Tuesday, July 1, 2025

T.207 - பழனம் - நிசிதனிற் பகலிற் பெயர்

2017-11-18

T.207 - பழனம் - நிசிதனிற் பகலிற் பெயர்

(திருவையாறு அருகே உள்ள தலம்)

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனத் தனனத் .. தனதான)

(இருவினைப் பிறவி - திருப்புகழ் - கொடுமுடி)


3)

நிசிதனிற் பகலிற் .. பெயரோதி

.. நினைநினைத் திடுதற் .. கருளாயே

சசிதனைக் குரவைக் .. குளிர்நீரைச்

.. சடையினிற் புனைவித் .. தகநாதா

கசிமனத் தினர்நற் .. றுணையாகிக்

.. கடுவினைத் தொடரைக் .. களைவோனே

பசியெனத் தலையிற் .. பலிதேர்வாய்

.. படர்பொழிற் பழனப் .. பெருமானே.


பதம் பிரித்து:

நிசிதனிற் பகலிற் பெயர் ஓதி

.. நினை நினைத்திடுதற்கு அருளாயே;

சசிதனைக் குரவைக் குளிர்-நீரைச்

.. சடையினிற் புனை வித்தக; நாதா;

கசி-மனத்தினர் நற்றுணை ஆகிக்

.. கடு-வினைத் தொடரைக் களைவோனே;

பசி எனத் தலையிற் பலிதேர்வாய்;

.. படர்-பொழிற் பழனப் பெருமானே.


நிசிதனிற் பகலிற் பெயர் ஓதி நினை நினைத்திடுதற்கு அருளாயே - நான் இரவும் பகலும் உன் திருப்பெயரைச் சொல்லி உன்னை எண்ணி வழிபடுவதற்கு அருள்வாயாக; (நிசி - இரவு); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின்");

சசிதனைக் குரவைக் குளிர்நீரைச் சடையினிற் புனை வித்தக நாதா - சந்திரனையும் குராமலரையும் குளிர்ந்த கங்கையையும் சடையில் அணிந்த வல்லவனே, நாதனே; (சசி - சந்திரன்); (குரவு - குராமலர்); (வித்தகன் - வல்லவன்);

கசி-மனத்தினர் நற்றுணை ஆகிக் கடு-வினைத்-தொடரைக் களைவோனே - கசிந்து உருகும் மனம் உடைய அன்பர்களுக்கு நல்ல துணைவன் ஆகி அவர்களுடைய கொடிய வினைகளைத் தீர்ப்பவனே;

பசி த் தலையிற் பலிதேர்வாய் - பசித்தவன் போலப் பிரமன் மண்டையோட்டில் பிச்சையேற்பவனே; (தலை - மண்டையோடு); (பலி - பிச்சை); (சம்பந்தர் தேவாரம் - 1.133.8 - "நகுதலையிற் பலிதேர்ந்து");

படர்-பொழிற் பழனப் பெருமானே - படர்ந்த சோலை சூழ்ந்த திருப்பழனத்தில் உறையும் பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment