Thursday, July 2, 2015

01.11 – ஆனைக்கா - (திருவானைக்கா)


01.
11
னைக்கா - (திருவானைக்கா)



2007-11-24
திருவானைக்கா
-------------------
(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" அரையடி வாய்பாடு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15.1 - “பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்”)
(சுந்தரர் தேவாரம் - 7.77.1 - “பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்”);



1)
அலைசேர் பொன்னி நீராலே
.. அபிடே கம்செய் ஆனைக்கும்
வலையைப் பின்னி மலரடியை
.. வந்திக் கின்ற சிலந்திக்கும்
உலகை ஆளும் அரசனென்றும்
.. உயர்க ணங்கள் தலைமையென்றும்
நிலையைத் தந்த எம்பெருமான்
.. நீர்சூழ் ஆனைக் காவரனே.



பதம் பிரித்து:
அலை சேர் பொன்னி நீராலே அபிடேகம் செய் ஆனைக்கும்,
வலையைப் பின்னி மலர் அடியை வந்திக்கின்ற சிலந்திக்கும்,
உலகை ஆளும் அரசன் என்றும் உயர் கணங்கள் தலைமை என்றும்
நிலையைத் தந்த எம்பெருமான் நீர் சூழ் ஆனைக்கா அரனே.



2)
உலகில் உழன்று மிகவாடி
.. உதவி செய்வார் இலரென்றே
கலங்கு கின்ற மடநெஞ்சே
.. கவலை இன்றி இன்புறவே
சிலந்தி வாயால் வலைபின்னிச்
.. சிவனைப் போற்றி உய்வடைந்த
தலமாய் விளங்கும் ஆனைக்கா
.. தன்னை அடைந்து தொழுவாயே.



பதம் பிரித்து:
உலகில் உழன்று மிக வாடி, உதவி செய்வார் இலர் என்றே
கலங்குகின்ற மட நெஞ்சே; கவலை இன்றி இன்புறவே,
சிலந்தி வாயால் வலை பின்னிச் சிவனைப் போற்றி உய்வு அடைந்த
தலமாய் விளங்கும் ஆனைக்காதன்னை அடைந்து தொழுவாயே.


ஆனைக்கா தன்னை - திருவானைக்காவை;



3)
ஆவி கொள்ள எமன்வந்தே
.. அணுகும் நாளை அறிவார்யார்
கேவி உற்றார் அழுதெரியில்
.. கிடத்தும் காலம் வருமுன்னே
சேவிக் கின்ற சிலந்தியைக்கோச்
.. செங்கட் சோழன் ஆக்கியவன்
வாவி சூழ்ந்த ஆனைக்கா
.. வள்ளல் பாதம் நினைநெஞ்சே.



பதம் பிரித்து:
ஆவி கொள்ள எமன் வந்தே அணுகும் நாளை அறிவார் யார்;
கேவி உற்றார் அழுது, எரியில் கிடத்தும் காலம் வரும் முன்னே,
சேவிக்கின்ற சிலந்தியைக் கோச்செங்கட்சோழன் ஆக்கியவன்,
வாவி சூழ்ந்த ஆனைக்கா வள்ளல் பாதம் நினை நெஞ்சே.


கேவுதல் - மூச்சுத்திணறுதல்;
எரி - நெருப்பு;
வாவி - நீர்நிலைகள்;



4)
எண்ணில் கோடி பிறப்புகளை
.. எடுத்தி ளைக்கும் நிலையொழிந்து
மண்ணில் மீண்டும் வாராமல்
.. மகிழ்ந்தி ருக்கும் நிலைபெறவே
எண்ணில் எளிய வழியுண்டே
.. ஏத்தும் சிலந்திக் கரசளிக்கும்
அண்ணல் உறையும் ஆனைக்கா
.. அதனைத் தொழுவாய் மடநெஞ்சே.



பதம் பிரித்து:
எண் இல் கோடி பிறப்புகளை எடுத்து இளைக்கும் நிலை ஒழிந்து,
மண்ணில் மீண்டும் வாராமல் மகிழ்ந்து இருக்கும் நிலை பெறவே
எண்ணில் எளிய வழி உண்டே; ஏத்தும் சிலந்திக்கு அரசு அளிக்கும்
அண்ணல் உறையும் ஆனைக்கா அதனைத் தொழுவாய் மட நெஞ்சே.


எண்ணில் - 1) எண் இல் (கணக்கற்ற); 2) எண்ணினால்; நினைத்தால்;
இளைத்தல் - சோர்தல்; மெலிதல்;
ஏத்துதல் - துதித்தல்;



5)
வெய்ய வினைகள் அவைபோக
.. மிகவும் எளிய வழியுண்டே
கையை உடைய விலங்கோடு
.. காலெட் டுடைய சிலந்திக்கும்
உய்வைத் தந்த உத்தமனாம்
.. ஓடும் பொன்னிப் புனலாடும்
ஐயன் எந்தை ஆனைக்கா
.. அரனைத் தொழுவாய் மடநெஞ்சே.



பதம் பிரித்து:
வெய்ய வினைகள் அவை போக மிகவும் எளிய வழி உண்டே;
கையை உடைய விலங்கோடு கால் எட்டு உடைய சிலந்திக்கும்
உய்வைத் தந்த உத்தமன் ஆம், ஓடும் பொன்னிப் புனல் ஆடும்
ஐயன், எந்தை, ஆனைக்கா அரனைத் தொழுவாய் மட நெஞ்சே.


வெய்ய - கொடிய; வெப்பமான;
கையை உடைய விலங்கு - கைம்மா - யானை;
புனல் - நீர்;
ஆடுதல் - குளித்தல்; அபிஷேகம் செய்யப் பெறுதல்;
ஐயன் - தலைவன்;
எந்தை - எம் தந்தை;



6)
பண்ணோ டினிய தமிழ்பாடிப்
.. பண்டை வினைகள் அவைபோகக்
கண்ணீர் பெருக்கிக் கழல்போற்றிக்
.. காதல் செய்வாய் மடநெஞ்சே
மண்ணாள் அரசாய் வந்துதிக்கும்
.. வரம்சி லந்திக் கருள்செய்யும்
தண்ணீர் சூழும் ஆனைக்கா
.. தன்னில் உறையும் எந்தையையே.



பதம் பிரித்து:
பண்ணோடு இனிய தமிழ் பாடிப், பண்டை வினைகள் அவை போகக்
கண்ணீர் பெருக்கிக் கழல் போற்றிக், காதல் செய்வாய் மட நெஞ்சே;
மண் ஆள் அரசாய் வந்து உதிக்கும் வரம் சிலந்திக்கு அருள்செய்யும்,
தண்ணீர் சூழும் ஆனைக்காதன்னில் உறையும் எந்தையையே.


பண் - ராகம்;
இனிய தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன;
பண்டை - பழைய;
கழல் - திருவடி;
காதல் - அன்பு; பக்தி;
மண் ஆள் அரசாய் - (கோசெங்கட்சோழன் என்ற) உலகை ஆளும் அரசனாக;
உதித்தல் - பிறத்தல்; தோன்றுதல்;
ஆனைக்கா தன்னில் - திருவானைக்காவில்;



7)
வாயால் பந்தல் செய்சிலந்தி
.. மன்னன் ஆகப் பிறப்பிப்பான்
தூயா இறைவா பெருமானே
.. துணைவா அருள்வாய் என்றென்றே
ஓயா துள்ளத் தடிபோற்றி
.. உருகும் அடியார் துயர்களைந்து
தாயாய் நிற்பான் ஆனைக்கா
.. தன்னைத் தொழுவாய் மடநெஞ்சே.



பதம் பிரித்து:
வாயால் பந்தல் செய் சிலந்தி மன்னன் ஆகப் பிறப்பிப்பான்;
"தூயா, இறைவா, பெருமானே, துணைவா, அருள்வாய்" என்று என்றே
ஓயாது உள்ளத்து அடி போற்றி உருகும் அடியார் துயர் களைந்து,
தாயாய் நிற்பான் ஆனைக்காதன்னைத் தொழுவாய் மட நெஞ்சே.


பந்தல் செய் சிலந்தி - பந்தல் ஆக வலை பின்னும் சிலந்தி;
தூயா - தூய்மையானவனே;
உள்ளத்து - உள்ளத்தில்;
அடி போற்றுதல் - திருவடியை வணங்குதல்;
தாயாய் நிற்பான் ஆனைக்கா தன்னை - தாயாகிக் காப்பவன் உறையும் திருவானைக்காவை;

8)
இலங்கை மன்னன் கயிலாயம்
.. எடுக்கும் போது விரலூன்றிக்
கலங்கிக் கதறச் செய்துபின்னர்க்
.. கருணை செய்தான் கையுள்ள
விலங்கு சிலந்தி இவையிரண்டும்
.. வழிபட் டுய்ந்த பொன்னிஅலை
அலம்பும் தலமாம் ஆனைக்கா
.. அதனைத் தொழுவாய் மடநெஞ்சே.



பதம் பிரித்து:
இலங்கை மன்னன் கயிலாயம் எடுக்கும் போது விரல் ஊன்றிக்
கலங்கிக் கதறச் செய்து பின்னர்க் கருணை செய்தான், கை உள்ள
விலங்கு சிலந்தி இவை இரண்டும் வழிபட்டு உய்ந்த, பொன்னி அலை
அலம்பும் தலம் ஆம் ஆனைக்கா அதனைத் தொழுவாய் மட நெஞ்சே.


கலங்கிக் கதறச் செய்து - இராவணனைக் கலங்கிக் கதறும்படி நசுக்கி;
கை உள்ள விலங்கு - யானை;
அலம்புதல் - ஒலித்தல்; கழுவுதல்;



9)
அன்னம் பன்றி என்றாகி
.. அயனும் மாலும் தேடிடவே
முன்னம் தீயாய் நின்றிருந்த
.. முதல்வன் சிலந்திக் கருள்செய்து
மன்னன் ஆகப் பிறப்பித்த
.. மாதோர் கூறன் மேவுகிற
பொன்னிக் கரைத்தென் ஆனைக்கா
.. போற்றி உய்யென் மடநெஞ்சே.



பதம் பிரித்து:
அன்னம் பன்றி என்று ஆகி, அயனும் மாலும் தேடிடவே
முன்னம் தீ ஆய் நின்றிருந்த முதல்வன், சிலந்திக்கு அருள்செய்து
மன்னன் ஆகப் பிறப்பித்த, மாது ஓர் கூறன் மேவுகிற,
பொன்னிக் கரைத் தென் ஆனைக்கா போற்றி உய் என் மட நெஞ்சே.


அயன் - பிரமன்;
மால் - திருமால்;
முன்னம் - முன்பு;
முதல்வன் - ஆதியாக உள்ளவன்;
மாது ஓர் கூறன் - பார்வதியை ஒரு கூறு ஆக உடைய சிவன்;
மேவுதல் - உறைதல்; விரும்புதல்;
தென் ஆனைக்கா - இனிய அழகிய திருவானைக்கா; (தென் - அழகு; இனிமை);
உய்தல் - நற்கதி அடைதல்;



10)
பண்டை நெறியை உணராமல்
.. பழித்துப் பேசும் பரசமய
மிண்டர் சொல்லும் சொல்லெல்லாம்
.. மெய்யல் லவென்றே அறிந்தோர்முன்
தொண்டு செய்த சிலந்திக்குச்
.. சோழ அரசைத் தந்தருளும்
அண்டர் தலைவன் ஆனைக்கா
.. அரனை வழிபட் டுய்வாரே.



பதம் பிரித்து:
பண்டை நெறியை உணராமல், பழித்துப் பேசும் பர சமய
மிண்டர் சொல்லும் சொல் எல்லாம் மெய் அல்ல என்றே அறிந்தோர், முன்
தொண்டு செய்த சிலந்திக்குச் சோழ அரசைத் தந்து அருளும்
அண்டர் தலைவன் ஆனைக்கா அரனை வழிபட்டு உய்வாரே.


பண்டை - பழைய; தொன்மையான;
நெறி - வழி; மார்க்கம்;
பர சமய மிண்டர் - புறச் சமயக் கல் நெஞ்சர்கள்;
அண்டர் - தேவர்கள்;
அரன் - ஹரன்;



11)
ஆனை சிலந்தி அவையிரண்டும்
.. அன்பாய்த் தினமும் தொண்டுசெய்யச்
சேனைத் தலைவன் உறையூர்க்கோச்
.. செங்கட் சோழன் எனவாக்கும்
கோனைப் பத்தர் மனத்தினிலே
.. குறையா தென்றும் ஊறுகிற
தேனை இனிய ஆனைக்கா
.. சென்று தொழுவாய் மடநெஞ்சே.



பதம் பிரித்து:
ஆனை சிலந்தி அவை இரண்டும் அன்பாய்த் தினமும் தொண்டு செய்யச்,
சேனைத் தலைவன் உறையூர்க் கோச் செங்கட் சோழன் என ஆக்கும்
கோனைப், பத்தர் மனத்தினிலே குறையாது என்றும் ஊறுகிற
தேனை, இனிய ஆனைக்கா சென்று தொழுவாய் மட நெஞ்சே.


* யானையைக் கணங்கள் தலைவனாகவும் சிலந்தியைக் கோச்செங்கண்ணனாகவும் ஆக்கி அருளினார்.
கோன் - அரசன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
திருவானைக்கா - திருவானைக்காவல் - கோயில் தகவல்கள்: http://temple.dinamalar.com/New.php?id=314 )



யானைக்கும் சிலந்திக்கும் அருளியது: http://www.thevaaram.org/katturai/27.html
"….....
முற்பிறவியில் சிலந்தியாயிருந்து வெண்ணாவல் மரத்தடிக்கீழ் வீற்றிருந்த பெருமான்மீது சருகு படாவண்ணம் தன் வாயின் நூலால் பந்தர் செய்த புண்ணியத்தால் மறுபிறவியில் சோழ மன்னரான கோச்செங்கட் சோழர் வரலாறு பெரியபுராணத்துள் காண்பது. சிலந்தியும், யானையும் முற்பிறவி உணர்ந்தவர்கள், முற்பிறவியிலும் இருவரும் பகையாயிருந்தவர்களே. இருவருள் சிலந்தி சோழ மன்னர் ஆனார். யானை கயிலையில் கணங்கட்குத் தலைவர் ஆனார். முற்பிறவியில் மாலியவானே சிலந்தி, புட்பதந்தனே யானை. சிலந்திக்கு அருள்செய்த திறத்தைப், "பூச்சூழ்ந்த" என்னும் பாடலில், "சிலந்திக் கந்நாள் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்" (தி. 6 . 75 பா.8) என்ற பகுதியில் போற்றி உள்ளமை காணலாம்....... “



No comments:

Post a Comment