2018-02-28
P.424 - நணா (பவானி)
---------------------------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)
1)
விற்படை ஏந்திச் சென்று விசயனுக் கருள்செய் வேடர்
கற்சிலை கையில் ஏந்திக் கடியரண் மூன்றும் எய்தார்
பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் புலியின் தோலர்
நற்புனற் பொன்னிப் பாங்கர் நணாவுறை நாத னாரே.
விற்படை ஏந்திச் சென்று விசயனுக்கு அருள்செய் வேடர் - வேடன் உருவில் வில்லை ஏந்திப் போய் அர்ஜுனனுக்கு அருளியவர்; (படை - ஆயுதம்);
கற்சிலை கையில் ஏந்திக் கடி-அரண் மூன்றும் எய்தார் - மலையை வில்லாக ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களையும் எய்தவர்; (கல் - மலை); (சிலை - வில்); (கடி - காவல்);
பொற்சடை மீது திங்கள் புனைந்தவர் - பொன் போன்ற அழகிய சடையின்மேல் சந்திரனைச் சூடியவர்;
புலியின் தோலர் - புலித்தோலை ஆடையாக அணிந்தவர்;
நற்புனற்-பொன்னிப் பாங்கர் நணா உறை நாதனாரே - நல்ல நீர் மிக்க காவிரியின் பக்கத்தில் திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
2)
குறும்புசெய் நெஞ்ச னாகிக் குறுகிய மதன தாகம்
வெறும்பொடி ஆகு மாறு விழித்தருள் நெற்றிக் கண்ணர்
உறும்பிணி நீக்கி அன்பர்க் குறுதுணை ஆகி நிற்பார்
நறும்பொழில் புடைய ணிந்த நணாவுறை நாத னாரே.
குறும்பு செய் நெஞ்சனாகிக் குறுகிய மதனது ஆகம் வெறும்-பொடி ஆகுமாறு விழித்தருள் நெற்றிக்கண்ணர் - மலர்க்கணையை எய்து விஷமம் செய்ய வந்தடைந்த மன்மதனது உடல் முற்றும் எரிந்து வெறும்-சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவர்; (வெறுமை - கலப்பின்மை);
உறும் பிணி நீக்கி அன்பர்க்கு உறுதுணை ஆகி நிற்பார் - உற்ற பிணியைத் தீர்த்து அடியவர்களுக்கு நல்ல துணை ஆவார்;
நறும்-பொழில் புடை அணிந்த நணா உறை நாதனாரே - வாசமலர்ச் சோலை சூழ்ந்த திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
3)
புதியவர் ஆயின் சாலப் புராதனர் மலர்கள் தூவித்
துதிசெயும் அன்பர்க் கன்பர் சுடலையில் ஆடும் பாதர்
மதியுடன் நாகப் பாம்பு வாழ்சடை உடையார் பொன்னி
நதியுடன் பவானி கூடும் நணாவுறை நாத னாரே.
புதியவர், ஆயின் சாலப் புராதனர் - புதியவர், ஆனால் மிகப் பழையவர்;
மலர்கள் தூவித் துதிசெயும் அன்பர்க்கு அன்பர் - பூக்கள் தூவி வழிபடும் பக்தர்களுக்கு அன்பர்;
சுடலையில் ஆடும் பாதர் - சுடுகாட்டில் கூத்தாடும் திருப்பாதம் உடையவர்;
மதியுடன் நாகப்பாம்பு வாழ்சடை உடையார் - சந்திரனோடு நாகப்பாம்பும் வாழும் சடையை உடையவர்;
பொன்னி-நதியுடன் பவானி கூடும் நணா உறை நாதனாரே - காவிரியாறும் பவானி-நதியும் சங்கமிக்கும் திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
4)
ஆரியம் தமிழ்கொண் டேத்தி அடியிணை போற்றி னார்கள்
கோரிய வரங்க ளெல்லாம் கொடுத்தருள் செய்யும் வள்ளல்
ஏரியல் ஆலின் கீழே இருந்தறம் சொன்ன மூர்த்தி
நாரியைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.
ஆரியம் தமிழ்கொண்டு ஏத்தி அடியிணை போற்றினார்கள் கோரிய வரங்களெல்லாம் கொடுத்து அருள்செய்யும் வள்ளல் - வேதமந்திரங்களாலும் தேவாரம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளாலும் போற்றி இரு-திருவடிகளை வழிபட்டவர்கள் வேண்டிய எல்லா வரங்களையும் அளிக்கும் வள்ளல்;
ஏர் இயல் ஆலின் கீழே இருந்து அறம் சொன்ன மூர்த்தி - அழகிய கல்லால-மரத்தின்கீழ் இருந்து வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (ஏர் - அழகு; எழுச்சி);
நாரியைப் பங்கு உகந்து, நணா உறை நாதனாரே - உமையை ஒரு பாகமாக விரும்பித், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
5)
அஞ்செழுத் தோது மாணி ஆருயிர் தன்னைக் காத்து
வெஞ்சினக் கூற்று தைத்த விரைகமழ் கமல பாதர்
அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அருள்பு ரிந்து
நஞ்சினை உண்ட கண்டர் நணாவுறை நாத னாரே.
அஞ்செழுத்து ஓது மாணி ஆருயிர் தன்னைக் காத்து - திருவைந்தெழுத்தை ஓதிய மார்க்கண்டேயரது அரிய உயிரைக் காத்து;
வெஞ்சினக் கூற்று உதைத்த விரைகமழ் கமல-பாதர் - கொடிய சினம் மிக்க நமனை மணம் கமழும் தாமரை போன்ற பாதத்தால் உதைத்தவர்;
அஞ்சிய உம்பர் உய்ய அமுதினை அருள்புரிந்து - பயந்த தேவர்கள் உய்யும்படி அமுதத்தை அவர்களுக்கு அருள்புரிந்து;
நஞ்சினை உண்ட கண்டர் நணா உறை நாதனாரே - விடத்தை உண்ட நீலகண்டர், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
6)
தரையினில் ஆழி கீறிச் சலந்தரன் தனைத்த டிந்தார்
அரையினில் அரவ நாணர் அழகிய திங்கள் கொன்றை
திரைமத மத்தம் நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர்
நரைவிடைப் பாகர் நன்னீர் நணாவுறை நாத னாரே.
தரையினில் ஆழி கீறிச் சலந்தரன்தனைத் தடிந்தார் - நிலத்தில் ஒரு சக்கரத்தைக் வரைந்து அதுகொண்டு சலந்தரனை அழித்தவர்;
அரையினில் அரவ-நாணர் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர்;
அழகிய திங்கள், கொன்றை, திரை, மதமத்தம், நாகம் செஞ்சடைச் சூடும் செல்வர் - அழகிய சந்திரன், கொன்றைமலர், கங்கை, ஊமத்தமலர், பாம்பு இவற்றைச் செஞ்சடையில் செஞ்சடையில் அணிந்த செல்வர்; (திரை - அலை; நதி);
நரைவிடைப் பாகர் நன்னீர் நணா உறை நாதனாரே - வெள்ளை-இடபத்தை ஊர்தியாக உடையவர், நல்ல நீர் மிக்க திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்; (நரை - வெண்மை);
7)
செங்கையில் ஓடொன் றேந்திச் சில்பலிக் குழலும் செல்வர்
கங்குலிற் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர்
சங்கரர் சீறும் பாம்பைத் தாரெனப் பூண்ட மார்பர்
நங்கையைப் பங்கு கந்து நணாவுறை நாத னாரே.
செங்கையில் ஓடு-ஒன்று ஏந்திச் சில்பலிக்கு உழலும் செல்வர் - சிவந்த கரத்தில் பிரமனது மண்டையோட்டை ஏந்திச் சிறிய அளவில் இடும் உணவை ஏற்கத் திரியும் செல்வர்; (சுந்தரர் தேவாரம் - 7.45.5 - "சென்றவன் சில்பலிக்கென்று தெருவிடை");
கங்குலில் பூதம் சூழக் கானிடை ஆடும் கூத்தர் - இருளில் பூதகணங்கள் சூழச் சுடுகாட்டில் கூத்தாடுபவர்;
சங்கரர் - நன்மையைச் செய்பவர்;
சீறும் பாம்பைத் தார் எனப் பூண்ட மார்பர் - சீறும் நாகத்தை மாலையாக மார்பில் அணிந்தவர்;
நங்கையைப் பங்கு உகந்து, நணா உறை நாதனாரே - உமையை ஒரு பாகமாக விரும்பித், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
8)
முக்கணர் மலையைப் பத்து முடியுடை அரக்கன் பேர்த்த
அக்கணம் விரலொன் றூன்றி அடர்த்தழ வைத்த ஈசர்
மிக்கிகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர்
நக்கெயில் மூன்றெ ரித்து நணாவுறை நாத னாரே.
முக்கணர் மலையைப் பத்து-முடியுடை அரக்கன் பேர்த்த அக்கணம் விரல்-ஒன்று ஊன்றி அடர்த்து அழவைத்த ஈசர் - முக்கண்ணரான சிவபெருமானார் உறையும் கயிலைமலையைப் பத்துத்தலை அரக்கனான இராவணன் பெயர்த்த அச்சமயத்தில் பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஈசனார்;
மிக்கு இகழ் தக்கன் செய்த வேள்வியைச் செற்ற வீரர் - செருக்குற்றுச் சிவனாரை இகழ்ந்த தக்கன் செய்த அவவேள்வியை அழித்த வீரர்; (மிகுதல் - செருக்குறுதல்);
நக்கு எயில் மூன்று எரித்து, நணா உறை நாதனாரே - சிரித்து முப்புரங்களை எரித்துத், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
9)
ஆனிரை மேய்த்தான் பூமேல் அயனிவர் மண்ண கழ்ந்தும்
வானிலு யர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி
மானிகர் நோக்கி பங்கர் மார்பினில் நூலர் என்றும்
ஞானியர் நெஞ்சை நீங்கார் நணாவுறை நாத னாரே.
ஆனிரை மேய்த்தான், பூமேல் அயன் இவர் மண் அகழ்ந்தும் வானில் உயர்ந்தும் நேடி வாடிட ஓங்கு சோதி - (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்கூட்டத்தை மேய்த்த திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் நிலத்தை அகழ்ந்தும் வானில் பறந்து சென்றும் அடிமுடி தேடி வாடும்படி எல்லையின்றி ஓங்கிய ஒளித்தூண் ஆனவர்; (ஆனிரை - ஆன் நிரை - பசுக்கூட்டம்); (நேடுதல் - தேடுதல்);
மான் நிகர் நோக்கி பங்கர் - மான் போன்ற மருண்ட பார்வையையுடைய உமையைப் பங்கில் உடையவர்;
மார்பினில் நூலர் - மார்பில் பூணூல் அணிந்தவர்;
என்றும் ஞானியர் நெஞ்சை நீங்கார், நணா உறை நாதனாரே - எப்பொழுதும் ஞானியர் நெஞ்சில் நிலைத்தவர், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
10)
புன்னெறி வீணர் சொல்லும் பொய்களில் மதிம யங்கேல்
முன்னறி வாளர் சென்று முத்திய டைந்த அந்தச்
செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார் கட்கு
நன்னெறி காட்டும் நம்பர் நணாவுறை நாத னாரே.
புன்னெறி வீணர் சொல்லும் பொய்களில் மதி மயங்கேல் - சிறுநெறிகளில் செல்லும் வீணர்கள் சொல்லும் பொய்களைக் கேட்டு மயங்கவேண்டா; (வீணர் - பயனற்றோர்);
முன் அறிவாளர் சென்று முத்தி அடைந்த அந்தச் செந்நெறி சிந்தை செய்து சிவசிவ என்பார்கட்கு - ஞானம் மிக்க முன்னோர் சென்று முக்தி பெற்றதான சிறந்த வேதநெறியைக் கருதிச், "சிவசிவ" என்று சொல்லி வழிபடும் பக்தர்களுக்கு;
நன்னெறி காட்டும் நம்பர் நணா உறை நாதனாரே - நற்கதி கொடுக்கும் பெருமானார், திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்; (அப்பர் தேவாரம் - 5.90.2 - "நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே");
11)
பெண்ணினார் ஒருபால் போற்றிப் பெருந்துயர் தீரீர் என்ற
விண்ணினார்க் கிரங்கி அன்று வியன்புரம் மூன்றை நாசம்
பண்ணினார் உள்நெ கிழ்ந்து பண்ணினார் தமிழ்கள் பாடி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நணாவுறை நாத னாரே.
பெண்ணினார் ஒருபால் - உமையை இடப்பக்கம் ஒரு பாகமாக உடையவர்;
போற்றிப், "பெருந்-துயர் தீரீர்" என்ற விண்ணினார்க்கு இரங்கி அன்று வியன்-புரம்-மூன்றை நாசம் பண்ணினார் - "பெருந்-துன்பத்தைத் தீர்த்து அருளுங்கள்" என்று போற்றி வணங்கிய தேவர்களுக்கு இரங்கி முன்பு பெரிய முப்புரங்களையும் அழித்தவர்; (வியன் - பெருமை);
உள் நெகிழ்ந்து பண்ணின் ஆர் தமிழ்கள் பாடி நண்ணினார் வினைகள் தீர்ப்பார் - மனம் உருகிப் பண்கள் பொருந்திய தேவாரப் பாடல்கள் பாடித் திருவடியைச் சரணடைந்தவர்களது வினைகளைத் தீர்ப்பவர்;
நணா உறை நாதனாரே - திருநணாவில் (பவானியில்) உறையும் நாதர்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment