Wednesday, July 1, 2015

01.06 - பொது - "அடைவார் வினை அறும்"


01.0
6 -
பொது - "அடைவார் வினை அறும்"



2007-11-15
பொது 
அடைவார் வினை அறும்
---------------------------------
(கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" - வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா")
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்")



1)
அடைவோம்அமு தென்றேஇமை யோர்பாற்கடல் அதனைக்
கடைநாளினில் எழுமாவிடம் தாங்காதவர் கதற
உடனேஅதை உண்டான்சிவன் அவன்சேவடி உகந்தே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
அடைவோம் அமுது என்றே இமையோர் பாற்கடல் அதனைக்
கடை நாளினில் எழு மா விடம் தாங்காது அவர் கதற,
உடனே அதை உண்டான் சிவன்; அவன் சேவடி உகந்தே
அடைவார் வினை அறுமே; இனி இலை ஓர் பிறப்பு அவர்க்கே.


இமையோர் - தேவர்கள்;
கடை நாள் - வினைத்தொகை - கடைந்த நாள்;
எழு மா விடம் - எழுந்த பெரும் விஷம்;
சேவடி - சிவந்த திருவடி;
உகத்தல் - விரும்புதல்;



2)
மழுமானொடு திரிசூலமும் கையேந்துபெம் மானே
புழுவாயொரு பிறப்பேவரும் என்றாலுமுன் பொற்றாள்
தொழுமாறருள் செய்வாயுனை இரந்தேனெனச் சொல்லி
அழுவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
"மழு மானொடு திரிசூலமும் கை ஏந்து பெம்மானே;
புழுவாய் ஒரு பிறப்பே வரும் என்றாலும் உன் பொன் தாள்
தொழுமா(று) அருள் செய்வாய்; உனை இரந்தேன்;" எனச் சொல்லி
அழுவார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்(பு) அவர்க்கே.


பொற்றாள் - பொன் தாள் - பொன் போன்ற திருவடி;
செய்வாய் - செய்வாயாக;
இரத்தல் - யாசித்தல்; வேண்டுதல்;



3)
இணைநாளினில் புரமூன்றையும் நொடிப்போதினில் எரித்தாய்
கணையாவொரு நகையேகொடு சிவனேஉனைக் காட்டில்
துணையாரினி உள்ளாரென அன்போடடி தொழுதே
அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
"இணை நாளினில் புரம் மூன்றையும் நொடிப்போதினில் எரித்தாய்
கணையா ஒரு நகையே கொடு; சிவனே, உனைக் காட்டில்
துணை யார் இனி உள்ளார்" என அன்போடு அடி தொழுதே
அணைவார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்பு அவர்க்கே.


இணை நாள் - வினைத்தொகை - இணையும் நாள் - ஒன்றாகச் சேரும் நாள்;
புரம் மூன்று = திரிபுரங்கள்;
நொடிப்போது - கணப்பொழுது;
கணையா = கணையாக; (கணை - அத்திரம்);
நகை - சிரிப்பு;
கொடு - கொண்டு - இடைக்குறையாக வந்தது.
உனைக் காட்டில் - உன்னைக் காட்டிலும் - உன்னை விட;
இனி - இப்பொழுது; இனிமேல்;
அணைதல் - சார்தல் (To approach, come near); பொருந்துதல்;



4)
வழக்காடிய ஆரூரரைத் தமிழ்பாடிட வைத்தாய்
கழற்சேவடி தொழுவானவர் தமைக்காத்தமுக் கண்ணா
குழைக்காதுடைக் கோனேஉமை கூறாவெனக் கும்பிட்(டு)
அழைப்பார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
"வழக்கு ஆடிய ஆரூரரைத் தமிழ் பாடிட வைத்தாய்;
கழல் சேவடி தொழு வானவர்தமைக் காத்த முக்கண்ணா;
குழைக் காது உடைக் கோனே; உமை கூறா" எனக் கும்பிட்டு
அழைப்பார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்பு அவர்க்கே.


வழக்கு ஆடிய ஆரூரரை.... - சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட வரலாறு;
கழல் சேவடி - வீரக் கழல் அணிந்த சிவந்த திருவடி;
தொழு வானவர் தமை - தொழுத தேவர்களை;
குழைக் காது உடைக் கோன் - குழை அணிந்த காதை உடைய அரசன்;
உமை கூறன் - உமை பங்கன்;
(அப்பர் தேவாரம் - 6.32.7 - "வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி ..... கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி ....")



5)
வளியாகியும் புனலாகியும் தீயாகியும் மண்ணும்
வெளியாகியும் இங்கேவரும் சிவனேகடல் விடத்தைத்
தெளிதேனென உண்டாயருள் செய்வாயெனச் செப்பி
அளிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
"வளி ஆகியும் புனல் ஆகியும் தீ ஆகியும் மண்ணும்
வெளி ஆகியும் இங்கே வரும் சிவனே; கடல் விடத்தைத்
தெளி தேன் என உண்டாய்; அருள் செய்வாய்" எனச் செப்பி
அளிவார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்(பு) அவர்க்கே.


வளி - காற்று;
புனல் - நீர்;
வெளி - ஆகாயம்;
தெளி தேன் - வினைத்தொகை - தெளிந்த தேன்;
உண்டாய் - உண்டவனே;
அளிதல் - உள்ளம் குழைதல்; அன்பாய் இருத்தல்;



6)
பணியேகயி றெனப்பூண்பவன் நதிபாய்சடைப் பரமன்
அணிவார்குழல் உமைகோன்கழல் அதுவேநினை வாகப்
பணிவார்நிதம் திருப்பேருரைத் தொளிநீற்றினைப் பாங்கா
அணிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
பணியே கயிறு எனப் பூண்பவன், நதி பாய் சடைப் பரமன்,
அணி வார் குழல் உமை கோன் கழல் அதுவே நினைவு ஆகப்
பணிவார்; நிதம் திருப் பேர் உரைத்து ஒளிநீற்றினைப் பாங்கா
அணிவார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்பு அவர்க்கே.


பணி - நாகம்;
பூணுதல் - அணிதல்;
நதி பாய் சடை - கங்கை பாயும் சடை
அணி வார் குழல் உமை - அழகிய நீண்ட கூந்தலை உடைய பார்வதி;
நிதம் - தினமும்;
திருப் பேர் - திருநாமம்;
ஒளி நீற்றினை - ஒளி பொருந்திய திருநீற்றை;
பாங்கா - பாங்காக; (பாங்கு - நன்மை; அழகு; தகுதி);



7)
இறையானுல கெல்லாம்படைத் தவன்மாவிடை யேறி
குறையேஇலன் ஒருகூறுமை உடையான்பெரும் கூத்தன்
மறைநான்கினை மொழிந்தான்திருப் புகழேநிதம் வாயால்
அறைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
இறையான்; உலகு எல்லாம் படைத்தவன்; மா விடை ஏறி;
குறையே இலன்; ஒரு கூறு உமை உடையான்; பெரும் கூத்தன்;
மறை நான்கினை மொழிந்தான் திருப் புகழே நிதம் வாயால்
அறைவார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்பு அவர்க்கே.


இறையான் - இறைவன்; சிவன்;
மா விடை ஏறி - பெரிய எருதின் மேல் ஏறி வருபவன்;
இலன் - இல்லன் - இல்லாதவன்;
கூறு - பங்கு;
கூத்தன் - திருக்கூத்து நிகழ்த்துபவன்;
மறை - வேதம்;
அறைதல் - சொல்லுதல்;


இலக்கணக் குறிப்பு: இறை - இறுத்தல்; எல்லாப் பொருளினும் தங்குதல். இது வகர இடைநிலை பெற்று இறைவன் என வரும், ('துறைவன், தலைவன்' முதலியனபோல). இடைநிலை பெறாதவழி இறையன், இறையான் என வரும்.



8)
வெகுவாய்வெகுண் டரன்மேவிடும் மலைவீசிட விரைந்தான்
மிகவேஅழ விரலூன்றிய சிவன்சேவடி விரும்பிப்
புகழாரமும் மலர்மாலையும் புனைந்தேநிதம் போற்றும்
அகத்தார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
வெகுவாய் வெகுண்டு அரன் மேவிடும் மலை வீசிட விரைந்தான்
மிகவே அழ, விரல் ஊன்றிய சிவன் சேவடி விரும்பிப்
புகழ் ஆரமும் மலர் மாலையும் புனைந்தே நிதம் போற்றும்
அகத்தார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்பு அவர்க்கே.


* இராவணன் கயிலையைப் பெயர்க்க முயன்று துன்புற்றதைச் சுட்டுகிறது.
வெகுண்டு - சினந்து; கோபித்து;
அரன் - ஹரன்;
மேவுதல் - உறைதல்;
ஆரம் - ஹாரம் - மாலை;
புனைதல் - தொடுத்தல்;
அகத்தார் - மனத்தை உடையவர்; (அகம் - மனம்;)



9)
கமழ்தாமரை உறைவான்அர வணையான்இவர் காணா
விமலாஎமைக் காவாய்புகல் நீயேஎன வேண்டி
இமவான்மகள் இடப்பாலுறை பெருமான்கழல் இணைக்கீழ்
அமர்வார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
"கமழ் தாமரை உறைவான் அரவு அணையான் இவர் காணா
விமலா; எமைக் காவாய்; புகல் நீயே" என வேண்டி,
இமவான் மகள் இடப் பால் உறை பெருமான் கழல் இணைக்கீழ்
அமர்வார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்பு அவர்க்கே.


* திருமாலும் பிரமனும் அடி முடி தேடியதைச் சுட்டுகிறது.
கமழ் தாமரை உறைவான் - மணம் கமழும் தாமரை மலரில் இருக்கும் பிரமன்;
அரவு அணையான் - பாம்புப் படுக்கையில் இருக்கும் திருமால்;
விமலன் - மலம் அற்றவன்;
காவாய் - காப்பாயாக;
புகல் - அடைக்கலம்;
இமவான் மகள் - பார்வதி;
இடப் பால் உறை - இடது பக்கம் உறைகின்;
அமர்தல் - இருத்தல்; விரும்புதல்;



10)
எமதேவழி லாவிடில் அடைவீர்நர கென்னும்
மமகாரருக் கெட்டாதவன் சடைமேற்பிறை மதியன்
உமைகோன்திரு வடிக்கேமலர் இட்டோதியுள் ளுருகி
அமைவோர்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
"எமதே வழி; லாவிடில் அடைவீர் நரகு" என்னும்
மமகாரருக்கு எட்டாதவன் சடைமேல் பிறை மதியன்;
உமை கோன் திருவடிக்கே மலர் இட்டு ஓதி உள் உருகி
அமைவோர் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்பு அவர்க்கே.


லாவிடில் - ஏற்றுக்கொள்ளாவிட்டால்; (ஏல்தல் - ஒப்புக்கொள்ளுதல் - To accept, to embrace, adopt):
மமகாரம் - மமதை; செருக்கு;
எட்டாதவன் - புலப்படாதவன்; அடைய முடியாதவன்;
பிறை மதியன் - பிறைச்சந்திரனைச் சூடும் சிவபெருமான்;
ஓதுதல் - பாடுதல்;
உள் உருகுதல் - மனம் உருகுதல்;
அமைதல் - நெருங்குதல்; தகுதி ஆதல்; அடங்குதல்; திருப்தி ஆதல்;



11)
எமைக்காவெனும் இமையோர்மகிழ் வுறமேருவில் ஏந்தி
இமைப்போதினில் எயில்மூன்றையும் பொடியாகிட எய்தான்
உமைக்கேயிடம் திருமேனியில் கொடுத்தாற்கிடம் உளத்தில்
அமைத்தார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே.



பதம் பிரித்து:
"எமைக் கா" எனும் இமையோர் மகிழ்வுற, மேரு வில் ஏந்தி
இமைப்போதினில் எயில் மூன்றையும் பொடி ஆகிட எய்தான்;
உமைக்கேயிடம் திருமேனியில் கொடுத்தாற்(கு) இடம் உளத்தில்
அமைத்தார் வினை அறுமே இனி இலை ஓர் பிறப்(பு) அவர்க்கே.


இமையோர் - தேவர்கள்;
இமைப் போது - இமைப்பொழுது - கண நேரம்;
எயில் மூன்று - முப்புரங்கள்;
எயில் மூன்றையும் பொடி ஆகிட எய்தான் - 'மூன்றையும்' என்றதில் '' சாரியை என்று கொள்ளலாம்; "எயில் மூன்றையும் எய்தான்; பொடி ஆகிட எய்தான்" என்றும் கொள்ளலாம்.
(அப்பர் தேவாரம் - 6.44.5: "நம்பனே நான்மறைக ளாயி னானே ..... கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த அம்பனே ...")
உமைக்கேயிடம் திருமேனியில் கொடுத்தான் - உமைக்கே இடம் திருமேனியில் கொடுத்தான்; "உமைக்கு ஏய் இடம் திருமேனியில் கொடுத்தான்" என்றும் பொருள்படும்; (ஏய்தல் - பொருந்துதல்; தகுதல்);
(சம்பந்தர் தேவாரம் - 2.76.4: "காய்ந்ததுவு மன்றுகாமனை ... ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே")
கொடுத்தாற்கு - கொடுத்தான்+கு - தந்தவனுக்கு;
அமைத்தல் - செய்துவைத்தல்; படைத்தல்;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment