Monday, July 6, 2015

01.20 – கடவூர் - (திருக்கடையூர்)


01.20 –
கடவூர் - (திருக்கடையூர்)



2008-02-03
திருக்கடவூர் 
---------------------
(வஞ்சித்துறை - திருவிருக்குக்குறள் அமைப்பு - 4 அடிகள். அடிக்கு 2 சீர்கள்;)
(சம்பந்தர் தேவாரம் - திருவிருக்குக்குறள் - 1.90.1 - "அரனை யுள்குவீர் பிரம னூருளெம்")



1) -- 'புளிமா புளிமா' என்ற வாய்பாடு --
விடமுண் இறைவன்
சுடலைப் பொடியன்
கடவூர்த் தலத்தை
அடைநீ மனமே.



விடம் உண் இறைவன் - ஆலகால விடத்தை உண்ட இறைவன் - சிவன்;
சுடலைப் பொடியன் கடவூர்த் தலத்தை - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன் உறையும் திருக்கடவூர் என்ற தலத்தை;
அடை நீ மனமே - மனமே! நீ அடைவாயாக.


2) -- 'புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு --
இறைவா அருள்என்று
கறையார் கழுத்தீசன்
உறையும் கடவூர்சேர்
மறையும் பயம்தானே.



இறைவா அருள் என்று - "இறைவனே! அருள்புரிவாயாக" என்று;
கறை ஆர் கழுத்து ஈசன் உறையும் கடவூர் சேர் - கறை பொருந்திய கழுத்தை உடைய ஈசன் (நீலகண்டன்) எழுந்தருளும் திருக்கடவூரை அடைவாயாக;
மறையும் பயம் தானே - (அப்புறம் உன்னுடைய) அச்சம் விலகிவிடும்.
('மனமே' என்ற விளி தொக்கு நிற்கிறது.)



3) -- 'கூவிளம் கருவிளங்காய்' என்ற வாய்பாடு --
வேலனை அளித்தவனைக்,
காலனை உதைத்துருட்டிப்
பாலனுக் கருள்புரிந்த
சூலனை நினைமனமே.



வேலன் - முருகன்;
காலன் - எமன்;
உதைத்து உருட்டி - காலால் உதைத்து உருட்டி;
பாலன் - சிறுவன் - மார்க்கண்டேயன்;
சூலன் - சூலபாணி - சிவன்;



4) -- 'தேமா கூவிளங்காய்' என்ற வாய்பாடு --
நேசப் பத்தரின்மேல்
பாசம் வீசெமனை
நாசம் ஆக்கியஅவ்
ஈசன் தாள்சரணே.



நேசம் - அன்பு; பக்தி;
பாசம் வீசு எமனை - காலபாசத்தை வீசிய கூற்றுவனை;
நாசம் ஆக்கிய – உதைத்து அழித்த;
சரண் - அடைக்கலம்;



5) -- 'தேமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு --
பத்தர் உயிர்காத்த
அத்தன் திருத்தாளை
நித்தம் நினைப்போர்க்குச்
சித்தம் தெளிவாமே.



அத்தன் - தந்தை;
நித்தம் - அனவரதமும்; எப்பொழுதும்;
சித்தம் - மனம்;



6) -- 'கருவிளம் கூவிளங்காய்' என்ற வாய்பாடு --
முடிந்ததென்(று) அன்பருயிர்
பிடித்திட வந்தவனை
மடியஉ தைத்தசிவன்
அடிதொழு வாய்மனமே.



முடிந்தது என்று - ஆயுள் ஆயிற்று என்று;
அன்பர் உயிர் பிடித்திட வந்தவனை மடிய உதைத்த சிவன் - மார்க்கண்டேயரது உயிரைக் கவர வந்த எமனை மாண்டு விழும்படி உதைத்த சிவபெருமானின்;
அடிதொழுவாய் மனமே - திருவடியை போற்றுவாய் மனமே;



7) -- 'தேமா தேமாங்காய்' என்ற வாய்பாடு --
ஏற்றின் மேலேறும்
நீற்றன் பேர்சொன்னால்
கூற்றன் அண்டாது
போற்றிச் செல்வானே.



ஏறு - எருது;
நீறு - திருநீறு; சாம்பல்;
நீற்றன் - திருநீறு அணிந்தவன்;
கூற்றன் - எமன்;
அண்டுதல் - கிட்டுதல்; நெருங்குதல்; (to approach);
போற்றுதல் - பேணுதல்; வணங்குதல்;


(திருநாவுக்கரசர் தேவாரம் - காலபாசத் திருக்குறுந்தொகை:
சிவனடியார் பக்கம் செல்லாதீர் என்று இயமன் தூதுவருக்கு ஆணையிட்டருளுவது இத்திருப்பதிகம்.
திருமுறை 5.92.7
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசன் அடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடைபுகாது நீர் போற்றியே போமினே.)
)



8) -- 'கருவிளம் கருவிளம்' என்ற வாய்பாடு --
செருக்கிய அரக்கனை
நெருக்கிய அரனடி
சுருக்கொடு வரும்எமன்
தரும்இடர் தடுக்குமே.



செருக்குதல் - அகந்தைகொள்ளுதல் (to be proud, vain, self-conceited);
அரக்கன் - இராவணன்;
நெருக்குதல் - நசுக்குதல் (to squeeze, bruise, mash);
சுருக்கு - கண்ணி (noose, snare, trap); கட்டு (tying);



9) -- 'கருவிளம் புளிமாங்காய்' என்ற வாய்பாடு --
இருவரன்(று) அறியாத
நெருப்பென உயர்ந்தான்தாள்
விருப்பொடு நினைநெஞ்சே
வருவனோ எமன்தானே.



இருவர் - திருமால், பிரமன்;
வருவனோ - எதிர்மறை ஓகாரம் (negation) – வரமாட்டான்;



10) -- 'கருவிளங்காய் தேமா' என்ற வாய்பாடு --
பரசமயத் தோர்கள்
அரனையறி யாரே
விரையுமெம னாரை
விரட்டுமஞ்செ ழுத்தே.



பரசமயத்தோர் - புறச்சமயத்தினர்;
எமனார் - எமன்;
அஞ்செழுத்து - 'நமச்சிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரம்;



11) -- 'புளிமாங்காய் புளிமாங்காய்' என்ற வாய்பாடு --
படையாக எழுத்தஞ்சை
உடையார்க்குத் துணைஆவான்
விடைமேலே வருவான்ஊர்
கடவூரை அடைநெஞ்சே.



நெஞ்சே - மனமே!
படையாக எழுத்து அஞ்சை உடையார்க்குத் துணை ஆவான் - (தம்மைப் பாதுகாக்கும்) ஆயுதமாக 'நமச்சிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உடையவர்களுக்குத் துணையாக இருப்பவனும்;
விடை மேலே வருவான் ஊர் - எருதின் மேல் வருபவனும் ஆன சிவன் உறையும் ஊர் ஆன;
கடவூரை அடை - திருக்கடவூரை அடைவாயாக.


(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 4.81.8
"படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சு என் நாவில் கொண்டேன்....."
)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

கடவூர் - திருக்கடையூர் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=639 )

No comments:

Post a Comment