2018-02-25
P.422 - மாடம்பாக்கம்
(தாம்பரம் அருகுள்ள தலம்)
---------------------------------
(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)
(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
தாமரை மலர்தனைச் சரமெ னத்தொடு
காமனைக் கண்ணுதல் காட்டிக் காய்ந்தவன்
தூமதிக் கண்ணியைச் சூடி மேயது
மாமதில் சூழ்தரு மாடம் பாக்கமே.
தாமரைமலர்தனைச் சரம் எனத் தொடு காமனைக் கண்ணுதல் காட்டிக் காய்ந்தவன் - தாமரை முதலிய ஐந்து மலர்களை அம்பாகத் தொடுக்கின்ற மன்மதனை நெற்றிக்கண்ணைக் காட்டி எரித்தவன்;
தூ-மதிக்-கண்ணியைச் சூடி மேயது - தூய வெண்திங்களைக் கண்ணி (தலையில் அணியும் மாலை) போலச் சூடியவன் விரும்பி உறையும் தலம்;
மா-மதில் சூழ்தரு மாடம்பாக்கமே - அழகிய மதில் சூழ்ந்த மாடம்பாக்கம் ஆகும்; (தருதல் - ஒரு துணைவினை);
2)
திண்புயம் எட்டுடைச் செய்ய மேனியன்
தண்புனற் கங்கையைத் தாங்கு வேணிமேல்
வெண்பிறை சூடிய வேந்தன் மேயது
வண்புனற் கயமணி மாடம் பாக்கமே.
திண்-புயம் எட்டுடைச் செய்ய மேனியன் - வலிய எட்டுப் புஜங்களுடைய செம்மேனியன்;
தண்-புனல் கங்கையைத் தாங்கு வேணிமேல் - குளிர்ந்த நீருடைய கங்கையைத் தாங்கிய சடையின்மேல்;
வெண்பிறை சூடிய வேந்தன் மேயது - வெண்திங்களைச் சூடிய தலைவன் விரும்பி உறையும் தலம்;
வண்-புனற்-கயம் அணி மாடம்பாக்கமே - வளம் மிக்க நீர் நிறைந்த குளம் திகழும் மாடம்பாக்கம் ஆகும்;
3)
அண்டிய அன்பருக் கருளும் அங்கணன்
பண்டெயில் மூன்றெரி பற்ற எய்தவன்
தெண்டிரைச் செஞ்சடைச் செல்வன் மேயது
வண்டறை பொழிலணி மாடம் பாக்கமே.
அண்டிய அன்பருக்கு அருளும் அங்கணன் - சரண்புக்க பக்தர்களுக்கு அருளும் அருட்கண் உடையவன்;
பண்டு எயில்-மூன்று எரி பற்ற எய்தவன் - முன்பு முப்புரங்கள் தீப்பற்றி எரியக் கணை தொடுத்தவன்;
தெண்-திரைச் செஞ்சடைச் செல்வன் மேயது - தெளிந்த கங்கையைச் சடையில் உடைய செல்வன் விரும்பி உறையும் தலம்;
வண்டு அறை பொழில் அணி மாடம்பாக்கமே - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த மாடம்பாக்கம் ஆகும்;
4)
கண(ம்)முழ வார்த்திடக் கானில் ஆடுவான்
பணமரை ஆர்த்திடும் பரமன் செந்தழல்
வணன்நரை விடையமர் மன்னன் மேயது
மணமலர்ப் பொழிலணி மாடம் பாக்கமே.
கணம் முழவு ஆர்த்திடக் கானில் ஆடுவான் - பூதகணங்கள் முழவுகளை ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்; (ஆர்த்தல் - ஒலித்தல்);
பணம் அரை ஆர்த்திடும் பரமன் - பாம்பை அரையில் கட்டிய பரமன்; (பணம் - பாம்பின் படம்; பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்);
செந்தழல்-வணன் - தீப் போல் செம்மேனியன்; (வணன் - வண்ணன்);
நரை-விடை அமர் மன்னன் மேயது - வெள்ளை-இடபத்தை ஊர்தியாக விரும்பிய மன்னன் விரும்பி உறையும் தலம்;
மணமலர்ப்-பொழில் அணி மாடம்பாக்கமே - வாசம் மிக்க பூக்கள் திகழும் சோலை சூழ்ந்த மாடம்பாக்கம் ஆகும்;
5)
பொதுவினில் அருநடம் புரியும் பொற்பினன்
முதுமையும் அந்தமும் முதலும் அற்றவன்
மதிலொரு மூன்றெரி மைந்தன் மேயது
மதுமலர்ப் பொழிலணி மாடம் பாக்கமே.
பொதுவினில் அருநடம் புரியும் பொற்பினன் - அம்பலத்தில் அரிய கூத்தினை ஆடும் இயல்பினன்;
முதுமையும் அந்தமும் முதலும் அற்றவன் - பிறப்பு, முதுமை, இறப்பு இவை இல்லாதவன்; (யாப்பு நோக்கி வரிசை மாறி வந்தன);
மதில் ஒரு மூன்று எரி மைந்தன் மேயது - மூன்று கோட்டைகளை எரித்த வீரன் விரும்பி உறையும் தலம்;
மதுமலர்ப்-பொழில் அணி மாடம்பாக்கமே - தேன் நிறைந்த பூக்கள் திகழும் சோலை சூழ்ந்த மாடம்பாக்கம் ஆகும்;
6)
போர்விடை ஊர்தியன் போற்றி வான்தொழக்
கார்விடம் உண்டிருள் கண்டத் தெம்மிறை
கூர்மலி மழுவினன் கூவி ளம்புனை
வார்சடை யானிடம் மாடம் பாக்கமே.
போர்-விடை ஊர்தியன் - போர் செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்;
போற்றி வான் தொழக் கார்-விடம் உண்டு இருள் கண்டத்து எம் இறை - தேவர்கள் போற்றி வழிபடவும், இரங்கிக் கரிய நஞ்சை உண்டு கறுத்த கண்டம் உடைய எம் இறைவன்; (இருள்தல் - கறுப்பாதல்);
கூர் மலி மழுவினன் - கூர்மை மிகுந்த மழுவை ஏந்தியவன்;
கூவிளம் புனை வார்-சடையான் இடம் மாடம்பாக்கமே - வில்வத்தை அணிந்த நீள்சடையை உடைய பெருமான் உறையும் தலம் மாடம்பாக்கம்; (கூவிளம் - வில்வம்);
7)
நறைகமழ் கொன்றையன் நாகக் கச்சினன்
கறைமிட றுடையவன் காலன் மாய்ந்திட
அறைகழல் வீசிய அண்ணல் ஆல்நிழல்
மறைவிரித் தானிடம் மாடம் பாக்கமே.
நறை கமழ் கொன்றையன் - மணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவன்;
நாகக்-கச்சினன் - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவன்;
கறை-மிடறு உடையவன் - நீலகண்டன்;
காலன் மாய்ந்திட அறைகழல் வீசிய அண்ணல் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை இறக்கும்படி உதைத்த தலைவன்;
ஆல்நிழல் மறை விரித்தான் இடம் மாடம்பாக்கமே - கல்லால-மரத்தின்கீழ்ச் சனகாதியருக்கு வேதங்களை உபதேசித்தவன் உறையும் தலம் மாடம்பாக்கம்; (ஆல் - ஆலமரம்); (நிழல் - ஸ்தானம்; இடம்);
8)
மால்கொடு மலையெறி வாள ரக்கனைக்
கால்விரல் வைத்தடர் கருணை மிக்கவன்
சேல்விழித் தேனுகை சேர்ந்த மேனியன்
வால்விடை யானிடம் மாடம் பாக்கமே.
மால்கொடு மலை எறி வாள்-அரக்கனைக் கால்விரல் வைத்து அடர் கருணை மிக்கவன் - ஆணவத்தால் கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற கொடிய அரக்கனான இராவணனைக் கால்விரலை ஊன்றி நசுக்கிய பெருங்கருணையாளன்; (அடர்த்தல் - நசுக்குதல்);
சேல்விழித் தேனுகை சேர்ந்த மேனியன் - சேல்மீன் போன்ற கண்களை உடைய தேனுகாம்பாள் ஒரு பாகம் ஆன திருமேனி உடையவன்; (* தேனுகாம்பாள் - மாடம்பாக்கத்தில் இறைவி திருநாமம்);
வால்விடையான் இடம் மாடம்பாக்கமே - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன் உறையும் தலம் மாடம்பாக்கம்; (வால் - வெண்மை);
9)
செழுமல ரானரி தேடி வாடிட
அழலென ஓங்கிய அண்ணல் வண்டமர்
குழலுமை பங்கினன் கொன்றைத் தாரினன்
மழவிடை யானிடம் மாடம் பாக்கமே.
செழுமலரான் அரி தேடி வாடிட அழல் என ஓங்கிய அண்ணல் - தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி வாடும்படி ஜோதி ஆகி உயர்ந்த பெருமான்;
வண்டு அமர் குழல் உமை பங்கினன் - வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (அமர்தல் - விரும்புதல்);
கொன்றைத்-தாரினன் - கொன்றைமாலையை அணிந்தவன்;
மழவிடையான் இடம் மாடம்பாக்கமே - இள-ஏற்றினை வாகனமாக உடையவன் உறையும் தலம் மாடம்பாக்கம்;
10)
பலபல பொய்யுரை பதகர் சொல்கொளேல்
இலைமலர் கொடுதொழ இன்பம் நல்குவான்
அலைகடல் உமிழ்விடம் அமுது செய்தவன்
மலைமகள் கோனிடம் மாடம் பாக்கமே.
பலபல பொய் உரை பதகர் சொல் கொளேல் - பற்பல பொய்களைச் சொல்லும் கீழோர்களது பேச்சை மதிக்கவேண்டா; (பதகன் - பாவி; கீழோன்);
இலை மலர்கொடு தொழ இன்பம் நல்குவான் - இலைகளாலும் பூக்களாலும் வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவன்;
அலைகடல் உமிழ் விடம் அமுது செய்தவன் - பாற்கடல் உமிழ்ந்த நஞ்சை உண்டவன்;
மலைமகள்கோன் இடம் மாடம்பாக்கமே - உமைக்குக் கணவன் உறையும் தலம் மாடம்பாக்கம்;
11)
நித(ம்)மன மகிழ்வொடு நெற்றி நீற்றராய்ப்
பதமலர் போற்றிடு பத்தர்க் கன்பினன்
மதகரி உரிசெய வல்ல மைந்தனூர்
மதுகரம் அறைபொழில் மாடம் பாக்கமே.
நிதம் மன-மகிழ்வொடு நெற்றி நீற்றராய்ப் பதமலர் போற்றிடு பத்தர்க்கு அன்பினன் - தினமும் மனம் மகிழ்ந்து நெற்றியில் திருநீற்றைப் பூசித் திருவடிகளை வணங்கும் பக்தர்களுக்கு அன்புடைய பெருமான்;
மதகரி உரிசெய வல்ல மைந்தன் ஊர் - மதயானையின் தோலை உரித்த வீரன் உறையும் தலம்; (மதகரி - ஆண்யானை);
மதுகரம் அறை பொழில் மாடம்பாக்கமே - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த மாடம்பாக்கம்; (மதுகரம் - தேனீ; வண்டு);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment