Saturday, March 6, 2021

P.257 - பாதிரிப்புலியூர் - துணிமதிச் சடையானை

2014-12-01

P.257 - பாதிரிப்புலியூர்

-------------------

(கலிவிருத்தம் - தானன தனதான தானன தனதான)

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")


1)

துணிமதிச் சடையானைத் தொழுதவர் கரையேறப்

பிணிகலும் புணையாகப் பேரருள் புரியீசன்

பணியணி திருமார்பன் பாதிரிப் புலியூரை

நணியடி பணிவாரை நலிவினை நணுகாவே.


துணிமதிச் சடையானைத் தொழு-தவர் கரையேறப் - பிறையை அணிந்த சடையுடையவனைத் தொழுத தவத்தினரான திருநாவுக்கரசர் கரையை அடையும்படி; (துணி - துண்டம்); (தவர் - தவம் உடையவர்);

பிணி-கலும் புணை ஆகப் பேரருள் புரி ஈசன் - (கடலில் ஆவரை ஆழ்த்தும் பொருட்டுச் சமணர்கள்) அவரோடு கட்டிய கல்லே தெப்பம் ஆகி மிதக்கும்படி பேரருள் செய்த ஈசன்; (பிணித்தல் - கட்டுதல்); (கலும் - கல்லும்; இடைக்குறை விகாரம்); (புணை - தெப்பம்);

பணி அணி திருமார்பன் பாதிரிப்புலியூரை நணி டி பணிவாரை - மார்பில் பாம்பை மாலையாகப் பூண்ட பெருமானது திருப்பாதிரிப்புலியூரை அடைந்து திருவடியை வணங்கும் பக்தர்களை; (பணி - பாம்பு); (நணி - நண்ணி - அடைந்து);

லி-வினை நணுகாவே - வருத்துகின்ற வினைகள் நெருங்கமாட்டா; அவை அழியும்; (நலிதல் - வருத்துதல்);


2)

வந்தடி பணிதேவர் வாழ்ந்திடப் புர(ம்)மூன்றும்

வெந்தற மலைவில்லில் வெங்கணை பிணைவீரன்

பைந்தமிழ் பலபாடிப் பாதிரிப் புலியூரில்

எந்தையைத் தொழுதேத்தில் இருவினை அடையாவே.


வந்து அடி பணி தேவர் வாழ்ந்திடப் - வந்து திருவடியைப் பணிந்த தேவர்கள் உய்யும்படி;

பும் மூன்றும் வெந்து அற மலைவில்லில் வெங்கணை பிணை-வீரன் - முப்புரங்களும் வெந்து அழியும்படி மேருவில்லில் கொடிய சுட்டெரிக்கும் கணையைக் கோத்த வீரன்; (பிணைத்தல் - இணைத்தல்; கோத்தல்);

பைந்தமிழ் பல பாடிப் பாதிரிப்புலியூரில் எந்தையைத் தொழுது ஏத்தில் - அழகிய தமிழ்ப்பாமாலைகள் பல பாடித் திருப்பாதிரிப்புலியூரில் உறையும் எம் தந்தையைத் துதித்து வணங்கினால்;

இருவினை அடையாவே - கொடிய வினைகள் நம்மை நெருங்கமாட்டா;


3)

திரையினில் ஒருகல்லைச் சீரிய புணையாக்கி

அரசினைக் கரையேற்றி அருளிய சடையானைப்

பரமனைக் கடல்சூழ்ந்த பாதிரிப் புலியூரில்

வரதனை மறவாமல் வழிபடு மடநெஞ்சே.


திரையினில் ஒருகல்லைச் சீரிய புணைக்கி அரசினைக் கரையேற்றி அருளிய சடையானைப் - கடலில் ஒரு கல்லையே சிறந்த தெப்பம் ஆக்கித் திருநாவுகரசரைக் கரையேற்றி அருளிய சடையினனை; (திரை - கடல்); (புணை - தெப்பம்); (அரசு - இங்கே, திருநாவுக்கரசர்);

பரமனைக் - மேலானவனை;

கடல்சூழ்ந்த பாதிரிப்புலியூரில் வரதனை - கடல் சூழ்ந்த திருப்பாதிரிப்புலியூரில் உறையும், வரதனை; (வரதன் - வரம் அளிப்பவன்);

மறவாமல் வழிபடு மடநெஞ்சே - பேதைமனமே, மறத்தலின்றித் தினமும் வணங்கு;


4)

வேலனை அருள்தாதை வீட்டுதல் தொழிலான

காலனை உதைசெய்த கழலினன் அழல்வண்ணன்

பாலன திருநீற்றன் பாதிரிப் புலியூரில்

சேலன விழிபங்கன் சேவடி நினைநெஞ்சே.


வேலனை அருள்-தாதை - முருகனை அருளிய தந்தை;

வீட்டுதல் தொழிலான காலனை உதைசெய்த கழலினன் - கொல்லுதலே தொழிலான காலனை உதைத்து அழித்த திருப்பாதன்; (வீட்டுதல் - கொல்லுதல்);

அழல்வண்ணன் - தீவண்ணன்;

பால் அன திருநீற்றன் - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவன்;

பாதிரிப்புலியூரில் சேல் அன விழி-பங்கன் - திருப்பாதிரிப்புலியூரில் சேல்மீன் போன்ற கண்ணை ஒரு பங்கில் உடையவன் (= உமைபங்கன்); (சம்பந்தர் தேவாரம் - 1.50.8 - "வாரொடுங்கும் கொங்கைபங்கா")

சேவடி நினை நெஞ்சே - நெஞ்சே, அப்பெருமானது சிவந்த திருவடியை எண்ணு;


5)

பித்தனை ஒருபங்கிற் பெண்ணனை அழியாத

நித்தனை ஒருகையில் நிழல்மழு உடையானைப்

பத்தரைக் கரையேற்றும் பாதிரிப் புலியூரில்

முத்தனைத் தொழுதேத்தில் முன்வினை அடையாவே.


பித்தனை, ஒரு பங்கில் பெண்ணனை - பேரருளாளனை, உமைபங்கனை; (அப்பர் தேவாரம் – 5.79.3 - “அருமறையனை ஆணொடு பெண்ணனைக்");

அழியாத நித்தனை - என்றும் அழியாது உள்ளவனை;

ஒரு கையில் நிழல்-மழு உடையானைப் - ஒளிவீசும் மழுவைக் கையில் ஏந்தியவனை; (நிழல் - ஒளி);

பத்தரைக் கரையேற்றும் பாதிரிப்புலியூரில் முத்தனைத் தொழுதேத்தில் - திருநாவுக்கரசரைக் கரைசேர்த்த (/ பக்தர்களை உய்விக்கும்) திருப்பாதிரிப்புலியூரில் உறையும் அநாதிமுக்தனை வணங்கினால்;

முன்வினை அடையாவே - பழவினைகள் நெருங்கமாட்டா; அவை அழியும்;


6)

மழவிடை மிசையேறி மாதுடன் வருமீசன்

அழலினைக் கரமேந்தி ஆரிருள் நடமாடி

பழவினை அவைதீர்க்கும் பாதிரிப் புலியூரிற்

குழகனின் அடிபோற்றிக் கும்பிட அடைநெஞ்சே.


மழவிடைமிசைறி மாதுடன் வரும் ஈசன் - இளைய எருதின்மேல் ஏறி உமையோடு வரும் ஈசன்;

அழலினைக் கரம் ஏந்தி ஆரிருள் நடம் ஆடி - கையில் தீயை ஏந்தி நள்ளிருளில் கூத்தாடுபவன்;

குழகன் - அழகன்; இளையோன்;


7)

நாவினுக் கரையர்க்கு நற்றுணை எனநின்றான்

தீவணத் திருமேனிச் சேவகன் முடிமீது

பாவன நதிசூடி பாதிரிப் புலியூரில்

தேவன தடிபோற்றத் தீவினை தொடராவே.


நாவினுக்கு அரையர்க்கு நற்றுணை என நின்றான் - திருநாவுக்கரசருக்கு நல்ல துணை ஆனவன்;

தீவணத் திருமேனிச் சேவகன் - தீ வண்ணம் உடைய செம்மேனி வீரன்; (சேவகன் - வீரன்);

முடிமீது பாவன நதிசூடி - திருமுடியில் தூய கங்கையைச் சூடியவன்;

பாதிரிப்புலியூரில் தேவனது அடிபோற்றத் தீவினை தொடராவே - திருப்பாதிரிப்புலியூரில் சிவபெருமானது திருவடியை வணங்கினால் நம்மைத் தீவினைகள் நெருங்கமாட்டா;


8)

சீரிய குணமின்றித் திருமலை பெயர்மூடன்

ஆரிடர் படவூன்றி அழவொரு பெயரீந்தான்

பாரினர் சுரர்போற்றும் பாதிரிப் புலியூரில்

நீரிள மதிசூடி நீள்கழல் நினைநெஞ்சே.


சீரிய குணம் இன்றித் திருமலை பெயர்-மூடன் ஆரிடர் படன்றி, அழரு பெயர் ஈந்தான் - நற்குணம் இன்றிக் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான தசமுகனைப் பெருந்துன்பம் படும்படி திருவிரல் ஊன்றி நசுக்கி, அவன் அழுது தொழ, இரங்கி இராவணன் (= அழுதவன்) என்ற பெயரை அவனுக்குத் தந்தவன்; (சீரிய – சிறந்த; சிறப்பான); (ஆர் இடர் - பெரும்துன்பம்);

பாரினர் சுரர் போற்றும் பாதிரிப்புலியூரில் - மண்ணோரும் விண்ணோரும் போற்றும் திருப்பாதிரிப்புலியூரில் உறையும்;

நீர் இளமதி சூடி நீள்-கழல் நினை நெஞ்சே - கங்கையையும் இளந்திங்களையும் சூடியவனது நீண்ட திருவடியை, நெஞ்சே நீ எண்ணு;


9)

யான்பரம் எனு(ம்)மாயன் நான்முகன் இவர்நாண

வான்வளர் எரியான கோன்விரி சடைமீது

பான்மதி புனையீசன் பாதிரிப் புலியூரைத்

தேன்மலர் கொடுபோற்றில் தீவினை அடையாவே.


"யான் பரம்" எனும் மாயன் நான்முகன் இவர் நாண - “நானே உயர்ந்தவன்" என்று வாதுசெய்த திருமாலும் பிரமனும் நாணும்படி;

வான் வளர் எரி ஆன கோன் - வானில் ஓங்கிய ஜோதி உருக்கொண்ட தலைவன்;

விரிசடை மீது பான்மதி புனை ஈசன் - விரிந்த சடையின்மேல் பால் போன்ற வெண்பிறையை அணிந்த ஈசன்; (பான்மதி - பால்+மதி - வெண்திங்கள்);

பாதிரிப்புலியூரைத் தேன்மலர்கொடு போற்றில் தீவினை அடையாவே - அப்பெருமான் உறையும் திருப்பாதிரிப்புலியூரை வாசமலர்களால் வழிபட்டால் நம்மைத் தீவினை அடையமாட்டா;


10)

மடவுரை பலசொல்லும் மசடரை மதியேன்மின்

தடவரை உறைநாதன் தமிழிசை மகிழ்காதன்

படவர வரைநாணன் பாதிரிப் புலியூரிற்

கடவுளின் அடிவாழ்த்தில் கவலைகள் தொடராவே.


மடவுரை பல சொல்லும் மசடரை மதியேன்மின் - பல உளறல்களைப் பேசும் கீழோரை நீங்கள் பொருட்படுத்தவேண்டா; (மட உரை - அறியாமை மிக்க பேச்சு); (மசடர் - குணங்கெட்டவர்); (திருப்புகழ் - சிதம்பரம் - "அவகுண விரகனை .. .. அசடனை மசடனை");

தடவரை உறை-நாதன் - பெரிய கயிலைமலையில் இருக்கும் நாதன்; (தடம் - பெரிய); (வரை - மலை);

தமிழிசை மகிழ்-காதன் - சந்தத்தமிழ்ப்-பாமாலைகளை விரும்பிக் கேட்பவன்;

படவரவு அரைநாணன் - படம் உடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (படவரவு - பட அரவு);

பாதிரிப்புலியூரில் கடவுளின் அடிவாழ்த்தில் கவலைகள் தொடராவே - திருப்பாதிரிப்புலியூரில் உறையும் அந்தப் பெருமானது திருவடியை வாழ்த்தினால் கவலைகள் தீரும்;


11)

கனிவொடு தமிழ்பாடிக் கைகொடு மலர்தூவித்

தனிவிடை உடையானைத் தண்மதி இளநாகம்

பனிபுனை சடையானைப் பாதிரிப் புலியூரில்

இனிதுறை பெருமானை ஏத்திடில் வருமின்பே.


கனிவொடு தமிழ் பாடிக் கைகொடு மலர் தூவித் - மனம் கனிந்து அன்போடு தமிழ்ப்பாமாலைகளைப் பாடிக், கையால் பூக்களைத் தூவி;

தனி விடை உடையானைத் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவனை;

தண்மதி இளநாகம் பனி புனை சடையானைப் - குளிர்ந்த திங்கள், இளம்பாம்பு, கங்கை இவற்றை அணிந்த சடையானை; (பனி - புனல் - கங்கை);

பாதிரிப்புலியூரில் இனிது உறை பெருமானை ஏத்திடில் வரும் இன்பே - திருப்பாதிரிப்புலியூரில் விரும்பி உறையும் சிவபெருமானைத் துதித்தால் இன்பமே நம்மை வந்தடையும்;


பிற்குறிப்பு - யாப்புக்குறிப்பு:

கலிவிருத்தம் - தானன தனதான தானன தனதான - சந்தம்; இதனை "விளம் காய் விளம் காய்" என்ற வாய்பாடு போலவும் கருதலாம்;

  • தானன - என்ற இடங்கள் தனதன என்றும் வரக்கூடும்;

  • தனதான - என்ற இடங்கள் தானதன, தானான, என்றெல்லாம் வரக்கூடும்;

(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "வடியுடை மழுவேந்தி")


வி. சுப்பிரமணியன்

------- ---------