2018-01-20
V.046 - தொழுகழல் ஏத்தல் வழி - ( இரதபந்தம் )
---------------------------------
(வெண்பா)
முற்குறிப்பு - இந்தப் பாடலைப் படிக்கும் முறை:
1. தேரின் இடப்பக்கம் உள்ள சக்கர இடத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு வரியாக மேல்நோக்கி வலம்இடம் இடம்வலம் என்று சுற்றிச்சுற்றிச் சென்று, பின் நடுவே மேலிருந்து கீழ்நோக்கி நேரே இறங்கித் தேரின் வலப்பக்கம் உள்ள சக்கர இடத்தில் முடியும்.
2. பந்த-அமைப்புக் கருதிப் பாடலின் எழுத்துகள் புணர்ச்சி பிரியாத வடிவத்தில் படத்தின் கட்டங்களில் காட்டப்பெற்றுள்ளன.
மூவரில் வேறாந் தனிமுக் கணத்தனா
ரேவலர் மாலேறே றீசனா ராவ
ரழக ரருடாங் கவரை யழுது
தொழுகழ லேத்தல் வழி.
பதம் பிரித்து:
மூவரில் வேறு ஆம் தனி முக்கண் அத்தனார்;
ஏ வலர்; மால்-ஏறு ஏறு ஈசனார் ஆவர்;
அழகர்; அருள் தாங்கு அவரை அழுது
தொழு; கழல் ஏத்தல் வழி.
மூவரில் வேறு ஆம் தனி - மும்மூர்த்திகளிலிருந்து வேறுபட்ட ஒப்பற்றவர்; (இல் - ஐந்தாம் வேற்றுமை உருபு); (சுந்தரர் தேவாரம் - 7.57.7 - "முந்தையாகிய மூவரின் மிக்க மூர்த்தியை");
முக்கண் அத்தனார் - முக்கண் உடைய தந்தையார்;
ஏ வலர் - அம்பு எய்தலில் வல்லவர்; (ஏ – அம்பு); (முப்புரங்களை ஓரம்பினால் எய்தவர்); (அப்பர் தேவாரம் - 6.49.7 - "ஏவலன்காண்");
மால்-ஏறு ஏறு ஈசனார் ஆவர் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவர்; (மால் - பெரிய; திருமால்);
அழகர் - சுந்தரர்;
அருள் தாங்கு அவரை அழுது தொழு - அருளாளரான அவரை அழுது வழிபடு; (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.4 - "தொழுதழுது உள்ளம் நெக்கு");
கழல் ஏத்தல் வழி - அவர் திருவடியைப் போற்றுவதே உய்யும் வழி; (ஏத்தல் - துதித்தலே; ஏகாரம் தொக்கது);
குறிப்பு: "அவரை அழுது தொழுகழல் ஏத்தல் வழி." என்றதில் "தொழு" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்து - "அவரை அழுது தொழு; தொழுகழல் ஏத்தல் வழி" என்றும் பொருள்கொள்ளல் ஆம். (தொழுகழல் - தொழத்தக்க திருவடி; எல்லாரும் தொழுகின்ற திருவடி); (சம்பந்தர் தேவாரம் - 1.52.5 - "பாடலோடு தொழுகழலே வணங்கி");
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment