Sunday, July 5, 2015

01.17 – கடவூர் - (திருக்கடையூர்)


01.17 –
கடவூர் - (திருக்கடையூர்)



2008-01-20
திருக்கடவூர் (திருக்கடையூர்)
---------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' வாய்பாடு - 1-3-5 சீர்களில் மோனை)
(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - “பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்”)
(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - “மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே”)



1)
மார்க்கண் டேயர் மலரால் செய்த வழிபாட் டில்மகிழ்ந்து
காக்க விரைந்து காலன் மாளக் காலால் உதைத்தவனே
ஆர்க்கும் கழலை அணிந்த கடவூர் அரனே அடியேனைத்
தாக்கும் வினைகள் தமைத்தீர்த் தருள்வாய் சரண்பு குந்தேனே.



பதம் பிரித்து:
மார்க்கண்டேயர் மலரால் செய்த வழிபாட்டில் மகிழ்ந்து,
காக்க விரைந்து, காலன் மாளக் காலால் உதைத்தவனே;
ஆர்க்கும் கழலை அணிந்த கடவூர் அரனே; அடியேனைத்
தாக்கும் வினைகள்தமைத் தீர்த்து அருள்வாய்; சரண்புகுந்தேனே.


ஆர்க்கும் - ஒலிக்கும்;
வினைகள்தமை - வினைகள்தம்மை - வினைகளை;
சரண்புகுதல் - அடைக்கலம் புகுதல் (to take refuge in);



2)
அடியை மலரால் அருச்சிக் கின்ற அன்பர் உயிர்கொள்ளக்
கொடிய காலன் வந்த போது கோபித் துதைத்தவனே
முடிவில் லாத முதல்வா பிறைசேர் முடியாய் கடவூரா
அடியேன் வினைகள் அனைத்தும் அழித்தென் அச்சம் தவிர்ப்பாயே.



பிறைசேர் முடியாய் - பிறைச்சந்திரனை முடிமேல் அணிந்தவனே;
விர்த்தல் - நீக்குதல்;



3)
மறைகள் பாடி வணங்கி நின்ற மார்க்கண் டேயரது
குறையைத் தீர்த்துக் கூற்றை உதைத்துக் கொன்ற பெருமானே
கறையை உடைய கண்டா இனிய கடவூர் உறைவோனே
இறைவா என்றன் இடர்செய் வினைகள் எல்லாம் தீர்ப்பாயே.



மறை - வேதம்;
கூற்று - எமன்;



4)
சேவை செய்து சிந்தை மகிழ்ந்த சிறுவன் உயிருக்குக்
காவ லாகிக் காலன் மாளக் காலால் உதைத்தவனே
பாவை பங்கா பரமா கடவூர்ப் பதியில் உறைவோனே
தேவ னேஎன் தீய வினைகள் தீர அருள்வாயே.



சிந்தை - மனம்;
சிறுவன் - இங்கே மார்க்கண்டேயர்;
பாவை பங்கன் - பார்வதியைத் திருமேனியில் ஒரு பங்காக உடையவன்;



5)
யாதும் நீஎன் றடியைத் தொழுத அன்பர் உயிருக்குத்
தீது செய்யச் சென்ற எமனைச் சீறி உதைத்தவனே
ஓது மறைகள் உரைக்கும் பொருளே ஒருவா கடவூரா
ஏது வேறிங் கெனக்குத் துணைஎன் இடர்தீர்த் தருள்வாயே.



பதம் பிரித்து:
"யாதும் நீ" என்று அடியைத் தொழுத அன்பர் உயிருக்குத்
தீது செய்யச் சென்ற எமனைச் சீறி உதைத்தவனே;
ஓது மறைகள் உரைக்கும் பொருளே; ஒருவா; கடவூரா;
ஏது வேறு இங்கு எனக்குத் துணை; என் இடர் தீர்த்து அருள்வாயே.


"யாதும் நீ" என்று - "சிவனே! எனக்கு எல்லாமும் நீயே" என்று
ஒருவா - ஒருவனே - ஒப்பற்றவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.41.1 - “கருவார் கச்சித் திருவேகம்பத் தொருவா ன்ன மருவா வினையே”);
ஏது - எது (what; which);



6)
வழிபட் டிருந்த மார்க்கண் டரிடம் வந்த எமன்உதைபட்(டு)
அழியக் காலை அன்று யர்த்தும் அரனே கடவூரா
விழிமூன் றுடைய விமலா வெள்ளை விடைமேல் வருவோனே
கழியா வினைகள் களைவாய் தொழுதேன் கடைக்கண் பார்த்தருளே.



பதம் பிரித்து:
வழிபட்டு இருந்த மார்க்கண்டரிடம் வந்த எமன் உதைபட்டு
அழியக் காலை அன்று உயர்த்தும் அரனே; கடவூரா;
விழி மூன்று உடைய விமலா; வெள்ளை விடைமேல் வருவோனே;
கழியா வினைகள் களைவாய்; தொழுதேன்; கடைக்கண் பார்த்தருளே.


விமலன் - மலம் அற்றவன்;
விடை - எருது; இடபம்;
கழிதல் - ஒழிதல்; முடிவடைதல்;



7)
மனத்தால் எண்ணி வணங்கு கின்ற மார்க்கண் டேயருயிர்
தனதே என்ற தரும ராசன் தரையில் விழவுதைத்தாய்
சினமா விடைமேல் செல்லும் அரனே சிவனே கடவூரா
எனது வினைகள் எல்லாம் தீர இனிதே அருள்வாயே.



தருமராசன் - எமன்;
சின மா விடை - சினக்கும் பெரிய எருது;



8)
மலர்கள் தூவி வந்திக் கின்ற மார்க்கண் டேயரையும்
கொலைசெய் யச்செல் கூற்று வனுக்குக் கூற்றன் ஆனவனே
மலையின் கீழே மதியில் அரக்கன் வாட நெரித்தவனே
கலக்கம் தீர்த்தென் வினைகள் களைவாய் கடவூர் உறைவோனே.



கூற்றுவன் / கூற்றன் - மன்;
மலை - இங்கே கயிலை மலை;
மதி இல் அரக்கன் - அறிவில்லாத இராவணன்;



9)
நாடி உன்னைச் சரண டைந்த நம்பி யிடம்காலன்
ஓடி வரநன் குதைத்துப் பத்தன் உயிரைக் காத்தவனே
தேடி அயன்மால் சென்றும் காணாத் தீயே கடவூரா
பாடித் தொழுமென் பழைய வினைகள் பற்றை அறுப்பாயே.



பதம் பிரித்து:
நாடி உன்னைச் சரண் அடைந்த நம்பியிடம் காலன்
ஓடி வர, நன்கு உதைத்துப் பத்தன் உயிரைக் காத்தவனே;
தேடி அயன் மால் சென்றும் காணாத் தீயே; கடவூரா;
பாடித் தொழும் என் பழைய வினைகள் பற்றை அறுப்பாயே.


நம்பி - ஆணில் சிறந்தவன் (the elite among men, used as a term of respect); - இங்கே மார்க்கண்டேயரைச் சுட்டியது.
அயன் - பிரமன்;
மால் - திருமால்; விஷ்ணு;
பற்று - பிடிக்கை (grasp, grip, seizure);



10)
திருநீ றணிந்து சேவிக் கின்ற சிறுவன் உயிர்கொள்ள
வருகா லனுயிர் மாள உதைத்த வரதா கடவூரா
பொருந்தா மொழிசொல் புறச்ச மயத்தின் பொய்யைப் பொருட்படுத்தார்க்(கு)
அருந்தேன் எனநின் றருளும் சிவனே அரனே காத்தருளே.



பதம் பிரித்து:
திருநீறு அணிந்து சேவிக்கின்ற சிறுவன் உயிர் கொள்ள
வரு காலன் உயிர் மாள உதைத்த வரதா; கடவூரா;
பொருந்தா மொழி சொல் புறச் சமயத்தின் பொய்யைப் பொருட்படுத்தார்க்கு
அரும் தேன் என நின்று அருளும் சிவனே; அரனே; காத்தருளே.


பொருந்தா - பொருந்தாத; தகாத;
மொழி சொல் புறச்சமயத்தின் - சொற்களைச் சொல்கிற புறச்சமயங்களின்;
அரும் தேன் என நின்று - அரிய தேனாக இருந்து இனிமை பயக்கிற;



11)
அஞ்செ ழுத்தை அன்போ டுரைத்த அடியார் உயிர்கொள்ள
வஞ்சக் காலன் வந்த போது வந்து காத்தவனே
நஞ்சை அமுதா நயந்துண் டவனே நம்பா கடவூரா
அஞ்சல் அளித்தென் அல்லல் தீர்ப்பாய் அன்பின் வடிவோனே.



பதம் பிரித்து:
அஞ்செழுத்தை அன்போடு உரைத்த அடியார் உயிர் கொள்ள
வஞ்சக் காலன் வந்த போது வந்து காத்தவனே;
நஞ்சை அமுதா நயந்து உண்டவனே; நம்பா; கடவூரா;
அஞ்சல் அளித்து என் அல்லல் தீர்ப்பாய் அன்பின் வடிவோனே.


அஞ்செழுத்து - நமச்சிவாய என்ற பஞ்சாட்சரம்;
அடியார் - இங்கே மார்க்கண்டேயர்;
வஞ்சம் - கொடுமை (cruelty, violence);
நஞ்சை அமுதா நயந்து உண்டவனே - விஷத்தை அமுதம்போல் விரும்பி உண்டவனே; (அமுதா - அமுதாக);
நம்பன் - சிவன்; ('நம்புதல் - விரும்புதல்' என்பதை ஒட்டி எழுந்த காரணப் பெயர்);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

கடவூர் - திருக்கடையூர் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=639 )

No comments:

Post a Comment