Tuesday, July 1, 2025

P.413 - கழுக்குன்றம் - வில்லேர் புருவத்து

2017-12-04

P.413 - கழுக்குன்றம் - (திருக்கழுக்குன்றம்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப்")

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி");

முற்குறிப்புகள்: திருக்கழுக்குன்றம் - தாழக்கோயில் - ஊரின் நடுவே உள்ள "பக்தவத்ஸலேஸ்வரர் கோயில்";

* அன்பர்க்கு அன்பன் = "பக்தவத்ஸலேஸ்வரன்" - இத்தலத்துத் தாழக்கோயிலில் இறைவன் திருநாமம்;


1)

வில்லேர் புருவத் துமைபங்கா .. விண்ணோர் தலைவா அருளென்று

சொல்லார் தமிழ்இன் தொடைபாடித் .. தொண்டர் பரவும் துணைப்பாதன்

அல்லார் கண்டத் தருளாளன் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கல்லார் மதில்கள் புடைசூழக் .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"வில்ர் புருவத்துமைபங்கா - "வில் போன்ற புருவம் உடைய உமையைப் பங்கில் உடையவனே; (ஏர்தல் - ஒத்தல்);

விண்ணோர் தலைவா, அருள்" என்று - தேவர் தலைவனே, அருள்க" என்று;

சொல் ஆர் தமிழ் இன்-தொடை பாடித் தொண்டர் பரவும் துணைப்-பாதன் - செஞ்சொல் நிறைந்த இனிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடிப் பக்தர்கள் துதிக்கின்ற, (அவர்களைக் காக்கின்ற) இரு-திருவடிகளை உடையவன்; (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்); (துணை - இரண்டு; உதவி; காப்பு);

அல் ஆர் கண்டத்து அருளாளன் - இருள் பொருந்திய கண்டம் உடையவன்; (அல் - இருள்);

அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தவத்ஸலன் விரும்பி உறையும் தலம்;

கல் ஆர் மதில்கள் புடைசூழக் கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - கல்லால் ஆன மதிலால் சூழப்பெற்ற, அழகிய திருக்கழுக்குன்றம்; (கவின் - அழகு);


2)

நீரார் கின்ற நீள்சடைமேல் .. நிலவைப் புனைந்த பிஞ்ஞகனே

சேரார் புரங்கள் செற்றவனே .. செல்வா என்பார்க் கென்றென்றும்

ஆரா அமுதாய் அண்ணிப்பான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

காரார் கின்ற கோபுரஞ்சூழ் .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"நீர் ஆர்கின்ற நீள்-சடைமேல் நிலவைப் புனைந்த பிஞ்ஞகனே - "கங்கையை அணிந்த நீண்ட சடைமேல் சந்திரனை அணிந்த பிஞ்ஞகனே; (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

சேரார் புரங்கள் செற்றவனே - பகைத்த அசுரர்களது முப்புரங்களை அழித்தவனே; (சேரார் - பகைவர்);

செல்வா" என்பார்க்கு - செல்வனே" என்று துதிக்கும் பக்தர்களுக்கு;

என்றென்றும் ஆரா அமுதாய் அண்ணிப்பான் - எந்நாளும் தெவிட்டாத அமுதம் ஆகி இனிமை பயப்பவன்; (ஆரா - ஆராத - தெவிட்டாத); (அண்ணித்தல் - தித்தித்தல்; இனிமை தருதல்);

அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் (= பக்தவத்ஸலன்) விரும்பி உறையும் தலம்;

கார் ஆர்கின்ற கோபுரம் சூழ், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - மேகம் தீண்டும் (உயர்ந்த) கோபுரம் சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கார் - மேகம்); (கவின் - அழகு);


3)

ஒலியார் அலைசேர் கங்கைதனை .. ஒளித்த சடையன் தலைகலனாப்

பலிதேர் செல்வன் பூதங்கள் .. பாட நட்டம் பயில்பரமன்

அலியாய்ப் பெண்ணாய் ஆணானான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கலியார் வீதி அதனயலே .. கவினார் கின்ற கழுக்குன்றே.


ஒலி ஆர் அலை சேர் கங்கைதனை ஒளித்த சடையன் - ஒலி மிகுந்த அலைகளை உடைய கங்கையைச் சடையில் மறைத்தவன்;

தலை கலனாப் பலிதேர் செல்வன் - பிரமனது மண்டையோட்டையே பிச்சைப்பாத்திரமாக ஏந்திப் பிச்சையெடுக்கும் செல்வன்; (தலை - மண்டையோடு);

பூதங்கள் பாட நட்டம் பயில்-பரமன் - பூதகணங்கள் பாடக் கூத்து ஆடும் பரமன்; (நட்டம் - கூத்து);

அலியாய்ப் பெண்ணாய் ஆண் ஆனான் - ஆணும், பெண்ணும், அலியும் ஆனவன்;

அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தவத்ஸலன் விரும்பி உறையும் தலம்;

கலி ஆர் வீதி அதன் அயலே, கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - ஒலி மிக்க வீதியின் அருகே உள்ள, அழகிய திருக்கழுக்குன்றக் கோயில்; (கலி - ஒலி); (கவின் - அழகு);


4)

வெந்த நீறு திகழ்மார்பா .. வெற்றிக் கொடிமேல் விடையுடையாய்

வந்தம் பெய்த மதியில்லா .. மதனை எரித்த கண்ணுதலாய்

அந்தம் இல்லாய் அருளென்னும் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கந்தம் கமழும் பூக்கடைசூழ் .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"வெந்த நீறு திகழ்-மார்பா - "சுட்ட திருநீற்றை மார்பில் பூசியவனே;

வெற்றிக் கொடிமேல் விடை உடையாய் - இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனே;

வந்து அம்பு எய்த மதி இல்லா மதனை எரித்த கண்ணுதலாய் - பக்கத்தில் வந்து மலர்க்கணையை ஏவிய, அறிவில்லாத காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவனே; (மதன் - மன்மதன்); (நுதல் - நெற்றி);

அந்தம் இல்லாய் அருள்" என்னும் - அந்தம் இல்லாதவனே (என்றும் சாவு இல்லாதவனே), அருள்க" என்று துதிக்கின்ற; (அந்தம் - முடிவு);

அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கந்தம் கமழும் பூக்கடை சூழ், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - வாசனை கமழும் பூக்கடைகள் சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கந்தம் - வாசனை); (கவின் - அழகு);


5)

சமயம் ஆறும் ஆக்கியவன் .. தனிவேற் படையைத் தாங்குகின்ற

குமரன் தாதை முடிமீது .. கொக்கின் இறகும் புனைபெம்மான்

அமலன் அடியைத் தொழுதேத்தும் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கமழும் பூவார் பொழில்சூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


சமயம் ஆறும் ஆக்கியவன் - சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என்ற ஷண்மதங்களை ஆக்கியவன்;

தனி வேற்படையைத் தாங்குகின்ற குமரன் தாதை - ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்திய முருகனுக்குத் தந்தை; (தனி - ஒப்பற்ற); (தாதை - தந்தை);

முடிமீது கொக்கின் இறகும் புனை-பெம்மான் - திருமுடிமேல் கொக்கிறகு சூடிய பெருமான்; (கொக்கிறகு - ஒரு பூ; கொக்கு வடிவில் இருந்த குரண்டாசுரனை அழித்த அடையாளமான அதன் இறகு);

அமலன் - தூயன்;

அடியைத் தொழுது ஏத்தும் அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கமழும் பூ ஆர் பொழில் சூழ்ந், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - வாசனை கமழும் மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கந்தம் - வாசனை); (கவின் - அழகு);


6)

முடிமேல் கொன்றை கூவிளமும் .. முளைவெண் மதியும் புனைந்தவரே

துடிபோல் இடையாள் பங்குகந்தீர் .. சூலப் படையீர் தோலுடையீர்

அடிகேள் அருளீர் என்றேத்தும் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கடியார் பொழில்கள் புடைசூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"முடிமேல் கொன்றை கூவிளமும் முளை-வெண்-மதியும் புனைந்தவரே - "திருமுடிமேல் கொன்றைமலரையும், வில்வத்தையும், இள-வெண்திங்களையும் அணிந்தவரே; (கூவிளம் - வில்வம்);

துடி போல் இடையாள் பங்கு உகந்தீர் - உடுக்கையைப் போன்ற இடை உடைய உமையை ஒரு பங்கில் மகிழ்ந்தவரே;

சூலப்-படையீர் - சூலாயுதத்தை ஏந்தியவரே;

தோல்-உடையீர் - புலித்தோல் உடை உடையவரே;

அடிகேள் அருளீர்" என்று ஏத்தும் அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - சுவாமியே, அருள்வீராக" என்று வழிபடும் பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கடி ஆர் பொழில்கள் புடைசூழ்ந், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - வாசனை கமழும் சோலை சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கந்தம் - வாசனை); (கவின் - அழகு);


7)

தாம மாகப் பாம்பணிந்தாய் .. சலமார் சடையாய் அருளென்று

நாம ணக்கத் தமிழ்பாடி .. நற்றாள் இணையைத் தொழுவார்தம்

ஆம யந்தீர்த் தருள்செய்வான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

காமர் சோலை புடைசூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


"தாமமாகப் பாம்பு அணிந்தாய் - "மாலை போலப் பாம்பை அணிந்தவனே; (தாமம் - மாலை);

சலம் ஆர் சடையாய் அருள் என்று - கங்கையைச் சடையில் அணிந்தவனே, அருள்க" என்று; (சலம் - ஜலம் - கங்கை);

நா மணக்கத் தமிழ் பாடி, நற்றாள்-இணையைத் தொழுவார்தம் - வாய் மணக்கத் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி, நல்ல திருவடி இரண்டை வழிபடுபவர்களது;

ஆமயம் தீர்த்து அருள் செய்வான் - நோயைத் தீர்த்து அருள்பவன்; (ஆமயம் - நோய்); (அப்பர் தேவாரம் - 6.96.1 - "ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்");

ன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

காமர் சோலை புடைசூழ்ந்த, கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - அழகிய சோலை சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (காமர் - அழகு); (கவின் - அழகு);


8)

நண்ணி வெற்பை இடந்தானை .. நசுக்க விரலொன் றூன்றியவன்

உண்ணற் கரிய நஞ்சுதனை .. உகந்த ருந்தி வானோர்கட்(கு)

அண்ணிக் கின்ற அமுதீந்தான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கண்ணுக் கினிய வயல்சூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


நண்ணி வெற்பை இடந்தானை நசுக்க விரல் ஒன்று ஊன்றியவன் - வந்து கயிலைமலையைப் பேர்த்த இராவணனை நசுக்க ஒரு விரலை ஊன்றியவன்; (வெற்பு - மலை); (இடத்தல் - பேர்த்தல்);

உண்ணற்கு அரிய நஞ்சுதனை உகந்து அருந்தி வானோர்கட்கு அண்ணிக்கின்ற அமுது ஈந்தான் - உண்ணலாகா விடத்தை விரும்பி உண்டு, தேவர்களுக்கு இனிக்கின்ற அமுதத்தைத் தந்தவன்; (அண்ணித்தல் - தித்தித்தல்);

ன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கண்ணுக்கு இனிய வயல் சூழ்ந்த, கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - அழகிய வயல் சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கவின் - அழகு);


9)

மயலி னாலே முன்னொருநாள் .. வாது செய்த நாரணனும்

அயனும் பன்றி அன்னமென .. ஆகிக் கீழ்மேல் நேடிமிக

அயரு மாறு வளர்சோதி .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கயமும் வயலும் புடைசூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


மயலினாலே முன்னொருநாள் வாது செய்த நாரணனும் அயனும் - முன்பு ஆணவத்தால் (தம்மில் யார் தலைவன் என்று) வாதிட்ட திருமாலும் பிரமனும்; (மயல் - மயக்கம்; ஆணவம்);

பன்றி அன்னம் என ஆகிக் கீழ் மேல் நேடி மிக அயருமாறு வளர் சோதி - பன்றி அன்னப்பறவை என்ற வடிவங்களில் அடியும் முடியும் தேடி மிகவும் தளரும்படி ஓங்கிய ஜோதி; (நேடுதல் - தேடுதல்);

ன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கயமும் வயலும் புடைசூழ்ந்த, கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - குளங்களும் வயலும் சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம்; (கயம் - நீர்நிலை); (கவின் - அழகு);


10)

புரியும் தவமாப் பொய்யுரைக்கும் .. புல்லர் சொல்லில் மயங்காதீர்

கரியை உரித்த காபாலி .. கால காலன் கல்லால்கீழ்

அரிய மறையை விரித்தபிரான் .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கரிய வண்டு பண்ணார்க்கும் .. கவினார் கின்ற கழுக்குன்றே.


புரியும் தவமாப் பொய் உரைக்கும் புல்லர் சொல்லில் மயங்காதீர் - பொய் பேசுவதையே தாம் செய்யும் தவமாகக் கொண்ட கீழோர்களது வார்த்தையில் நீங்கள் மயங்கவேண்டா;

கரியை உரித்த காபாலி - யானையின் தோலை உரித்தவன், காபாலி என்ற திருநாமம் உடையவன்;

கால காலன் - காலனுக்குக் காலன்;

கல்லால்கீழ் அரிய மறையை விரித்த பிரான் - கல்லாலமரத்தின்கீழ் அரிய வேதப்பொருளை உபதேசித்த பெருமான்;

ன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - பக்தர்களுக்கு அன்புடைய பெருமான் விரும்பி உறையும் தலம்;

கரிய வண்டு பண் ஆர்க்கும் கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - கருவண்டுகள் இனிய இசையை ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த), அழகிய திருக்கழுக்குன்றம்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (கவின் - அழகு);


11)

புள்ளூர் மாலோர் கணையாகப் .. பொருப்பை வில்லா வளைவித்து

நள்ளார் புரங்கள் மூன்றெரிய .. நக்க பெருமான் நாள்தோறும்

அள்ளூ றிச்சீர் பரவுகின்ற .. அன்பர்க் கன்பன் அமருமிடம்

கள்ளார் மலரார் பொழில்சூழ்ந்த .. கவினார் கின்ற கழுக்குன்றே.


புள் ஊர் மால் ஓர் கணையாகப் பொருப்பை வில்லா வளைவித்து - கருடனை ஊர்தியாக உடைய திருமால் ஓர் அம்பு ஆக, மேருமலையை வில்லாக வளைத்து; (புள் - பறவை - இங்கே, கருடன்); (பொருப்பு - மலை); (வில்லா - வில்லாக; கடைக்குறை விகாரம்);

நள்ளார் புரங்கள் மூன்று எரிய நக்க பெருமான் - பகைத்த அசுரர்களது முப்புரங்களும் எரியும்படி சிரித்த பெருமான்; (நள்ளார் - பகைவர்); (நகுதல் - சிரித்தல்);

நாள்தோறும் அள்ளூறிச் சீர் பரவுகின்ற அன்பர்க்கு அன்பன் அமரும் இடம் - தினமும் அன்பு பெருகி வாயினிக்கப் புகழ்பாடும் பக்தர்களுக்கு அன்பு உடைய பெருமான் விரும்பி உறையும் தலம்; (அப்பர் தேவாரம் - 6.86.3 - "அள்ளூறி எம்பெருமான் என்பார்க் கென்றும் திரு ஈன்ற" - அள் ஊறி - அன்புமிகப் பெருகி);

கள் ஆர் மலர் ஆர் பொழில் சூழ்ந், கவின் ஆர்கின்ற கழுக்குன்றே - தேன் நிறைந்த மலர்கள் மிகுந்த சோலை சூழ்ந்த, அழகிய திருக்கழுக்குன்றம் ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment