Wednesday, July 15, 2015

01.27 – இடைமருதூர் - (திருவிடைமருதூர்)


01.27 –
இடைமருதூர் - (திருவிடைமருதூர்)



2008-03-13
திருவிடைமருதூர்
-----------------------------
(கலிவிருத்தம் - விளம் மா விளம் மா / மா மா விளம் மா)



1)
மட்டிலா மகிழ்ச்சி பெறநினை மனமே
பட்டினத் தடிகள் பதம்தொழு துய்ந்த
நட்டம தாடும் நம்பெரு மானார்
இட்டமா உறையும் இடைமரு தூரே.



மட்டி இலா மகிழ்ச்சி பெற, நினை மனமே - நெஞ்சே, அளவில்லாத மகிழ்ச்சி பெறுவதற்கு (திருவிடைமருதூரை) நினைப்பாயாக;
நட்டம் - கூத்து;
இட்டமா - இட்டமாக; (இட்டம் - இஷ்டம் - விருப்பம்);


குறிப்பு: பட்டினத்தார் திருவிடைமருதூரில் பல காலம் தங்கி வழிபட்டார்;



2)
கலக்கமி லாது களித்திட அடைவாய்
கொலைப்பழி கூடத் தீர்த்துநம் வாழ்வில்
நலத்தினைக் கொடுக்கும் நம்பெரு மான்ஏ(று)
இலங்கிடும் கொடியான் இடைமரு தூரே.



ஏறு இலங்கிடும் கொடியான் - இடபச் சின்னம் பொறித்த கொடியை உடையவன் - சிவன்;
குறிப்பு: வரகுண பாண்டியன் தனது பிரும்மஹத்தி தோஷம் நீங்கிய தலம் திருவிடைமருதூர்;



3)
அமைதி பெறநீ அடைந்திடு மனமே
"உமையாள் கணவா உதவிடும் துணைவா
எமையாள் இறைவா" என்பவர்க் கருளும்
இமையோர் தலைவன் இடைமரு தூரே.



உமையாள் கணவா - உமைக்குக் கணவனே;
எமை ஆள் இறைவா - எம்மை ஆளும் இறைவனே;
இமையோர் தலைவன் - தேவ தேவன்;



4)
முந்தை வினைகள் முற்றிலும் போக
வந்தி மனமே மலைமகள் பாகன்
அந்தம் இல்லான் ஆதியும் ஆனான்
எந்தை உறையும் இடைமரு தூரே.



வந்தித்தல் - தொழுதல்;



5)
இன்புற வேண்டில் என்மட நெஞ்சே
அன்புடன் அடைவாய் "ஐயனே அரனே
என்பணி ஈசா எம்பெரு மானே"
என்பவர்க் கருள்வான் இடைமரு தூரே.



இன்புற வேண்டில் - இன்பமாக வாழ விரும்பினால்;
என்பு அணி ஈசன் - கங்காளன் - சிவன் (siva who wears garlands of bones);

6)
அள்ளிய மலரை அடியினில் இட்டுத்
"தெள்ளிய நீரைத் திருச்சடை வைத்த
வள்ளலே" என்று வாழ்த்திடு வோர்க்(கு)அன்(பு)
உள்ளவன் ஊராம் இடைமரு தூரே.



7)
"அம்மா அருளாய்" னச்சுரர் வேண்ட
வெம்மா கணையை வில்லினிற் கோத்து
மும்மா மதில்கள் முன்எரி செய்த
எம்மான் ஊராம் இடைமரு தூரே.



அம் - அழகு;
மா - பெரிய;
அருளாய் - அருள்வாயாக; அருள் உடையவனே;
அம்மா அருளாய் - "தாயே, அருள்வாயாக" / "அழகிய பேரருளாளனே";
சுரர் - தேவர்கள்;
வெம் மா கணையை - பெரிய எரிக்கும் அம்பினை;
வில்லினில் கோத்து - மேருமலை என்ற வில்லிற் பூட்டி;
மும் மா மதில்கள் - மூன்று பெரிய கோட்டைகள் - திரிபுரங்கள்;
எம்மான் - எம் சுவாமி; எம் தந்தை;



8)
திருமலை எடுத்த தென்இலங் கைக்கோன்
இருபது தோள்கள் இற்றிட அன்று
ஒருவிரல் தன்னை ஊன்றினான் ஊராம்
இருவினை தீர்க்கும் இடைமரு தூரே.



திருமலை - கயிலாயம்;
தென் இலங்கைக்கோன் - அழகிய இலங்கைக்கு அரசன் - இராவணன்;
இற்றிட – அழியும்படி; (இறுதல் - முறிதல் - To break; to snap, as a stick; to become severed, as a limb;);
இருவினை - கொடிய வினை;



9)
பண்ணிய வினைபோய்ப் பன்னலம் பெறச்சேர்
வெண்ணெயுண் மாலும் வேதனும் காணா
வண்ணமு யர்ந்த வரம்பிலாச் சோதி
எண்ணுவார்க் கருள்வான் இடைமரு தூரே.



பண்ணிய வினை போய்ப் பல் நலம் பெறச் சேர் - செய்த வினைகள் எல்லாம் அழிந்து, பல நன்மைகள் அடைய, நீ (திருவிடைமருதூரைச்) சென்று சேர்வாயாக;
வெண்ணெய் உண் மாலும் வேதனும் காணா வண்ணம் - (கண்ணனாக) வெண்ணெய் உண்ட திருமாலும் பிரமனும் காண முடியாதபடி;
உயர்ந்த வரம்பு இலாச் சோதி - எல்லை இன்றி உயர்ந்த பெரிய ஒளி ஆனவன்;
எண்ணுவார்க்கு அருள்வான் இடைமருதூரே - எண்ணி வழிபடுபவர்களுக்கு அருள்புரியும் சிவன் உறையும் திருவிடைமருதூர்;

10)
தெளிவிலா மதத்தோர் செந்நெறி அறியார்
ஒளிவிடும் சோதி உருக்கொளும் ஈசன்
அளியொடு துதிக்கும் அன்பருக் கெல்லாம்
எளியவன் இருப்ப(து) இடைமரு தூரே.



மதம் - சமயம்; செருக்கு / ஆணவம்;
செந்நெறி - செவ்விய வழி (good or fine road); சன் மார்க்கம் (path of virtue, the right way, especially in religious sense);
ஒளிவிடும் சோதி உருக்கொளும் ஈசன் - பிரகாசிக்கும் ஒளிவடிவும், அன்பர் விரும்பும் வடிவும் ஏற்கும் இறைவன்;
அளி - அன்பு; பக்தி;
எளியன் இருப்பது - சுலபமாக அடையப்படுபவன் இருக்கும் ஊர்;



11)
பேசற் கரிய பெரியவன் கயிலை
வாசன் தனது மலரடி இணையை
வாச மலரால் வழிபட அருளும்
ஈசன் தலமாம் இடைமரு தூரே.



பேசற்கு அரிய பெரியவன் - சொல்லைக் கடந்த பெருமான்; (பேசுதல் - சொல்லுதல்);
கயிலை வாசன் - கயிலை மலையில் இருப்பவன்;
நின்மலன் - மலம் அற்றவன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:



இடைமருதூர் - திருவிடைமருதூர் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=396



தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=33 )

No comments:

Post a Comment