Wednesday, July 1, 2015

01.07 - பொது - "பத்தியால் வணங்கு நெஞ்சே"


01.0
7 -
பொது - "பத்தியால் வணங்கு நெஞ்சே"



2007-11-17
பொது
பத்தியால் வணங்கு நெஞ்சே
--------------------------------------
(வஞ்சித்துறை)
(திருவிருக்குக்குறள் அமைப்பில்)



1)
ஆலம் உண்டநம்
நீல கண்டனின்
காலை அண்டுவார்
சீலத் தொண்டரே.



ஆலம் - ஆலகால விஷம்;
கால் - திருவடி; (திருப்புகழ் - “பாதி மதிநதி....உனதிரு காலில் வழிபட அருள்வாயே....”);
அண்டுதல் - சேர்தல்; ஆசிரயித்தல்; அபயம் புகுதல்;
சீலம் - நல்லொழுக்கம் (Good conduct, character, virtue); நல்லுணர்வு (wisdom);



2)
மங்கை இடப்புறம்
பங்கில் உடையவன்
தங்கும் இடம்தொழ
மங்கும் மடமையே.



தங்கும் இடம் - உறைகின்ற தலம்;
மங்குதல் - கெடுதல்; அழிதல்;
மடமை - பேதைமை; அறியாமை;
(அப்பர் தேவாரம் - 6.70.9 - “புலிவலம் புத்தூர் … நெய்த் தானத்தோ டெத் தானத்தும் நிலவுபெருங் கோயில்பல கண்டால் ... கயிலாய நாதனையே காண லாமே” - எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால், ... கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம்);



3)
கடையில் பதிஅவன்
சடையில் மதியணி
விடையன் பதிதொழ
அடைவர் நிதியமே.



கடை இல் பதி - முடிவு இல்லாத தலைவன்;
மதி அணி விடையன் பதி - பிறைச்சந்திரனை அணிகின், இடப வாகனன் உறையும் தலம்;
நிதியம் - நிதி; (அருள் / பொருள்);



4)
நீற்றன் கொடிமிசை
ஏற்றன் முடிமிசை
ஆற்றன் அடிதொழல்
பாற்றும் மிடியதே



நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்;
கொடிமிசை ஆற்றன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;
முடிமிசை ஆற்றன் - கங்காதரன்;
அடிதொழல் - திருவடியைப் போற்றுவது;
பாற்றும் மிடியதே - வறுமையையும் துன்பத்தையும் தீர்க்கும்; (பாற்றுதல் - நீக்குதல்; மிடி - வறுமை; துன்பம்);



5)
அருவினை வேர்கெட
எருதினில் ஊர்கிற
ஒருவன தூர்களை
விருப்பொடு சேர்மினே.



அருவினை - கொடிய வினை;
வேர் கெடவேரோடு அழிய;
ஊர்தல் - செல்லுதல்;
ஒருவனது ஊர்களை - ஒப்பற்ற சிவபெருமான் உறையும் தலங்களை; (ஒருவன் - ஒப்பற்றவன்);
விருப்பொடு - அன்போடு;
சேர்மின் - சேருங்கள்; அடையுங்கள்; (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);



6)
திரிமுப் புரங்கள்
எரிவெஞ் சரத்தைத்
தரிசங் கரன்பேர்
பெரிய அரணே.



திரி முப்புரங்கள் - திரிந்த முப்புரங்களை;
எரி வெஞ் சரத்தை - எரித்த கொடிய அம்பை;
தரி சங்கரன் பேர் - ஏந்திய சங்கரனின் திருநாமம்; (தரித்தல் - தாங்குதல் To keep, support, carry);
பெரிய அரண் - சிறந்த கவசம்; சிறந்த காப்பு;



7)
வேதம் பாடுமோர்
நாதன் ஆடுமா
பாதம் நாடுவோர்
ஏதம் ஓடுமே.



வேதம் பாடும் ஓர் நாதன் - வேதங்கள் பாடுகின்ற ஒப்பற்ற தலைவன்;
ஆடு மா பாதம் - திருநடம் செய்யும் அழகிய திருவடி;
நாடுவோர் ஏதம் ஓடும் - விரும்புகின்றவர்களுடைய குற்றங்கள் நீங்கும்; (நாடுதல் - தேடுதல்; விரும்புதல்; ஆராய்தல்); (ஏதம் - குற்றம்);



8)
உயர்மலை இடந்தவன்
துயருற அடர்த்தவன்
பெயர்சொல இடர்தரும்
மயல்கெடும் திடமிதே.



உயர் மலை - கயிலைமலை;
இடந்தவன் - பெயர்த்தவன் - இராவணன்;
அடர்த்தல் - நசுக்குதல்;
இடர் - வருத்தம்; துன்பம்;
மயல் - மயக்கம் (Confusion; bewilderment; delusion);
திடம் - நிச்சயம்; உறுதி;



9)
அரிநிலம் தோண்மா
எரியென நீண்டதாள்
பரிவொடு வேண்டிநீர்
புரிவினை தாண்டுமே.



அரி - ஹரி - விஷ்ணு;
மா எரி - பெரிய சோதி;
தாள் - திருவடி;
பரிவு - அன்பு; பக்தி;
புரிவினை தாண்டும் - புரிந்த வினைகளைத் தாண்டுங்கள்; (வினைக்கடலைக் கடக்கலாம்);



10)
ஏற்றனைத் தொழாதவர்தம்
கூற்றினில் விழாதவர்கள்
சேற்றினின் றழார்அரன்சீர்
சாற்றினால் இழான்நமனே.



ஏற்றன் - ஏற்றின் மேல் வரும் சிவன்;
கூற்று - பேச்சு; சொல்/மொழி;
விழாதவர் - மயங்கி விழாதவர்;
சேற்றினின்றழார் - சேற்றில் நின்று அழார் - சேற்றில் நின்று அழமாட்டார்;
அரன் சீர் சாற்றினால் - சிவபெருமான் திருப்புகழை ஓதினால்; (சீர் - புகழ்; பெருமை; சாற்றுதல் - சொல்லுதல்; துதித்தல்);
இழான் நமன் - எமன் இழுக்கமாட்டான்;

11)
வித்தகன் அணங்கிணையும்
உத்தமன் கணங்கடொழும்
நித்தியன் இணையடியைப்
பத்தியால் வணங்குநெஞ்சே.



வித்தகன் - ஞான சொரூபன்; திறல் உடையவன்;
அணங்கு இணையும் உத்தமன் - பார்வதி இணைந்து இருக்கும் மேலானவன்/சிறந்தவன்;
கணங்கள் தொழும் நித்தியன் - பல பூத கணங்கள் சூழ்ந்து தொழுகிற அழியா மெய்ப்பொருள்;
இணையடியைப் பத்தியால் வணங்கு நெஞ்சே - மனமே, அவனது திருவடிகளைப் பக்தியோடு தொழுவாயாக.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1. வஞ்சித்துறை - நான்கு குறளடிகள் கொண்ட பாடல். (பாடலில் 4 அடிகள். அடிக்கு 2 சீர்கள்).
2. இப்பதிகத்தில் முதல் சீர்களுக்கு இடையே ஒரு எதுகையும், இரண்டாம் சீர்களுக்கு இடையே இன்னொரு எதுகையும் பயின்று வருமாறு அமைந்தது.

3. ஒவ்வொரு பாடலிலும் கட்டளை அடிகள். (4 அடிகளிலும் ஒரே எழுத்து எண்ணிக்கை. மெய்யெழுத்துகள் இக்கணக்கில் அடங்கா).

No comments:

Post a Comment