Thursday, July 2, 2015

01.12 – மயிலாப்பூர்


01.
12
மயிலாப்பூர்



2007-11-27
மயிலாப்பூர்
(மயிலையை அடைமட மனமே)
------------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" - என்ற சந்தம்)
பாடலின் கடைசிச் சீர் மட்டும் தனனா என்ற சந்தம்.
(சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை கொளமிகு கரியது")



1)
கயிலையில் உறைகிற கருணையின் உருவனை
எயிலெரி கொளநகும் இறைவனை அழகிய
மயிலுரு வினிலுமை வழிபடு தலமெனும்
உயர்வுடை மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
கயிலையில் உறைகிற கருணையின் உருவனை,
எயில் எரி கொள நகும் இறைவனை, அழகிய
மயில் உருவினில் உமை வழிபடு தலம் எனும்
உயர்வு உடை மயிலையை அடை மட மனமே.


கயிலையில் உறைகிற கருணையின் உருவனை - கயிலையில் உறையும் கருணாமூர்த்தியான சிவனை;
எயில் எரி கொள நகும் இறைவனை - முப்புரங்கள் தீப்பற்றச் சிரிக்கும் இறைவனை;
அழகிய மயில் உருவினில் உமை வழிபடு தலம் எனும் உயர்வு உடை மயிலையை - அழகிய மயிலாக உருவெடுத்துப் பார்வதி வழிபட்ட தலம் என்ற சிறப்பு உடைய மயிலாப்பூரை;
அடை மட மனமே - பேதை மனமே! அடைவாயாக.



2)
படவர வணிகிற பரமன தடியவர்
குடநிறை பொடியொரு குமரியின் உடலுயிர்
அடைகிற படியவன் அடிதொழ அருளிய
விடையவன் மயிலையை விழைமட மனமே.



பதம் பிரித்து:
பட அரவு அணிகிற பரமனது அடியவர்,
குடம் நிறை பொடி ஒரு குமரியின் உடல் உயிர்
அடைகிறபடி அவன் அடி தொழ, அருளிய
விடையவன் மயிலையை விழை மட மனமே.


பட அரவு அணிகிற பரமனது அடியவர் - படத்தை உடைய பாம்பை அணியும் சிவபெருமானின் அடியவர் ஆன திருஞான சம்பந்தர்;
குடம் நிறை பொடி ஒரு குமரியின் உடல் உயிர் அடைகிறபடி - குடத்தில் இருந்த பூம்பாவையின் சாம்பல் அழகிய பெண்ணாக உடலும் உயிரும் பெறும்படி;
அவன் அடி தொழ, அருளிய விடையவன் - சிவனது திருவடியை வணங்க, அருள்செய்த இடப வாகனன்;
மயிலையை விழை மட மனமே - பேதை மனமே! அச்சிவபெருமான் உறையும் தலமான மயிலாப்பூரை விரும்புவாயாக!


இலக்கணக் குறிப்புகள்:
1. நிறைபொடி - வினைத்தொகை - நிறைந்த பொடி;
2. உடல் உயிர் - உடலும் உயிரும் - உம்மைத் தொகை;
3. குடம் + நிறை = குடநிறை - தனிக்குறிலைச் சாராத 'ம்' என்று முடியும் சொல்லின் பின் மெல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தால், முதல் சொல்லின் ஈற்றில் உள்ள 'ம்' கெடும்.



3)
பிறைமதி அரவொடு பெருநதி அணிகிற
இறையவன் எழிலுமை இடமிணை கிறசிவன்
மறைபல புகழ்கிற மணிமிட றுடையவன்
உறைகிற மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
பிறை மதி அரவொடு பெரு நதி அணிகிற
இறையவன், எழில் உமை இடம் இணைகிற சிவன்,
மறை பல புகழ்கிற மணி மிடறு உடையவன்
உறைகிற மயிலையை அடை மட மனமே.


அரவு - பாம்பு;
பெரு நதி - கங்கை;
மறை - வேதம்;
மணி மிடறு - நீல மணி திகழும் கழுத்து - நீலகண்டன்;



4)
இலையெனு நிலைகெட இடர்தரும் இருவினை
விலகிட விடமணி மிடறுடை யவனணி
மலைமகள் ஒருபுற மகிழ்பவன் உறைகிற
அலைமலி மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
இலை எனும் நிலை கெட, இடர் தரும் இரு வினை
விலகிட, விட மணி மிடறு உடையவன், அணி
மலைமகள் ஒரு புறம் மகிழ்பவன் உறைகிற
அலை மலி மயிலையை அடை மட மனமே.


இலை எனும் நிலை கெட - இல்லை என்ற நிலைமை அழிய;
இடர் தரும் இரு வினை விலகிட - துன்பம் தரும் கொடிய வினை நீங்க;
விட மணி மிடறு உடையவன் - ஆலகால விஷம் மணி போல் உள்ள கழுத்தை உடையவன்;
அணி மலைமகள் ஒரு புறம் மகிழ்பவன் - அழகிய பார்வதியை ஒரு பக்கம் கொண்டவன்;
அலை மலி மயிலையை - (கடல்) அலைகள் மிகுந்த மயிலாப்பூரை;
அடை மட மனமே - பேதை மனமே! அடைவாயாக.



5)
பெருவிட மணிதிகழ் மிடறொரு பிறைமதி
அருகர வொடுநதி அலைமிகு சடையுடை
எருதமர் கிறஎம திறையவன் உறைகிற
திருநகர் மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
பெரு விட மணி திகழ் மிடறு, ஒரு பிறை மதி
அருகு அரவொடு நதி அலை மிகு சடை உடை,
எருது அமர்கிற எமது இறையவன் உறைகிற
திரு நகர் மயிலையை அடைமட மனமே.


பெரு விட மணி திகழ் மிடறு - பெரிய ஆலகால விஷம் நீல மணியாகத் திகழ்கிற கழுத்து;
ஒரு பிறை மதி அருகு அரவொடு நதி அலை மிகு சடை உடை - பிறைச்சந்திரனின் அருகில் பாம்பும் கங்கையின் அலையும் இருக்கும் சடையை உடைய;
எருது அமர்கிற எமது இறையவன் உறைகிற - இடபத்தின் மேல் அமரும் நம் இறைவன் எழுந்தருளியிருக்கும்; (இடபத்தை வாகனமாக விரும்புகிற நம் இறைவன் எழுந்தருளியிருக்கும்);
திரு நகர் மயிலையை அடை மட மனமே - வளம் உடைய பதியான மயிலப்பூரைப், பேதை மனமே, அடைவாயாக!



6)
திரைஒலி மிகுகிற திருநகர் அதில்முனம்
அரவுயிர் கொளுமொரு அரிவையின் பொடியினை
அரனடி யவர்தொழ உயிர்பெற அருள்கிற
வரதன மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
திரை ஒலி மிகுகிற திரு நகர் அதில் முனம்
அரவு உயிர் கொளும் ஒரு அரிவையின் பொடியினை,
அரன் அடியவர் தொழ, உயிர் பெற அருள்கிற
வரதன மயிலையை அடை மட மனமே.


திரை ஒலி மிகுகிற திரு நகர் அதில் - கடல்/அலை ஒலிக்கின்ற, செல்வம்/தெய்வத்தன்மை உடைய நகரத்தில்;
முனம் அரவு உயிர் கொளும் ஒரு அரிவையின் பொடியினை - முன்பு பாம்பு தீண்டி உயிர் கொண்ட ஒரு பெண்ணின் சாம்பலை;
அரன் அடியவர் தொழ, உயிர் பெற அருள்கிற வரதன - சிவபக்தரான திருஞானசம்பந்தர் வேண்ட, உயிர் பெற்று எழ அருள்செய்த, வரங்கள் அளிக்கும் சிவனுடைய;
மயிலையை அடை மட மனமே - மயிலாப்பூரை அடைவாயாக, பேதை மனமே!


இலக்கணக் குறிப்பு:
வரதன் - வரம் அளிப்பவன்; வரதன - வரதன் + அ – வரதனுடைய;
'' - ஆறாம் வேற்றுமை உருபு; ('அது', ''உடைய' என்னும் பொருள் தரும்); '' என்ற உருபு பொதுவாகப் பன்மையில் வரினும் இங்கே ஒருமைக்கும் வந்தது என்று கொள்ளலாம். '' – சாரியை என்றும் கொள்ளலாம்.





7)
புரமெரி கொளநகை புரிபவன் அயனது
சிரமொரு கலமென உடையவன் எரியிடை
இரவினில் நடமிடும் எமதிறை வரமருள்
அரனகர் மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
புரம் எரி கொள நகை புரிபவன்; அயனது
சிரம் ஒரு கலம் என உடையவன்; எரி இடை
இரவினில் நடம் இடும் எமது இறை; வரம் அருள்
அரன் நகர் மயிலையை அடை மட மனமே.


மட மனமே - பேதை நெஞ்சே!
புரம் எரி கொள நகை புரிபவன் - முப்புரங்கள் தீப்பற்றிக்கொள்ளச் சிரிப்பவன்;
அயனது சிரம் ஒரு கலம் என உடையவன் - பிரமனுடைய மண்டை ஓட்டை ஒரு பாத்திரம் என ஏந்துபவன்;
எரி இடை இரவினில் நடம் இடும் எமது இறை - சுடுகாட்டில் தீயின் நடுவே இரவில் திருநடம் செய்யும் எம் இறைவன்;
வரம் அருள் அரன் நகர் மயிலையை அடை - வரங்கள் அருளும் ஹரன் உறையும் மயிலாப்பூரை அடைவாயாக.



8)
வலியொடு தசமுகன் அழவிரல் இடுமிறை
புலியதன் உரியொடு பொறியர வணிபவன்
ஒலிபுனல் உளசடை உடையரன் உறையலை
மலிகிற மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
வலியொடு தசமுகன் அழ விரல் இடும் இறை;
புலி அதன் உரியொடு பொறி அர(வு) அணிபவன்;
ஒலி புனல் உள சடை உடை அரன் உறை, அலை
மலிகிற மயிலையை அடை மட மனமே.


வலியொடு தசமுகன் அழ விரல் இடும் இறை - (கயிலை மலையைப் பெயர்க்க முயன்றபொழுது) வலி மிகுந்து இராவணன் அழும்படி கால்விரலை ஊன்றிய இறைவன்;
புலி அதன் உரியொடு பொறி அரவு அணிபவன் - புலியின் தோலும் புள்ளிகளை உடைய படம் உடைய பாம்பும் அணிபவன்; (பொறியரவு - படப்பொறிகளோடு கூடிய பாம்பு);
ஒலி புனல் உள சடை உடை அரன் உறை - ஒலிக்கும் கங்கை உள்ள சடையை உடைய ஹரன் உறைகின்;
அலை மலிகிற மயிலையை அடை மட மனமே - அலை மிகுந்த மயிலாப்பூரைப், பேதை மனமே, அடைவாயாக.

9)
உளமுரு கிடுபவர் உறுதுயர் அடியொடு
களைபவன் அயனரி கழலிணை அரிதெனும்
அளவில தெனவுயர் அழலுரு உடையவன்
வளநகர் மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
உளம் உருகிடுபவர் உறு துயர் அடியொடு
களைபவன்; அயன் அரி கழல் இணை அரிது எனும்,
அளவு இலது என உயர் அழல் உரு உடையவன்
வள நகர் மயிலையை அடை மட மனமே.


உளம் உருகிடுபவர் உறு துயர் அடியொடு களைபவன் - உள்ளம் உருகி வழிபடுபவர் படும் துயரை முற்றிலும் நீக்குபவன்;
அயன் அரி கழல் இணை அரிது எனும், அளவு இலது என உயர் அழல் உரு உடையவன் - பிரமனும் விஷ்ணுவும் (முடியையும்) இரு திருவடிகளையும் தேடி அடைய இயலாது என்னும், அளவற்றது என்ற உயர்ந்த சோதி உரு உடையவன்;
வள நகர் - வளம் உள்ள நகர்;



10)
அவமொழி களையுரை அயல்வழி யினரொரு
தவவழி அறிகிலர் தலையினில் ஒருநதி
தவழ்கிற இறைபடர் சடையினில் நிலவணி
சிவனுறை மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
அவ மொழிகளை உரை அயல் வழியினர் ஒரு
தவ வழி அறிகிலர்; தலையினில் ஒரு நதி
தவழ்கிற இறை, படர் சடையினில் நிலவு அணி
சிவன் உறை மயிலையை அடை மட மனமே.


அவம் - பயனின்மை (vanity, nothingness, uselessness); கேடு (evil);
மொழி - சொல்;
அயல் - புறம்பு (being foreign or alien);
வழி - நெறி; மார்க்கம்;
ஒரு தவ வழி - ஒப்பற்ற தவம் அளிக்கும் மார்க்கம்;
தவழ்தல் - ஊர்தல்; தத்துதல் (to leap and flow, as waves);
படர் சடை - படர்கிற சடை;



11)
பணிகிற இமையவர் படுதுயர் களைகிற
மணிமிட றுடையவன் மலரொடு மதியினை
அணிபவன் இடமயில் அனவுமை யுடனுறை
அணிநகர் மயிலையை அடைமட மனமே.



பதம் பிரித்து:
பணிகிற இமையவர் படு துயர் களைகிற
மணி மிடறு உடையவன்; மலரொடு மதியினை
அணிபவன்; இடம் மயில் அன உமையுடன் உறை
அணி நகர் மயிலையை அடை மட மனமே.


இமையவர் - தேவர்கள்;
படு துயர் - படுகிற துயரம்; பெரும் துயரம்;
மணி மிடறு உடையவன் - நீலகண்டன்;
இடம் மயில் அன உமையுடன் - இடப்புறம் மயில் போன்ற பார்வதியைக் கொண்டவன்;
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.87.2 - "இடமயில் அன்னசாயல் மடமங்கை..." - இடப்பாகத்தே மயிலன்ன சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு);
உறை அணி நகர் - உறைகிற அழகிய நகர்; (உறைதல் - இருத்தல்; வசித்தல் (to reside, dwell); )



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
மயிலாப்பூர் - கபாலீஸ்வரர் கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=628 )




திருஞானசம்பந்தர் 'மட்டிட்ட புன்னை' என்று தொடங்கும் பதிகம் பாடி எலும்பைப் பெண்ணாக்கிப் பூம்பாவையை உயிர்ப்பித்த வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க. சம்பந்தர் வரலாற்றுச் சுருக்கம் இங்கே: http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=1

No comments:

Post a Comment