Wednesday, July 1, 2015

01.10 – சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)


01.
10
சிராப்பள்ளி - (திருச்சிராப்பள்ளி)



2007-11-22
திருச்சிராப்பள்ளி
தாயும் ஆனவன்
-------------------------------------------------
(கலிவிருத்தம் - "விளம் மா விளம் மா" என்ற வாய்பாடு)



1)
கள்ளமில் லாது கழலடி போற்றும்
உள்ளமுள் ளோருக் குதவுவான் உமைகோன்
தள்ளிநில் லாது தாயெனத் தாங்கிக்
கொள்ளுவான் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
கள்ளம் இல்லாது கழல் அடி போற்றும்
உள்ளம் உள்ளோருக்கு உதவுவான் உமைகோன்,
தள்ளி நில்லாது தாய் எனத் தாங்கிக்
கொள்ளுவான், தாயும் ஆனவன் தானே.


கள்ளம் - பொய்; வஞ்சனை;
கழல் அடி - கழலை அணிந்த திருவடி;
உமைகோன் - உமாபதி;
தள்ளுதல் - விலகுதல்; கைவிடுதல்;
தாங்குதல் - ஆதரித்தல் (To uphold, bear up, support); புரத்தல் (To protect, guard);



2)
தொடுத்தபூக் கொண்டு தொழுகிற பத்தர்
எடுத்துரை குறைகள் இலவென ஆக்கி
அடுத்திடா வண்ணம் அவர்பழ வினையைத்
தடுப்பவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
தொடுத்த பூக் கொண்டு தொழுகிற பத்தர்
எடுத்து உரை குறைகள் இல என ஆக்கி,
அடுத்திடா வண்ணம் அவர் பழ வினையைத்
தடுப்பவன், தாயும் ஆனவன் தானே.


அடுத்தல் - நெருங்குதல்;
அடுத்திடா வண்ணம் - நெருங்காதபடி;



3)
கோள்களும் நன்மை கொடுத்திடச் செய்து,
வேள்விகள் ஆகி விரும்பிய தளித்துத்
தாள்விழை பத்தர் தமைப்பிரி யாமல்
ஆள்பவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
கோள்களும் நன்மை கொடுத்திடச் செய்து,
வேள்விகள் ஆகி விரும்பியது அளித்துத்,
தாள் விழை பத்தர்தமைப் பிரியாமல்
ஆள்பவன், தாயும் ஆனவன் தானே.


கோள் - கிரகங்கள்;
வேள்வி - யாகம்;
தாள் விழை பத்தர்தமை - திருவடியை விரும்புகிற பக்தர்களை;


(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 4.92.17
ஓதிய ஞானமும். ஞானப் பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன, விண்ணும்மண்ணும்
சோதியும் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன தூமதியோடு,
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே.)



4)
தீயவர் புரங்கள் தீயெழச் செய்தான்
போயவன் தாளைப் போற்றுவார்க் கரணாம்
தூயவன் அவரைத் தொடர்ந்துசெல் நிழல்போல்
ஆயவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
தீயவர் புரங்கள் தீ எழச் செய்தான்;
போய் அவன் தாளைப் போற்றுவார்க்கு அரண் ஆம்
தூயவன்; அவரைத் தொடர்ந்து செல் நிழல் போல்
ஆயவன், தாயும் ஆனவன் தானே.


அரண் - பாதுகாவல்; கோட்டை;
தொடர்ந்து செல் நிழல் போல் ஆயவன் - தொடர்ந்து செல்லும் நிழல் போலப் பக்தர்களைப் பிரியாமல் இருப்பவன்;



5)
பணிக்கயிற் றாலே பாய்புலித் தோலைப்
பிணிப்பவன் தக்கன் பிழைசெயத் தலையைத்
துணிப்பவன் அடியார் தொல்வினைச் சூட்டைத்
தணிப்பவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
பணிக் கயிற்றாலே பாய் புலித் தோலைப்
பிணிப்பவன்; தக்கன் பிழை செயத், தலையைத்
துணிப்பவன்; அடியார் தொல் வினைச் சூட்டைத்
தணிப்பவன், தாயும் ஆனவன் தானே.


பணி - பாம்பு;
பாய் புலி - பாய்கிற புலி;
பிணித்தல் - கட்டுதல்; (சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.102.1 - "காம்பினை வென்ற...புலியின் உரிதோல்மேல் பாம்பினை வீக்கிய பண்ட ரங்கன் பாதம் பணிவோமே");
துணித்தல் - வெட்டுதல்;
தொல் வினை - பழைய வினை;



6)
பாங்கொடு பாடிப் பணிகிற பத்தர்
தீங்குகள் இன்றிச் சிறப்பொடு வாழ
ஆங்கொரு நல்ல அரணென ஆகித்
தாங்குவான் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
பாங்கொடு பாடிப் பணிகிற பத்தர்
தீங்குகள் இன்றிச் சிறப்பொடு வாழ
ஆங்கு ஒரு நல்ல அரண் என ஆகித்
தாங்குவான் தாயும் ஆனவன் தானே.


பாங்கு - தகுதி; இயல்பு; குணம்;
பத்தர் - பக்தர்;
ஆங்கு - அங்கு; ஓர் அசைச் சொல் (an expletive - a word or phrase that does not contribute any meaning but is added only to fill out a sentence or a metrical line);
அரண் - அரணம் - காவல் (protection); கோட்டை (fortress, castle);
தாங்குதல் - ஆதரித்தல் (to uphold, bear up, support); புரத்தல் (to protect, guard);



7)
நிகர்ப்பவர் இல்லா நேர்த்தியை உடையான்
பகைத்தவர் புரம்தீப் பற்றிடச் சிரித்தான்
அகத்திருள் போக்கி அடியவர் வினைகள்
தகர்ப்பவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
நிகர்ப்பவர் இல்லா நேர்த்தியை உடையான்;
பகைத்தவர் புரம் தீப் பற்றிடச் சிரித்தான்;
அகத்து இருள் போக்கி, அடியவர் வினைகள்
தகர்ப்பவன், தாயும் ஆனவன் தானே.


நிகர்ப்பவர் - சமமாக இருப்பவர்;
நேர்த்தி - சிறப்பு;
அகத்து இருள் - உள்ளத்தில் இருக்கும் அறியாமை;

8)
கடப்பதற் கரிய கயிலையைக் கையால்
இடப்பதற் கோடும் இராவணன் செருக்கு
விடப்பெரு விரலை மெல்லவைத் தவனை
அடர்த்தவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
கடப்பதற்கு அரிய கயிலையைக் கையால்
இடப்பதற்கு ஓடும் இராவணன் செருக்கு
விடப், பெரு விரலை மெல்ல வைத்து, அவனை
அடர்த்தவன், தாயும் ஆனவன் தானே.


இடத்தல் - பெயர்த்தல்;
செருக்கு - கர்வம்; ஆணவம்;
விடுதல் - நீங்குதல்; நீக்குதல்
அடர்த்தல் - நசுக்குதல்;



9)
அருளெனப் போற்றி அயனரி அழைக்கும்
பெருநெருப் பானான் பிறவிகள் கொடுக்கும்
அருவினை போக்கி அடியவர்க் கெல்லாம்
தருபவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
"அருள்" எனப் போற்றி, அயன் அரி அழைக்கும்
பெரு நெருப்பு ஆனான்; பிறவிகள் கொடுக்கும்
அரு வினை போக்கி, அடியவர்க்கு எல்லாம்
தருபவன், தாயும் ஆனவன் தானே.


அயன் - பிரமன்;
அரி - திருமால்;
பெரு நெருப்பு - எல்லையில்லாத சோதி;
அரு வினை - கொடிய வினைகள்;



10)
பழிமிகும் மொழிசொல் பரசம யத்தோர்
அழிவிலா அரனை அறிகிலார் அன்பால்
வழிபடும் பத்தர் வல்வினை எல்லாம்
அழிப்பவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
பழி மிகும் மொழி சொல் பர சமயத்தோர்
அழிவு இலா அரனை அறிகிலார்; அன்பால்
வழிபடும் பத்தர் வல் வினை எல்லாம்
அழிப்பவன், தாயும் ஆனவன் தானே.


பழி - குற்றம்/பொய்;
பழி மிகும் மொழி சொல் - குற்றம் மிக உடைய மொழிகள் சொல்லும்;
பர சமயத்தோர் - புற மதத்தவர்;
அரனை - ஹரனை;
அறிகிலார் - அறியமாட்டார்;
அன்பால் வழிபடும் பத்தர் வல் வினை - அன்போடு தொழும் பக்தர்களுடைய வலிய வினைகளை;



11)
தாய்ப்பசுப் போலத் தன்னடி யார்பால்
போய்த்துணை யாய்முன் புரிவினை எல்லாம்
மாய்ப்பவன் எமனை மலரடி யாலே
சாய்த்தவன் தாயும் ஆனவன் தானே.



பதம் பிரித்து:
தாய்ப் பசுப் போலத் தன் அடியார்பால்
போய்த், துணை ஆய், முன் புரி வினை எல்லாம்
மாய்ப்பவன்; எமனை மலரடியாலே
சாய்த்தவன், தாயும் ஆனவன் தானே.


அடியார்பால் - அடியாரிடம்;
துணை ஆய் - (அவர்களுக்குத்) துணை ஆகி;
முன் புரி வினை - முன்பு புரிந்த வினை;
மாய்த்தல் - அழித்தல்;
சாய்த்தல் - கெடுத்தல்/அழித்தல் (destroy); தோல்வியுறச் செய்தல் (defeat);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
தாயுமானவர் பெயர்க்காரணத்தைத் திருச்சிராப்பளித் தலபுராணத்திற் காண்க: (A blog that provides this story: http://pudugaithendral.blogspot.com/2008/01/blog-post_31.html )
திருச்சிராப்பள்ளி - கோயில் தகவல்கள்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=131



No comments:

Post a Comment