2017-12-15
P.416 - ஆடானை - (திருவாடானை)
---------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
மானையொரு கையேந்தெம் மானையரு நடஞ்செய்யக்
கானையுகந் தானைமதிக் கண்ணியணி சடையானை
ஆனையுரி போர்த்தானை ஆடானை மேயானைக்
கோனையலர் கொண்டுதொழக் கொடுவினைநோய் குறுகாவே.
மானை ஒரு கை ஏந்து எம்மானை - மான்கன்றை ஒரு கையில் ஏந்துகின்ற எம்பெருமானை;
அருநடம் செய்யக் கானை உகந்தானை - அரிய கூத்து ஆடச் சுடுகாட்டை விரும்பியவனை; (கான் - சுடுகாடு);
மதிக்கண்ணி அணி சடையானை - சந்திரனைக் கண்ணிமாலை போல அணிந்த சடையானை; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);
ஆனை-உரி போர்த்தானை - யானைத்தோல் போர்த்தவனை; (உரி - தோல்);
ஆடானை மேயானைக் - திருவாடானையில் உறைகின்றவனை;
கோனை அலர்கொண்டு தொழக் கொடுவினைநோய் குறுகாவே - தலைவனைப் பூக்கள் தூவி வழிபட்டால் கொடியவினை நோய் அடையா; (வினைநோய் - வினைகளும் நோய்களும்; வினையாகிய நோய்);
2)
வனமேந்து முலைமாதை வாமத்தில் மகிழ்ந்தானைக்
கனலேந்து கண்ணுதலாற் காமனுடல் காய்ந்தானை
அனலேந்து கையானை ஆடானை மேயானைப்
புனலேந்து கண்ணினராய்ப் போற்றிடுவார் வினைபோமே.
வனம் ஏந்து முலை மாதை வாமத்தில் மகிழ்ந்தானைக் - அழகிய முலைகளையுடைய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பியவனை; (வனம் - அழகு); (வாமம் - இடப்பக்கம்);
கனல் ஏந்து கண்ணுதலால் காமன் உடல் காய்ந்தானை - தீயைத் தாங்கும் நெற்றிக்கண்ணால் மன்மதனது உடலை எரித்தவனை; (நுதல் - நெற்றி);
அனல் ஏந்து கையானை - கையில் தீயை ஏந்தியவனை;
ஆடானை மேயானைப் - திருவாடானையில் உறைகின்றவனை;
புனல் ஏந்து கண்ணினராய்ப் போற்றிடுவார் வினை போமே - நீரைத் தாங்கிய கண்ணர்களாகி வழிபடுவார்தம் வினை தீரும்;
3)
சிரமேந்தி உண்பலிக்குத் திரிவானை அடிபணிந்து
சுரர்வேண்ட அமுதீந்து சுடுநஞ்சை உண்டானை
அரண்மூன்றை எய்தானை ஆடானை மேயானைச்
சரண்நீயென் றடைந்தாரைச் சாராவல் வினைதானே.
சிரம் ஏந்தி உண்பலிக்குத் திரிவானை - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்கு உழல்பவனை; (பலி - பிச்சை);
அடிபணிந்து சுரர் வேண்ட அமுது ஈந்து சுடுநஞ்சை உண்டானை - திருவடியில் விழுந்து தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு அமுதத்தை அளித்துக், கொடிய சுட்டெரிக்கும் ஆலகாலத்தை உண்டவனை;
அரண் மூன்றை எய்தானை - முப்புரங்களை எய்தவனை;
ஆடானை மேயானைச் - திருவாடானையில் உறைகின்றவனை;
சரண் நீ என்று அடைந்தாரைச் சாரா வல்வினைதானே - "நீயே கதி" என்று அடைக்கலம் அடைந்தவர்களை வலிய வினைகள் நெருங்கா;
4)
பணிவானத்(து) இளமதியைப் படர்சடைமேல் ஒளிவீச
அணிவானை அருச்சுனனுக்(கு) அரும்படையை அளித்தானை
அணியாரும் பொழில்சூழ்ந்த ஆடானை மேயானை
மணியாரும் மிடற்றானை வாழ்த்தவினை மருவாவே.
பணி வானத்து இளமதியைப் படர்சடைமேல் ஒளிவீச அணிவானை - வணங்கிய பிறையைப் படர்ந்த சடைமேல் சூடியவனை;
அருச்சுனனுக்கு அரும்-படையை அளித்தானை - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவனை;
அணி ஆரும் பொழில் சூழ்ந்த ஆடானை மேயானை - அழகிய சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்றவனை;
மணி ஆரும் மிடற்றானை வாழ்த்த வினை மருவாவே - நீலமணியைக் கண்டத்தில் உடையவனை வாழ்த்தினால் வினைகள் நெருங்கா; (மிடறு - கண்டம்);
5)
குழையாரும் செவியானைக் கூவிளஞ்சேர் முடியானை
உழையாரும் கையானை உமையொருபால் உடையானை
அழகாரும் பொழில்சூழ்ந்த ஆடானை மேயானை
இழையாரும் மார்பினனை ஏத்தவினை எய்தாவே.
குழை ஆரும் செவியானைக் - காதில் குழையை அணிந்தவனை;
கூவிளம் சேர் முடியானை - திருமுடிமேல் வில்வத்தை அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்);
உழை ஆரும் கையானை - கையில் மானை ஏந்தியவனை; (உழை - மான்);
உமை ஒருபால் உடையானை - உமையை ஒரு கூறாக உடையவனை; (பால் - பகுதி; பக்கம்);
அழகு ஆரும் பொழில் சூழ்ந்த ஆடானை மேயானை - அழகிய சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்றவனை;
இழை ஆரும் மார்பினனை ஏத்த வினை எய்தாவே - மார்பில் பூணூல் அணிந்த பெருமானைத் துதித்தால் வினைகள் அடையா; (இழை - நூல்; இங்கே பூணூல்);
6)
குரவைத்தூ வெண்மதியைக் குஞ்சிமிசைப் புனைந்தானைப்
பரவைக்கார் நஞ்சுண்டு பாலித்த பெருமானை
அரவத்தார் பூண்டானை ஆடானை மேயானைப்
பரவித்தாள் பணிவாரைப் பழவினைநோய் பற்றாவே.
குரவைத் தூ-வெண்மதியைக் குஞ்சிமிசைப் புனைந்தானைப் - குராமலரையும் தூய வெண்திங்களையும் தலைமேல் சூடியவனை; (குரவு - குராமலர்); (குஞ்சி - தலை);
பரவைக் கார்-நஞ்சு உண்டு பாலித்த பெருமானை - கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு காத்த பெருமானை; (பரவை - கடல்); (கார் - கருமை); (பாலித்தல் - காத்தல்);
அரவத்-தார் பூண்டானை - பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவனை; (தார் - மாலை);
ஆடானை மேயானைப் பரவித் தாள் பணிவாரைப் பழவினைநோய் பற்றாவே - திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானைப் போற்றித் திருவடியை வணங்குபவர்களைப் பழவினைகளும் நோய்களும் பிடித்து வருத்தமாட்டா (அவை நீங்கும்);
7)
குளிராற்றுச் சடைமீது கொன்றைமலர் புனைந்தானைத்
தெளியார்க்குத் தெரியாத செஞ்சுடரைத் தேன்மாந்தி
அளியார்க்கும் பொழில்சூழ்ந்த ஆடானை மேயானை
ஒளிநீற்றை அணிந்தானை ஓம்பவினை ஒழிவாமே.
குளிர்-ஆற்றுச் சடைமீது கொன்றைமலர் புனைந்தானைத் - குளிர்ந்த கங்கை இருக்கும் சடையின்மேல் கொன்றைமலரைச் சூடியவனை;
தெளியார்க்குத் தெரியாத செஞ்சுடரைத் - தெளிவற்ற அறிவினர்களால் அறியப்படாத சிவந்த ஜோதியை;
தேன் மாந்தி அளி ஆர்க்கும் பொழில் சூழ்ந்த ஆடானை மேயானை - தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்றவனை; (மாந்துதல் - உண்தல்); (அளி - வண்டு);
ஒளி-நீற்றை அணிந்தானை ஓம்ப வினை ஒழிவு ஆமே - ஒளிவீசும் திருநீற்றைப் பூசிய பெருமானைப் போற்றினால் வினைகள் தீரும்;
8)
வெஞ்சினத்த இராவணனை விரலூன்றி அடர்த்தானை
அஞ்சியவன் அழுதேத்த அருள்செய்த அம்மானை
அஞ்சுரும்பார் பொழில்சூழ்ந்த ஆடானை மேயானை
நெஞ்சுருகி நாடோறும் நினைவார்தம் வினைவீடே.
வெஞ்சினத்த இராவணனை விரல் ஊன்றி அடர்த்தானை - கடுங்கோபம் உடைய இராவணனைக் கயிலைமேல் ஒரு திருப்பாத-விரலை ஊன்றி நசுக்கியவனை; (அப்பர் தேவாரம் - 6.59.8 - "வெஞ்சினத்த வேழமது உரிசெய்தாரும்");
அஞ்சி அவன் அழுது ஏத்த அருள்செய்த அம்மானை - பின், இராவணன் மிகவும் அஞ்சி நெடுங்காலம் அழுது தொழவும் அவனுக்கு அருள்புரிந்த தலைவனை;
அம்-சுரும்பு ஆர் பொழில் சூழ்ந்த ஆடானை மேயானை - அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானை; (அம் - அழகு); (ஆர்த்தல் - ஒலித்தல்);
நெஞ்சு உருகி நாள்தோறும் நினைவார்தம் வினை வீடே - மனம் கசிந்து தினமும் எண்ணி வழிபடும் அன்பர்களது வினைகள் நீங்கும்;
9)
முன்பேனம் அன்னமடி முடியறியாச் சோதியனை
இன்பால்நெய் தயிராடும் இறையவனை மறையவனை
அன்பாயி பிரியானை ஆடானை மேயானைப்
பொன்போலும் மேனியனைப் போற்றவினை போயறுமே.
முன்பு ஏனம் அன்னம் அடிமுடி அறியாச் சோதியனை - முன்னர்ப் பன்றி வடிவு ஏற்ற திருமாலாலும் அன்னப்பறவை உருக்கொண்ட பிரமனாலும் அடியையும் முடியையும் அறிய ஒண்ணாத ஜோதியை; (ஏனம் - பன்றி);
இன்-பால் நெய் தயிர் ஆடும் இறையவனை - இனிய பால், நெய், தயிர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் இறைவனை;
மறையவனை - வேதியனை;
அன்பாயி பிரியானை - அன்பாயி என்ற திருநாமம் உடைய உமை பிரியாதவனை; (* அன்பாயி - இத்தலத்து இறைவி திருநாமம்);
ஆடானை மேயானை - திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானை;
பொன் போலும் மேனியனைப் போற்ற வினை போய்-அறுமே - பொன்னார் மேனியனை வழிபட்டால் வினைகள் நீங்கும்;
10)
சீலமிலார் செப்புகின்ற சிறுநெறிகள் பேணாமல்
கோலமென நீறணியும் கொள்கையினார்க்(கு) அன்பினனை
ஆலநிழல் அமர்ந்தானை ஆடானை மேயானைச்
சூல(ம்)மழு ஏந்திதனைத் தொழவென்றும் சுகந்தானே.
சீலம் இலார் செப்புகின்ற சிறுநெறிகள் பேணாமல் கோலம் என நீறு அணியும் கொள்கையினார்க்கு அன்பினனை - குணமற்றவர்கள் சொல்லும் தீநெறிகளைப் பேணாமல் திருநீற்றைப் பூசும் கொள்கை உடைய பக்தர்களுக்கு அன்பு உடையவனை;
ஆலநிழல் அமர்ந்தானை - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை;
ஆடானை மேயானைச் - திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானை;
சூலம் மழு ஏந்திதனைத் தொழ என்றும் சுகம்தானே - சூலத்தையும் மழுவையும் ஏந்தியவனைத் தொழுதால் என்றும் இன்பமே;
11)
சிலந்திதனை அரசாளச் செய்தானைச் சக்கரத்தால்
சலந்தரனைத் தடிந்தானைச் சங்கரனைச் சடையிடையே
அலம்புநதி உடையானை ஆடானை மேயானை
வலந்திகழும் விடையானை வாழ்த்தியவர் வாழ்வாரே.
சிலந்திதனை அரசாளச் செய்தானைச் - சிலந்தியைச் செங்கட்சோழன் ஆக்கியவனை; (இது திருவானைக்கா வரலாறு);
சக்கரத்தால் சலந்தரனைத் தடிந்தானைச் - ஜலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்தவனை; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);
சங்கரனைச் - நன்மை செய்பவனை;
சடையிடையே அலம்பு-நதி உடையானை - சடையில் ஒலிக்கின்ற கங்கையை உடையவனை; (அலம்புதல் - ஒலித்தல்);
ஆடானை மேயானை - திருவாடானையில் உறைகின்ற சிவபெருமானை;
வலம் திகழும் விடையானை வாழ்த்தியவர் வாழ்வாரே - வெற்றியுடைய இடபவாகனம் உடையவனை வாழ்த்தும் அடியவர்கள் வாழ்வார்கள்; (வலம் - வலிமை; வெற்றி);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment