Tuesday, July 21, 2015

01.28 – பொது - தட்சிணாமூர்த்தி போற்றி-1


01.28 –
பொது - தட்சிணாமூர்த்தி போற்றி-1



2008-03-23
தட்சிணாமூர்த்தி போற்றி - 1
-----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(10 பாடல்கள்)

1)
கல்லால மரத்தின்கீழ்க் கரம்குவித்துக் கழல்போற்றும்
நல்லார்கள் நால்வர்க்கு நான்மறையின் ஞானத்தைச்
சொல்லேதும் சொல்லாது கற்பித்த தூயனிருள்
இல்லாத நிலையளிக்கும் ஈசன்பொற் றாள்போற்றி.



கல்லாலம் - கல்லால் - ஆலமரத்தில் ஒருவகை - கல்லால மரத்தடியில் தக்ஷிணாமூர்த்தி வீற்றிருப்பார்;
நல்லார்கள் நால்வர் - சனகாதி முனிவர்கள் - சனகன், சனாதனன், சனற்குமாரன், சனந்தனன் என்ற நான்கு ரிஷிகள்;
நான்மறை - நால்வேதங்கள்;
தூயன் - பரிசுத்தமானவன்;
இருள் - அறியாமை;



2)
சனகாதி முனிவரெலாம் தாள்பணிந்து கேட்டிருக்கச்
சினமாசை தீவினைகள் தீர்கின்ற வழிகாட்டி
மனமாசை அகற்றுகிற மறைப்பொருளை விரித்தருளி
முனமாலின் கீழிருந்த முக்கண்ணன் தாள்போற்றி.



பதம் பிரித்து:
சனகாதி முனிவர் எலாம் தாள் பணிந்து கேட்டிருக்கச்,
சினம் ஆசை தீவினைகள் தீர்கின்ற வழி காட்டி,
மன மாசை அகற்றுகிற மறைப்பொருளை விரித்து அருளி,
முனம் ஆலின் கீழ் இருந்த முக்கண்ணன் தாள்போற்றி.


எலாம் - எல்லாம்;
மாசு - அழுக்கு; குற்றம்;
மறை - வேதம்;
விரித்தல் - விளக்கி உரைத்தல் (To expound; to elaborate, as in writing or in speaking);
முனம் - முன்னம் - முன்;
ஆல் - கல்லாலமரம்;
இருத்தல் - உட்கார்தல் (To sit);



3)
குறப்பெண்ணை மணம்புரிந்த குகன்தன்னைப் பயந்தபிரான்
பிறப்போடு மரணமெனும் பெருந்துன்பம் தனைநீக்கும்
சிறப்பான சிவதன்மம் செப்பக்கல் லாலமர்ந்த
கறைக்கண்டன், நெற்றியிலோர் ண்ணுடையான் கழல்போற்றி.



குகன்தன்னைப் பயந்த பிரான் - முருகனைப் பெற்ற தலைவன்; (பயத்தல் - To beget, generate, give birth to; பெறுதல்; To give; கொடுத்தல்);
சிவதன்மம் - சிவதர்மம் ஆகிய அறநெறிகள்; (சம்பந்தர் தேவாரம் - 2.43.6 - “திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான்”)
கறைக்கண்டன் - நீலகண்டன்;



4)
இருள்சேர்க்கும் இருவினையும் ஈட்டவிழை மனத்தகத்து
மருள்தீர்க்கும் மறைப்பொருளை வாய்ச்சொற்கள் இல்லாதே
அருள்புரியும் குருவாக அன்றாலின் கீழமர்ந்த,
கருள்தெரியும் கண்டத்தன் கமலமொத்த கழல்போற்றி.



இருள் - துன்பம்; அறியாமை; (திருக்குறள் - "இருள்சேர் இருவினை...”);
விழைதல் - விரும்புதல்;
மருள் - மயக்கம்;
கருள் தெரியும் கண்டத்தன் - நீலகண்டன்; (கருள் - கருமை; கறுப்பு);
கமலம் ஒத்த கழல் - தாமரைமலர் போன்ற, கழல் அணிந்த திருவடி;



5)
பிடிவில்லா மலையெடுத்த பெருமான்பேர் பலஉடையான்
வடிவில்லா மெய்ப்பொருளாய் வடிவெல்லாம் ஆகியவன்
முடிவில்லான் பிறைமதிசேர் முடிஉடையான் கல்லாலின்
அடியில்வீற் றிருந்(து)அறம்சொல் அண்ணலவன் கழல்போற்றி.



பிடி வில்லா மலை டுத்த(முப்புரம் எரித்தபோது கையிற்) பிடிக்கின்ற வில்லாக மேருமலையை ஏந்திய;
வடிவு இல்லா - உருவம் அற்ற;
முடிவு இல்லான் - அழிவற்றவன்;



6)
ஈனமளி அறியாமை இருள்போக்கும் பரஞ்சோதி
மோனமொழி யோடொருசின் முத்திரையால் முனிவர்க்கு
ஞானமுரைத் தருள்வதற்குக் கல்லாலே நல்லவொரு
தானமென விரும்பியவன் தாமரைத்தாள் இணைபோற்றி.



ஈனம் அளி அறியாமை இருள் - இழிவைக் கொடுக்கின்ற அஞ்ஞானம் என்ற இருள்;
பரஞ்சோதி - மேலான சோதி (Supreme Being, as the Light Divine;);
மோன மொழி - மௌன மொழி;
சின்முத்திரை - உபதேசக் குறியாகச் சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக்காட்டும் ஞானமுத்திரை;
நல்ல ஒரு தானம் - ஒரு நல்ல இடம்; (தானம் - ஸ்தானம் - இடம்);



7)
குற்றமிலாக் குணமுடையோர் குவித்தகரத் தோடமர்ந்த
நற்றவர்கள் நால்வர்க்கு நான்மறையின் பொருளுணர்த்த
உற்றஇடம் எனக்கல்லால் உகந்தபரன் மும்மலங்கள்
அற்றசிவன் திருநட்டம் ஆடுமரன் டிபோற்றி.



நற்றவர்கள் நால்வர் - சிறந்த தவசிகளான சனகாதியர்கள்;
உகந் விரும்பி;
திருநட்டம் ஆடும் அரன் - திருக்கூத்து ஆடுகின்ற ஹரன்;



8)
செய்தவினை தருமிடர்கள் தீர்க்கின்ற மெய்ந்நெறியை
எய்தமிக எண்ணிநிதம் இணையடியை மறவாது
கைதொழுநால்வர்க்குக் கருணையொடு கல்லால்கீழ்
உய்திதரும் சிவதன்மம் உரைத்தபிரான் கழல்போற்றி.



எய்த – அடைய; (எய்துதல் - அடைதல்);
நிதம் - தினமும்;
உய்தி - உய்வு;



9)
ஆலமர நிழலினிலே அருட்குருவாய் அமர்ந்தங்குக்
காலடியில் கரம்குவித்துக் கவனத்தோ(டு) அறம்கேட்
சீலமிகு நால்வர்க்குச் செந்நெறியைச் செப்பியவன்
கோலமிகு செங்கமலக் குரைகழற்சே வடிபோற்றி.



நிழல் - ஸ்தானம்; இடம்; (Place);
செந்நெறி - சன்மார்க்கம்;
செப்புதல் - சொல்லுதல்;
கோலம் மிகு செங்கமலக் குரைகழல் சேவடி - அழகிய தாமரை போன்ற, ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த, சிவந்த திருவடி;



10)
அஞ்ஞான இருளகற்றும் ஆசிரியன் அடிபோற்றி
மெய்ஞ்ஞான ஒளியாக விளங்குமரன் பதம்போற்றி
எஞ்ஞான்றும் அழியாத இறைவனடி இணைபோற்றி
செஞ்ஞாயி றொத்திலங்கு சிவன்பாத மலர்போற்றி.



விளங்கும் அரன் - பிரகாசிக்கும் ஹரன்;
எஞ்ஞான்றும் - எக்காலத்திலும்;
அடியிணை - இரு திருவடிகள்;
செஞ்ஞாயிறு ஒத்து இலங்கு சிவன் பாதமலர் - செஞ்சூரியன் போல் திகழ்கின்ற சிவபெருமான் மலர்ப்பாதம்;
(அப்பர் தேவாரம் - 4.112.9 - “சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” - சிவன் - செய்யன். தமிழ்ச் சொல்லாகக் கொண்டு பொருள்கூறிய இடம் இது.);
(அப்பர் தேவாரம் - 4.17.9 - “செஞ்ஞாயி றடிவண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே” - அவர் திருவடியின் நிறம் சிவந்த காலை ஞாயிற்றின் நிறமாகும்.);



அன்புடன்,

வி. சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment