Monday, July 6, 2015

01.22 – நாகேச்சரம் - (திருநாகேஸ்வரம்)


01.22 –
நாகேச்ரம் - (திருநாகேஸ்வரம்)



2008-03-01
திருநாகேச்ரம் (திருநாகேஸ்வரம்)
--------------------------------
(கலித்துறை - விளம் மா விளம் மா புளிமாங்காய் / மா மா மா மா புளிமாங்காய் - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடை யானைத் தீயதி லானை நரைவெள்ளே(று)")



1)
அரையினில் பாம்பை அணிகிற ஐயன் அவன்தாளை
விரைமலர் கொண்டு பணிகிற பத்தர் வினைபோக்கிக்
கரையினில் சேர்த்துக் கருணைசெய் ஈசன் கடிதேகும்
நரைவிடை ஏறும் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
அரையினில் பாம்பை அணிகிற ஐயன், அவன் தாளை
விரை மலர் கொண்டு பணிகிற பத்தர் வினை போக்கிக்
கரையினில் சேர்த்துக் கருணை செய் ஈசன், கடிது ஏகும்
நரை விடை ஏறும் நலம் தரும் நாகேச்சரத்தானே.


அரை - இடை;
ஐயன் - தலைவன்;
தாள் - திருவடி;
விரை - வாசனை; மணம்;
கடிது - விரைந்து; விரைவாய்; (speedily, quickly);
ஏகுதல் - போதல் (to go); நடத்தல் (to walk);
நரை - வெண்மை;
விடை - இடபம்; எருது;
நாகேச்சுரத்தான் - திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்;



2)
இமையவர்க் காக எரிவிடம் தன்னை எடுத்துண்டான்
கமழ்மலர் தூவிக் கரங்களைக் கூப்பிக் கழல்போற்றும்
தமதடி யார்க்காச் சடிதிவந் தோங்கித் தனதாளால்
நமனையு தைத்தான் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
இமையவர்க்காக எரி விடம்தன்னை எடுத்து உண்டான்;
கமழ் மலர் தூவிக் கரங்களைக் கூப்பிக் கழல் போற்றும்
தமது அடியார்க்காச் சடிதி வந்து ஓங்கித் தன தாளால்
நமனை உதைத்தான், நலம் தரும் நாகேச்சரத்தானே.



இமையவர் - தேவர்கள்;
எரி விடம்தன்னை - வினைத்தொகை - எரிக்கும் விஷத்தை;
கமழ் மலர் - வினைத்தொகை - மணம் கமழ்கிற மலர்;
கழல் - திருவடி;
சடிதி - விரைவாக (quickly, instantly, at once);
தன தாளால் - தனது திருவடியால்;
நமன் - எமன்;


இலக்கணக் குறிப்புகள்:
1. தமது - 'தனது' என்ற ஒருமை, எதுகைக்காகத் 'தமது' என்று பன்மையாக வந்தது. ஒருமை பன்மை மயக்கம்.
2. '' - ஆறாம் வேற்றுமை உருபு;



3)
பகையுடன் எங்கும் பறந்துசென் றின்னல் பலசெய்தும்
அகமதில் அண்ணல் அடிமற வாத அவர்கோட்டை
மிகவெரி கொண்டும் விரும்பசு ரர்வாழ் விதமாக
நகைசெயும் ஈசன் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
பகையுடன் எங்கும் பறந்து சென்று இன்னல் பல செய்தும்,
அகம் அதில் அண்ணல் அடி மறவாத அவர் கோட்டை
மிக எரி கொண்டும், விரும்பு அசுரர் வாழ் விதமாக
நகை செயும் ஈசன், நலம் தரும் நாகேச்சரத்தானே.


அகம் - உள்ளம்; மனம்;
அண்ணல் - சிவபெருமான்;
எரி - தீ;
விரும்பு அசுரர் - வினைத்தொகை - பக்தியோடிருந்த அசுரர்கள்;
வாழ் விதமாக - உயிரோடு இருக்கும்படி;
நகை செய்தல் - சிரித்தல்;


(முப்புரம் எரிந்து அழிந்தாலும், வற்றில் இருந்த சிவபக்தி மிக்க மூன்று அசுரர்கள் அழியாது இருக்க இறைவன் அருள்செய்தான்.
சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 1.69.1 -
"பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார்......") ;



4)
ஆதி சேடன் அன்று போற்ற அருள்செய்தான்
பாதி உடலைப் பார்வ திக்குப் பரிந்தீந்தான்
ஓதித் தொழுவோர் உள்ளத் துள்ளே உறைகின்ற
நாதி ஆவான் நலம்செய் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
ஆதிசேடன் அன்று போற்ற அருள்செய்தான்;
பாதி உடலைப் பார்வதிக்குப் பரிந்து ஈந்தான்;
ஓதித் தொழுவோர் உள்ளத்து உள்ளே உறைகின்ற
நாதி ஆவான், நலம் செய் நாகேச்சரத்தானே.


ஆதிசேடன் - ஆதிசேஷன்; (திருநாகேஸ்வரம் - ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் என்ற நாகங்கள் வழிபட்ட தலம்);
பரிதல் - அன்பு காட்டுதல்; காதல்கொள்ளுதல் (to be affectionate); இரங்குதல் (to sympathise);
ஈதல் - அளித்தல்;
நாதி - சுற்றம்; ஞாதி உறவினன் (relation); காப்பாற்றுவோன் (protector);


குறிப்பு: அப்பர் தேவாரம் - திருமுறை 5.52.4 -
"சந்திரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழிபாடுகள் செய்தபின்
ஐந்தலை அரவின் பணிகொண்டருள்
மைந்தர் போல் மணி நாகேச்சரவரே"


பெரிய புராணம்: திருஞான சம்பந்தர் புராணம் - (பாடல் 2309, 2310)
"திரு நாகேச்சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைக்
கரு நாகத்து உரி புனைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சி
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து
பெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார்


மா நாகம் அர்ச்சித்த மலர்க் கமலத் தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி....."

5)
சுற்றிடும் பாம்பும் சுடர்மதித் துண்டும் துதைநீறும்
தெற்றிடும் ஆறும் திகழ்கிற ஈசன் திருத்தாளைப்
பற்றிடும் அன்பர் பழவினை தீர்த்துப் பரிவோடு
நற்றுணை ஆவான் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
சுற்றிடும் பாம்பும் சுடர் மதித் துண்டும் துதை நீறும்
தெற்றிடும் ஆறும் திகழ்கிற ஈசன், திருத்தாளைப்
பற்றிடும் அன்பர் பழ வினை தீர்த்துப் பரிவோடு
நல் துணை ஆவான், நலம் தரும் நாகேச்சரத்தானே.


சுடர் மதித் துண்டு - வினைத்தொகை - ஒளிவிடும் பிறைச்சந்திரன்;
துதைதல் - படிதல் (to be steeped); மிகுதல்; செறிதல்;
துதைநீறு - வினைத்தொகை - துதைந்து இருக்கும் திருநீறு;
தெற்றுதல் - மோதுதல்; (இங்கே, 'அலை மோதுதல்');
பழவினை - முன் செய்த பழைய வினைகள்;



6)
கேளும் எமனார் கிட்ட வந்து கெடுமுன்னே
ஆளும் கழல்கள் அவற்றைப் போற்றி அருச்சித்தால்
கோளும் வினையும் கொடுக்கும் இடர்போம் குறைவின்றி
நாளும் ஈவான் நலம்செய் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
கேளும்; எமனார் கிட்ட வந்து கெடும் முன்னே,
ஆளும் கழல்கள் அவற்றைப் போற்றி அருச்சித்தால்,
கோளும் வினையும் கொடுக்கும் இடர் போம்; குறைவு இன்றி
நாளும் ஈவான், நலம் செய் நாகேச்சரத்தானே.


உரை:
கேளும் - கேளுங்கள்;
எமனார் கிட்ட வந்து கெடும் முன்னே - காலன் உம்மிடம் வந்து, உயிர் அழிவதற்கு முன்னரே;
ஆளும் கழல்கள் அவற்றைப் போற்றி அருச்சித்தால் - நம்மை ஆள்கின்ற சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி அருச்சனை செய்தால்;
கோளும் வினையும் கொடுக்கும் இடர் போம் - நவக்கிரகங்களாலும், பழைய வினைகளாலும் விளையும் துன்பங்கள் நீங்கும்;
குறைவு இன்றி நாளும் ஈவான், நலம் செய் நாகேச்சரத்தானே - திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள நன்மை செய்யும் சிவன், நீண்ட ஆயுளும் அளிப்பான்.


(குறிப்பு: திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.119.6
காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாமனும் பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
கோளுநாளுந் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே.


தருமை ஆதீன உரை: கரிய நிறமுடைய காலன், அந்தகன், கருடன், தள்ளி நின்று அம்பு எய்த மன்மதன் ஆகியோரை இறைவன் அழித்ததை நினைந்து நாள்தோறும் சிவபெருமான் உறையும் திருநாகேச்சுரத்தை அடைந்து வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீயன எனினும் நல்லன ஆகும். அதனை மனத்தில் கொள்ளுங்கள்.)



7)
ஆவினில் அஞ்சும் ஆடிடும் அரனே அருளென்று
தீவினை எல்லாம் தீர்ந்திட வேண்டிச் சிவன்சீர்சொல்
பாவினைப் பாடிப் பத்தியோ டடியைப் பணிவார்தம்
நாவினில் இருப்பான் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
"ஆவினில் அஞ்சும் ஆடிடும் அரனே அருள்" என்று
தீவினை எல்லாம் தீர்ந்திட வேண்டிச், சிவன் சீர் சொல்
பாவினைப் பாடிப், பத்தியோடு அடியைப் பணிவார்தம்
நாவினில் இருப்பான், நலம் தரும் நாகேச்சரத்தானே.


"ஆவினில் அஞ்சும் ஆடிடும் அரனே அருள்" என்று - "பசுவிடமிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், முதலிய ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறும் சிவனே! அருள்புரிவாயாக" என்று;
தீவினை எல்லாம் தீர்ந்திட வேண்டி - (தமது) தீய வினைகள் எல்லாம் தீர்ந்துபோவதற்காக இறைஞ்சி;
சிவன் சீர் சொல் பாவினைப் பாடி - சிவபெருமானின் புகழைக் கூறும் பாடல்களைப் பாடி;
பத்தியோடு அடியைப் பணிவார்தம் நாவினில் இருப்பான் - பக்தியோடு திருவடியைத் தொழுபவர்களது நாவினில் உறைவான்;
நலம் தரும் நாகேச்சரத்தானே - திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள நன்மை செய்யும் சிவன்;



8)
விறுவிறு வென்று வெற்பினை எடுத்தான் விறல்போய்த்துன்(பு)
உறுகிற வண்ணம் ஒருவிரல் வைத்த உமைகோனை
அறுநரம் போடே அழுதிசை பாட அருள்செய்தான்
நறுமலர் சூடும் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
விறுவிறு என்று வெற்பினை எடுத்தான் விறல் போய்த் துன்பு
உறுகிற வண்ணம் ஒரு விரல் வைத்த உமைகோனை,
அறு நரம்போடே அழுது இசை பாட அருள்செய்தான்,
நறுமலர் சூடும், நலம் தரும் நாகேச்சரத்தானே.


விறுவிறு என்று வெற்பினை எடுத்தான் - (கோபத்தோடு) விரைந்து சென்று கயிலை மலையை எடுக்க முயன்ற இராவணனது;
விறல் போய்த் துன்பு உறுகிற வண்ணம் ஒரு விரல் வைத்த உமைகோனை - வலிமை அழிந்து துன்பம் அடையும்படித் தனது திருக்கால்விரல் ஒன்றால் அழுத்திய பார்வதி தலைவன் ஆன சிவபெருமானை;
அறு நரம்போடே அழுது இசை பாட அருள்செய்தான் - (தனது கையிலிருந்து) அறுத்த நரம்பினால் (யாழ் செய்து) அழுது இசை பாடிய இராவணனுக்கு அருள்செய்தான்;
நறுமலர் சூடும், நலம் தரும் நாகேச்சரத்தானே - திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள, மணம் மிகுந்த பூக்களை அணியும், நன்மை செய்யும் சிவன்.



9)
யானுயர்ந் தவனென் றரியயன் சொல்ல அவர்முன்னே
வானுயர் சோதி வடிவினில் நீண்டான் மலர்த்தாளை
நானிலம் அகழ்ந்தும் நாரணன் காணான் நனிநாடி
ஞானியர் போற்றும் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
"யான் உயர்ந்தவன்" என்று அரி அயன் சொல்ல, அவர் முன்னே
வான் உயர் சோதி வடிவினில் நீண்டான்; மலர்த் தாளை
நானிலம் அகழ்ந்தும் நாரணன் காணான்; நனி நாடி
ஞானியர் போற்றும், நலம் தரும் நாகேச்சரத்தானே.


யான் - நான்;
அரி - திருமால்;
அயன் - பிரமன்;
நானிலம் - பூமி (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நால்வகைப்பட்ட நிலமுடையது);
நாரணன் - திருமால் (நாராயணன்);
நனி - மிக;
நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்;



10)
மதியிலர் சொல்லில் மயங்கிஅம் மாய வழிச்சென்று
கதியிலர் ஆகிக் கலங்கிட வேண்டா கழல்தூக்கிச்
சதியுடன் ஆடும் சதுரனைத் தொழுவீர் சடைமீது
நதிபுனை நாதன் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
மதி இலர் சொல்லில் மயங்கி அம் மாய வழிச் சென்று
கதி இலர் ஆகிக் கலங்கிட வேண்டா; கழல் தூக்கிச்
சதியுடன் ஆடும் சதுரனைத் தொழுவீர்; சடை மீது
நதி புனை நாதன், நலம் தரும் நாகேச்சரத்தானே.


மதி - அறிவு; (பகுத்தறிவு - discrimination, judgment, discernment);
மாயம் - பொய் (falseness, treachery); அஞ்ஞானம் (spiritual ignorance);
கதி - புகலிடம் (refuge); நிலை (state, condition);
சதி - ஜதி - தாளவொத்து (agreement of time in music and dancing);
சதுரன் - திறல் (திறமை) உடையவன்;
நதி புனை நாதன் - கங்கை ஆற்றைச் சூடுகிற தலைவன்;



11)
ஈசனே தேவா இமையவர் கோனே இணையில்லாத்
தேசனே என்று திருமுறை பாடித் தினம்தோறும்
வாசமா மலரால் வழிபடு வோர்மும் மலக்கட்டை
நாசமாக் கிடுவான் நலம்தரும் நாகேச் சரத்தானே.



பதம் பிரித்து:
"ஈசனே; தேவா; இமையவர் கோனே; இணை இல்லாத்
தேசனே" என்று திருமுறை பாடித், தினம்தோறும்
வாச மா மலரால் வழிபடுவோர் மும்மலக் கட்டை
நாசம் ஆக்கிடுவான், நலம் தரும் நாகேச்சரத்தானே.


இணை இல்லாத் தேசன் - ஒப்பு இல்லாத சோதி;
திருமுறை - பன்னிரு திருமுறைப் பாடல்கள்;
வாச மா மலர் - வாசனை பொருந்திய சிறந்த பூக்கள்;
மும்மலம் - ஆணவமலம், கன்மமலம், மாயாமலம் என்ற மூவகை மலங்கள் (The three impurities of the soul which cling to it until it attains final liberation);
கட்டு - பந்தம் (bondage);
நாசம் ஆக்குதல் - அழித்தல்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
(கலித்துறை - பெரும்பாலும் 1-3-5 சீர்களில் மோனை.
விளம் மா விளம் மா புளிமாங்காய் / மா மா மா மா புளிமாங்காய் - வாய்பாடு)



நாகேச்ரம் - திருநாகேஸ்வரம்- கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=918
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=164 )



No comments:

Post a Comment