Saturday, October 26, 2019

P.248 - கலயநல்லூர் - சேர்வினை தீர்வழி

2014-08-29

P.248 - கலயநல்லூர்

(கும்பகோணம் அருகுள்ள சாக்கோட்டை)

------------------

(12 பாடல்கள்)

(அறுசீர் விருத்தம் - தானன தானன தானா x2)

(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாகம் உடையார்");

(அப்பர் தேவாரம் - 4.4.1 - "பாடிளம் பூதத்தி னானும்")

* யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க.


1)
சேர்வினை தீர்வழி என்று தேடிவந் துன்னை அடைந்தேன்

ஆர்விடந் தன்னை மிடற்றில் அடைத்தவ னேஅருள் நல்காய்

ஊர்விடை யின்மிசை ஏறி ஊரிடும் உண்பலி கொள்வாய்

கார்வயல் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.


சேர்-வினை தீர்-வழி என்று தேடிவந்து உன்னை அடைந்தேன் - பல பிறவிகளில் சேர்த்த வினைகள் தீரும் வழி என்று நாடிவந்து உன்னைச் சரணடைந்தேன்; (சேர்த்தல் - திரட்டுதல்; ஈட்டுதல்); (வழி - உபாயம்);

ஆர்-விடந்தன்னை மிடற்றில் அடைத்தவனே, அருள் நல்காய் - உண்ட ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்தவனே, அருள்வாயாக; (ஆர்தல் - உண்ணுதல்; பரவுதல்); (மிடறு - கண்டம்);

ஊர்-விடையின்மிசை ஏறி ஊர் இடும் உண்பலி கொள்வாய் - இடபவாகனத்தின்மேல் ஏறிச்சென்று ஊரர் இடும் பிச்சையை ஏற்பவனே; (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்); (விடை - இடபம்); (உண்பலி - பிச்சை);

கார்வயல் சூழ்ந்ழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - நீர் மிகுந்த வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கார் - நீர்; மேகம்; மழை); (சூழ்ந்தழகாரும் - சூழ்ந்த அழகு ஆரும்; தொகுத்தல்விகாரம்);


2)

பழவினை தீர்வழி என்று பாடிவந் துன்னை அடைந்தேன்

மழவிடை ஒன்றை நயந்த மன்னவ னேஅருள் நல்காய்

கழலினிற் கண்மலர் இட்ட கரியவற் காழியை ஈந்தாய்

கழனிகள் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.


பழவினை தீர்-வழி என்று பாடிவந்து உன்னை அடைந்தேன் - என் பழவினைகள் தீரும் வழி என்று உன் புகழைப் பாடிவந்து உன்னைச் சரணடைந்தேன்;

மழ-விடை ஒன்றை நயந்த மன்னவனே, அருள் நல்காய் - ஓர் இளைய எருதினை வாகனமாக விரும்பிய அரசனே, அருள்வாயாக;

கழலினில் கண்மலர் இட்ட கரியவற்கு ஆழியை ஈந்தாய் - உன் திருவடியில் தன் மலர்க்கண்ணை மலராக இட்டு வழிபாடு செய்த திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்தவனே;

கழனிகள் சூழ்ந்ழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கழனி - வயல்); (சூழ்ந்தழகாரும் - சூழ்ந்த அழகு ஆரும்; தொகுத்தல்விகாரம்);


3)

அரும்பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன்

கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவ னேஅருள் நல்காய்

சுரும்பமர் கொன்றை அரவம் தூமதி சேர்செஞ் சடையாய்

கரும்பொழில் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.


அரும்-பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன் - நீக்குதற்கு அரிய பிறவிப்பிணி தீரவேண்டிப் பக்தியோடு உன்னைச் சரணடைந்தேன்;

கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவனே, அருள் நல்காய் - கரும்பை வில்லாக ஏந்திய மன்மதனை எரித்தவனே, அருள்வாயாக; (வேள் - மன்மதன்);

சுரும்பு அமர் கொன்றை அரவம் தூ-மதி சேர் செஞ்சடையாய் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலர், பாம்பு, தூய திங்கள் இவற்றையெல்லாம் செஞ்சடையில் அணிந்தவனே; (சுரும்பு - வண்டு); (அமர்தல் - விரும்புதல்);

கரும்-பொழில் சூழ்ந்ழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - அடர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கருமை - கறுப்பு; பெருமை; பசுமை); (சூழ்ந்தழகாரும் - சூழ்ந்த அழகு ஆரும்; தொகுத்தல்விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 2.47.10 - "கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தான்");


4)

வந்தடை வல்வினை தீர வண்டமிழ் பாடி அடைந்தேன்

சந்திர னைச்சடை வைத்த சங்கர னேஅருள் நல்காய்

வந்தனை செய்யிமை யோர்கள் மகிழ்வுற மும்மதில் எய்தாய்

கந்த மலர்ப்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


வந்து அடை- வல்வினை தீர வண்தமிழ் பாடி அடைந்தேன் - வந்து பொருந்துகின்ற வலிய வினை தீரும் பொருட்டு வளப்பமான தமிழ்ப்பாமாலைகள் பாடி உன்னைச் சரணடைந்தேன்;

சந்திரனைச் சடை வைத்த சங்கரனே, அருள் நல்காய் - சந்திரனைச் சடையில் சூடிய சங்கரனே, அருள்வாயாக;

வந்தனை செய்- இமையோர்கள் மகிழ்வுற மும்மதில் எய்தாய் - போற்றி வணங்கிய தேவர்கள் மகிழும்படி முப்புரங்களை ஒரு கணை எய்து அழித்தவனே;

கந்த-மலர்ப்பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே;


5)

ஒளிவிடம் இன்றித் துரத்தும் உறுவினைக் கஞ்சி அடைந்தேன்

அளிவிடந் தன்னை அயின்ற அணிமிட றாஅருள் நல்காய்

தளியென அன்பர்கள் நெஞ்சில் தங்கிடு வாய்நறை உண்டு

களியளி ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


ஒளிவு-இடம் இன்றித் துரத்தும் உறுவினைக்கு அஞ்சி அடைந்தேன் - நான் தப்பி ஒளித்துக்கொள்ள எவ்விடமும் இல்லாதபடி என்னைத் துரத்தும் மிக்க தீவினைக்கு அஞ்சி உன்னைச் சரணடைந்தேன்;

அளி விடந்-தன்னை அயின்ற அணிமிடறா, அருள் நல்காய் - அள்ளி நஞ்சை உண்ட அழகிய நீலகண்டனே, அருள்வாயாக; (அளி விடம்தன்னை - 1. விடத்தை அள்ளி; "அள்ளி" என்பது எதுகைநோக்கி இடைக்குறையாக அளி என்று வந்தது; அள்ளுதல் - கையால் முகத்தல்; 2. "அளிவிடம்" என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, "கடல் அளித்த நஞ்சை" என்றும் பொருள்கொள்ளலாம்); (அயில்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா மழுவா ளுடையாய்");

தளி என அன்பர்கள் நெஞ்சில் தங்கிடுவாய் - அன்பர்கள் நெஞ்சே கோயிலாகக் கொண்டவனே; (தளி - கோயில்);

நறை உண்டு களி- அளி ஆர் பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - தேனை உண்டு களிக்கின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (நறை - தேன்); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


6)

தீவினை ஆயின தீரச் செந்தமிழ் பாடி அடைந்தேன்

சேவினை ஊர்திந யந்த செஞ்சடை யாய்அருள் நல்காய்

பூவிடு மாணி தனக்குப் பொன்றலி லாநிலை ஈந்தாய்

காவிடை வண்டறை கின்ற கலயநல் லூர்ப்பெரு மானே.


தீவினை ஆயின தீரச் செந்தமிழ் பாடி அடைந்தேன் - தீவினையெல்லாம் தீரும் பொருட்டுச் சிறந்த தமிழ்ப்பாமாலைகள் பாடி உன்னைச் சரணடைந்தேன்;

சேவினை ஊர்தி நயந்த செஞ்சடையாய், அருள் நல்காய் - இடபத்தை வாகனமாக விரும்பிய, செஞ்சடையினனே, அருள்வாயாக; (சே - இடபம்);

பூடு மாணிதனக்குப் பொன்றல் இலா-நிலை ஈந்தாய் - பூக்கள் தூவி வணங்கிய மார்க்கண்டேயருக்கு இறவாமையை (=சிரஞ்சீவித்தனத்தை) அருளியவனே; (மாணி - மார்க்கண்டேயர்); (பொன்றல் - பொறுதல் - இறத்தல்);

காவிடை வண்டு அறைகின்ற கலயநல்லூர்ப் பெருமானே - சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கா - சோலை); ( அறைதல் - ஒலித்தல்);


7)

மாமலை போலுள பாவம் மாய்வுற உன்னை அடைந்தேன்

கோமள வல்லியை வாமம் கொண்டவ னேஅருள் நல்காய்

தூமதி கூவிளம் நாகம் சூடிய செஞ்சடை யானே

காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


மா-மலை போல் உள பாவம் மாய்வு-உற உன்னை அடைந்தேன் - பெரிய மலை போல உள்ள தீவினை அழியவேண்டி உன்னைச் சரணடைந்தேன்;

கோமளவல்லியை வாமம் கொண்டவனே, அருள் நல்காய் - மென்கொடி போன்ற உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டவனே, அருள்வாயாக; (கோமளம் - மென்மை; அழகு; இளமை); (வல்லி - கொடி);

தூ-மதி, கூவிளம், நாகம், சூடிய செஞ்சடையானே - தூய திங்கள், வில்வம், பாம்பு இவற்றைச் சிவந்த சடையில் சூடியவனே; (கூவிளம் - வில்வம்);

காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (காமரு - அழகிய);


8)

நெடிய வினைத்தொடர் நீங்க நின்னடி போற்றி அடைந்தேன்

முடியினில் ஆறது சூடும் முக்கண னேஅருள் நல்காய்

கொடிய அரக்கனை அன்று குரைகழ லால்நெரி செய்தாய்

கடிமலர் ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


நெடிய வினைத்தொடர் நீங்க நின்-அடி போற்றி அடைந்தேன் - எல்லையின்றி நீளும் வினையெல்லாம் அழிய உன் திருவடியைப் போற்றிச் சரணடைந்தேன்;

முடியினில் ஆறது சூடும் முக்கணனே, அருள் நல்காய் - திருமுடியில் கங்கையைச் சூடும் முக்கண்ணனே, அருள்வாயாக; (ஆறது - ஆறு - கங்கை; அது - பகுதிப்பொருள்விகுதி);

கொடிய அரக்கனை அன்று குரைகழலால் நெரிசெய்தாய் - கொடிய இராவணனை அவன் கயிலையைப் பெயர்த்த அன்று ஒலிக்கும் கழல் அணிந்த திருப்பாதத்தால் நசுக்கியவனே; (நெரித்தல் - நசுக்குதல்);

கடிமலர் ஆர்-பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே;


9)

பண்ணிய வல்வினை தீரப் பைந்தமிழ் பாடி அடைந்தேன்

எண்ணிட ஆயிரம் நாமம் ஏற்றவ னேஅருள் நல்காய்

மண்ணகழ் மாலொடு வேதன் வாழ்த்திடு மாறுயர் சோதீ

கண்ணிறை பூமலி சோலைக் கலயநல் லூர்ப்பெரு மானே.


பண்ணிய வல்வினை தீரப் பைந்தமிழ் பாடி அடைந்தேன் - செய்த வலிய வினையெல்லாம் தீரும் பொருட்டு அழகிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி உன்னைச் சரணடைந்தேன்; (பை - பசுமை; அழகு);

எண்ணிட ஆயிரம் நாமம் ஏற்றவனே, அருள் நல்காய் - அடியார்கள் தியானிக்க ஆயிரம் திருநாமங்களை ஏற்றவனே, அருள்வாயாக;

மண்கழ்- மாலொடு வேதன் வாழ்த்திடுமாறுயர்- சோதீ - மண்ணை அகழ்ந்த திருமாலும் பிரமனும் போற்றும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோதியே; (வேதன் - பிரமன்); (சோதீ - சோதியே);

கள் நிறை பூ மலி சோலைக் கலயநல்லூர்ப் பெருமானே - தேன் நிறைந்த பூக்கள் மிக்க சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கண்ணிறை - கள் நிறை); (மலிதல் - மிகுதல்);


10)

தவிகுழி வீழ்த்திட எண்ணும் சலமுடை யார்மொழி நீங்கும்

குவிதரு நெஞ்சின ராகிக் குளிர்மலர் தூவி வணங்கிச்

செவிகொடு சீரது கேட்கில் செல்வமும் இன்பமும் ஈவான்

கவினுறு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


தவி-குழி வீழ்த்திட எண்ணும் சலம் உடையார் மொழி நீங்கும் - தவிக்கும் படுகுழியில் விழச்செய்ய எண்ணுகின்ற வஞ்சகம் உடையவர்கள் பேசும் பேச்சைப் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; (தவித்தல் - வருந்துதல்); (சலம் - பொய்ம்மை; வஞ்சனை); (நீங்கும் - நீங்குங்கள்);

குவிதரு நெஞ்சினர் ஆகிக், குளிர்-மலர் தூவி வணங்கிச், செவிகொடு சீரது கேட்கில் செல்வமும் இன்பமும் ஈவான் - பக்தியால் மனம் ஒன்றியவர்கள் ஆகிக், குளிர்ந்த பூக்களைத் தூவி வணங்கிக், காதால் திருப்புகழைக் கேட்டால் செல்வத்தையும் இம்மை மறுமை இன்பங்களையும் தருபவன்; (குவிதல் - மனம் ஒருமுகப்படுதல்); (தருதல் - ஒரு துணைவினை); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); (சீர் - புகழ்; அது - பகுதிப்பொருள்விகுதி);

கவினுறு சோலைகள் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கவின் - அழகு);


11)

சிலந்திதன் நற்பணி கண்டு செகமர சாள்நிலை தந்தான்

சலந்தரி செஞ்சடை ஈசன் தரைமிசை ஆழி வரைந்து

சலந்தரன் ஆகம் ஒழித்த சதுரினன் நாரியொர் பாகம்

கலந்தவன் நான்மறை நாவன் கலயநல் லூர்ப்பெரு மானே.


சிலந்திதன் நற்பணி கண்டு செகம் அரசாள் நிலை தந்தான் - திருவானைக்காவில் சிலந்தி செய்த திருத்தொண்டைக் கண்டு மகிழ்ந்து அச்சிலந்தியை உலகை ஆளும் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தவன்; (செகம் - உலகம்); (* சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தது - திருவானைக்கா வரலாறு);

சலம் தரி- செஞ்சடை ஈசன் - கங்கையைச் சிவந்த சடையில் தரித்த ஈசன்; (சலம் - ஜலம் - கங்கை);

தரைமிசை ஆழி வரைந்து சலந்தரன் ஆகம் ஒழித்த சதுரினன் - நிலத்தில் ஒரு சக்கரத்தை வரைந்து அதுகொண்டு ஜலந்தராசுரனது உடலை வெட்டி அழித்த வல்லவன்; (ஆழி - சக்கரம்); (ஆகம் - உடல்); (சதுரினன் = சதுரன் = சமர்த்தன்); (பட்டினத்து அடிகள் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி - 11.29.8 - "கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்தாய்");

நாரி ஒர் பாகம் கலந்தவன் - உமையொருபங்கன்; (நாரி - பெண்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 3.102.1 - "காம்பினை வென்றமென் தோளி பாகம் கலந்தான்");

நான்மறை நாவன் - நால்வேதத்தைப் பாடியருளியவன்;

கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;


12)

நெய்தழு வுந்திரி சூலன் நீர்தழு வுஞ்சடை அண்ணல்

மைதழு வும்மணி கண்டன் மான்மறி ஏந்திய கையன்

பொய்தழு வாக்கயி லாயன் புதுமலர் கொண்டடி போற்றிக்

கைதொழு வார்துயர் தீர்க்கும் கலயநல் லூர்ப்பெரு மானே.


நெய் தழுவும் திரிசூலன் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (தழுவுதல் - சூழ்தல்; பூசுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.106.4 - "நெய்யணி மூவிலை வேல்" - ஆயுதங்கள் துருப்பிடியாவாறு நெய் பூசிவைத்தல் மரபு);

நீர் தழுவும் சடை அண்ணல் - சடையில் கங்கையைத் தாங்கிய தலைவன்;

மை தழுவும் மணிகண்டன் - கரிய மணி திகழும் கண்டத்தை உடையவன்; (மை - கறுப்பு);

மான்மறி ஏந்திய கையன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;

பொய் தழுவாக் கயிலாயன் - மெய்ப்பொருளானவன், கயிலைமலை நாதன்;

புதுமலர் கொண்டு அடி போற்றிக் கைதொழுவார் துயர் தீர்க்கும் - புதிய பூக்களால் திருவடியைப் போற்றிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களது துயரைத் தீர்ப்பவன்;

கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

அறுசீர் விருத்தம் - தானன தானன தான x2.

  • அரையடியில் சீர்களிடையே வெண்டளை பயிலும்.

  • அடிகளில் 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளைக் கட்டுப்பாடு இல்லை.

  • தானன என்ற விளச்சீர்கள் வெண்டளைக் கட்டுப்பாட்டை மீறாதபடி தனதன, தான, தனன, என்றெல்லாம் வரலாம். ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.

  • தான என்ற மாச்சீர் தனன என்றும் வரலாம்.

  • அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீராகவே அமையும். (அதாவது, 3, 6-ஆம் சீர்கள் மாச்சீர்).

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Saturday, October 12, 2019

03.04.074 - சிவன் - பழைய தமிழ் இலக்கிய நூல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-01-16

03.04.74 - சிவன் - பழைய தமிழ் இலக்கிய நூல் - சிலேடை

-------------------------------------------------------

பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் அஞ்செழுத்துக்

கோவை அதுஎன்றும் கூறுவர் - சேவை

புரிவதென்றோ என்றும் புகல்வர் பழைய

அரிய தமிழ்நூல் அரன்!


சொற்பொருள்:

பா - பாட்டு;

பாவை - பெண் - பார்வதி;

பாவையும் - 1. பாடலையும்; / 2. பார்வதியையும் (வேற்றுமைத்தொகை - '' உருபு தொக்கு நிற்கின்றது);

பக்கம் - 1. புத்தகத்தின் பக்கம்; / 2. அருகு; உடலின் ஒரு பக்கம்;

கோ - தலைவன்;

கோவை - கோக்கப்பட்டது; தொடுக்கப்பட்டது;

அஞ்செழுத்துக்கோவை - 1. அஞ்சு + எழுத்து + கோவை - வினைத்தொகை - அஞ்சுகின்ற எழுத்துக் கோவை (செய்யுள்); / 2. நமச்சிவாய என்ற பஞ்சாட்சரத் தலைவனை;

சேவை - 1. சே! வை! / 2. தொண்டு;

புரிவது - 1. பொருள் விளங்குவது; / 2. செய்வது;

அரிய - அருமையான;


தமிழ் இலக்கிய நூல்:

பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் - (அதன்) பக்கங்களில் பாடல்கள் இருக்கும்;

"அஞ்சு எழுத்துக் கோவை அது" என்றும் கூறுவர் - அஞ்சுகின்ற, எழுத்துகளால் கோக்கப்பட்டது அது என்றும் (சிலர்) சொல்வார்கள்; (- 'அது மிகவும் கடினமான நூல்' என்பார்கள்).

"சே! வை! புரிவது என்றோ" என்றும் புகல்வர் - (அதனைப் படிப்பதற்காக எடுக்கப் போகும் நண்பரிடம்) "சே! வை! (இது எல்லாம்) நமக்கு எப்பொழுது புரியப்போகின்றது!" என்றும் சொல்வார்கள்;

பழைய அரிய தமிழ் நூல் - (அத்தகையது) பழைய அருமையான தமிழ் இலக்கியப் புத்தகம்;


சிவன்:

பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் அஞ்செழுத்துக் கோவை - பார்வதியையும் தன் உடலில் ஒரு புறம் கொண்டு இருக்கின்றவனும், 'நமச்சிவாய' என்ற அஞ்சு எழுத்துத் தலைவனும் ஆன சிவனை;

"அது" என்றும் கூறுவர் - (வட மொழியில்) 'அது' என்றும் சொல்வார்கள்; (தமிழிலும் 'மெய்ப்பொருள்' என்பார்கள்). (வடமொழியில் பரம்பொருளை "அது" என்றும் சொல்வது உண்டு. "தத்துவமஸி" என்ற மஹாவாக்கியத்தில்: தத் - அது. த்வம் - நீ, அஸி - ஆகின்றாய்);

"சேவை புரிவது என்றோ" என்றும் புகல்வர் - (பக்தர்கள்) 'தொண்டு செய்வது எந்நாளோ' என்று சொல்லித் தொழுவார்கள்;

பழைய அரிய அரன் - அனைத்திற்கும் முற்பட்ட தொன்மையான, அருமையான, ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Friday, October 11, 2019

P.247 - கற்குடி - நார்மலி நெஞ்சினர்

2014-08-24

P.247 - கற்குடி (உய்யக்கொண்டான்மலை)

------------------

(அறுசீர் விருத்தம் - தானன தானன தானா x2)

(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாகம் உடையார்");

(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்");


1)
நார்மலி நெஞ்சினர் நாளும் நாவினில் நாமம் அணிந்து

நீர்மலர் கொண்டடி போற்ற நினைவரம் தந்தருள் செய்வான்

கூர்மழு ஏந்திய கையன் கூவிள மாலையன் நஞ்சால்

கார்முகில் போல்திகழ் கண்டன் கற்குடி மேய பிரானே.


நார் மலி நெஞ்சினர் நாளும் நாவினில் நாமம் அணிந்து - அன்புடைய பக்தர்கள் தினமும் திருவைந்தெழுத்தை ஓதி; (நார் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 4.41.11 - "நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்"); (திருவெம்பாவை - 8.7.2 - "பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்" என்ற இடத்தில் பாசம் என்ற சொல்லும் இதே போல் அன்பு என்ற பொருளில் வரக்காணலாம்);

நீர் மலர்கொண்டு அடி போற்ற நினை-வரம் தந்தருள் செய்வான் - நீராலும் பூவாலும் வழிபாடு செய்ய, அவர்கள் விரும்பிய வரங்களைத் தருபவன்;

கூர்மழு ஏந்திய கையன் - கையில் கூரிய மழுப்படையை ஏந்தியவன்;

கூவிள-மாலையன் - வில்வமாலை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);

நஞ்சால் கார்முகில் போல் திகழ்-கண்டன் - ஆலகாலத்தால் கரிய மேகம் போல் திகழ்கின்ற கண்டத்தை உடையவன்; (கார்முகில் - கார்காலத்து மேகம்);

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்; (பிரான் - தலைவன்; கடவுள்);


2)

படபடெ னத்துடி ஆர்த்துப் பல்கணம் சூழ்ந்திசை பாட

நடுவிருள் மாநடம் ஆடும் நாயகன் நான்மறை நாவன்

நடுநடுத் தோடிய தேவர் நனிமகிழ் வெய்திடு மாறு

கடுவிடம் உண்டருள் கண்டன் கற்குடி மேய பிரானே.


படபடெனத் துடி ஆர்த்துப் பல்கணம் சூழ்ந்து இசை பாட நடுவிருள் மாநடம் ஆடும் நாயகன் - படபடவென்று உடுக்குகள் ஒலித்துப் பல பூதகணங்கள் சுற்றி நின்று இசை பாட நள்ளிருளில் கூத்து ஆடும் தலைவன்; (துடி - உடுக்கை); (ஆர்த்தல் - ஒலித்தல்); (நடுவிருள் - நள்ளிருள்); (சம்பந்தர் தேவாரம் - 2.84.11 - "நடுவிருள் ஆடும் எந்தை");

நான்மறை நாவன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;

நடுநடுத்து ஓடிய தேவர் நனி-மகிழ்வெய்திடுமாறு கடுவிடம் உண்டருள் கண்டன் - அஞ்சி ஓடிய தேவர்கள் மிகவும் மகிழும்படி கொடிய நஞ்சை உண்டருளிய கண்டன்; (நடுநடுத்தல் - நடுங்குதல்; மிக அஞ்சுதல்); (நனி - மிக); (கடுவிடம் - கொடிய நஞ்சு);

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்; (பிரான் - தலைவன்; கடவுள்);


3)

பருமணி ஆர்முடி போலப் பன்னகம் ஆர்சடை அண்ணல்

அருமணி மாணியைக் காத்த அரண்அவன் ஈரிரு வர்க்குக்

குருமணி யாய்அறம் சொன்ன குழகன் அணங்கொரு கூறன்

கருமணி காட்டிய கண்டன் கற்குடி மேய பிரானே.


பருமணி ஆர் முடி போலப் பன்னகம் ஆர் சடை அண்ணல் - பெரிய மணிகள் பொருந்திய கிரீடம் போலப் பாம்பைச் சடைமேல் அணிந்த கடவுள்; (பன்னகம் - பாம்பு);

அருமணி மாணியைக் காத்த அரண் அவன் - அரிய மணி போன்ற மார்க்கண்டேயரைக் காத்த அரண் போன்றவன்; (மாணி - மார்க்கண்டேயர்);

ஈரிருவர்க்குக் குருமணியாய் அறம் சொன்ன குழகன் - முனிவர்கள் நால்வர்க்குக் குருவாகி மறைப்பொருளை உபதேசித்த இளைஞன்;

அணங்கு ஒரு கூறன் - அர்த்தநாரீஸ்வரன்;

கருமணி காட்டிய கண்டன் - நீலகண்டன்;

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;


4)

குடமுழ வம்பறை கொட்டிக் கூளிகள் சூழ்ந்திசை பாட

உடல்சுடு கானிடை அல்லில் ஒள்ளெரி ஏந்தி நடிப்பான்

அடல்விடை ஒன்றுடை அண்ணல் அடிதொழு வானவர் உய்யக்

கடல்விடம் உண்டருள் கண்டன் கற்குடி மேய பிரானே.


பதம் பிரித்து:

குடமுழவம் பறை கொட்டிக் கூளிகள் சூழ்ந்து இசை பாட,

உடல் சுடு-கானிடை அல்லில் ஒள்-எரி ஏந்தி நடிப்பான்;

அடல்-விடை ஒன்றுடை அண்ணல்; அடிதொழு வானவர் உய்யக்

கடல்விடம் உண்டருள் கண்டன்; கற்குடி மேய பிரானே.


குடமுழவம் - குடமுழா என்ற வாத்தியம்; (Large hemispherical loud-sounding drum);

கூளி - பூதகணங்கள்;

உடல்சுடுகான் - உடலை எரிக்கின்ற சுடுகாடு;

அல் - இரவு;

ஒள் எரி - ஒளி வீசும் தீ;

நடித்தல் - ஆடுதல்;

அடல்-விடை - வலிய இடபம்;


5)

மறையணி நாவினர் என்றும் வாழ்த்தி வணங்கிடும் நாதன்

நறையணி நற்றமிழ்ப் பித்தன் நம்பிய வர்க்கருள் அத்தன்

சிறையணி வண்டினம் நாடும் தேன்திகழ் கொன்றை அணிந்தான்

கறையணி கின்ற மிடற்றன் கற்குடி மேய பிரானே.


மறை - வேதம்;

நறைணி நற்றமிழ்ப் பித்தன் - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளை விரும்புபவன்; (நறை - தேன்; வாசனை);

நம்பியவர்க்கு அருள் அத்தன் - விரும்பிப் பக்தியோடு வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற தந்தை; (நம்புதல் - விரும்புதல்);

சிறை - இறகு;

மிடற்றன் - கண்டன்; (மிடறு - கண்டம்);


6)

ஆவினில் ஐந்துகந் தாடி அங்கமும் வேதமும் ஓதி

சேவினை ஏறிவந் தையம் தேர்ந்துழல் கின்றவன் அங்கை

மூவிலை வேலினன் நக்கு முப்புரம் தீப்புகச் செய்தான்

காவியங் கண்ணியொர் பங்கன் கற்குடி மேய பிரானே.


ஆடி, ஓதி, செய்தான் - ஆடியவன், ஓதியவன், செய்தவன்;

ஆவினில் ஐந்து - ஆனஞ்சு - பால், தயிர், நெய் முதலியன;

அங்கமும் வேதமும் - நான்மறையும் ஆறங்கமும்;

சேவினை ஏறி - இடபவாகனத்தின்மேல் ஏறி; (சே - எருது); (சேவின்மேல் என்னாமல் சேவினை என்று வந்ததை உருபு மயக்கமாகக் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.89.6 - "விடையினை ஏறிப் பல்பூதப் படைநடுவே போந்தார்");

ஐயம் தேர்தல் - பிச்சை ஏற்றல்;

மூவிலைவேல் - திரிசூலம்;

நக்கு - சிரித்து;

காவியங்-கண்ணி - குவளைப்பூப் போலும் கண்களை உடையவளாகிய உமையம்மை; (காவி - கருங்குவளை); (சுந்தரர் தேவாரம் - 7.68.3 - "காவியங் கண்ணி பங்கனை");


7)

அந்தம் இலாவொரு தேவன் ஆனையின் ஈருரி போர்த்தான்

முந்தெயில் மூன்றெரி செய்த மொய்ம்பினன் நான்மறை நாவன்

ஐந்தொழில் செய்திடும் ஐயன் ஆறுமு கந்திகழ் கின்ற

கந்தனைப் பெற்றவள் பங்கன் கற்குடி மேய பிரானே.


* 1 முதல் 6 வரை எண்ணலங்காரம் அமைந்த பாடல்;

ஈருரி - உரித்த தோல்; ஈரம் பொருந்திய தோல்;

முந்து எயில் மூன்று எரிசெய்த மொய்ம்பினன் - முன்னம் முப்புரங்களை எரித்த வீரன்; (மொய்ம்பு - வலிமை; தோள்);

ஐந்தொழில் - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம் என்ற கடவுளின் ஐந்தொழில்;

கந்தனைப் பெற்றவள் பங்கன் - அப்பர் தேவாரம் - 5.19.9 - "நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்";


8)

மெய்வலி தன்னை நினைந்து வெற்பை இடந்த அரக்கன்

நைவுற ஓர்விரல் ஊன்றி நல்லிசை கேட்டருள் நாதன்

நெய்யணி மூவிலை வேலன் நீறணி மேனியன் ஓர்பால்

கையினில் சங்கணி கோலன் கற்குடி மேய பிரானே.


மெய்வலி தன்னை நினைந்து வெற்பை இடந்த அரக்கன் - தன் உடல் வலிமையை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை;

நைவுற - வருந்தும்படி; (நைவு - வருந்துகை - Suffering);

நெய் அணி மூவிலை வேலன் - நெய் (எண்ணெய்) தடவப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (ஆயுதங்களுக்கு எண்ணெய் பூசி வைத்தல் வழக்கம்);

நீறு அணி மேனியன் - திருநீற்றை மேனியில் பூசியவன்;

ஓர்பால் கையினில் சங்கு அணி-கோலன் - ஒரு பக்கம் வளையல் அணிந்த கோலத்தை உடையவன்; (சங்கு - வளையல்); (சூலம்-சூலன், சீலம்-சீலன், வேடம்-வேடன், என்பன போல், கோலம்-கோலன்); (சம்பந்தர் தேவாரம் - 3.81.1 - "சங்கமரு முன்கை மடமாதை ஒருபால் உடன் விரும்பி");


9)

விண்ணுயர் அன்னம தாகி மேலினை நேடிய வேதன்

மண்ணை இடந்தடி நேடு மாலறி யாஅழல் வண்ணன்

பண்ணமர் செந்தமிழ் பாடும் பத்தருக் கின்னருள் செய்வான்

கண்ணொரு மூன்றுடை அண்ணல் கற்குடி மேய பிரானே.


விண் உயர் அன்னம்அது ஆகி மேலினை நேடிய வேதன் - வானில் உயர்ந்த அன்னப்பறவை ஆகி திருமுடியைத் தேடிய பிரமன்; (நேடுதல் - தேடுதல்); (வேதன் - பிரமன்);

மண்ணை இடந்து அடி நேடு மால் அறியா அழல்வண்ணன் - நிலத்தை அகழ்ந்து திருவடியைத் தேடிய திருமால் இவர்களால் அறியப்படாத ஜோதிவடிவினன்;

பண் அமர் செந்தமிழ் பாடும் பத்தருக்கு இன்னருள் செய்வான் - பண் பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இனிய அருள் செய்பவன்;

கண்ணொரு மூன்றுடை அண்ணல் - முக்கட் பரமன்;

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;


10)

பற்பல பொய்களைப் பேசிப் பாழ்ங்குழிக் கேஅழைக் கின்ற

அற்பர்கள் சொல்மதி யேன்மின் அஞ்செழுத் தோதி வணங்கில்

நற்பதம் நல்கிடும் நம்பன் நாவின் தனியர சர்க்குக்

கற்புணை தந்துயிர் காத்த கற்குடி மேய பிரானே.


பற்பல பொய்களைப் பேசிப் பாழ்ங்குழிக்கே அழைக்கின்ற அற்பர்கள் சொல் மதியேன்மின் - எண்ணற்ற பொய்களைப் பேசி படுகுழிக்கே அழைக்கும் கீழோர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (பாழ்ங்குழி - நாசக்குழி); (திருமந்திரம் - ஏழாம் தந்திரம் - அசற்குரு நெறி - 10.7.34.5 - "குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர் மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக் குருடரும் வீழ்வர்கள்"); (மின் - ஏவற்பன்மை விகுதி);

அஞ்செழுத்து ஓதி வணங்கில் நற்பதம் நல்கிடும் நம்பன் - திருவைந்தெழுத்தை ஓதி வணங்கும் அடியவர்களுக்கு நற்கதியை அருளும் சிவபெருமான்; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமம்);

நாவின் தனி அரசர்க்குக் கற்புணை தந்து உயிர் காத்த - ஒப்பற்ற திருநாவுக்கரசருக்குக் கடலில் கல்லையே தெப்பமாக்கி அருளி அவர் உயிரைக் காப்பாற்றிய; (புணை - தெப்பம்);

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;


11)

சொற்சுவை மிக்கு விளங்கும் தூய தமிழ்த்தொடை பாடும்

நற்சுவை தன்னை உணர்ந்த நாவினர் தீவினை தீர்ப்பான்

பொற்சபை நாடகன் நாகம் பூணிறை முப்புரம் செற்ற

கற்சிலை ஏந்திய கையன் கற்குடி மேய பிரானே.


சொற்சுவை மிக்கு விளங்கும் தூய தமிழ்த்தொடை பாடும் நற்சுவை-தன்னை உணர்ந்த நாவினர் தீவினை தீர்ப்பான் - தேவாரம், திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடுகின்ற நல்ல சுவையை உணர்ந்த நாவினை உடையவர்களது தீவினைய்த் தீர்ப்பவன்;

பொற்சபை நாடகன் - பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தன்;

நாகம் பூண் இறை - நாகாபரணம் அணிந்த இறைவன்;

முப்புரம் செற்ற கற்சிலை ஏந்திய கையன் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்தி முப்புரங்களை அழித்தவன்; (செறுதல் - அழித்தல்); (கல் - மலை); (சிலை - வில்);

கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

அறுசீர் விருத்தம் - தானன தானன தான x2.

  • அரையடியில் சீர்களிடையே வெண்டளை பயிலும்.

  • அடிகளில் 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளைக் கட்டுப்பாடு இல்லை.

  • தானன என்ற விளச்சீர்கள் வெண்டளைக் கட்டுப்பாட்டை மீறாதபடி தனதன, தான, தனன, என்றெல்லாம் வரலாம். ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.

  • தான என்ற மாச்சீர் தனன என்றும் வரலாம்.

  • அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீராகவே அமையும். (அதாவது, 3, 6-ஆம் சீர்கள் மாச்சீர்).

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


வி. சுப்பிரமணியன்

----------- --------------