Tuesday, July 1, 2025

T.206 - பழனம் - பிணி வினைத்தொடர்

2017-11-18

T.206 - பழனம் - பிணி வினைத்தொடர்

(திருவையாறு அருகே உள்ள தலம்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனத் தனனத் .. தனதான)

(இருவினைப் பிறவி - திருப்புகழ் - கொடுமுடி)


2)

பிணிவினைத் தொடரற் .. றிடுமாறு

.. பிரியமுற் றடியைத் .. தொழுவேனோ

அணிமலர்க் குழலிக் .. கிடமீவாய்

.. அரைமிசைப் பணிகட் .. டியநாதா

வெணிலவைத் தழுவிப் .. புனலோடும்

.. விரிசடைக் கருணைக் .. கடலேமுன்

பணிசுரர்க் கமுதைத் .. தருவோனே

.. படர்பொழிற் பழனப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பிணி-வினைத்-தொடர் அற்றிடுமாறு,

.. பிரியமுற்று அடியைத் தொழுவேனோ;

அணி-மலர்க் குழலிக்கு இடம் ஈவாய்;

.. அரைமிசைப் பணி கட்டிய நாதா;

வெணிலவைத் தழுவிப் புனல் ஓடும்

.. விரிசடைக் கருணைக் கடலே; முன்

பணி-சுரர்க்கு அமுதைத் தருவோனே;

.. படர்-பொழிற் பழனப் பெருமானே.


பிணி வினைத் தொடர் அற்றிடுமாறு பிரியமுற்று அடியைத் தொழுவேனோ - பந்தித்து உள்ள வினைத்தொகுதி தீரும்படி (/ பிணிகளும் வினைகளும் தீரும்படி) அன்போடு உன் திருவடியை நான் வழிபட அருள்வாயாக; (பிணித்தல் - கட்டுதல்); (பிணிவினைத்தொடர் - பிணித்தொடர் & வினைத்தொடர் என்று இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);

அணி-மலர்க்-குழலிக்கு இடம் ஈவாய் - அழகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய உமைக்கு இடப்பாகம் தந்தவனே;

அரைமிசைப் பணி கட்டிய நாதா - அரையில் நாகப்பாம்பைக் கட்டிய நாதனே; (பணி - நாகப்பாம்பு);

வெணிலவைத் தழுவிப் புனலோடும் விரிசடைக் கருணைக்-கடலே - வெண்மதியைத் தொட்டுக்கொண்டு கங்கை ஓடுகின்ற விரிந்த சடையை உடைய தயாசாகரமே; (வெணிலவை - வெண்ணிலவை);

முன் பணி சுரர்க்கு அமுதைத் தருவோனே - முன்பு தொழுத தேவர்களுக்கு அமுதத்தைத் தந்தவனே;

படர்-பொழிற் பழனப் பெருமானே - படர்ந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறையும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment