Wednesday, July 1, 2015

01.08 – ஒற்றியூர் - (திருவொற்றியூர்)


01.0
8
ற்றியூர் - (திருவொற்றியூர்)



2007-11-18
திருவொற்றியூர்
-------------------------
("வஞ்சித்துறை")
(தேவாரத்தில் - திருவிருக்குக்குறள்)



1)
ஒற்றியூர் உறைகிற
பெற்றமே றரன்தொழக்
குற்றமே இலர்களாய்
வெற்றியே பெறுவரே.



பெற்றம் ஏறு அரன் தொழ இடப வாகனம் உடைய சிவபெருமானைத் தொழுதால்;



2)
அலகிலாப் பெற்றியன்
நலம்தரும் ஒற்றியை
வலம்வரும் பத்தருக்
குலகினில் இன்பமே.



அலகு இலாப் பெற்றியன் - அளவு இல்லாத தன்மை உடையவன்;
ஒற்றி - திருவொற்றியூர்; (அப்பர் தேவாரம் - 6.83.4 - "நீராருஞ் செஞ்சடைமேல் .... கடலொற்றி கருதி னானைப் ..." - ... கடலை அடுத்துள்ள ஒற்றியூரை உயர்வாக மதிப்பவனாகவும் ...);



3)
சுந்தரர் போற்றிய
வெந்தவெண் ணீறணி
எந்தையின் ஒற்றிசேர்
சிந்தையர் நல்லரே.



வெண்ணீறு அணி எந்தை - வெள்ளிய திருநீற்றினை அணியும் எம் தந்தை;
ஒற்றி சேர் சிந்தையர் - திருவொற்றியூரை அடையும் மனத்தினர்;



4)
நெற்றியில் கண்ணுடைப்
புற்றிடம் கொண்டவர்
ஒற்றியைக் கண்டவர்
பற்றறும் உண்மையே.



புற்றிடம் கொண்டவர் - திருவொற்றியூர் இறைவன் பெயர்;
பற்று அறும் - பந்தங்கள் நீங்கும்;



5)
புண்ணிய போற்றியென்பார்
திண்ணிய தீவினைதீர்
அண்ணலார் ஒற்றிநகர்
எண்ணுவாய் ஏழைநெஞ்சே.



புண்ணிய - புண்ணியனே;
திண்ணிய - வலிய;
ஏழை நெஞ்சே - பேதை மனமே;



6)
மருள்களை தேசனவன்
அருளுடை ஈசனுறை
திருமலி ஒற்றிதொழ
வருவன வெற்றிகளே!



மருள் - மயக்கம்; குழப்பம்; (Bewilderment of mind, confusion)
தேசன் - ஒளி வடிவானவன்;
மருள் களை தேசன் - வினைத்தொகை - மயக்கத்தைப் போக்கும் ஒளிவடிவானவன்;
திரு மலி - செல்வம்/மங்கலம் திகழ்கிற;



7)
மெய்யினில் நீறணி
ஐயன தொற்றியைக்
கைதொழ வெற்றியே
ஐயுற வில்லையே.



நீறு அணி ஐயனது ஒற்றியை - திருநீறு அணிகிற தலைவன் ஆன சிவனது திருவொற்றியூரை;
ஐயுறவு - ஐயம்; சந்தேகம்;



8)
இலங்கையர் கோனைஅன்(று)
அலந்திட வைத்தவன்
தலம்திரு ஒற்றியை
வலம்செய வெற்றியே.



இலங்கையர் கோன் - இலன்க்கைக்கு அரசன் - இராவணன்;
அலத்தல் - வருந்துதல்;
வலஞ்செய்தல் - வலம்வருதல்; பிரதட்சிணம் செய்தல்;


9)
அயன்அரி போற்றெரி
பெயர்பல ஏற்றவன்
வியன்நகர் ஒற்றிசேர்
துயர்அறும் வெற்றியே.



எரி - நெருப்பு;
வியன் - பெருமை; சிறப்பு; அகலம்;
ஒற்றி சேர் - திருவொற்றியூரை அடை;
'மனமே' என்பது தொக்கு நிற்கிறது.



10)
மெய்யறி வற்றவர்சொல்
பொய்யுரை விட்டொழிமின்
உய்வழி ஒற்றியுறை
சைவனின் பொற்பதமே.



மெய் அறிவு அற்றவர் - மெய்ஞ்ஞானம் இல்லாதவர்கள்;
பொய் உரை விட்டு ஒழிமின் - பொய்களைப் பொருட்படுத்தாமல் ஒதுக்குவீர்;
உய்வழி - வினைத்தொகை - உய்யும் வழி;
சைவன் - சிவன்;
பொற்பதம் - பொன்னடி;



11)
சுடலையில் ஆடிடும்
அடல்விடை ஐயனின்
கடலயல் ஒற்றிசேர்
நடலையொன் றில்லையே.



சுடலை - சுடுகாடு;
அடல் விடை - வலிய இடபம்;
கடல் அயல் ஒற்றி சேர் - கடலை அடுத்துள்ள திருவொற்றியூரை அடை;
நடலை - துன்பம்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

வஞ்சித்துறை - நான்கு குறளடிகள் கொண்ட பாடல். (பாடலில் 4 அடிகள். அடிக்கு 2 சீர்கள்).

No comments:

Post a Comment