2018-02-25
P.423 - அவிநாசி
---------------------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.90.1 - மாசில் வீணையும்)
* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
1)
உதவி டாயென் றொருதொண்டர் வேண்டவு(ம்)
முதலை உண்டஅப் பாலனைத் தந்தவன்
முதலி லாதவன் முன்னெதிர் ஆனையின்
அதளைப் போர்த்த அவிநாசி அப்பனே.
"உதவிடாய்" என்று ஒரு தொண்டர் வேண்டவும் முதலை உண்ட அப்-பாலனைத் தந்தவன் - "உதவி செய்வாயாக" என்று ஒப்பற்ற வன்தொண்டர் இறைஞ்சவும், முன்பு முதலை உண்ட அச்சிறுவனை மீண்டும் தந்து அருளிய பெருமான்; (தொண்டர் - வன்தொண்டர் - ஏகதேசம்); (சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே"); (* முதலை உண்ட பாலகனை மீண்டும் உயிரோடு வருவித்தது - சுந்தரர் வரலாற்றில் இத்தலத்தில் நிகழ்ந்த அதிசயம்);
முதல் இலாதவன் - ஆதி இல்லாதவன் (= என்றும் உள்ளவன்);
முன் எதிர்-ஆனையின் அதளைப் போர்த்த அவிநாசி அப்பனே - முன்பு எதிர்த்துப் போர்செய்த யானையின் தோலை உரித்துப் போர்த்த அவிநாசி அப்பன்; (அதள் - தோல்);
2)
வந்து வன்றொண்டர் வாழ்த்த முதலையுண்
அந்த ணச்சிறு வன்தனைத் தந்தவன்
வெந்த வெண்பொடி பூசிய வித்தகன்
அந்தி வண்ணன் அவிநாசி அப்பனே.
வந்து வன்றொண்டர் வாழ்த்த முதலை உண் அந்தணச் சிறுவன்தனைத் தந்தவன் - குளக்கரைக்கு வந்து சுந்தரர் பதிகம் பாடி வாழ்த்தவும், முன்பு முதலை உண்ட அந்தணச் சிறுவனை மீண்டும் அளித்தவன்;
வெந்த வெண்-பொடி பூசிய வித்தகன் - சுட்ட வெண்-திருநீற்றைப் பூசியவன், ஞான-வடிவினன்; சர்வ-வல்லமை உடையவன்;
அந்தி-வண்ணன் அவிநாசி அப்பனே - மாலை-நேரத்துச் செவ்வானம் போன்ற நிறத்தை உடையவனான அவிநாசி அப்பன்;
3)
அம்பை எய்ம்மதன் ஆகம் எரித்தவன்
செம்பொன் மேனியன் தெண்டிரை வேணியன்
என்பும் பூண்டவன் இன்தமிழ் பாடிடும்
அன்பர்க் கன்பன் அவிநாசி அப்பனே.
அம்பை எய்ம்-மதன் ஆகம் எரித்தவன் - கணை எய்த மன்மதனது உடலை எரித்தவன்; (* எய்ம்மதன் - புணர்ச்சியில் மகரஒற்று மிகும்); (ஆகம் - உடல்);
செம்பொன் மேனியன் - செம்பொன் போன்ற திருமேனி உடையவன்;
தெண்-திரை வேணியன் - தெளிந்த அலைகளையுடைய கங்கையைச் சடையில் உடையவன்;
என்பும் பூண்டவன் - எலும்பையும் அணிந்தவன்; (உம் - எச்சவும்மை; சிறப்பும்மை என்றும் கொள்ளல் ஆம்);
இன்-தமிழ் பாடிடும் அன்பர்க்கு அன்பன் அவிநாசி அப்பனே - இனிய தமிழ்ப்-பாமாலைகள் பாடும் பக்தர்களுக்கு அன்பு உடையவன் அவிநாசி அப்பன்;
4)
ஊறும் அன்பால் உருகும் அடியவர்
கூறும் யாவையும் ஏற்றருள் கொள்கையன்
நீறு பூசிய நெற்றியிற் கண்ணினன்
ஆறு சூடி அவிநாசி அப்பனே.
ஊறும் அன்பால் உருகும் அடியவர் கூறும் யாவையும் ஏற்று அருள் கொள்கையன் - அன்பின் பெருக்கால் உருகுகின்ற பக்தர்கள் சொல்லும் எவற்றையும் ஏற்று அருள்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.71.1 - "கோழைமிடறாக கவி-கோளும் இலவாக இசை கூடும்வகையால் ஏழை அடியாரவர்கள் யாவைசொன சொல் மகிழும் ஈசன்");
நீறு பூசிய நெற்றியில் கண்ணினன் - நெற்றியில் திருநீற்றைப் பூசியவன்; நெற்றிக்கண்ணன்;
ஆறு சூடி அவிநாசி அப்பனே - கங்காதரன் அவிநாசி அப்பன்;
5)
பல்லில் சென்று பலிதேர் பெருமையன்
அல்லல் செய்த அரண்பட மாமலை
வில்லிற் பாம்பினை வீக்கிய வித்தகன்
அல்லில் ஆடி அவிநாசி அப்பனே.
பல்-இல் சென்று பலி தேர் பெருமையன் - பல இல்லங்களுக்குப் போய்ப் பிச்சை ஏற்கும் பெருமை உடையவன்; (பலி - பிச்சை);
அல்லல் செய்த அரண் பட மாமலை-வில்லில் பாம்பினை வீக்கிய வித்தகன் - தேவர்களுக்குத் துன்பம் தந்த முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக்கி அதனில் வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டிய ஆற்றலுள்ளவன்; (படுதல் - அழிதல்);
அல்லில் ஆடி அவிநாசி அப்பனே - இரவில் திருநடம் செய்பவன் அவிநாசி அப்பன்; (அல் - இருள்; இரவு);
6)
தொண்டர் கட்குத் துணையென நிற்பவன்
அண்டி உம்பர் அடிதொழ நஞ்சினை
உண்ட கண்டன்பல் லூழிகள் கண்டவன்
அண்டர் அண்டன் அவிநாசி அப்பனே.
தொண்டர்கட்குத் துணை என நிற்பவன் - அடியவர்களுக்குத் துணை ஆகி நிற்பவன்;
அண்டி உம்பர் அடிதொழ நஞ்சினை உண்ட கண்டன் - தேவர்கள் சரணடைந்து திருவடியை வணங்க, இரங்கி விடத்தை உண்ட நீலகண்டன்; (கண்டன் - 1. கண்டத்தை உடையவன்; 2. வீரன்);
பல்-ஊழிகள் கண்டவன் - பல ஊழிக்காலங்களைக் கடந்து நிற்பவன் (= காலத்தைக் கடந்தவன்);
அண்டர்-அண்டன் அவிநாசி அப்பனே - தேவதேவன் அவிநாசி அப்பன்;
7)
உச்சி மேலர வொண்மதி சூடிய
பிச்சன் ஆயிரம் பேருடைப் பிஞ்ஞகன்
நச்சி நாளு(ம்) நறுமலர் தூவினார்
அச்சம் தீர்க்கும் அவிநாசி அப்பனே.
உச்சிமேல் அரவு ஒண்மதி சூடிய பிச்சன் - திருமுடிமேல் பாம்பையும் ஒளிவீசும் திங்களையும் சூடிய பேரருளாளன்; (பிச்சன் - பித்தன் - பேரருளாளன்);
ஆயிரம் பேருடைப் பிஞ்ஞகன் - ஆயிரம் திருநாமங்கள் உடையவன்; தலைக்கோலம் உடையவன்;
நச்சி நாளும் நறுமலர் தூவினார் அச்சம் தீர்க்கும் அவிநாசி அப்பனே - விரும்பித் தினமும் வாசமலர்களைத் தூவி வழிபடும் பக்தர்களது அச்சத்தைத் தீர்க்கின்ற (/தீர்ப்பான்) அவிநாசி அப்பன்;
8)
தானஞ் சாது தடவெற் பிடந்தவன்
கானஞ் செய்யக் கழல்விரல் ஊன்றினான்
வானஞ் செல்லு(ம்) மதியம் புனைந்தவன்
ஆனஞ் சாடும் அவிநாசி அப்பனே.
தான் அஞ்சாது தட-வெற்பு இடந்தவன் கானம் செய்யக் கழல்விரல் ஊன்றினான் - கொஞ்சமும் பயமின்றிப் பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் இசை பாடும்படி அவனைக் கால்விரலை ஊன்றி நசுக்கியவன்;
வானம் செல்லும் மதியம் புனைந்தவன் - வானில் செல்லும் திங்களை அணிந்தவன்;
ஆன்-அஞ்சு ஆடும் அவிநாசி அப்பனே - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறும் அவிநாசி அப்பன்;
9)
பாரும் விண்ணும் பறந்தகழ்ந் தார்மயல்
தீரும் வண்ணம் திகழெரி ஆனவன்
ஊரும் பாம்பே ஒருபெருந் தாரென
ஆரு(ம்) மார்பன் அவிநாசி அப்பனே.
பாரும் விண்ணும் பறந்து அகழ்ந்தார் மயல் தீரும் வண்ணம் திகழ் எரி ஆனவன் - மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் தேடிய திருமால் பிரமன் இவர்களது மயக்கம் தீரும்படி விளங்கிய ஜோதி ஆனவன்;
ஊரும் பாம்பே ஒரு பெரும்-தார் என ஆரும் மார்பன் - ஊர்கின்ற பாம்பையே ஒரு சிறந்த மாலையாக மார்பில் அணிபவன்;
அவிநாசி அப்பனே - அவிநாசி அப்பன்;
10)
வெஞ்சொல் பேசிடும் வீணர்க் கருளிலான்
செஞ்சொல் மாலைகள் செப்பி அனுதினம்
நெஞ்சில் அன்பால் நினையும் அடியரை
அஞ்சல் என்பான் அவிநாசி அப்பனே.
வெஞ்சொல் பேசிடும் வீணர்க்கு அருள் இலான் - இகழ்ந்து பேசும் வீணர்களுக்கு அருள் இல்லாதவன்;
செஞ்சொல் மாலைகள் செப்பி அனுதினம் நெஞ்சில் அன்பால் நினையும் அடியரை - தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடித் தினமும் நெஞ்சில் அன்போடு நினைக்கின்ற பக்தர்களை;
அஞ்சல் என்பான் அவிநாசி அப்பனே - "அஞ்சேல்" என்று அருள்பவன் அவிநாசி அப்பன்;
11)
துணிவெண் திங்களைச் சூடி மிடற்றினில்
மணியன் வண்தமிழ் மாலைகள் கொண்டடி
பணியும் அன்பர் பழவினை தீர்த்தவர்க்
கணியன் ஆவன் அவிநாசி அப்பனே.
துணி வெண் திங்களைச் சூடி - வெண்திங்கள் துண்டத்தைச் சூடியவன்;
மிடற்றினில் மணியன் - கண்டத்தில் நீலமணியை உடையவன்;
வண்-தமிழ் மாலைகள் கொண்டு அடி பணியும் அன்பர் பழவினை தீர்த்து - வளமிக்க தேவாரம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளால் திருவடியை வழிபடும் பக்தர்களது பழைய வினைகளையெல்லாம் தீர்த்து;
அவர்க்கு அணியன் ஆவன் அவிநாசி அப்பனே - அவ்வடியவர்களுக்குப் பக்கத்தில் துணையாகி இருப்பவன் அவிநாசி அப்பன்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment