Wednesday, July 1, 2015

01.09 – அண்ணாமலை - (திருவண்ணாமலை)


01.0
9
ண்ணாமலை - (திருவண்ணாமலை)



கார்த்திகைத் தீபத்தை ஒட்டி:
2007-11-20
திருவண்ணாமலை
அண்ணாமலை தொழுவாய் மடநெஞ்சே
------------------------------------------------
(கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" - வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா")
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்")



1)
எரியாய்மிக உயர்வானடி இணைமாலறி யாதே
நரியாவையும் பரியாக்கியும் நாதன்விளை யாடல்
புரிவானவன் பொற்றாளிணைப் புகழ்பாடிட அருளைச்
சொரிவானிடம் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
எரி ஆய் மிக உயர்வான், அடிஇணை மால் அறியாதே;
நரி யாவையும் பரி ஆக்கியும் நாதன் விளையாடல்
புரிவான்; அவன் பொன் தாள்இணைப் புகழ் பாடிட அருளைச்
சொரிவான், இடம் அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


எரி ஆய் - தீ ஆகி;
மால் - திருமால்;
பரி - குதிரை;
தாள் இணைப் புகழ் - இரு திருவடிகளின் புகழ்;


அடிஇணை மால் அறியாதே எரி ஆய் மிக உயர்வான் - திருவடிகளைத் திருமால் அறிய முடியாத சோதியாகி மிகவும் உயர்வான்;
நாதன் நரி யாவையும் பரி ஆக்கியும் விளையாடல் புரிவான் - தலைவன் ஆகிய அவன், நரிகளைக் குதிரை எனவும் செய்து திருவிளையாடல் செய்வான்;
அவன் பொன் தாள்இணைப் புகழ் பாடிட அருளைச் சொரிவான் - அவனுடைய பொன் போன்ற திருவடிகளின் புகழைப் பாடினால் அருளைப் பொழிவான்;
இடம் அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே - பேதை மனமே! அச் சிவபெருமானது இடம் ஆகிய திருவண்ணாமலையைத் தொழுவாயாக.



2)
அடிகாண்பதற் கியலாதரி அலமந்திடப் பெருந்தீ
வடிவானவன் உடல்கூறென மலைமாதிடம் வைத்தான்
கொடிமேல்விடை கொண்டான்விடம் குடித்தானமு தென்றே
துடிசேர்கரன் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
அடி காண்பதற்கு இயலாது அரி அலமந்திடப், பெரும் தீ
வடிவு ஆனவன்; உடல் கூறு என மலைமாது இடம் வைத்தான்;
கொடி மேல் விடை கொண்டான்; விடம் குடித்தான் அமுது என்றே;
துடி சேர் கரன் அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


அலமருதல் - வருந்துதல் (To be vexed, distressed);
கூறு - பாகம்;
மலைமாது - மலைமகள் - பார்வதி;
இடம் - இடப்பக்கம்;
விடை - எருது; இடபம்;
விடம் குடித்தான் - குடித்தான் என்பது உண்டான் என்ற பொருளில் வந்தது;
துடி சேர் கரன் - உடுக்கு இருக்கும் கரத்தை உடையவன்;



3)
உயர்தீயென அயன்மாலிவர் உணராவகை நின்றான்
புயல்போல்நிறக் கண்டன்விழி பொலிநெற்றியன் இடத்தில்
கயல்போல்விழி உமைசேர்பவன் கழல்போற்றடி யாரின்
துயர்தீர்ப்பவன் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
உயர் தீ என அயன் மால் இவர் உணரா வகை நின்றான்;
புயல் போல் நிறக் கண்டன்; விழி பொலி நெற்றியன்; இடத்தில்
கயல் போல் விழி உமை சேர்பவன்; கழல் போற்று அடியாரின்
துயர் தீர்ப்பவன்; அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


உயர் தீ - வினைத்தொகை - உயர்கிற நெருப்பு;
அயன் - பிரமன்;
உணரா வகை - உணராத விதம்; (சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.77.9: "நேடுமய னோடுதிரு மாலுமுண ராவகை நிமிர்ந்து");
புயல் - மேகம்; (சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.3.1: "இயலிசை.......புயல்அன மிடறுடைப் புண்ணியனே...");
கண்டன் - கழுத்தை உடையவன்;
விழி பொலி நெற்றியன் - கண் இருக்கும் நெற்றி உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.62.1: "கண்பொலி நெற்றியினான்...");
கயல் - கெண்டை மீன்;
கயல் போல் விழி உமை - மீன் போன்ற கண்ணை உடைய பார்வதி;
கழல் - கழல் அணிந்த திருவடி;
போற்றுதல் - துதித்தல்; வணங்குதல்;
கழல் போற்று அடியார் - திருவடியைப் போற்றுகிற பக்தர்கள்;



4)
ஈன்றானுல கெல்லாமழி வில்லானடி போற்ற
மூன்றாகிய மலக்கட்டினை முற்றும்விடு விப்பான்
தான்தானெனும் இருவர்க்கிடைத் தழலாய்மிகுந் தவர்க்குத்
தோன்றாதவன் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
ஈன்றான் உலகு எல்லாம்; அழிவு இல்லான்; அடி போற்ற
மூன்று ஆகிய மலக் கட்டினை முற்றும் விடுவிப்பான்;
தான்தான் எனும் இருவர்க்கு இடைத் தழல் ஆய் மிகுந்து அவர்க்குத்
தோன்றாதவன்; அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


ஈனுதல் - உண்டாக்குதல்; கருவுயிர்த்தல்;
மலம் - (உயிரைப் பற்றியுள்ள) அழுக்கு;
மூன்று ஆகிய மலக் கட்டு - ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் ஆன தளை.
தான்றான் எனும் இருவர் - தான்தான் ன்னும் திருமால் பிரமன் என்ற இருவர்;
தழல் - நெருப்பு;
தோன்றுதல் - அறியப்படுதல்; கண்ணுக்குப் புலப்படுதல்;



5)
மிகவாதைசெய் அசுரர்துயர் விடவானவர் வேண்ட
முகமாறுடை மகனாய்த்திரு முருகன்வர அருள்வான்
அகலாவினை அகற்றித்தன தடியார்களுக் கென்றும்
சுகமீபவன் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
மிக வாதை செய் அசுரர் துயர் விட, வானவர் வேண்ட,
முகம் ஆறு உடை மகனாய்த் திருமுருகன் வர அருள்வான்;
அகலா வினை அகற்றித், தனது அடியார்களுக்கு என்றும்
சுகம் ஈபவன்; அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


வாதை - துன்பம்;
விடுதல் - நீங்குதல்;
வாதை செய் அசுரர் துயர் விட - இன்னல் விளைக்கும் அசுரர்களால் வரும் துயர் நீங்க;
வானவர் - தேவர்;
உடை - உடைய;
அகலுதல் - நீங்குதல்;
அகலா - அகலாத என்பதன் கடைக்குறை;
ஈதல் - அளித்தல்; கொடுத்தல்;
சுகம் ஈபவன் - சம்பு; (शंभु Causing happiness, granting prosperity. )



6)
கணையாச்சிறு நகையாற்புரம் காய்ந்தான்திரு வடியை
அணையாதரி மிகவாடிட அழலாயுயர்ந் தவனின்
இணையார்கழல் புகழ்பத்தரின் இடர்தீர்த்தவர்க் கென்றும்
துணையாயவன் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
கணையாச் சிறு நகையால் புரம் காய்ந்தான்; திருவடியை
அணையாது அரி மிக வாடிட அழலாய் உயர்ந்தவனின்
இணை ஆர் கழல் புகழ் பத்தரின் இடர் தீர்த்து அவர்க்கு என்றும்
துணை ஆயவன்; அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


கணையா - கணையாக; (கணை - அத்திரம்; அம்பு);
நகை - சிரிப்பு;
புரம் - முப்புரங்கள்;
காய்தல் - எரித்தல்;
அணைதல் - சார்தல் (To approach, come near); அடைதல்;
அழல் - தீ;
இணை ஆர் கழல் - இணையாகப் பொருந்திய திருவடிகள்;
புகழ் பத்தர் - வினைத்தொகை - புகழ்கிற பக்தர்கள்;
துணை ஆயவன் - துணை ஆனவன்;



7)
எட்டாயவன் செருக்கோடடி இணைதேடிய வர்க்கோ
எட்டாதவன் இமையோர்சமை இருந்தேரினச் சுடைய
இட்டானடி நகையேசரம் எனமுப்புரம் அழியச்
சுட்டான்தலம் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
எட்டு ஆயவன்; செருக்கோடு அடி இணை தேடியவர்க்கோ
எட்டாதவன்; இமையோர் சமை இரும் தேரின் அச்சு உடைய
இட்டான் அடி; நகையே சரம் என முப்புரம் அழியச்
சுட்டான் தலம் அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


எட்டு ஆயவன் - அட்டமூர்த்தி ஆகியவன்; (எட்டுமூர்த்தி - இறைவனது அட்டமூர்த்தவடிவம். ஐம் பூதம், சூரியன், சந்திரன், ஆன்மா.)
செருக்கு - கர்வம்; ஆணவம்;
எட்டுதல் - அடைதல்; கிட்டுதல்; நெருங்குதல்; அகப்படுதல்; புலப்படுதல்;
இமையோர் - தேவர்கள்;
சமைத்தல் - படைத்தல்; செய்தல்;
இருமை - பெருமை;
சமை இரும் தேர் - வினைத்தொகை - செய்த பெரிய தேர்;
இடுதல் - வைத்தல்;
சரம் - அம்பு;
சுடுதல் - எரித்தல்;



8)
வேலாயுத னைப்பெற்றவன் மேவும்திரு மலையை
மாலாயெடுத் தவனோவென வாய்விட்டழ அடர்த்தான்
நாலாமறை உரைசெய்பவன் நாராயணன் அறியாச்
சூலாயுதன் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
வேலாயுதனைப் பெற்றவன் மேவும் திரு மலையை
மால் ஆய் எடுத்தவன் ஓ என வாய்விட்டு அழ அடர்த்தான்;
நாலு ஆம் மறை உரைசெய்பவன்; நாராயணன் அறியாச்
சூலாயுதன்; அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


* முதல் 2 அடிகள் இராவணன் கயிலையைப் பெயர்க்க முயன்று நசுக்கப்பட்டதைச் சுட்டுவன.
வேலாயுதன் - முருகன்;
மேவுதல் - உறைதல்;
மால் ஆய் - மயக்கம் கொண்டு - மதி மயங்கி;
வாய்விடுதல் - உரக்கச் சத்தமிடுதல்;
நாலாமறை - 1) நாலு ஆம் மறை - நான்கு ஆகும் வேதங்கள்; 2) நாலு ஆக மறை - வேதத்தை நான்கு ஆக - நாலாக என்பது நாலா எனக் கடைக்குறையாய் வந்தது எனவும் கொள்ளலாம்;
சூலாயுதன் - சூலபாணி; (சூல் - சூலம்);



9)
மாலாகிய மனத்தோடடி மலர்தேடிய அயன்மால்
ஏலாதெனத் தொழுமோரெரி எனவாகிய ஈசன்
ஆலாலமும் அமுதேயென ஆகும்சிவன் புலியின்
தோலாடையன் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
மால் ஆகிய மனத்தோடு அடி மலர் தேடிய அயன் மால்
ஏலாது எனத் தொழும் ஓர் எரி என ஆகிய ஈசன்;
ஆலாலமும் அமுதே என ஆகும் சிவன்; புலியின்
தோல் ஆடையன்; அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


மால் - மயக்கம் (delusion, aberration of mind; dullness; stupor; confusion);
அடி மலர் - பாத கமலம்;
அடி மலர் தேடிய அயன் மால் - அடிமலர் முடி தேடிய மால் அயன்; (முடி என்பது தொக்கு நின்றது);
ஏலுதல் - இயலுதல்; ஏலாது - இயலாது; (ஏலாதான் - இயலாதவன்);
எரி - தீ;
ஆலாலம் - விஷம்;



10)
செல்லும்வழி அறியாதவர் செப்பும்புற நெறிகள்
சொல்லும்பல பொய்க்கூற்றுகள் துறந்தேவினை அனைத்தும்
வெல்லும்வழி பெரும்தீயென மிகுந்தானடி அடைந்தோர்
சொல்லும்தலம் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
செல்லும் வழி அறியாதவர் செப்பும் புற நெறிகள்,
சொல்லும் பல பொய்க் கூற்றுகள் துறந்தே, வினை அனைத்தும்
வெல்லும் வழி, பெரும் தீ என மிகுந்தான் அடி அடைந்தோர்
சொல்லும் தலம் அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.


செல்லும் வழி - மேற்கொள்ளத் தகுந்த மார்க்கம்;
செப்புதல் - கூறுதல்;
பொய்க் கூற்றுகள் - உண்மை அல்லாத சொற்கள்;
துறத்தல் - விட்டுவிடுதல்;
அடி அடைந்தோர் - சிவ பக்தர்கள்;
சொல்லுதல் - புகழ்தல்;



11)
இடையூறுகள் இலவாய்மிக இன்பேபெறப் புலித்தோல்
உடையாணி மதிசூடிறை உண்ணாமுலை உடனாம்
விடையேறிடும் பெருமான்முனம் விண்மண்ணிவை கடந்த
சுடரானவன் அண்ணாமலை தொழுவாய்மட நெஞ்சே.



பதம் பிரித்து:
இடையூறுகள் இல ஆய் மிக இன்பே பெறப், புலித் தோல்
உடையா அணி மதி சூடு இறை, உண்ணாமுலை உடன் ஆம்
விடை ஏறிடும் பெருமான், முனம் விண் மண் இவை கடந்த
சுடர் ஆனவன் அண்ணாமலை தொழுவாய் மட நெஞ்சே.

இல ஆய் - இல்ல என்று ஆகி;
இன்பு - இன்பம்;
உடையா அணி - உடையாக அணிகிற;
மதி சூடு இறை - சந்திரனைத் தலைமேல் சூடுகிற இறைவன்;
உண்ணாமுலை - திருவண்ணாமலைத் தலத்தில் இறைவி திருநாமம்;
உடன் ஆம் - சேர்ந்து இருக்கும்;
விடை - இடபம்;
முனம் - முன்னம் - முன்னொரு நாள்;
சுடர் - சோதி; நெருப்பு;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment