2017-12-14
P.415 - ஆடானை - (திருவாடானை)
---------------------------------
(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி");
1)
அனேக கோடி பிறப்பெய்தி .. அலந்தேன் அடியேற்(கு) அருளாயே
முனேயும் பினேயும் உள்ளானே .. முக்கண் உடைய பரமேட்டீ
பினாக பாணீ பிள்ளைமதி .. பிறங்கு கின்ற சடையானே
சினேக வல்லி மணவாளா .. திருவா டானைப் பெருமானே.
முனேயும் பினேயும் - முன்னேயும் பின்னேயும் - என்றும்;
பினாகபாணீ - பினாகம் என்ற வில்லை ஏந்தியவனே;
* சினேகவல்லி - திருவாடானையில் இறைவி திருநாமம்.
2)
பவசா கரத்தில் அமிழ்வேனைப் .. பற்றிக் கரைசேர்த் தருளாயே
சிவனே துணைநீ என்றேத்து .. தேவர் உய்ய முப்புரங்கள்
அவைமூன்(று) எய்த வில்லானே .. அன்பர்க்(கு) அன்பா அன்பாயி
அவளோ(டு) அழகார் ஆடானை .. அகலா(து) உறையும் பெருமானே.
பவசாகரம் - பிறவிப்பெருங்கடல்;
* அன்பாயி - திருவாடானையில் இறைவி திருநாமம்.
3)
தாபம் தணியா ஐம்புலனால் .. தவிக்கும் தமியேற்(கு) அருளாயே
தூபம் தீபம் மலர்கொண்டு .. தொழுவார்க்(கு) இன்பம் தருவோனே
கோபம் மிக்க முனிவருக்குக் .. குற்றம் செய்த வாருணிதன்
சாபம் நீக்கி அருள்செய்த .. தண்ணா டானைப் பெருமானே.
* வருணன் மகன் வாருணி துருவாசரைப் பழித்ததனால் அவர் சாபத்தால் ஆனை-உடலும் ஆட்டுத்-தலையும் அடைந்து பின்னர் இத்தலத்தில் வழிபட்டுச் சாப-விமோசனம் பெற்றதைத் தலவரலாற்றில் காண்க. (ஆடு + ஆனை = ஆடானை);
கோபம் மிக்க முனிவருக்குக் குற்றம் செய்த வாருணிதன் சாபம் நீக்கி அருள்செய்த - துர்வாசருக்குக் குற்றம் செய்தவனும் வருணனின் மகனுமான வாருணியினுடைய சாபத்தைத் தீர்த்து அருளிய;
தண் ஆடானைப் பெருமானே - குளிர்ச்சி பொருந்திய திருவாடானையில் உறையும் பெருமானே;
4)
தண்ணார் தமிழால் அடிபோற்றும் .. தமியேற்(கு) இரங்கி அருளாயே
விண்ணோர் தலைவா விரிசடையில் .. வெள்ளம் தாங்கும் வித்தகனே
கண்ணார் நுதலாய் கடல்நஞ்சைக் .. கண்டத்(து) இட்ட மாமணியே
அண்ணா ஆதித் தன்தொழுத .. அணிஆ டானைப் பெருமானே.
* மணியே - இரத்தினமே - இத்தலத்து இறைவன் திருநாமம் "ஆதிரத்தினேஸ்வரர்".
* ஆதித்தன் தொழுத – இத்தலத்தில் சூரியன் வழிபட்டதைத் தலவரலாற்றிற் காண்க.
அணி ஆடானை - அழகிய திருவாடானை;
5)
வரையில் லாமல் பிறவிதரும் .. வலிய வினையை மாய்த்தருளாய்
கரையில் லாத அருட்கடலே .. கறையை ஏற்ற கண்டத்தாய்
புரையில் லாத புகழுடையாய் .. போற்றாத் தக்கன் வேள்விசெற்றாய்
அரையில் அரவக் கச்சுடையாய் .. அணிஆ டானைப் பெருமானே.
வரை இல்லாமல் - அளவு இல்லாமல் - எண்ணற்ற;
புரை இல்லாத – குற்றம் அற்ற;
6)
வருத்து கின்ற வினைமாய்த்து .. மட்டில் இன்பம் தந்தருளாய்
விருத்தன் ஆகிப் பாலனுமாம் .. விகிர்தா வெள்ளை விடையேறீ
அருத்தி பொங்கு நெஞ்சினனாய் .. அடர்ந்த கானில் தவஞ்செய்த
அருச்சு னற்குப் படையீந்தாய் .. அணிஆ டானைப் பெருமானே.
மட்டில் - மட்டு இல் - அளவில்லாத;
அருத்தி - அன்பு; பக்தி;
அருச்சுனற்குப் படை ஈந்தாய் - அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்தவனே;
7)
உள்ளம் ஒன்றி உன்கழலே .. ஓம்பும் அன்பைத் தந்தருளாய்
துள்ளும் மானைத் தரித்தவனே .. சுடலை தன்னில் நடமாடீ
கள்ளம் இல்லா அடியார்க்காக் .. காலன் தன்னை உதைத்தவனே
புள்ளி னங்கள் மகிழ்ந்தார்க்கும் .. பொழிலா டானைப் பெருமானே.
உள்ளம் ஒன்றி உன் கழலே ஓம்பும் அன்பைத் தந்தருளாய் - மனம் ஒன்றி உன் திருவடியையே வழிபடும் பக்தியை எனக்கு அருள்வாயாக;
துள்ளும் மானைத் தரித்தவனே - தாவும் மானை ஏந்தியவனே;
சுடலை-தன்னில் நடமாடீ - சுடுகாட்டில் ஆடுபவனே; (ஆடி - ஆடுபவன்; ஆடீ - ஆடுபவனே);
கள்ளம் இல்லா அடியார்க்காக் காலன்-தன்னை உதைத்தவனே - தூயமனம் உடைய மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டுக் காலனை உதைத்து அழித்தவனே;
புள்-இனங்கள் மகிழ்ந்து ஆர்க்கும் பொழில் ஆடானைப் பெருமானே - பறவைகள் மகிழ்ந்து ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருவாடானையில் உறையும் பெருமானே;
8)
நித்தல் உன்றன் திருநாமம் .. நினையும் நெஞ்சை அருளாயே
புத்தி யின்றிக் கயிலையெனும் .. பொருப்பைப் பேர்த்து வீசமுயல்
பத்துத் தலையோன் கத்தியழப் .. பாத விரலை வைத்தவனே
அத்தி முகனைப் பெற்றவனே .. அணிஆ டானைப் பெருமானே.
நித்தல் - தினமும்;
பொருப்பு - மலை;
அத்திமுகன் - விநாயகன்;
9)
புரக்கும் தலைவா என்றுன்னைப் .. போற்றி னேற்கும் அருளாயே
இரக்கும் அன்பர்க்(கு) இல்லையெனா(து) .. ஈயும் ஈடில் இரத்தினமே
அரிக்கும் அயற்கும் அரியானே .. அலைகள் மிக்க கங்கைதனைக்
கரக்கும் சடைமேற் பிறையானே .. கவினா டானைப் பெருமானே.
புரக்கும் தலைவா என்று உன்னைப் போற்றினேற்கும் அருளாயே - "காக்கும் தலைவனே" என்று உன்னைத் துதிக்கும் எனக்கும் அருள்புரியாய்;
இரக்கும் அன்பர்க்கு இல்லை எனாது ஈயும் ஈடு-இல் இரத்தினமே - வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு இல்லை என்னாமல் வழங்கும் ஒப்பற்ற இரத்தினமே; (* ஆதிரத்தினேஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்).
அரிக்கும் அயற்கும் அரியானே - திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே;
அலைகள் மிக்க கங்கைதனைக் கரக்கும் சடைமேல் பிறையானே - அலை மிகுந்த கங்கையை ஒளித்த சடையின்மேல் பிறையைச் சூடியவனே;
கவின் ஆடானைப் பெருமானே - அழகிய திருவாடானையில் உறையும் பெருமானே;
10)
மந்தை பெருக்கப் பொய்யுரைத்து .. வஞ்சிக் கின்றோர் அறியாதான்
அந்தம் ஆதி ஆகியவன் .. ஆக மங்கள் அருளியவன்
வெந்த நீறு பூசியவன் .. விரிசெஞ் சடைமேல் வெண்திங்கள்
கந்தம் கமழும் கொன்றையினான் .. கவினா டானைப் பெருமானே.
11)
ஓட்டை ஏந்தி உழல்செல்வன் .. உழுவை உரிவை ஆடையினான்
ஆட்டுத் தலையும் கரியுடலும் .. அடைந்த வாரு ணிக்கிரங்கு
நாட்டம் மூன்று திகழீசன் .. நட்டம் பயிலும் இடமாகக்
காட்டை உகந்த கணநாதன் .. கவினா டானைப் பெருமானே.
ஓட்டை ஏந்தி உழல் செல்வன் - பிரமனது மண்டையோட்டை உண்கலனாக ஏந்திப் பிச்சைக்கு உழலும் செல்வன்;
உழுவை உரிவை ஆடையினான் - புலித்தோலை ஆடையாக அணிந்தவன்; (உழுவை - புலி); (உரிவை - தோல்);
ஆட்டுத்-தலையும் கரி-உடலும் அடைந்த வாருணிக்கு இரங்கு - சாபத்தால் ஆட்டுத்தலையும் யானையுடலும் அடைந்த வாருணிக்கு இரங்கி அருளிய;
நாட்டம் மூன்று திகழ் ஈசன் - முக்கட்பெருமான்; (நாட்டம் - கண்);
நட்டம் பயிலும் இடமாகக் காட்டை உகந்த கணநாதன் - கூத்தாடும் இடமாகச் சுடுகாட்டை விரும்பியவன், கணங்களுக்குத் தலைவன்;
கவின் ஆடானைப் பெருமானே - அழகிய திருவாடானையில் உறையும் பெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment