Sunday, July 5, 2015

01.19 – கடவூர் - (திருக்கடையூர்)


01.19 –
கடவூர் - (திருக்கடையூர்)



2008-02-02
திருக்கடவூர்
---------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - “கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்”)


1)
குங்கிலியப் புகையாலே குரைகழலைப் போற்றிவினைச்
சங்கிலியின் கட்டறுத்த தமக்குநிகர் இலாக்கலயர்
தங்கலியை நீக்கியருள் சங்கரனே கடவூரா
பங்கிலுமை கொண்டவனே பாதமலர் பணிந்தேனே.



பதம் பிரித்து:
குங்கிலியப் புகையாலே குரைகழலைப் போற்றி
வினைச்சங்கிலியின் கட்டு அறுத்த, தமக்கு நிகர் இலாக்
கலயர்தம் கலியை நீக்கி அருள் சங்கரனே; கடவூரா;
பங்கில் உமை கொண்டவனே; பாதமலர் பணிந்தேனே.


குங்கிலியம் - இறைவன் முன் நறுமணமுடைய தூபமாக எரிக்கப்படும் ஒரு பொருள்;
குரைகழல் - வினைத்தொகை + ஆகுபெயர் - ஒலிக்கும் கழலை அணிந்த திருவடி;
இலா - இல்லாத;
கலயர் - குங்கிலியக் கலய நாயனார். இவர் திருக்கடவூரில் வாழ்ந்தவர்.
கலயர் தம் கலி - கலயருடைய வறுமை;
பாத மலர் - திருவடித் தாமரை;



2)
தரித்திரத்தின் மிகுதியிலும் தம்மனத்தில் உன்னடியே
தரித்திருந்த கலயருக்குத் தண்ணருள்செய் ஈசாதேர்
முரித்தவனே திரிகின்ற முப்புரங்கள் எரிந்துவிழச்
சிரித்தவனே கடவூரா திருவடியைப் பணிந்தேனே.



தண் அருள் செய் ஈசா - குளிர்ந்த அருள்செய்யும் ஈசனே;



3)
தாலிவிற்றுண் நிலைமைக்குத் தாழ்ந்தாலும் திருவடியின்
மேலிருந்த விருப்பகலாக் கலயர்தொண் டேற்வனே
ஆலிருக்கும் நீலகண்டா அருட்கடலே கடவூரா
வேலிருக்கும் கையினனே விரைகழலைப் பணிந்தேனே.



பதம் பிரித்து:
தாலி விற்று உண் நிலைமைக்குத் தாழ்ந்தாலும் திருவடியின்
மேல் இருந்த விருப்பு அகலாக் கலயர் தொண்டு ஏற்றாவனே;
ஆல் இருக்கும் நீலகண்டா; அருட்கடலே; கடவூரா;
வேல் இருக்கும் கையினனே; விரைகழலைப் பணிந்தேனே.


விருப்பு - அன்பு; பற்று;
ஆல் - நஞ்சு; ஆலகால விஷம்;
வேல் - சூலம்;
வேல் இருக்கும் கையினனே - சூலபாணியே;
விரை கழல் - மணம் மிகுந்த திருவடி;



4)
நகைவிற்றுண் நிலைவரினும் நமனையுதை திருவடியைப்
புகைகொண்டு பத்தியுடன் போற்றிமகிழ் கலயருக்கு
வகைகொண்ட செல்வங்கள் வழங்கியருள் கடவூரன்
நகைகொண்டு புரமெரித்த நாதனவன் தாள்சரணே!



பதம் பிரித்து:
நகை விற்று உண் நிலை வரினும் நமனை உதை திருவடியைப்
புகைகொண்டு பத்தியுடன் போற்றி மகிழ் கலயருக்கு
வகை கொண்ட செல்வங்கள் வழங்கி அருள் கடவூரன்,
நகை கொண்டு புரம் எரித்த நாதன் அவன் தாள் சரணே.


நகை விற்று உண் நிலை வரினும் - (ம் மனைவியின்) தாலி முதலியவற்றை விற்று நெல் வாங்கி உண்ணும் அளவு வறுமை வந்தபொழுதும்;
நமனை உதை திருவடியைப் புகைகொண்டு - எமனை உதைத்த ஈசன் திருவடியைக் குங்கிலியப் புகையைக்கொண்டு;
பத்தியுடன் போற்றி மகிழ் கலயருக்கு - பக்தியோடு வணங்கி மகிழ்ந்த குங்கிலியக்கலய நாயனாருக்கு;
வகை கொண்ட செல்வங்கள் வழங்கி அருள் கடவூரன் - பலவகைச் செல்வங்களை அருள்புரிந்த, திருக்கடவூரில் உறையும் சிவபெருமான்;
நகை கொண்டு புரம் எரித்த நாதன் அவன் தாள் சரணே - சிரிப்பால் முப்புரங்களை எரித்த தலைவன் ஆகிய அவனது திருவடியே காப்பு.



5)
வறுமையிலும் மலரடியை மறவாது குங்கிலிய
நறுமணத்தால் வழிபட்ட ற்றொண்டர்க் கருள்செய்தான்
சிறுவனைக்காத் தெமனையுதை சேவடியான் ஒருதோற்றம்
இறுதியிலாக் கடவூரன் எந்தையவன் தாள்சரணே.



பதம் பிரித்து:
வறுமையிலும் மலர் அடியை மறவாது குங்கிலிய
நறுமணத்தால் வழிபட்ட நல் தொண்டர்க்கு அருள்செய்தான்;
சிறுவனைக் காத்து எமனை உதை சேவடியான்; ஒரு தோற்றம்
இறுதி இலாக் கடவூரன்; எந்தை; அவன் தாள் சரணே.


நல் தொண்டர் - நல்ல அடியவர் (இங்கே குங்கிலியக் கலய நாயனார்);
சிறுவன் - இங்கே மார்க்கண்டேயர்;
தோற்றம் இறுதி - பிறப்பு இறப்பு;
கடவூரன் - திருக்கடவூரில் உறையும் சிவபெருமான்;



6)
தொய்வின்றிப் பெருவறுமை தொடர்ந்துவந்த நாளினிலும்
பொய்யின்றிக் குங்கிலியப் புகையாலே அடிபோற்றி
நைகின்ற கலயர்க்கு நஞ்சுண்ட நாதனருள்
செய்கின்ற திருக்கடவூர் சென்றடைவாய் மடநெஞ்சே.



பதம் பிரித்து:
தொய்வு இன்றிப், பெரு வறுமை தொடர்ந்து வந்த நாளினிலும்,
பொய் இன்றிக், குங்கிலியப் புகையாலே அடி போற்றி
நைகின்ற கலயர்க்கு நஞ்சு உண்ட நாதன் அருள்
செய்கின்ற, திருக்கடவூர் சென்றடைவாய் மடநெஞ்சே.


மட நெஞ்சே - பேதை மனமே.
தொய்வு இன்றி - தளராமல்;
பெரு வறுமை தொடர்ந்து வந்த நாளினிலும் - மிகவும் வறுமையே பல காலமாகத் தொடர்ந்து வந்தபொழுதும்;
பொய் இன்றிக் குங்கிலியப் புகையாலே அடி போற்றி நைகின்ற கலயர்க்கு - உள்ளத்தில் வஞ்சனை இல்லாமல், குங்கிலியப் புகையோடு திருவடியைத் தொழுது உள்ளம் உருகிய கலய நாயனாருக்கு;
நஞ்சு உண்ட நாதன் அருள்செய்கின்ற திருக்கடவூர் சென்று அடைவாய் - ஆலகால விஷத்தை உண்ட தலைவன் ஆகிய சிவபெருமான் அருள்புரிந்த திருக்கடவூர்த் தலத்தை அடைவாயாக.



7)
விலையாகத் தாலிதந்து மிகுகுங்கி லியம்கொண்டு
பலவாறு போற்றியடி பணிகலயர்க் கருள்புரிந்த
நிலவாறு சூடுகிற நிமலாதென் கடவூரா
கலையாரும் கையாய்முக் கண்ணாநின் தாள்சரணே.



பதம் பிரித்து:
விலையாகத் தாலி தந்து மிகு குங்கிலியம் கொண்டு,
பலவாறு போற்றி அடி பணி கலயர்க்கு அருள்புரிந்த,
நிலவு ஆறு சூடுகிற நிமலா; தென் கடவூரா;
கலை ரும் கையாய்; முக் கண்ணா; நின் தாள் சரணே.


நிலவு ஆறு சூடுகிற - உம்மைத்தொகை - நிலவையும் ற்றையும் சூடுகிற;
நிமலன் - மலம் அற்றவன் - சிவன்;
தென் - அழகிய; இனிய;
கலை ஆரும் கையாய் - மான் பொருந்திய கையினனே;



8)
குராமலரை அணிகின்ற கோன்மலையை ஆட்டுகிற
இராவணனை நசுக்கியருள் ஈசன்குங் கிலியத்தோ(டு)
இராப்பகலாய் இணையடியே எண்ணுகல யர்க்கருளும்
அராஅணியும் அரன்உறையும் கடவூரை அடைநெஞ்சே.



பதம் பிரித்து:
குரா மலரை அணிகின்ற கோன்; மலையை ஆட்டுகிற
இராவணனை நசுக்கி அருள் ஈசன்; குங்கிலியத்தோடு
இராப்பகலாய் இணையடியே எண்ணு கலயர்க்கு அருளும்
அரா அணியும் அரன் உறையும் கடவூரை அடை நெஞ்சே.


குரா - ஒரு வித மலர்;
கோன் - தலைவன்;
குரா மலரை அணிகின்ற கோன் - சிவன்;
மலை - கயிலை மலை;
இணையடி - இரு திருவடிகள்;
எண்ணு கலயர் - வினைத்தொகை - எண்ணி வழிபட்ட குங்கிலியக்கலய நாயனார்;
அரா - பாம்பு;
அரன் - ஹரன்;



9)
ஈறில்லாச் சோதியென இருவரறி யான்அடியார்க்(கு)
ஊறில்லா வாழ்வளிக்க ஓடிவந்தெ மனையுதைத்தான்
சோறில்லாக் காலத்தும் தொண்டுமற வாக்கலயர்
பேறெல்லாம் பெறஅருளும் கடவூரன் தாள்சரணே.



பதம் பிரித்து:
ஈறு இல்லாச் சோதி என இருவர் அறியான்; அடியார்க்கு
ஊறு இல்லா வாழ்வு அளிக்க ஓடிவந்து எமனை உதைத்தான்;
சோறு இல்லாக் காலத்தும் தொண்டு மறவாக் கலயர்
பேறு எல்லாம் பெற அருளும் கடவூரன் தாள் சரணே.


ஈறு இல்லாச் சோதி என இருவர் அறியான் - திருமாலும் பிரமனும் அறிய இயலாத எல்லை இல்லாத சோதி வடிவாக உயர்ந்தவன்;
அடியார்க்கு ஊறு இல்லா வாழ்வு அளிக்க ஓடிவந்து எமனை உதைத்தான் - மார்க்கண்டேயருக்காக விரைந்து வந்து, அவரைக் கொல்ல வந்த காலனை உதைத்து, அவருக்கு மரணம் இல்லாத பெருவாழ்வு அளித்தவன்;
சோறு இல்லாக் காலத்தும் தொண்டு மறவாக் கலயர் பேறு எல்லாம் பெற அருளும் கடவூரன் தாள் சரணே - வறுமையால் உண்ண உணவும் இன்றி வருந்திய சமயத்திலும் குங்கிலியத் தூபத்தால் வணங்கும் தொண்டைத் தொடர்ந்து செய்த கலய நாயனர்க்கு பெரும் பேறு அளித்தவன், திருக்கடவூரில் உறையும் சிவன். அவனது திருவடிகளே நமக்கு அடைக்கலம்.

10)
மறைவழியை விட்டெங்கள் வழிவருக என்பவர்கள்
பிறைமதியை அணியிறைவன் பெற்றியினை உணரார்ஓர்
குறையுமின்றித் தினந்தோறும் குங்கிலியத் தால்கலயர்
கறைமிடற்றன் கழல்பணிந்த கடவூரை அடைநெஞ்சே.



பதம் பிரித்து:
மறை வழியை விட்(டு) எங்கள் வழி வருக என்பவர்கள்
பிறை மதியை அணி இறைவன் பெற்றியினை உணரார்; ஓர்
குறையும் இன்றித் தினந்தோறும் குங்கிலியத்தால் கலயர்
கறைமிடற்றன் கழல் பணிந்த கடவூரை அடை நெஞ்சே.


மறை வழி - வேத நெறி;
பெற்றி - தன்மை; இயல்பு; பெருமை;
கலயர் - கலய நாயனார்;
கறைமிடற்றன் - நீலகண்டன்;



11)
அற்றபொழு தும்சிவனுக்(கு) ஆகுமெனத் தாலியையும்
விற்றுநற்குங் கிலியத்தை விரும்பிக்கொள் கலயருக்கு
நெற்றிவிழி பெற்றசிவன் நிதியருளும் தலமான
கற்றவர்கள் போற்றுகிற கடவூரை அடைநெஞ்சே.



பதம் பிரித்து:
அற்ற பொழுதும் சிவனுக்கு ஆகும் எனத் தாலியையும்
விற்று நல் குங்கிலியத்தை விரும்பிக் கொள் கலயருக்கு
நெற்றிவிழி பெற்ற சிவன் நிதி அருளும் தலம் ஆன,
கற்றவர்கள் போற்றுகிற கடவூரை அடை நெஞ்சே.


அற்ற பொழுதும் - பொருள் அற்று வறுமை அடைந்த காலத்திலும்;
கொள்ளுதல் - விலைக்கு வாங்குதல்;


மனமே! தாம் மிகவும் வறுமை எய்திய நிலையிலும், தாலியை விற்று நெல் வாங்குவதற்காகப் போகும் வழியில் குங்கிலியத்தை விரும்பி விலைக்கு வாங்கிய கலய நாயனாருக்கு முக்கண் உடைய சிவபெருமான் அளவற்ற செல்வத்தை அருளிய தலம் ஆன, ஞானிகள் போற்றும் திருக்கடவூரை அடைவாயாக!



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா - 1-3 சீர்களில் மோனை)




கடவூர் - திருக்கடையூர் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=639 )

No comments:

Post a Comment