Tuesday, July 1, 2025

T.203 - இடைமருதூர் (திருவிடைமருதூர்) - நெருக்கிடும் பழவினையவை

2017-10-28

T.203 - இடைமருதூர் (திருவிடைமருதூர்) - நெருக்கிடும் பழவினையவை

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன .. தனதான)

(உனைத்தினந் தொழுதிலன் – திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


நெருக்கி டும்பழ வினையவை தருமிடர்

.. .. .. நெருப்பி னுஞ்சுட அயர்வுறு நிலைதர

.. .. நிணக்கு ரம்பையை அடைவது முடிவில .. தெனவாகி

.. நிலத்து ழன்றிடு மிடியற மணமலர்

.. .. .. நிகர்த்த நின்கழல் இணைதனை அனுதின(ம்)

.. .. நினைத்தி டுஞ்செய லதுசெய ஒருவரம் .. அருளாயே

சுருக்கொ டுந்தொடர் நமன்விழ உதைதரு

.. .. .. துணைப்ப தம்புகழ் கவுணியர் குலபதி

.. .. சொலைக்க னிந்துரை அடியவர் விழைவன .. தருவோனே

.. துளக்கொ டுந்திரு வடிதொழு பிறையது

.. .. .. சுகிக்க அஞ்சடை மிசையணி இறையவ

.. .. சுரர்க்கி ரங்கிய அழகிய கறையணி .. மிடறானே

இருக்கும் அங்கமு(ம்) மொழிவட நிழலின

.. .. .. இமைத்தி டும்பொழு தளவினில் இகலரண்

.. .. எரித்தி டுங்கணை விடவொரு மலைவளை .. பெருவீரா

.. இடத்தி ளங்கொடி அனவுமை திகழ்பர

.. .. .. இரக்க வெண்டலை தரிகர அரிவையர்

.. .. இடத்தில் உண்பலி கொளவுழல் பெருமையும் .. உடையானே

எருக்கை யுந்தழை இலையையும் அடிதனில்

.. .. .. இடப்ப ரிந்துடன் அருள்புரி எளியவ

.. .. எவர்க்கும் உம்பரில் உறைதரு தலைமக .. கயிலாயம்

.. எடுத்த வன்றனை அடர்வுசெய் விரலின

.. .. .. இசைத்து வண்டினம் அடைமது மலிமலர்

.. .. இருக்கும் அம்பொழில் இடைமரு தினிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

நெருக்கிடும் பழவினையவை தரும் இடர்

.. .. நெருப்பினும் சுட, அயர்வுறு நிலை தர,

.. .. நிணக்-குரம்பையை அடைவது முடிவிலது எனவாகி,

.. நிலத்து உழன்றிடு மிடி அற, மணமலர்

.. .. நிகர்த்த நின் கழல்-இணைதனை அனுதின(ம்)

.. .. நினைத்திடும் செயலது செய ஒரு வரம் .. அருளாயே;

சுருக்கொடும் தொடர் நமன் விழ உதைதரு

.. .. துணைப்-பதம் புகழ் கவுணியர் குலபதி

.. .. சொலைக் கனிந்து உரை அடியவர் விழைவன .. தருவோனே;

.. துளக்கொடும் திருவடி தொழு பிறையது

.. .. சுகிக்க அஞ்சடைமிசை அணி இறையவ;

.. .. சுரர்க்கு இரங்கிய அழகிய கறை அணி மிடறானே;

இருக்கும் அங்கமு(ம்) மொழி வட-நிழலின;

.. .. இமைத்திடும்பொழுது அளவினில் இகல்-அரண்

.. .. எரித்திடும் கணை விட ஒரு மலை வளை .. பெரு-வீரா;

.. இடத்து இளங்கொடி அன உமை திகழ்-பர;

.. .. இரக்க வெண்-தலை தரி-கர; அரிவையர்

.. .. இடத்தில் உண்-பலி கொள உழல் பெருமையும் .. உடையானே;

எருக்கையும் தழை இலையையும் அடிதனில்

.. .. இடப், பரிந்து உடன் அருள்புரி எளியவ;

.. .. எவர்க்கும் உம்பரில் உறைதரு தலைமக; .. கயிலாயம்

.. எடுத்தவன்-தனை அடர்வுசெய் விரலின;

.. .. இசைத்து வண்டினம் அடை-மது மலி-மலர்

.. .. இருக்கும் அம்பொழில் இடைமருதினில் உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


நெருக்கிடும் பழவினை அவை தரும் இடர் நெருப்பினும் சுட, அயர்வுறு நிலை தர, நிணக் குரம்பையை அடைவது முடிவு இலது என ஆகி நிலத்து உழன்றிடு மிடி அற – என்னை நெருங்கித் தாக்குகின்ற பழைய வினைகள் தரும் கஷ்டம் நெருப்பைவிடத் தகித்து எனக்கு வருத்தத்தைத் தருவதோடன்றி, ஊனுடலை அடையும் பிறவிகள் முடிவற்றது என்று ஆகி மண்ணுலகில் உழலும் துன்பத்தையும் தரும்; இந்தத் துன்பம் நீங்கும்படி; (நெருக்குதல் - நசுக்குதல்; தாக்குதல்; வருத்துதல்); (அயர்வு - வருத்தம்; சோர்வு); (நிணம் - ஊன்; மாமிசம்); (குரம்பை - உடல்); (மிடி - துன்பம்)

மணமலர் நிகர்த்த நின் கழல்இணைதனை அனுதினம் நினைத்திடும் செயல் அது செய ஒரு வரம் அருளாயே - மணம் கமழும் மலர்போன்ற உன் இரு-திருவடிகளை நாள்தோறும் எண்ணி வழிபட எனக்கு ஒரு வரம் தருவாயாக;


சுருக்கொடும் தொடர் நமன் விழ உதைதரு துணைப்பதம் புகழ் கவுணியர் குலபதி சொலைக் கனிந்து உரை அடியவர் விழைவன தருவோனே - கையில் பாசத்தோடு துரத்துகின்ற இயமன் மாண்டு விழும்படி அவனை உதைத்து மார்க்கண்டேயருக்குத் துணையாக நின்ற திருவடியைப் புகழ்ந்து பாடிய கவுணியர்குலத் தலைவரான திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தை அன்போடு சொல்லும் பக்தர்கள் வேண்டிய வரங்களையெல்லாம் தருபவனே; (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்தவர்);

துளக்கொடும் திருவடி தொழு பிறையது சுகிக்க அம்-சடைமிசை அணி இறையவ – அஞ்சித் திருவடியைத் தொழுத பிறை இன்புறும்படி அதனை அழகிய சடையின்மேல் அணிந்த இறைவனே; (துளக்கு - நடுக்கம்; மனக்கலக்கம்); (பிறையது - பிறை - வளைந்த சந்திரன்; அது - பகுதிப்பொருள்விகுதி); (சுகித்தல் - சுகமாயிருத்தல்);

சுரர்க்கு இரங்கிய அழகிய கறை அணி மிடறானே - தேவர்களுக்கு இரங்கிய, அழகிய கறையை அணிந்த கண்டம் உடையவனே; (சுரர் - தேவர்); (மிடறு - கண்டம்);


இருக்கும் அங்கமும் மொழி வட-நிழலின – நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதிய, கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருந்தவனே; (இருக்கு - வேதம்); (அங்கம் - வேதத்தின் ஆறு அங்கங்கள்); (மொழிதல்- சொல்லுதல்); (வடம் - ஆலமரம்); (நிழல் - ஸ்தானம்; இடம்);

இமைத்திடும் பொழுது அளவினில் இகல் அரண் எரித்திடும் கணை விட ஒரு மலை வளை பெரு-வீரா - பகைத்த முப்புரங்களை ஒரு நொடிப்பொழுது அளவில் எரிக்கவல்ல கணையைச் செலுத்த மேருமலையை வில்லாக வளைத்த பெரிய வீரனே; (இகல்தல் - பகைத்தல்); (அரண் - கோட்டை);

இடத்து இளங்கொடி அன உமை திகழ் பர – இடப்பாகத்தில் இளம்-கொடி போன்ற உமை திகழ்கின்ற பரனே; (அன - அன்ன - போன்ற);

இரக்க வெண்-தலை தரி கர – யாசிப்பதற்கு ஒரு வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தியவனே; (தரித்தல் - தாங்குதல்); (கர – கரனே - கரத்தை உடையவனே);

அரிவையர்-இடத்தில் உண்பலி கொள உழல் பெருமையும் உடையானே - பெண்கள் இருக்கும் இல்லங்களில் (/ பெண்களிடம்) பிச்சையை ஏற்கத் திரியும் பெருமையையும் உடையவனே; (இடம் - வீடு; ஏழாம்வேற்றுமை உருபு);


எருக்கையும் தழை-இலையையும் அடிதனில் இடப் பரிந்து உடன் அருள்புரி எளியவ – எருக்கமலரையும் இலைகளையும் இட்டு வழிபட்டாலும் அவ்வடியார்களுக்கு இரங்கி உடனே அருள்புரியும் எளியவனே; அடியவர்களால் எளிதில் அடைப்பெறுபவனே; (தழை - இலை; தழைத்தல் - செழித்தல்); (தழை இலை - 1. ஒருபொருட்பன்மொழி; 2. தழைக்கின்ற இலை);

எவர்க்கும் உம்பரில் உறைதரு தலைமக – எத்தேவர்க்கும் மேலான இடத்தில் உறையும் தலைவனே; (உம்பர் - மேலிடம்); (தருதல் - ஒரு துணைவினை); (தலைமகன் - தலைவன்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.32.8 - "மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி");

கயிலாயம் எடுத்தவன்தனை அடர்வுசெய் விரலின – கயிலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கிய திருவிரலை உடையவனே; (அடர்வு - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.125.8 - "கரம் இருபது முடி ஒருபதும் உடையவன் உர(ம்) நெரிதர வரை அடர்வுசெய்தவன்");

இசைத்து வண்டினம் அடை மது மலி மலர் இருக்கும் அம்-பொழில் இடைமருதினில் உறை பெருமானே - வண்டுகள் இசைபாடி அடைகின்ற, தேன் நிறைந்த மலர்கள் இருக்கின்ற, அழகிய சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment