2017-12-04
P.414 - கழுக்குன்றம் - (திருக்கழுக்குன்றம்)
---------------------------------
(எண்சீர் விருத்தம் - "காய் காய் மா தேமா" - அரையடி வாய்பாடு; திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)
(அப்பர் தேவாரம் - 6.99.1 - "எண்ணுகேன் என்சொல்லி")
முற்குறிப்புகள்: திருக்கழுக்குன்றம் - மலைக்கோயில் - மலைமேல் இருக்கும் "வேதகிரீஸ்வரர் கோயில்";
* 2017-12-03 சர்வாலய தீபத்தன்று மாலை நான் தரிசித்த கோயில்; மலையிலிருந்து கீழிறங்கியபின் மலைமேல் ஏற்றிய தீபத்தையும் தரிசித்தேன்;
1)
புரிகாட்டும் புன்சடையின் மீது திங்கள்
.. பூங்கொன்றை மதமத்தம் சூடி னானும்
வரிகாட்டும் அரவத்தை அரையில் நாணா
.. மகிழ்ந்தானும் மார்பில்வெண் ணூலி னானும்
எரிகாட்டும் கண்ணேந்து நெற்றி யானும்
.. இரவினிலே பூதங்கள் முழவம் ஆர்க்கக்
கரிகாட்டில் திருநட்டம் ஆடி னானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
புரி காட்டும் புன்சடையின் மீது திங்கள் பூங்கொன்றை மதமத்தம் சூடினானும் - சுருண்ட செஞ்சடைமேல் பிறை, கொன்றைமலர், ஊமத்தமலர் இவற்றை அணிந்தவனும்; (புரி - முறுக்கு); (புன்சடை - செஞ்சடை); (மதமத்தம் - ஊமத்தை);
வரி காட்டும் அரவத்தை அரையில் நாணா மகிழ்ந்தானும் - வரிகளையுடைய பாம்பை அரைநாணாக விரும்பியவனும்;
மார்பில் வெண்ணூலினானும் - திருமார்பில் வெண்மையான பூணூல் அணிந்தவனும்;
எரி காட்டும் கண் ஏந்து நெற்றியானும் - நெற்றிக்கண்ணில் தீயை உடையவனும்;
இரவினிலே பூதங்கள் முழவம் ஆர்க்கக் கரிகாட்டில் திருநட்டம் ஆடினானும் - இருளில் பூதங்கள் முழவுகளை ஒலிக்கச் சுடுகாட்டில் திருக்கூத்து ஆடியவனும்; (கரிகாடு - சுடுகாடு);
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி; (தானே - தான், ஏ - அசை);
2)
கூராரும் மூவிலைவேல் ஏந்தி னானும்
.. குளிர்மதியைக் குஞ்சிமிசைச் சூடி னானும்
நீராரும் சடையானும் நெற்றி மீது
.. நேத்திரமொன் றுடையானும் நீற்றி னானும்
வாராரும் முலைமங்கை பாகத் தானும்
.. வானவர்கள் வந்திறைஞ்ச அவர்க்கி ரங்கிக்
காராரும் நஞ்சுண்ட கண்டத் தானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
கூர் ஆரும் மூவிலைவேல் ஏந்தினானும் - கூரிய திரிசூலத்தை ஏந்தியவனும்;
குளிர்மதியைக் குஞ்சிமிசைச் சூடினானும் - குளிர்ச்சி பொருந்திய திங்களைத் திருமுடிமேல் அணிந்தவனும்; (குஞ்சி - தலை);
நீர் ஆரும் சடையானும் - சடையில் கங்கையை உடையவனும்;
நெற்றி மீது நேத்திரம் ஒன்று உடையானும் - நெற்றிக்கண்ணனும்;
நீற்றினானும் - திருநீற்றைப் பூசியவனும்;
வார் ஆரும் முலை-மங்கை பாகத்தானும் - கச்சு அணிந்த முலையுடைய உமையை ஒரு பாகத்தில் உடையவனும்; (வார் - முலைக்கச்சு);
வானவர்கள் வந்து இறைஞ்ச அவர்க்கு இரங்கிக் கார் ஆரும் நஞ்சு உண்ட கண்டத்தானும் - தேவர்கள் வந்து தொழக் கண்டு அவர்களுக்கு இரங்கிக் கரிய விடத்தை உண்ட கண்டம் உடையவனும்; (கார் - கருமை);
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
3)
மாதவர்தம் நெஞ்சத்தை நீங்கா தானும்
.. மறையோதி வழிபட்ட மார்க்கண் டேயர்
நோதலறக் கூற்றுதைத்த பாதத் தானும்
.. நூல்திகழும் மார்பின்மேல் நாகத் தானும்
சாதலொடு பிறத்தலிலாத் தன்மை யானும்
.. தாழ்சடைமேல் தண்மதியை ஏற்றி னானும்
காதலியை இடப்பாகம் காட்டி னானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
மாதவர்தம் நெஞ்சத்தை நீங்காதானும் - பெரும்-தவமுடையோர் மனத்தில் என்றும் இருப்பவனும்; (மாதவர் - பெரும்-தவசிகள்);
மறை ஓதி வழிபட்ட மார்க்கண்டேயர் நோதல் அறக் கூற்று உதைத்த பாதத்தானும் - வேதமந்திரங்களால் வழிபாடு செய்த மார்க்கண்டேயரது துன்பம் தீரக் காலனைத் திருவடியால் உதைத்தவனும்; (நோதல் – வருந்துதல் - இங்கே, அஞ்சுதல் என்ற பொருளில்);
நூல் திகழும் மார்பின்மேல் நாகத்தானும் - பூணூல் அணிந்த மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவனும்;
சாதலொடு பிறத்தல் இலாத் தன்மையானும் - பிறப்பும் இறப்பும் இல்லாதவனும்;
தாழ்சடைமேல் தண்மதியை ஏற்றினானும் - தாழும் சடைமேல் குளிர்ந்த சந்திரனை வைத்தவனும்;
காதலியை இடப்பாகம் காட்டினானும் - உமையை இடப்பாகமாக உடையவனும்;
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
4)
உம்பரவர் செய்தபெருந் தேர தேறி
.. ஒருகணையால் முப்புரத்தை எரிசெய் தானும்
நம்பியெவர் தொழுதாலும் அருள்செய் வானும்
.. நள்ளிருளில் இடுகாட்டில் ஆட லானும்
வம்புலவு கொன்றையணி சடையி னானும்
.. மலைமங்கை பிரியாத வாமத் தானும்
கம்பமத கரிதன்னை உரிசெய் தானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
உம்பரவர் செய்த பெரும்-தேரது ஏறி, ஒரு கணையால் முப்புரத்தை எரி-செய்தானும் - தேவர் செய்த பெரிய தேரில் ஏறி, ஓர் அம்பால் முப்புரங்களை எரித்தவனும்; (உம்பர் - தேவர்; அவர் - பகுதிப்பொருள் விகுதி);
நம்பி எவர் தொழுதாலும் அருள்செய்வானும் - விரும்பி யார் வழிபட்டாலும் அருள்பவனும்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);
நள்ளிருளில் இடுகாட்டில் ஆடலானும் - நள்ளிருளில் சுடுகாட்டில் கூத்து ஆடுபவனும்;
வம்பு உலவு கொன்றை அணி சடையினானும் - வாசனை கமழும் கொன்றைமலரைச் சடையில் அணிந்தவனும்; (வம்பு - வாசனை);
மலைமங்கை பிரியாத வாமத்தானும் - உமையைத் திருமேனியில் இடப்பக்கத்தில் உடையவனும்; (வாமம் - இடப்பக்கம்);
கம்ப-மதகரி-தன்னை உரி-செய்தானும் - அசையும் இயல்புடைய மதயானையின் தோலை உரித்தவனும்; (கம்பம் - அசைதல்); (கரி - யானை);
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
5)
சலந்தரன்றன் உடல்தடிந்த சக்க ரத்தைத்
.. தாமரையாக் கண்ணிட்ட அரிக்கீந் தானும்
சிலந்திதனைச் சோழனெனப் பிறப்பித் தானும்
.. செந்தழல்போல் மேனிமிசை வெண்ணீற் றானும்
வலந்திகழும் மழுவாளை ஏந்தி னானும்
.. மலரவன்றன் சிரமொன்றைக் கிள்ளி னானும்
கலந்தனிலே ஊரிடுமுண் பலிதேர்ந் தானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
சலந்தரன்-தன் உடல் தடிந்த சக்கரத்தைத் தாமரையாக் கண் இட்ட அரிக்கு ஈந்தானும் - ஜலந்தராசுரனது உடலை வெட்டிய சக்கராயுதத்தைத் தன் கண்ணைத் தாமரைமலராக இட்டு வழிபாடு செய்த திருமாலுக்கு அளித்தவனும்; (தடிதல் - வெட்டுதல்); (* திருமாலுக்குச் சக்கரம் அளித்தது - திருவீழிமிழலைத் தலவரலாறு);
சிலந்திதனைச் சோழன் எனப் பிறப்பித்தானும் - ஒரு சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறக்கச் செய்தவனும்; (* கோச்செங்கட்சோழன் வரலாறு - திருவானைக்கா நிகழ்ச்சி; பெரியபுராணத்தில் காண்க);
செந்தழல்போல் மேனிமிசை வெண்ணீற்றானும் - செந்தீப் போல விளங்கும் திருமேனிமேல் வெண்மையான திருநீற்றைப் பூசியவனும்;
வலம் திகழும் மழுவாளை ஏந்தினானும் - வெற்றியுடைய மழுவை ஏந்தியவனும்; (வலம் - வெற்றி);
மலரவன்-தன் சிரம் ஒன்றைக் கிள்ளினானும் - பிரமனது தலைகளில் ஒன்றைக் கொய்தவனும்; (மலரவன் - பிரமன்);
கலந்தனிலே ஊர் இடும் உண்பலி தேர்ந்தானும் - (அந்தப் பிரமகபாலம் என்ற) பிச்சைப்பாத்திரத்தில் ஊரார் இடும் பிச்சையை ஏற்பவனும்; (கலம் - பிச்சைப்பாத்திரம்); (உண்பலி - பிச்சை);
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
6)
துணைநீயே என்றுதொழு தொண்டர்க் கென்றும்
.. துயரில்லா வாழ்வுதனை அருளி நல்ல
புணையாகி வினைக்கடலைக் கடப்பிப் பானும்
.. புற்றரவைக் கச்சாகக் கட்டி னானும்
இணையேதும் இல்லானும் ஆலின் கீழே
.. ஈரிருவர்க் கருமறையைப் போதித் தானும்
கணையேவு மதவேளைப் பொடிசெய் தானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
"துணை நீயே" என்று தொழு- தொண்டர்க்கு என்றும் துயர் இல்லா வாழ்வுதனை அருளி - "நீயே துணை" என்று வணங்கும் பக்தர்களுக்கு என்றும் துன்பம் இல்லா வாழ்வை அருள்செய்து;;
நல்ல புணை ஆகி வினைக்கடலைக் கடப்பிப்பானும் - நல்ல தெப்பம் ஆகி அவர்களை வினைக்கடலைக் கடக்கச் செய்பவனும்; (புணை - தெப்பம்);
புற்றரவைக் கச்சாகக் கட்டினானும் - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவனும்;
இணை ஏதும் இல்லானும் - எவ்வொப்பும் இல்லாதவனும்;
ஆலின் கீழே ஈரிருவர்க்கு அருமறையைப் போதித்தானும் - கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியர் நால்வர்க்கு அரிய வேதப்பொருளை உபதேசித்தவனும்; (ஈரிருவர் - நால்வர்);
கணை ஏவு- மதவேளைப் பொடி-செய்தானும் - அம்பை எய்த காமனைச் சாம்பலாக்கியவனும்; (மதவேள் - மன்மதன்);
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
7)
அந்தகனைச் சூலத்தாற் குத்தி னானும்
.. ஆறங்கம் நான்மறையை ஓதி னானும்
வெந்தபொடி விளங்குதிரு மேனி யானும்
.. வென்றிவிடைக் கொடியானும் அன்பர் செய்த
முந்தைவினை தீர்த்தானும் முடிவி லானும்
.. முரல்கின்ற வண்டினங்கள் நாடு கின்ற
கந்தமலி கொன்றையணி சடையி னானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
அந்தகனைச் சூலத்தால் குத்தினானும் - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தியவனும்; (அந்தகன் - அந்தகாசுரன்);
ஆறங்கம் நான்மறையை ஓதினானும் - நால்வேதம் ஆறங்கம் இவற்றைப் பாடியருளியவனும்;
வெந்த-பொடி விளங்கு- திருமேனியானும் - சுட்ட திருநீற்றைத் திருமேனிமேல் பூசியவனும்;
வென்றி-விடைக்-கொடியானும் - வெற்றியுடைய இடபக்கொடி உடையவனும்; (வென்றி - வெற்றி);
அன்பர் செய்த முந்தை-வினை தீர்த்தானும் - பக்தர் செய்த பழவினையைத் தீர்ப்பவனும்;
முடிவு இலானும் - அந்தம் இல்லாதவனும்;
முரல்கின்ற வண்டினங்கள் நாடுகின்ற கந்த(ம்) மலி கொன்றை அணி- சடையினானும் - ஒலிக்கின்ற வண்டுகள் விரும்பி அடைகின்ற மணம் மிக்க கொன்றைமலரைச் சடையில் அணிந்தவனும்; (கந்தம் - வாசனை);
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
8)
மால்கொண்டு மலையிடந்த அரக்கன் தன்னை
.. மலர்ப்பாத விரலூன்றி நசுக்கி னானும்
பால்கொண்டு பாலகன்செய் பணியைக் கண்டு
.. பதைத்துதைத்த தாதையிரு தாள்கள் தம்மைக்
கோல்கொண்டு துணிசண்டிக் கருள்செய் தானும்
.. கோலமெனக் கோளரவத் தார்பூண் டானும்
கால்கொண்டு வெங்கூற்றை உதைசெய் தானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
மால்-கொண்டு மலை இடந்த அரக்கன்-தன்னை மலர்ப்பாத விரல் ஊன்றி நசுக்கினானும் - ஆணவத்தால் கயிலையைப் பேர்த்த இராவணனை மலர் போன்ற திருப்பாத விரலை ஊன்றி நசுக்கியவனும்; (மால் - ஆணவம்; அறியாமை); (கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);
பால்-கொண்டு பாலகன் செய்- பணியைக் கண்டு பதைத்து உதைத்த தாதை இரு-தாள்கள் தம்மைக் - மகன் பாலால் வழிபாடு செய்ததைக் கண்டு மிகவும் கோபித்து, அங்கிருந்தவற்றை உதைத்த தம் தந்தையின் இரு கால்களையும்; (பாலகன் - புத்திரன்); (தாதை - தந்தை);
கோல்-கொண்டு துணி-சண்டிக்கு அருள்செய்தானும் - (பக்கத்தில் இருந்த) ஒரு கோலால் (அதுவே மழுவாக மாறிவிட) வெட்டிய (விசாரசர்மன் என்ற) சண்டேசுர நாயனார்க்கு அருள்புரிந்தவனும்; (துணித்தல் - வெட்டுதல்); (சண்டி - சண்டேசுர நாயனார்); (* இவ்வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
கோலம் எனக் கோள்-அரவத்-தார் பூண்டானும் - அலங்காரமாகக் கொடிய பாம்பை மாலையாக அணிந்தவனும்; (கோள் - கொல்லும் தன்மை); (தார் - மாலை);
கால்-கொண்டு வெங்கூற்றை உதை-செய்தானும் - திருவடியால் கொடிய காலனை உதைத்தவனும்; (வெம்மை - கொடுமை); (கூற்று - கூற்றுவன்);
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
9)
பதியெவரென் றறியாது வாது செய்த
.. பரந்தாமன் அயனிவர்கள் தொழநின் றானும்
புதியவனும் பழையவனும் போற்றி னார்தம்
.. பொல்லாத வினையெல்லாம் போக்கி னானும்
அதிசயனும் பன்றிப்பின் வேட னாகி
.. அருச்சுனற்குப் பாசுபதம் அருள்செய் தானும்
கதிர்மதியைக் கண்ணியெனச் சூடி னானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
பதி எவர் என்று அறியாது வாது செய்த பரந்தாமன் அயன் இவர்கள் தொழ நின்றானும் - தலைவர் யார் என்று அறியாமல் வாதிட்ட திருமால் பிரமன் என்ற இருவரும் தொழுமாறு ஓங்கியவனும்; (பதி - தலைவன்);
புதியவனும் பழையவனும் - என்றும் புதியவனும் மிகத் தொன்மையானவனும்;
போற்றினார்தம் பொல்லாத வினையெல்லாம் போக்கினானும் - துதிக்கும் பக்தர்களது தீவினைகளைத் தீர்ப்பவனும்;
அதிசயனும் - அற்புதனும்;
பன்றிப்பின் வேடன் ஆகி அருச்சுனற்குப் பாசுபதம் அருள்செய்தானும் - ஒரு பன்றியின்பின் வேடன் வடிவில் சென்று அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்தவனும்;
கதிர்மதியைக் கண்ணி எனச் சூடினானும் - ஒளியுடைய திங்களை முடிமாலை போலச் சூடியவனும்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
10)
மடமைமலி வார்த்தைகளைத் தத்து வம்போல்
.. வாய்நவிற்றும் வஞ்சகருக் கெட்டா தானும்
நடலையிலா நெஞ்சத்தால் நாடி னார்க்கு
.. நம்பியஎவ் வடிவமுமேற் றருள்செய் வானும்
உடலிலொரு கூறாக உமையாள் தன்னை
.. உடையானும் விடையானும் உம்பர் கோனும்
கடலிலெழு நஞ்சுண்ட கண்டத் தானும்
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
மடமை மலி வார்த்தைகளைத் தத்துவம் போல் வாய் நவிற்றும் வஞ்சகருக்கு எட்டாதானும் - அறிவின்மை மிக்க சொற்களைப் பெரிய தத்துவம் போலச் சொல்லும் தீயோர்களால் அறிய (/அடைய) ஒண்ணாதவனும்; (மடமை - பேதைமை); (நவிற்றுதல் - சொல்லுதல்);
நடலை இலா நெஞ்சத்தால் நாடினார்க்கு நம்பிய எவ்வடிவமும் ஏற்று அருள்செய்வானும் - கள்ளமற்ற நெஞ்சினால் விரும்பி அடியவர்கள் எவ்வுருவை வழிபாடு செய்தாலும் அவ்வடிவத்தில் அருள்பவனும்; (நடலை - வஞ்சனை; பொய்); (நம்புதல் - விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.94.3 - "வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே"); (அப்பர் தேவாரம் - 5.28.7 - "விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் .... ஆவர் ஐயாறரே");
உடலில் ஒரு கூறாக உமையாள்-தன்னை உடையானும் - திருமேனியில் உமையை ஒரு பாகமாக உடையவனும்; (உமையாள் - உமாதேவி); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "உழையார் கரவா உமையாள் கணவா");
விடையானும் - இடபவாகனனும்;
உம்பர்-கோனும் - தேவர்-தலைவனும்;
கடலில் எழு- நஞ்சு உண்ட கண்டத்தானும் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் வைத்தவனும்;
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
11)
இனியென்றன் துணைநீயென் றேத்தி னார்தம்
.. இருவினையை அறநீக்கி அவர்கட் கென்றும்
நனியின்பம் பயப்பானும் அரவத் தாரை
.. நயந்தானும் நாரியொரு பங்கி னானும்
முனியஞ்சு நமன்றன்னை உதைசெய் தானும்
.. மொய்ம்மலரில் மதுவுண்டு வண்டு பாடக்
கனியுண்டு மந்திமகிழ் சோலை சூழ்ந்த
.. கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
"இனி என்றன் துணை நீ" என்று ஏத்தினார்தம் இருவினையை அற நீக்கி - "நீயே இனி என் துணை" என்று துதிக்கும் அன்பர்களது இருவினையை முழுதும் தீர்த்து; (அற – முழுதும்; முற்றிலும்);
அவர்கட்கு என்றும் நனி இன்பம் பயப்பானும் - அவர்களுக்கு என்றும் மிகுந்த இன்பம் அளிப்பவனும்; (நனி - மிகவும்); (பயத்தல் - கொடுத்தல்);
அரவத்-தாரை நயந்தானும் - பாம்பை மாலை போல விரும்பி அணிந்தவனும்; (தார் - மாலை); (நயத்தல் - விரும்புதல்);
நாரி ஒரு பங்கினானும் - உமையொருபங்கனும்; (நாரி - பெண்);
முனி அஞ்சு நமன்-தன்னை உதை-செய்தானும் - மார்க்கண்டேயர் அஞ்சிய இயமனை உதைத்தவனும்; (முனி - முனிவர் - இங்கே மார்க்கண்டேயர்);
மொய்ம்-மலரில் மது உண்டு வண்டு பாடக், கனி உண்டு மந்தி மகிழ் சோலை சூழ்ந்த - மொய்க்கின்ற மலரில் தேனை உண்டு வண்டுகள் இசையெழுப்பப், பழங்களை உண்டு குரங்குகள் மகிழும் சோலை சூழ்ந்த; (மொய்த்தல் - நெருங்கிச்சுற்றுதல்); (மொய் - நெருக்கம்; கூட்டம்); (சம்பந்தர் தேவாரம் - 2.90.5 - "முருகுரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்து");
கழுக்குன்றின்மேல் விளங்கும் சோதிதானே - திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment