கழனி - வயல்;
எங்கணும் - எங்கும்;
சங்கரன் - நன்மையைச் செய்பவன்;
தழல் உருச் சங்கரன் - தீப் போன்ற செம்மேனி உடைய சங்கரன்;
தாள் - திருவடி;
பல்கிடும் - மிகும்; (பல்குதல் - மிகுதல்; பல ஆதல்; - To increase, as in number or quantity);



5)
வண்டுபோய் மதுவுணும் மலர்மிகு சோலைகள்
கொண்டகா விரிக்கரைக் கோலமார் பராய்த்துறை
அண்டநா யகன்வன் அடிதொழும் அடியவர்
பண்டைவல் வினையறும் பல்கிடும் செல்வமே..



மது உணும் - தேன் உண்ணும்; (உணும் - உண்ணும் என்பதன் இடைக்குறை);
கோலம் ஆர் பராய்த்துறை - அழகிய திருப்பராய்த்துறை;
அண்ட நாயகன் - எல்லா உலகங்களுக்கும் தலைவன்;
பண்டை வல் வினை - பழைய வலிய வினை;



6)
வணந்திகழ் மலர்களில் வண்டினம் மகிழ்ந்திட
மணங்கமழ் சோலைகள் மலிகிற பராய்த்துறை
அணங்கொரு கூறுடை அழகனின் அடியிணை
வணங்கிட வல்வினை மாய்ந்துறும் செல்வமே.



வணந்திகழ் மலர்களில் - வண்ணம் திகழ்கின்ற பூக்களில்; (வணம் - வண்ணம் என்பதன் இடைக்குறை);
அணங்கு ஒரு கூறு உடை அழகன் - பார்வதியை ஒரு பாகமாக உடைய சுந்தரன்;



7)
குயில்பல கூவிடும் கோலவண் டறைந்திடும்
வெயில்நுழை தற்கரு விரிபொழிற் பராய்த்துறைப்
பயில்கிற பரமனைப் பணிந்தெழும் அடியவர்
மயலொடு வல்வினை மாய்ந்துறும் செல்வமே.



"குயில்பல கூவிடும் பொழில், கோலவண்டு அறைந்திடும் பொழில், வெயில் நுழைதற்கு அரு விரிபொழில்" என்று இயைத்துப் பொருள்கொள்க;
வெயில் நுழைதற்கு அரு விரிபொழில் - வெயில் நுழைவதற்கு அரிய (அடர்ந்த) விரிந்த சோலை;
பயில்தல் - தங்குதல் (To stay, abide, reside;);
மயல் - அறியாமை; மயக்கம்;



8)
இலங்கைன் கயிலையை எடுத்தபோ(து) அடர்த்தவன்
நலம்தரும் காவிரி நதிக்கரைப் பராய்த்துறைத்
தலந்தனில் உறைஅரன் தாள்தொழும் அடியவர்
அலம்தரும் அருவினை அற்றுறும் செல்வமே.



இலங்கை ன் - இலங்கைக்கு அரசன் - இராவணன்;
அடர்த்தவன் - நசுக்கியவன்;
பராய்த்துறைத் தலம்தனில் உறை அரன் - திருப்பராய்த்துறை என்ற தலத்தில் உறையும் சிவன்;
அடியவர் அலம் தரும் அரு வினை அற்று உறும் செல்வமே - அடியவர்களுக்குத் துன்பம் தரும் தீவினைகள் தீர்ந்து செல்வம் வந்தடையும்;



9)
மாலயன் மண்ணிலும் வானிலும் சென்றடி
மேறி யாவொரு வெவ்வழல் பராய்த்துறை
நீலமி டற்றனை நெஞ்சினில் வைத்தவர்
மேலைவி னைத்தொடர் விடும்வரும் செல்வமே.



மால் அயன் மண்ணிலும் வானிலும் சென்று அடி மேல் அறியா ரு வெவ்வழல் - விஷ்ணு பிரமன் இவர்கள் மண்ணை அகழ்ந்தும் வானில் பறந்தும் சென்று தேடியும் அடியும் முடியும் காண ஒண்ணாத ஒரு பெருஞ்சோதி;
பராய்த்துறை நீல மிடற்றனை நெஞ்சினில் வைத்தவர் - திருப்பராய்த்துறையில் உறையும் நீலகண்டன் ஆகிய சிவனைத் தம் மனத்தில் வைத்த அடியவர்களது;
மேலை வினைத் தொடர் விடும்; வரும் செல்வமே - ஆகாமிய வினைகள் விலகும்; செல்வம் அவர்களை அடையும்;



10)
இகழ்மொழி பலஉரைத் தெம்வழி வம்மெனப்
புகன்றிடும் பொய்யரைப் பொருட்படுத் தாமலெம்
புகல்பராய்த் துறையரன் பொன்னடி என்பவர்
மிகமகிழ் வுறவினை விடும்வரும் செல்வமே.



பதம் பிரித்து:
இகழ் மொழி பல உரைத்து "ம் வழி வம்" ப்
புகன்றிடும் பொய்யரைப் பொருட்படுத்தாமல், "எம்
புகல் பராய்த்துறை ரன் பொன்னடி" என்பவர்
மிக மகிழ்வு உற, வினை விடும், வரும் செல்வமே.


வம் - வருவீராக;
புகன்றிடும் - சொல்லும்; (புகல்தல் - சொல்லுதல்);
ம் புகல் பராய்த்துறை அரன் பொன் அடி என்பவர் - தங்களுக்குத் திருப்பராய்த்துறை உறையும் சிவன் பொற்பாதமே அடைக்கலம் என்று இருக்கும் பக்தர்கள்;



11)
பூவினால் புகையினால் புகன்றிடும் செந்தமிழ்ப்
பாவினால் காவிரி பாய்கிற பராய்த்துறை
மேவினான் விரைமலர் அடிதொழும் பத்தரின்
நாவிலே உறைந்வன் நல்குவான் நன்மையே.



பூவினால் - பூவாலும்;
புகையினால் - தூபத்தாலும்; (புகை - நறும்புகை - தூபம்);
புகன்றிடும் செந்தமிழ்ப் பாவினால் - சொல்கின்ற தேவாரம், திருவாசகம் போன்ற செந்தமிழ்ப் பாடல்களாலும்;
காவிரி பாய்கிற பராய்த்துறை மேவினான் விரைமலர் அடிதொழும் பத்தரின் - காவிரி நதி பாயும் திருப்பராய்த்துறையில் உறையும் சிவனது வாச மலர் போன்ற திருவடியை வணங்கும் பக்தர்களது;
நாவிலே உறைந்து அவன் நல்குவான் நன்மையே - நாவில் ப்பெருமான் உறைந்து அவர்களுக்கு எல்லா நலங்களும் அருள்வான்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

திருப்பராய்த்துறை - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=117 )

No comments:

Post a Comment