Monday, July 6, 2015

01.24 – நாகேச்சரம் - போற்றி-2


01.24 –
நாகேச்ரம் - போற்றி-2



2008-03-04
திருநாகேச்ரம் - போற்றி-2 - (திருநாகேஸ்வரம்)
நாகவீச்சரவனே போற்றி
-------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு. 1-5 சீர்களில் மோனை)



1)
கற்றவர் கருதிடும் பொருளே போற்றி
.. கருவிடம் கழுத்தினில் அணிவாய் போற்றி
நெற்றியில் ஒருவிழி உடையாய் போற்றி
.. நெல்மலை சுந்தரர்க் கருள்வாய் போற்றி
ஒற்றியில் உறைகிற ஒருவா போற்றி
.. உமையவள் ஒருபுறம் உடையாய் போற்றி
நற்றவர் போற்றிடும் நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



கருதுதல் - தியானித்தல் (to ponder, think deeply, meditate); விரும்புதல் (to wish for, desire);
ஒற்றி - திருவொற்றியூர்;
நற்றவர் - நல் தவர் - சிறந்த தவசிகள்;


குறிப்பு: சிவபெருமான் சுந்தரருக்குக் குண்டையூரில் நெல்மலை வழங்கியதைப் பெரியபுராணத்திற் காண்க: http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=3



2)
அன்னையாய் அடியவர்க் கருள்வாய் போற்றி
.. அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
முன்னையும் பின்னையும் இருப்பாய் போற்றி
.. முப்புரம் தீயெழச் சிரித்தாய் போற்றி
சென்னியில் வெண்பிறை சேர்த்தாய் போற்றி
.. சேயிழை இடம்திகழ் சிவனே போற்றி
நன்னிலை கொடுக்கிற நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



முன்னையும் பின்னையும் இருப்பாய் - எல்லாவற்றுக்கும் முன்னும் இருந்து பின்னும் இருப்பவனே;
(திருவாசகம் - திருவெம்பாவை - 9 -
"முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே";)
சேயிழை - பெண் (woman, as wearing beautiful ornaments);
நன்னிலை - நல் நிலை;



3)
பதிபல உறைகிற பரமா போற்றி
.. பதம்தொழும் பத்தருக் கருள்வாய் போற்றி
மதியினை முடிமிசை வைத்தாய் போற்றி
.. வழித்துணை யாகவும் வருவாய் போற்றி
எதிரிலா எம்பெரு மானே போற்றி
.. எரிவிடம் அருந்திய இறைவா போற்றி
நதிதவழ் சடையுடை நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



எதிர் இலா - ஒப்பு இல்லாத;



4)
மலைமகள் இடப்புறம் வைத்தாய் போற்றி
.. மறைப்பொருள் ஆகிய மன்னே போற்றி
மலவிருள் அகற்றிடும் மணியே போற்றி
.. வானவர் வணங்கிடும் வரதா போற்றி
அலகிலா ஒளியுரு ஆனாய் போற்றி
.. அரக்கனை விரலினால் அடர்த்தாய் போற்றி
நலமிகத் தருகிற நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



மறைப்பொருள் - வேதத்தின் பொருள்;
(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.70.9 - "வான நாடனே வழித்துணை மருந்தே .. மாசிலா மணியே மறைப்பொருளே");
மன் - அரசன்;
மல இருள் - மும்மலங்கள் ஆகிய இருள்;
அலகு இலா - அளவு இல்லாத;



5)
மால்விடை மேல்வரும் ஈசா போற்றி
.. வளிஎரி வெளிஎலாம் ஆனாய் போற்றி
வேல்விழி உமையொரு பங்கா போற்றி
.. வேண்டுவார் வேண்டுவ(து) ஈவாய் போற்றி
மேல்வினை நீக்கிடும் விமலா போற்றி
.. வெங்கரி உரியினைப் போர்த்தாய் போற்றி
நால்வருக் கறமுரை நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



மால் விடை - பெரிய இடபம்; திருமால் ஆகிய விடை;
வளி எரி வெளி எலாம் - காற்று, தீ, ஆகாயம், முதலிய ஐம்பூதங்கள்;
மேல்வினை - ஆகாமிய வினை;
வெம் கரி உரி - கொடிய யானையின் தோல்;
நால்வருக்கு அறம் உரை நாதன் - தக்ஷிணாமூர்த்தி;



6)
வான்பிறை சூடிய அழகா போற்றி
.. மலரடி தொழவினை மாய்ப்பாய் போற்றி
மான்மறி ஏந்திய கையா போற்றி
.. மங்கையோர் பங்குடை மணாளா போற்றி
தேன்மலர் திகழ்கிற சடையாய் போற்றி
.. செந்தமிழ் மகிழ்கிற சிவனே போற்றி
நான்மறை மொழிகிற நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



வான் - ஆகாயம்; பெருமை; அழகு;
மறி - கன்று;
தேன் - மது; வாசனை; வண்டு;
செந்தமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன;
மகிழ்தல் - விரும்புதல்;
மொழிதல் - சொல்லுதல்;
நான்மறை மொழிகிற நாதன் - வேதங்கள் இறைவனைப் பற்றிச் சொல்கின்றன; வேதங்கள் இறைவனால் சொல்லப்பட்டவை;



7)
ஆடிடும் அம்பல வாணா போற்றி
.. அருமறை துதித்திடும் ஐயா போற்றி
தேடிய இருவருக் கெட்டாய் போற்றி
.. திருச்சிராப் பள்ளியில் மேயாய் போற்றி
ஈடிலாப் புகழுடை எந்தாய் போற்றி
.. இமையவர் தொழுகிற ஈசா போற்றி
நாடிடும் அடியவர்க் கெளியாய் போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



அம்பலவாணன் - சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள சிவன்;
ஐயன் - தலைவன்;
மேயான் - உறைபவன்;
எந்தாய் - எந்தை என்பதன் விளி;



8)
மாதரார் இருவரை உடையாய் போற்றி
.. மலையெடுத் தான்அழ அடர்த்தாய் போற்றி
வாதறா மாலயற் கரியாய் போற்றி
.. வணங்குவார் மனத்தினில் மகிழ்வாய் போற்றி
பாதக வினைகளைத் தீர்ப்பாய் போற்றி
.. பரவிடும் அடியரைக் காப்பாய் போற்றி
நாதனா ஒருவரும் இல்லாய் போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



மாதரார் இருவர் - பார்வதியும் கங்கையும்;
மலை எடுத்தான் - கயிலையை எடுத்த இராவணன்;
வாது அறா - நிறுத்தாமல் தொடர்ந்து தருக்கம் செய்துகொண்டிருந்த;
மால் அயற்கு - திருமால் பிரமனுக்கு;
பாதகம் - பெரும்பாவம்;
பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; வணங்குதல்;
நாதனா - நாதனாக – தனக்குத் தலைவனாக;



9)
வாமனன் பிரமனுக் கரியாய் போற்றி
.. வாரமாய்த் தொழுபவர்க் கெளியாய் போற்றி
காமனை எரித்தமுக் கண்ணா போற்றி
.. காலனை வீழ்த்திய காலா போற்றி
ஓமதன் உட்பொருள் ஆனாய் போற்றி
.. ஊழியில் ஒருவனாய் உள்ளாய் போற்றி
நாமமோர் ஆயிரம் உடையாய் போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



வாமனன் - வாமனனாய் வந்த திருமால்;
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.21.9 -
"பூமனும் திசைமுகன் தானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கெரி....")
வாரம் - அன்பு;
ஓம் அதன் உட்பொருள் - ஓங்காரத்தின் உட்பொருள்;
ஊழி - சம்ஹார காலம்;
நாமம் ஓர் ஆயிரம் - ஆயிரம் பெயர்;



10)
வானிலும் மண்ணிலும் நிறைந்தாய் போற்றி
.. வாழ்த்துவார் வாயினில் உள்ளாய் போற்றி
தேனினும் இனிக்கிற சிவனே போற்றி
.. தில்லையில் நடம்செயும் தேவா போற்றி
மானினைக் கரத்தினில் உடையாய் போற்றி
.. வான்மியூர் மேவிய மருந்தே போற்றி
ஞானியர் நாடிடும் நாதா போற்றி
.. நாகவீச் சரவனே போற்றி போற்றி.



மருந்து - அமுதம்; வான்மியூரில் இறைவன் பெயர் "மருந்தீசன்";


( அப்பர் தேவாரம் - திருமுறை 4.37.8
பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து
அந்திப்போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார்
சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்துநெய்த் தான னாரே).



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
நாகேச்ரம் - திருநாகேஸ்வரம்- கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=918
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=164 )



No comments:

Post a Comment