2017-11-02
T.204 - கழுக்குன்றம் - (திருக்கழுக்குன்றம்) - உனைக் கும்பிடு நினைப்பும்
---------------------------------
(வண்ணவிருத்தம்;
தனத்தந்தன தனத்தந்தன தனத்தந்தன .. தனதான)
(தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர - திருப்புகழ் - திருச்செந்தூர்)
உனைக்கும்பிடு நினைப்பும்புகழ் ஒலிக்குந்தமிழ் .. உரைநாவும்
.. உவர்ப்பும்பெரு விருப்புந்தவிர் உளப்பண்பையும் .. அருளாயே
முனைக்குஞ்சரம் உரிக்கும்பர முளைக்கும்பிறை .. அதனோடு
.. முகைக்கொன்றையும் எருக்கும்புனை முடிச்சங்கர .. படுகாலன்
தனைக்கொன்றிட உதைக்குங்கழல் தனக்கன்பினர் .. புகலேவான்
.. தழைக்கும்படி தகிக்குங்கணை தனைக்கொண்டெயில் .. எரியீசா
கனைக்குந்திரை தெறிக்கும்புனல் கரக்குஞ்சடை .. உடையானே
.. கறுக்கும்புயல் அணைக்குங்கிரி கழுக்குன்றுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
உனைக் கும்பிடு நினைப்பும், புகழ் ஒலிக்குந் தமிழ் .. உரை-நாவும்,
.. உவர்ப்பும் பெரு-விருப்புந் தவிர் உளப்-பண்பையும் .. அருளாயே;
முனைக் குஞ்சரம் உரிக்கும் பர; முளைக்கும் பிறை .. அதனோடு,
.. முகைக்-கொன்றையும், எருக்கும் புனை முடிச்-சங்கர; .. படு-காலன்
தனைக் கொன்றிட உதைக்குங் கழல் தனக்கு அன்பினர் .. புகலே; வான்
.. தழைக்கும்படி தகிக்குங் கணை தனைக்கொண்டு எயில் .. எரி-ஈசா;
கனைக்குந் திரை தெறிக்கும் புனல் கரக்குஞ் சடை .. உடையானே;
.. கறுக்கும் புயல் அணைக்குங் கிரி கழுக்குன்று உறை .. பெருமானே.
உனைக் கும்பிடு நினைப்பும், புகழ் ஒலிக்கும் தமிழ் உரை நாவும், - உன்னை வணங்கும் எண்ணத்தையும், உன் புகழ் ஒலிக்கின்ற தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் நாக்கையும்;
உவர்ப்பும் பெரு-விருப்பும் தவிர் உளப் பண்பையும் அருளாயே - விருப்பு-வெறுப்புகள் இல்லாத மனப்பக்குவத்தையும் எனக்கு அருள்வாயாக; (உவர்ப்பு - வெறுப்பு);
முனைக் குஞ்சரம் உரிக்கும் பர - முன்பு பகைமையோடு போர்செய்த யானையின் தோலை உரித்த பரனே; (முனை - முன்னை; "முனை - போர்; பகை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (குஞ்சரம் - யானை);
முளைக்கும் பிறை அதனோடு முகைக்-கொன்றையும் எருக்கும் புனை முடிச்-சங்கர - இளந்திங்களோடு மலர்கின்ற கொன்றை-அரும்பையும் எருக்கமலரையும் சூடுகின்ற திருமுடியை உடைய சங்கரனே; (முகை - அரும்பு); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.7 - "முகைநகைக் கொன்றை மாலை முன்னவன்");
படுகாலன்தனைக் கொன்றிட உதைக்கும் கழல் தனக்கு அன்பினர் புகலே - கொல்லும் கூற்றுவனை அழிக்க உதைத்த கழல் அணிந்த திருவடிக்கு அன்பு உடையவர்களுக்குப் புகலிடம் ஆனவனே; (படுத்தல் - கொல்லுதல்); (கழல் தனக்கு - கழலை அணிந்த திருவடிக்கு);
வான் தழைக்கும்படி தகிக்கும் கணைதனைக் கொண்டு எயில் எரி ஈசா - தேவலோகம் உய்யும்படி சுடுகின்ற ஒரு கணையைக் கையால் எடுத்து முப்புரங்களை எரித்த ஈசனே; (கொள்தல் - கையால் எடுத்தல்);
கனைக்கும் திரை தெறிக்கும் புனல் கரக்கும் சடை உடையானே - ஒலிக்கின்ற அலைகள் நீரைத் தெறிக்கின்ற நதியான கங்கையை ஒளித்த (அடைத்த) சடையை உடையவனே; (கனைத்தல் - ஒலித்தல்); (திரை - அலை); (தெறித்தல் - 3. துளி அல்லது பொறியாய்ச் சிதறுதல்); (கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்);
கறுக்கும் புயல் அணைக்கும் கிரி கழுக்குன்று உறை பெருமானே - கரிய மேகம் வந்து தழுவுகின்ற மலையான திருக்கழுக்குன்றத்தில் உறைகின்ற பெருமானே; (புயல் - மேகம்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment