Wednesday, July 8, 2015

01.26 – ஏடகம் - (திருவேடகம்)


01.26 –
ஏடகம் - (திருவேடகம்)



2008-03-09
திருவேடகம்
அன்பர் இடர் களைவாய்
------------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் மா விளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு. 1-5 சீர்களில் மோனை).



1)
கூடிய மாற்று மதத்தவர் கொட்டம்
.. குலைந்திடு மாறு, புகலியர் வேந்தர்
பாடிய "சூழ்க அரன்பெயர்; பாரோர்
.. படுதுயர் தீர்க" எனும்பதி கத்தின்
ஏடிரு வைகைப் புனல்எதிர்த் தோட
.. இனிதருள் செய்த சிவபெரு மானே;
ஈடிலா ஈசா; அடிதொழும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



கூடுதல் - திரளுதல் (To collect, crowd together, assemble, congregate); மிகுதியாதல் (To abound, swell, increase);
மாற்று மதத்தவர் - மாறுபட்ட சமயத்தவர்; ('மாற்றுதல்' என்பதன் வினைத்தொகையாகவும் கொள்ளலாம்);
கொட்டம் - இறுமாப்பு (superciliousness, arrogance); சேட்டை (mischievousness);
குலைதல் - அழிதல் (to be annihilated, destroyed, put an end to);
புகலியர் வேந்தர் - புகலி என்றும் பெயர் உடைய சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்;
ஏடு இரு வைகைப் புனல் எதிர்த்து ஓட - அந்த ஏடு பெரிய வைகை ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திச் செல்ல;
(இருமை - பெருமை (Greatness, largeness, hugeness, eminence);
'இரு' என்று புணர்ச்சி விகாரம். உதாரணங்கள்: இருவிசும்பு - பெரிய ஆகாயம், இருவரை - பெரிய மலை)
ஈடு - இணை; ஒப்பு;
இடர்களை வாயே ஏடகத் தாயே = "இடர்களைவாய்! ஏ ஏடகத் தாயே"
இடர் களைவாய் - 'துன்பங்களை நீக்குபவனே' என்ற விளி;
'' - ஒரு விளிக்குறிப்பு (An exclamation inviting attention); அசையாகவும் கொள்ளலாம்;
ஏடகத்தாய் - (ஏடகத்தாய்) திருவேடகத்தில் உறைபவனே / (ஏடகத் தாய்) திருவேடகத்தில் உறையும் அன்னை;


(சம்பந்தர் தேவாரம் - 3.54.1 - திருப்பாசுரம் -
வாழ்க அந்தணர் வானவர் ஆன்இனம்;
வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;
ஆழ்க தீயதெல் லாம்;அரன் நாமமே
சூழ்க; வையக மும்துயர் தீர்கவே.
)


(சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்...");
(சுந்தரர் தேவாரம் - 7.41.5 - “மேலை விதியே … காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா....");



2)
மணமலர் கொண்டு நிதம்மற வாது
.. மனமகிழ் வெய்திக் கரைபுரண் டோடும்
அணையிலா ஆறாய் விழிவழிந் தோட
.. அருந்தமிழ் பாடி "உலகினில் வேறு
துணையெமக் கேது மலைமகள் ஓர்பால்
.. துணையெனக் கொண்டாய் அருளுக" என்றுன்
இணையடி ஏத்தி வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



துணை - உதவி (succor); காப்பு (protection); கூட்டு (company); மனைவி;
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 1.136.1 - "மாதர் மடப்பிடியும்.. ... மலைமகள் துணையென மகிழ்வர்...")



3)
"அசைவன ஆகி அசைவிலான் ஆகி
.. அதுவென ஆகி அறிகிற எல்லாத்
திசைகளும் ஆய பரம்பொருள் ஆனாய்
.. சிவபெரு மானே; மதியினைச் சென்னி
மிசைஅணி கின்ற அழகனே" என்று
.. விருப்புடன் போற்றித் திருமுறைப் பாக்கள்
இசையொடு பாடி வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



அசைதல் - இயங்குதல் (to move, stir);
அசைவிலான் - அசைவிலாதவன் (one who is motionless) - அசலன் - கடவுள்;
அது என ஆகி - உபநிடதங்களில் 'அது' என்று சொல்லப்படுபவன்;
சென்னிமிசை - தலையின்மேல்;



4)
"படையெனச் சூலம் கரத்தினில் ஏந்திப்
.. படஅர வொன்றை அரையினில் கட்டி
விடையமர் வோனே; பலர்இடு பிச்சை
.. விரும்பிடும் ஈசா; பிணம்இடு காட்டில்
நடமிடும் நம்பா; மலைமகள் நாதா;
.. நதிச்சடை யாய்"என்(று) உளத்தினில் என்றும்
இடையறா தேத்தி வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



படை - ஆயுதம்;
பட அரவு - படத்தை உடைய பாம்பு;
விடை - இடபம்; நந்தி;
இடையறாது ஏத்தி - எப்பொழுதும் துதித்து;



5)
"உமையொரு கூறா; பிறைமதி சூடீ;
.. ஒளிர்திரு நீற்றாய்; நறுமலர்க் கொன்றை
கமழ்சடை மீது நதியினை ஏற்றாய்;
.. கடல்விடம் சேரும் கரியமி டற்றாய்;
விமலனே; வெள்ளை விடைஅமர் வேந்தே;
.. விரும்பனே; வேதம் மொழிகிற நாதா;
இமையவர் கோனே" எனத்தொழும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



கரிய மிடற்றாய் - நீலகண்டனே;
விரும்பன் - விரும்பப்படுபவன்; நம்பன்;
(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.48.7 - "விரும்பி நின் மலர்ப்பாதமே .... விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே")



6)
"ஆற்றையும் சீறும் அரவையும் தாங்கி
.. அவற்றுடன் பாங்காய்க் கதிர்மிகும் திங்கட்
கீற்றையும் சூடும் சிவபெரு மானே;
.. கெட்டவர் கூடச் சிவசிவ என்று
போற்றம கிழ்ந்து முனைவினை எல்லாம்
.. போக்கிஉய் விக்கும் அருட்கடல் ஆனாய்
ஏற்றனே" என்று வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



சீறுதல் - பாம்பு முதலியன சத்தத்துடன் வெகுளுதல் (to hiss, as a serpent);
அரவு - பாம்பு;
பாங்கு - அழகு;
திங்கட்கீற்று - பிறைச்சந்திரன்;
உய்வித்தல் - ஈடேற்றுதல் (to deliver, redeem, liberate);
ஏற்றன் - ஏற்றை உடையவன்; இடப வாகனன்;


(திருஞான சம்பந்தர் தேவாரம் - 3.49.5 -
"கொல்வாரேனும் குணம்பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையு[ம்] நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே");



7)
"ஒன்றும னத்தோ டிணையடி தன்னை
.. உருகிநி னைந்து தொழும்அடி யார்பால்
சென்றவன் காலன் உயிரினைப் போக்கத்
.. திருவடி யாலே உதைத்தருள் செய்தாய்
என்றுமி ருக்கும் இறைவனே; வேதா;
.. இளமதி சூடும் அழகனே; நாதா"
என்றுனை நாளும் வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



ஒன்றுதல் - ஒருமுகப்படுதல் (to set one's mind solely on an object);
ஒன்று மனம் - வினைத்தொகை - ஒன்றிய மனம்;
அடியார் பால் சென்ற வன் காலன் - அடியவராகிய மார்க்கண்டேயரிடம்சென்ற கொடிய எமன்;
வேதன் - வேதம் ஓதுபவன்; வேதத்தின் பொருளாயிருப்பவன்;
(அப்பர் தேவாரம் - 4.81.2 -
ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்கா...”);



8)
"யோசனை இன்றிச் சினம்மிக ஆகி
.. உயர்கயி லாய மலையையெ டுத்து
வீசவி ரைந்த தசமுகன் தன்னை
.. விரலினை இட்டு நெரித்தருள் செய்தாய்;
பூசனை யாக அருந்தமிழ் பாடப்
.. புகலியர் கோனுக்(கு) அமுதினைத் தந்த
ஈச"என் றேத்தி வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



யோசனை - சிந்தனை (thought, reflection, consideration); விவேகம் (discretion, prudence, wisdom);
தசமுகன் - பத்துத் தலைகளை உடைய இராவணன்;
நெரித்தல் - நசுக்குதல்;
அருந்தமிழ் - தேவாரம்;
புகலியர் கோன் - புகலி என்றும் பெயர் உடைய சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்;
அமுது - அமிர்தம்; பால்;



9)
பங்கயத் தானும் பாற்கட லானும்
.. பரம்என வாது புரிகிற வேளை
அங்கவர் தேட அழலென நின்றாய்
.. அருமறை எல்லாம் துதிக்கிற மெய்யே;
பங்குமை உடைய பரமனே" என்று
.. பலவித மாக உனதடி பாடி
இங்குள தலங்கள் பலதொழும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



பங்கயத்தான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
பாற்கடலான் - பாற்கடலில் பள்ளிகொண்ட திருமால்;
அழல் - நெருப்பு;
பங்கு உமை உடைய - திருமேனியில் ஒரு கூறாகப் பார்வதியைக் கொண்ட;

10)
"அழிவிலா ஈசா; அலகிலாத் தேசா;
.. அருவினை நாசா; அருள்புரி நேசா;
விழிநுதல் பெற்றாய்; மலமெலாம் அற்றாய்;
.. மிகுபுகழ் உற்றாய்; உலகெலாம் பெற்றாய்;
வழியறி யாத சமயிகட் கெட்டா
.. மறைப்பொரு ளே"என்(று) அடிமலர்க் கென்றும்
எழில்மலர் தூவி வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



தேசன் - ஒளிவடிவு ஆனவன்;
நாசன் - அழிப்பவன்;
நேசன் - அன்பு உடையவன்;
விழி நுதல் - நெற்றிக்கண்;
பெறுதல் - அடைதல் (to get, obtain, secure, possess); பிறப்பித்தல் (to beget, generate);
பெற்றாய், அற்றாய், உற்றாய், பெற்றாய் - இவை விளிகள் (பெற்றவனே, அற்றவனே,..);
சமயிகள் - மதத்தவர்கள்;
மறைப்பொருளே - வேதத்தின் பொருளாய் உள்ளவனே; (7.70.9 - "வான நாடனே ...")
அடி மலர் - திருவடியாகிய மலர்; (உருவகம்);
எழில் - அழகு;



11)
"உலகெலாம் ஆக்கும் இறைவனே; காக்கும்
.. ஒருவனே; நீர்க்கும் மகிழ்ந்தருள் நோக்கும்
மலைமகள் கோனே; மதியணி வோனே;
.. மனமுறை தேனே; சிவபெரு மானே;
நலமருள் தேவா;" எனத்தினம் நாவால்,
.. நற்றமிழ்ப் பாவால், நறுமணப் பூவால்
இலகுநின் தாளை வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



ஒருவன் - ஒப்பற்றவன்;
அருள் நோக்குதல் - அருட்பார்வையால் பார்த்தல்;
நீர்க்கும் மகிழ்ந்து அருள் நோக்கும் - நீரால் அபிஷேகம் செய்தாலும் மகிழ்ந்து, அருள்புரியும்;
(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 5.47.7 - "மூக்கு வாய் செவி .... அருள் நோக்குவான் .... கச்சி ஏகம்பனே");
மனம் உறை தேன் - (அடியவர்கள்) மனத்தில் உறைந்து இனிமை பயக்கும் தேன் போன்றவன்; (அப்பர் தேவாரம் - 6.62.6 - “திருவானைக் காவிலுறை தேனே”);
நலம் அருள் தேவன் - சங்கரன்;
நற்றமிழ்ப் பா - திருமுறைப் பதிகங்கள்;
இலகு நின் தாள் - ஒளிவீசும் (விளங்கும்) உன் திருவடி;



12)
மலையொரு வில்லாய் வளைத்திட வல்லாய்;
.. மறுவிலா நல்லாய்; ஒருநிகர் இல்லாய்;
அலகிலாச் சோதீ; அருமறை ஓதீ;
.. அழிவிலா ஆதீ; உனையலால் நாதி
இலைஎமக்(கு)" என்று பகலிர வாக
.. இணையடி தன்னை மனத்தினில் எண்ணி
இலைமலர் கொண்டு வழிபடும் அன்பர்
.. இடர்களை வாயே ஏடகத் தாயே.



மலை ரு வில்லாய் - மேருமலையை ஒரு வில்லாக;
வல்லாய் - "வல்லை" என்பது விளியில் "வல்லாய்”; - வல்லவனே;
மறு இலா - குற்றம் அற்ற;
நல்லாய் - "நல்லை" என்பது விளியில் "நல்லாய்” - நல்லவனே; (அப்பர் தேவாரம் - 6.38.6 - “... பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே ...”);
அலகு இலா - அளவு இல்லாத;
சோதீ, ஓதீ, ஆதீ - சோதியே, ஓதியே, ஆதியே, என்ற விளிகள்;
நாதி - காப்பாற்றுவோன் (protector);
பகலிரவாகஇராப்பகலாக;
இலை மலர் கொண்டு - வில்வம் முதலிய இலைகளையும் பல பூக்களையும் கொண்டு;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
(எண்சீர் விருத்தம் - "விளம் மா விளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு. 1-5 சீர்களில் மோனை.
(இந்த வாய்பாட்டில் தேவாரப் பாடல் எதுவும் இல்லை என்று எண்ணுகின்றேன்.
ஓரளவு இவ்வாய்பாட்டை ஒத்திருக்கக்கூடிய தேவாரப் பாடல்:
சம்பந்தர் தேவாரம் - 1.77.1 -
"பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்
.. பொருகடற் பவளமொ டழனிறம் புரையக்”)



ஏடகம் - திருவேடகம்- கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=484

தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=48 )

1 comment:

  1. தனியிற்றெழுதி ஒருசிலர்மட்டும் காணச்செய்தப் பதிகம்யாவும் பலரும்காணும் வண்ண‌ம்இங்கே பதிவிற்காண்டலிற் பேருவகைகொண்டேன்! திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete