2018-02-28
P.425 - செங்கோடு (திருச்செங்கோடு)
(தேவாரத்தில் - கொடிமாடச் செங்குன்றூர்)
---------------------------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)
முற்குறிப்பு - இப்பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கூறப்பெறுகின்றது.
1)
பூவினால் நறுந்தூ பத்தால் .. புனலினால் புரைதீர் செஞ்சொற்
பாவினால் போற்றும் அன்பர் .. பழவினை தீர்க்கும் பண்பன்
ஏவினால் முப்பு ரங்கள் .. எய்தவன் ஏற தேறி
தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
பூவினால், நறுந்-தூபத்தால், புனலினால், - பூக்களாலும் நறும்புகையினாலும், நீராலும்;
புரை தீர் செஞ்சொல் பாவினால் போற்றும் அன்பர் பழவினை தீர்க்கும் பண்பன் - குற்றமற்ற செந்தமிழ்ப் பாமாலைகளாலும் வழிபடும் அடியவர்களது பழைய வினைகளைத் தீர்க்கின்ற பண்பு உடையவன்; (புரை - குற்றம்);
ஏவினால் முப்புரங்கள் எய்தவன் - ஓர் அம்பினால் முப்புரங்களை எய்தவன்; (ஏ – அம்பு);
ஏறது ஏறி - இடபவாகனன்; (ஏறு - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி);
தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சேண் - உயரம்; ஆகாயம்);
2)
கல்வியின் பயன றிந்து .. கற்றவர் போற்றும் ஈசன்
சொல்விர(வு) இன்த மிழ்ப்பாச் .. சொல்லிய தொண்டர் தம்மை
வல்வினை தொடரா வண்ணம் .. மகிழ்ந்தருள் செய்ம்மா தேவன்
செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
கல்வியின் பயன் அறிந்து கற்றவர் போற்றும் ஈசன் - ;
சொல் விரவு இன்-தமிழ்ப்-பாச் சொல்லிய தொண்டர்-தம்மை - செஞ்சொற்கள் பொருந்திய இனிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வழிபடும் தொண்டர்களை;
வல்வினை தொடரா-வண்ணம் மகிழ்ந்துஅருள் செய்ம் மாதேவன் - வலிய வினைகள் தொடராதபடி இன்னருள் செய்யும் மகாதேவன்; (செய்ம்மாதேவன் - புணர்ச்சியில் மகரஒற்று மிகும்);
செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;
3)
வாயினில் நூலைக் கொண்டு .. வலையொரு சிலந்தி பின்ன
மாயிரு ஞாலம் ஆளும் .. மன்னவன் ஆக்கும் எந்தை
தாயினும் நல்லன் கையில் .. தழல்மழு சூலம் ஏந்தி
சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
வாயினில் நூலைக் கொண்டு வலை ஒரு சிலந்தி பின்ன – (திருவானைக்காவில்) ஒரு சிலந்தி தன் வாய்நூலால் வலை பின்னி ஈசனை வழிபடவும்;
மாயிருஞாலம் ஆளும் மன்னவன் ஆக்கும் எந்தை - இந்தப் பெரிய நிலவுலகை ஆளும் சோழமன்னன் ஆக்கிய எம் தந்தை; (அப்பர் தேவாரம் - 4.56.1 - "மாயிரு ஞாலமெல்லா(ம்) மலரடி வணங்கும்"); (* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
தாயினும் நல்லன் - தாயைவிட நல்லவன்;
கையில் தழல் மழு சூலம் ஏந்தி - கையில் தீ, மழு, சூலாயுதம் இவற்றையெல்லாம் ஏந்தியவன்;
சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;
4)
வருந்திய வானோர் வந்து .. மலரடி வாழ்த்த நஞ்சை
அருந்திய கண்டன் நால்வர்க்(கு) .. அருமறை விரிக்க ஆல்கீழ்
இருந்தவன் ஓடொன் றேந்தி .. இரந்தவன் இமவான் பெற்ற
திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
வருந்திய வானோர் வந்து மலரடி வாழ்த்த நஞ்சை அருந்திய கண்டன் - வருந்தி வந்து திருவடியை வழிபட்ட தேவர்கள் உய்ய ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;
நால்வர்க்கு அருமறை விரிக்க ஆல்கீழ் இருந்தவன் - சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்தவன்;
ஓடு ஒன்று ஏந்தி இரந்தவன் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்றவன்;
இமவான் பெற்ற திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் பெண்ணான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;
5)
மலைதனை ஒருவில் லாக்கி .. மாற்றலர் புர(ம்)மூன் றெய்தான்
தலைமலி மாலை தன்னைத் .. தலைக்கணி தலைவன் ஆர்க்கும்
அலைமலி கங்கை தன்னை .. அஞ்சடை அடைத்த அண்ணல்
சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
மலைதனை ஒரு வில் ஆக்கி, மாற்றலர் புரம்-மூன்று எய்தான் - மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (மாற்றலர் - பகைவர்);
தலை மலி மாலைதன்னைத் தலைக்கு அணி தலைவன் - தலைக்குத் தலைமாலை அணிந்த தலைவன்;
ஆர்க்கும் அலை மலி கங்கைதன்னை அஞ்சடை அடைத்த அண்ணல் - ஒலிக்கின்ற அலைகள் மிக்க கங்கையை அழகிய சடையில் அடைத்த அண்ணல்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);
சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை); (திருப்புகழ் - திருத்தணிகை - "கலைமடவார்தம் .. .. சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்");
6)
வாவியார் பங்க யம்போல் .. மலர்விழி மாலிட் டேத்த
ஓவிலா வென்றி ஆழி .. உகந்தருள் பெம்மான் கொக்கின்
தூவியார் சென்னித் தூயன் .. சுரும்பினம் அமரும் ஓதித்
தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
வாவி ஆர் பங்கயம்போல் மலர்விழி மால் இட்டு ஏத்த - குளத்தில் திகழும் தாமரைப்பூப் போலத் தன் மலர்க்கண்ணை இடந்து பூவாகத் திருவடியில் இட்டுத் திருமால் வழிபாடு செய்ய;
ஓவு இலா வென்றி ஆழி உகந்துஅருள் பெம்மான் - நீங்குதல் இல்லாத வெற்றியுடைய சக்கராயுதத்தை அருளிய பெருமான்; (ஓவு - நீங்குதல்; முடிதல்); (வென்றி - வெற்றி); (சம்பந்தர் தேவாரம் - 3.116.5 - "ஓவிலாதிடுங் கரணமே");
கொக்கின் தூவி ஆர் சென்னித் தூயன் - கொக்கின் இறகைத் திருமுடிமேல் சூடிய தூயவன்; (தூவி - இறகு); (கொக்கிறகு - ஒரு பூ; குரண்டாசுரனை அழித்த அடையாளம்);
சுரும்பு-இனம் அமரும் ஓதித் தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (ஓதி - பெண்களின் கூந்தல்; ஓதித் தேவி - ஓதியை உடைய தேவி); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின"); (பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 12.28.669 - "தெள்ளு நீர்விழித் தெரிவையார்")
7)
வில்விச யனுக்கு நல்க .. வேடனாய்ச் சென்ற வேந்தன்
வெல்விடை யான்வன் தொண்டர் .. வேண்டவும் ஆரூர் தன்னில்
நெல்விசும்(பு) அணாவத் தந்த .. நீர்மையன் மலையான் பெற்ற
செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
வில்விசயனுக்கு நல்க வேடனாய்ச் சென்ற வேந்தன் - வில்வித்தையில் சிறந்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்வதற்கு ஒரு வேடன் உருவில் சென்ற வேந்தன்;
வெல்விடையான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;
வன்தொண்டர் வேண்டவும் ஆரூர் தன்னில் நெல் விசும்பு அணாவத் தந்த நீர்மையன் - வன்தொண்டர் (சுந்தரர்) வேண்டியபடி திருவாரூரில் வானளாவ நெல்லைத் தந்தருளியவன்; (அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்); (நீர்மை - தன்மை; சௌலப்பியம்); (* சுந்தரருக்குக் குண்டையூரில் நெல்மலை அளித்துப் பின் அவர் வேண்டியபடி ஈசன் அந்த நெல்மலையைத் திருவாரூரில் ஈந்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
மலையான் பெற்ற செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் மகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;
8)
போயிரு வரையி டந்தான் .. பொன்முடி பத்த டர்த்து
வாயிரும் புகழைப் பாட .. வாளொடு நாளும் ஈந்தான்
ஆயிரம் பெயர்கள் உள்ளான் .. அரையினிற் புலியின் தோலன்
சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
போய் இரு-வரை இடந்தான் பொன்முடி பத்து அடர்த்து - சென்று பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கி; (இருமை - பெருமை); (இடத்தல் - பெயர்த்தல்);
வாய் இரும்-புகழைப் பாட, வாளொடு நாளும் ஈந்தான் - (பின் இராவணனது) வாய்கள் ஈசனது பெரும்புகழைப் பாடவும் கேட்டு இரங்கி, அவனுக்கு வாளும் நீண்ட ஆயுளும் கொடுத்தவன்;
ஆயிரம் பெயர்கள் உள்ளான் - ஆயிரம் திருநாமங்கள் உடையவன்;
அரையினில் புலியின் தோலன் - அரையில் புலித்தோலைக் கட்டியவன்;
சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;
9)
பெருந்தொடர் வாது செய்த .. பிரமனு(ம்) மாலு(ம்) நேட
அருந்தழல் ஆனான் போற்றி .. அடைமணி வாச கர்க்குக்
குருந்தமர் குரவன் ஆனான் .. கொடியன மென்ம ருங்குல்
திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
பெரும்-தொடர்-வாது செய்த பிரமனும் மாலும் நேட அரும் தழல் ஆனான் - தொடர்ந்து மிகவும் வாது செய்த பிரமனும் திருமாலும் தேடுமாறு, அவர்களால் அறிவதற்கு அரிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்);
போற்றி அடை மணிவாசகர்க்குக் குருந்து அமர் குரவன் ஆனான் - வணங்கி அடைந்த மாணிக்கவாசகருக்குக் குருந்தமரத்தின்கீழ்க் குரு ஆனவன்; (குரவன் - குரு);
கொடி அன மென் மருங்குல் திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - கொடி போன்ற மெல்லிய இடையை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (அன – அன்ன – ஒத்த); (மருங்குல் - இடை);
10)
பலபல பொய்கள் சொல்லிப் .. படுகுழித் தள்ளப் பார்க்கும்
கலதிகட் கெட்டா எந்தை .. கண்ணுதல் கழலை வாழ்த்தி
வலம்வரும் அன்பர்க் கின்பம் .. மல்கிட அருளும் வள்ளல்
சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
பலபல பொய்கள் சொல்லிப், படுகுழித் தள்ளப் பார்க்கும் கலதிகட்கு எட்டா எந்தை கண்ணுதல் - பல பொய்களைச் சொல்லிப், (புன்னெறி என்ற) படுகுழியில் மக்களைத் தள்ள முயல்கின்ற தீயோருக்கு எட்டாதவன் நெற்றிக்கண்ணனான எம் தந்தை; (கலதி - தீக்குணம் உடையவன்);
கழலை வாழ்த்தி வலம்வரும் அன்பர்க்கு இன்பம் மல்கிட அருளும் வள்ளல் - திருவடியைப் போற்றிப் பிரதட்சிணம் செய்து வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் பொங்குமாறு அருள்கின்ற வள்ளல் அவன்;
சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை);
11)
நாவினால் அஞ்செ ழுத்தை .. நாள்தொறும் நவிலும் அன்பர்
தீவினை ஆன தீர்த்துத் .. திருவருள் செய்யும் தேவன்
சேவினை விரும்பி ஏறி .. செங்கயல் அன்ன கண்ணி
தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.
நாவினால் அஞ்செழுத்தை நாள்தொறும் நவிலும் அன்பர் தீவினை ஆன தீர்த்துத் திருவருள் செய்யும் தேவன் - தங்கள் நாக்கால் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் அடியவர்களது பாவங்களையெல்லாம் தீர்த்து இன்னருள் செய்யும் இறைவன்; (நவில்தல் - சொல்லுதல்);
சேவினை விரும்பி ஏறி - இடபவாகனத்தை விரும்பியவன்; (ஏறி - ஏறுபவன்);
செங்கயல் அன்ன கண்ணி தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - செங்கயல்மீன் போன்ற கண்களை உடையவளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment