Saturday, July 5, 2025

T.208 - ஆடானை - தீராத துன்புதனில்

2017-12-14

T.208 - ஆடானை - தீராத துன்புதனில்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தானான தந்ததன தானான தந்ததன

தானான தந்ததன .. தனதான)

(Note: இந்த அமைப்பைப் பெரும்பாலும் ஒத்த அமைப்பு உள்ள திருப்புகழ் -

ஊனாரு முட்பிணியும் - திருப்புகழ் - திருவாடானை)


தீராத துன்புதனில் நானாழ வந்துபொரு

.. .. தேயாத முந்தைவினை .. அதுமாயச்

.. சீர்பாடு செந்தமிழை நாமேல ணிந்துதுயர்

.. .. சேராத இன்பமுற .. அருளாயே

வாரார்த னந்திகழு(ம்) மாதோர்பு றங்குலவு

.. .. மானேவி லங்கலது .. சிலையாகச்

.. சேரார்பு ரங்களொரு தீவாளி கொண்டுசுடு

.. .. தேவேசி வந்தசடை .. மிசைநாகம்

ஏராரும் இண்டையென வானோடு திங்களணி

.. .. ஈசாவி ருண்டமணி .. மிடறானே

.. ஏறேறு கின்றவொரு நாதாம ணங்கமழும்

.. .. ஏவேளின் அங்கமற .. முனிவோனே

ஊராரி டும்பலியை ஊணாந யந்துபெற

.. .. ஓரோடு கொண்டுலகில் .. உழல்வோனே

.. ஆராத அன்புடைய ஆளான தொண்டர்தொழ

.. .. ஆடானை நின்றசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

தீராத துன்புதனில் நான் ஆழ வந்து பொரு

.. .. தேயாத முந்தைவினை .. அது மாயச்,

.. சீர் பாடு செந்தமிழை நாமேல் அணிந்து, துயர்

.. .. சேராத இன்பமுற .. அருளாயே;

வார் ஆர் தனந் திகழு(ம்) மாது ஓர் புறங் குலவு

.. .. மானே; விலங்கலது .. சிலை ஆகச்,

.. சேரார் புரங்கள் ஒரு தீ-வாளி கொண்டு சுடு

.. .. தேவே; சிவந்த சடைமிசை நாகம்,

ஏர் ஆரும் இண்டை என வான் ஓடு திங்கள் அணி

.. .. ஈசா; இருண்ட மணி .. மிடறானே;

.. ஏறு ஏறுகின்ற ஒரு நாதா; மணங் கமழும்

.. .. -வேளின் அங்கம் அற .. முனிவோனே;

ஊரார் இடும் பலியை ஊணா நயந்து பெற

.. .. ஓர் ஓடு கொண்டு உலகில் .. உழல்வோனே;

.. ஆராத அன்புடைய ஆளான தொண்டர் தொழ

.. .. ஆடானை நின்ற சிவபெருமானே.


தீராத துன்புதனில் நான் ஆழ வந்து பொரு தேயாத முந்தைவினை அது மாயச் - தீராத துன்பத்தில் நான் ஆழுமாறு வந்து தாக்குகின்ற அழியாத பழவினை தீரவும்; (துன்பு - துன்பம்); (பொருதல் - போர்செய்தல்); (தேய்தல் - அழிதல்); (மாய்தல் - அழிதல்; சாதல்);

சீர் பாடு செந்தமிழை நாமேல் அணிந்து துயர் சேராத இன்பம் உற அருளாயே - திருப்புகழைப் பாடும் செந்தமிழ்ப் பாமாலைகளை நான் என் நாவில் அணிந்து, துன்பம் பொருந்தாத இன்பம் அடையவும் அருள்வாயாக; (துயர் - துன்பம்);

வார் ஆர் தனம் திகழும் மாது ஓர் புறம் குலவு மானே - கச்சு அணிந்த ஸ்தனத்தை உடைய உமை ஒரு பக்கம் பாகமாகத் திகழும் பெருமானே; (வார் - முலைக்கச்சு); (தனம் - ஸ்தனம் - முலை); (புறம் - பக்கம்); (குலவுதல் - விளங்குதல்); (மான் - பெரியோன்);

விலங்கலது சிலை கச், சேரார் புரங்கள் ஒரு தீ-வாளி கொண்டு சுடு தேவே - மேருமலை வில் ஆகத், தீப் பொருந்திய கணை ஒன்றால் பகைவர்களது முப்புரங்களைச் சாம்பலாக்கியவனே; (விலங்கல் - மலை); (சிலை - வில்); (சேரார் - பகைவர்); (வாளி - அம்பு);

சிவந்த சடைமிசை நாகம், ர் ஆரும் இண்டை ன வான் ஓடு திங்கள் அணி ஈசா - செஞ்சடைமேல் பாம்பையும், அழகிய இண்டைமாலை போல வானில் இயங்கும் திங்களையும் அணிந்த ஈசனே; (ஏர் - அழகு); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

ருண்ட மணி-மிடறானே - கரிய மணியைக் கண்டத்தில் உடையவனே; (மிடறு - கண்டம்);

று ஏறுகின்ற ரு நாதா - இடபவாகனம் உடைய ஒப்பற்ற தலைவனே;

மணம் கமழும் ஏ-வேளின் அங்கம் அற முனிவோனே - வாசனை கமழும் அம்பை உடைய மன்மதனது உடல் அழியும்படி அவனைக் கோபித்தவனே; (ஏ – அம்பு); (வேள் - மன்மதன்); (அங்கம் - உடம்பு); (முனிதல் - கோபித்தல்);

ஊரார் இடும் பலியை ஊணா நயந்து பெற ஓர் ஓடு கொண்டு உலகில் உழல்வோனே - ஊரிலுள்ளோர் இடும் பிச்சையை உணவாக விரும்பி, அதனைப் பெற ஒரு மண்டையோட்டைக் கையில் ஏந்தி உலகில் திரிபவனே; (பலி - பிச்சை); (ஊணா - ஊணாக; ஊண் - உணவு); (நயத்தல் - விரும்புதல்; மகிழ்தல்); (ஓடு - மண்டையோடு);

ஆராத அன்புடைய ஆளான தொண்டர் தொஆடானை நின்ற சிவபெருமானே - மிகுந்த அன்போடு உனக்கு அடிமை பூண்ட தொண்டர்கள் வழிபடத் திருவாடானையில் நிலைத்து எழுந்தருளிய சிவபெருமானே; (நிற்றல் - தங்குதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment