Tuesday, July 1, 2025

P.411 - ஆரூர் (திருவாரூர்) - பிணிநீள் புரிபற்றி

2017-11-18

P.411 - ஆரூர் (திருவாரூர்)

---------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

பிணிநீள் புரிபற்றிப் பணிசெய் தண்டிக்குக்

கணிலே ஒளிதந்த கண்ணார் நுதலானை

அணியார் மதில்சூழ்ந்த ஆரூர் மேயானை

மணியார் மிடறானை மறவேல் மடநெஞ்சே.


பிணி-நீள்-புரி பற்றிப் பணிசெய் தண்டிக்குக் கணிலே ஒளி தந்த கண் ஆர் நுதலானை - கட்டிய நீண்ட கயிற்றைப் பற்றி நடந்து திருக்குளத் தொண்டு செய்த தண்டியடிகளுக்குக் கண்ணில் பார்வையைக் கொடுத்த நெற்றிக்கண்ணனை; (பிணித்தல் - கட்டுதல்); (புரி - கயிறு); (கணிலே - கண்ணிலே - இடைக்குறையாக வந்தது);

அணி ஆர் மதில் சூழ்ந்த ஆரூர் மேயானை - அழகிய மதில் சூழ்ந்த திருவாரூரில் உறைகின்றவனை;

மணி ஆர் மிடறானை மறவேல் மடநெஞ்சே - நீலமணி திகழும் கண்டனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மிடறானை - மிடற்றானை; இடைக்குறை விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.19.2 - "மணிபடு கறைமிடறனை"); (ஏல் - எதிர்மறை ஏவல்-ஒருமை விகுதி);


2)

துளக்கில் நமிநந்தி தூய புனலூற்று

விளக்கில் ஒளிநின்று வீச அருள்வானை

அளப்பில் புகழானை ஆரூர் மேயானை

வளத்தைத் தருவானை மறவேல் மடநெஞ்சே.


துளக்கு இல் நமிநந்தி தூய புனல் ஊற்று விளக்கில் ஒளி நின்று வீச அருள்வானை - அசையாத திட-பக்தி உடைய ( / வருத்தம் தீர்ந்த) நமிநந்தி அடிகள் (கமலாலயக் குளத்தின்) தூய நீரை ஊற்றி எரித்த விளக்கில் நீடு ஒளிவீசும்படி அருளியவனை; (துளக்கு - அசைவு; வருத்தம்);

அளப்பு இல் புகழானை - அளவற்ற புகழ் உடையவனை; (அளப்பு - அளத்தல்; எல்லை);

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

வளத்தைத் தருவானை மறவேல் மடநெஞ்சே - எல்லா நலங்களையும் தருபவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக;


3)

மகனைத் தேரூர்ந்த மனுவுக் கருள்வானைக்

குகனைத் தருவானைக் கொடிய அரவத்தை

அகலத் தணிவானை ஆரூர் மேயானை

மகரக் குழையானை மறவேல் மடநெஞ்சே.


மகனைத் தேர் ஊர்ந்த மனுவுக்கு அருள்வானை - கன்றை இழந்து வருந்திய பசுவைக் கண்டு தன் மகன் மீது தேரை ஓட்டி நீதியை நிலைநிறுத்திய மனுநீதிச் சோழனுக்கு அருளியவனை;

குகனைத் தருவானைக் - முருகனைத் தந்தவனை;

கொடிய அரவத்தை அகலத்து அணிவானை - கொடிய பாம்பை மார்பில் அணிபவனை; (அகலம் - மார்பு);

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மகரக்-குழையானை மறவேல் மடநெஞ்சே - மகரமீன் போன்ற குழையை அணிந்த பெருமானை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.84.9 - "தாழ்மகரக்குழையுந் தோடும் அணிந்த திருக்காதனை");


4)

ஓடு தனையேந்தி ஊணுக் குழல்வானைப்

பாடு வன்றொண்டர் தேடு பொன்னீந்த

ஆடும் பெருமானை ஆரூர் மேயானை

மாடும் தருவானை மறவேல் மடநெஞ்சே.


ஓடுதனை ஏந்தி ஊணுக்கு உழல்வானைப் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரிபவனை; (ஓடு - கபாலம்); (ஊண் - உணவு);

பாடு வன்தொண்டர் தேடு பொன் ஈந்த ஆடும் பெருமானை - புகழ்பாடி இறைஞ்சிய சுந்தரருக்குக் குளத்தில் அவர் தேடிய பொன்னைத் தந்த கூத்தனை; (சுந்தரர் தேவாரம் - 7.25.9 - "கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளங் கெடவே");

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மாடும் தருவானை மறவேல் மடநெஞ்சே - வீடு (முக்தி) அருள்வதோடு இம்மையில் செல்வமும் தருபவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மாடு - செல்வம்; உம் - எச்சவும்மை);


5)

கண்டங் கரியானைக் கங்கைச் சடையானைத்

தொண்டர் அவர்வேண்டத் தூது சென்றானை

அண்டர் பெருமானை ஆரூர் மேயானை

மண்டன் புடையானை மறவேல் மடநெஞ்சே.


கண்டம் கரியானைக் - நீலகண்டனை;

கங்கைச் சடையானைத் - கங்காதரனை;

தொண்டர்-அவர் வேண்டத் தூது சென்றானை - சுந்தரர் வேண்டியவாறே பரவை மனைக்குத் தூது நடந்தவனை; (தொண்டர் - இங்கே வன்தொண்டர் - ஏகதேசமாக வந்ததாகக் கொள்ளல் ஆம்);

அண்டர் பெருமானை - தேவர்கள் பெருமானை;

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மண்டு அன்பு உடையானை மறவேல் மடநெஞ்சே - (அடியவர்களுக்கு) மிகுந்த அன்பு உடையவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மண்டுதல் - அதிகமாதல்);


6)

எழுது மறையான இனிய தமிழ்பாடித்

தொழுத அடியார்க்குத் துணையாய் வருவானை

அழிவில் பெருமானை ஆரூர் மேயானை

மழவெள் விடையானை மறவேல் மடநெஞ்சே.


எழுது மறையான இனிய தமிழ் பாடித் தொழுத அடியார்க்குத் துணையாய் வருவானை - எழுதப்படும் வேதமான இனிய தேவாரத்தைப் பாடி வழிபடும் பக்தர்களுக்குக் காவலாகி வருபவனை;

அழிவு இல் பெருமானை - என்றும் அழிவில்லாத பெருமானை;

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மழ-வெள்-விடையானை மறவேல் மடநெஞ்சே - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (மழ - இளமை);


7)

திங்கள் இளநாகம் சேர்ந்து நிலையாகத்

தங்கும் சடையானைச் சங்கக் குழையானை

அங்கை அழலானை ஆரூர் மேயானை

மங்கை பிரியானை மறவேல் மடநெஞ்சே.


திங்கள் இளநாகம் சேர்ந்து நிலையாகத் தங்கும் சடையானைச் - பிறையும் இளம்-பாம்பும் ஒன்றாக என்றும் திகழும் சடையை உடையவனை;

சங்கக்-குழையானை - சங்கினால் ஆன குழையை அணிந்தவனை; (அப்பர் தேவாரம் - 6.98.9 - "சங்கக் குழையோர் காதன்");

அங்கை அழலானை - கையில் நெருப்பை ஏந்தியவனை;

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மங்கை பிரியானை மறவேல் மடநெஞ்சே - உமைபங்கனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக;


8)

இலங்கைக் கிறைதன்னை இறையே விரலூன்றி

மலங்க வைத்தானை வாசம் கமழ்கொன்றை

அலங்கல் அணிவானை ஆரூர் மேயானை

வலங்கொள் விடையானை மறவேல் மடநெஞ்சே.


இலங்கைக்கு இறைதன்னை இறையே விரல் ஊன்றி மலங்க வைத்தானை - இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலைமேல் விரலைச் சிறிதளவே ஊன்றிக் கலங்கவைத்தவனை; (இறை - 1 அரசன்; 2; சிறிதளவு); (மலங்குதல் - மனங்கலங்குதல்);

வாசம் கமழ் கொன்றை-அலங்கல் அணிவானை - மணம் கமழும் கொன்றைமாலையை அணிந்தவனை; (அலங்கல் - பூமாலை);

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

வலங்கொள் விடையானை மறவேல் மடநெஞ்சே - வெற்றியுடைய இடப-வாகனனை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (வலம் - வலிமை; வெற்றி);


9)

மடலார் மலரான்மால் மண்விண் மிகநேடச்

சுடராய் எழுவானைத் தொண்டர்க் கெளியானை

அடலே றுடையானை ஆரூர் மேயானை

வடவால் நிழலானை மறவேல் மடநெஞ்சே.


மடல் ஆர் மலரான் மால் மண் விண் மிக நேடச் சுடராய் எழுவானைத் - இதழ்கள் மிக்க தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் விண்ணில் பறந்து சென்றும் மண்ணை அகழ்ந்து சென்றும் தேடும்படி எல்லையில்லாத ஜோதியாகி உயர்ந்தவனை; (மடல் - பூவிதழ்); (நேடுதல் - தேடுதல்); (மலரான் மால் - மண் விண் - எதிர்நிரல்நிறையாக வந்தன);

தொண்டர்க்கு எளியானை - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவனை;

அடல்-ஏறு உடையானை - வலிமைமிக்க எருதை வாகனமாக உடையவனை; (அடல் - வலிமை; போர்; வெற்றி);

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

வடவால் நிழலானை மறவேல் மடநெஞ்சே - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக; (வடவால் - கல்லாலமரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");


10)

நிழலார் மழுவாளன் நீற்றைப் புனையாதார்

பிழையே புரிகேடர் பேச்சை மதியாதீர்

அழலார் சடையானை ஆரூர் மேயானை

மழையார் மிடறானை வாழ்த்த வருமின்பே.


நிழல் ஆர் மழுவாளன் நீற்றைப் புனையாதார் பிழையே புரி கேடர் பேச்சை மதியாதீர் - ஒளி பொருந்திய மழுவை ஏந்திய சிவபெருமானது திருநீற்றைப் பூசாதவர்களும் குற்றமே செய்யும் கேடர்களும் சொல்லும் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (நிழல் - ஒளி);

அழல் ஆர் சடையானை - தீப் போன்ற செஞ்சடையை உடையவனை; (அழல் - நெருப்பு); (ஆர்தல் - ஒத்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.94.1 - "அழல்நீர் ஒழுகி யனைய சடையும்");

ஆரூர் மேயானை - திருவாரூரில் உறைகின்றவனை;

மழை ஆர் மிடறானை வாழ்த்த வரும் இன்பே - மேகம் ஒத்த நீலநிறம் பொருந்திய கண்டனை வாழ்த்தினால் இன்பமே வந்தடையும்; (மழை - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்); (மிடறு - கண்டம்); (மிடறானை - மிடற்றானை - இடைக்குறையாக வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா");


11)

ஊழி பலகண்ட ஒப்பில் பெருமானை

ஆழி உமிழ்நஞ்சை அமுதா உண்டானை

ஆழித் தேரூரும் ஆரூர் மேயானை

வாழி எனநாளும் வாழ்த்த வருமின்பே.


ஊழி பல கண்ட ஒப்பு இல் பெருமானை - பல ஊழிக்காலங்களைக் கண்டவனும் ஒப்பற்றவனுமான பெருமானை; (ஊழி - உலகம் தோன்றி ஒடுங்கும் காலஅளவு ); (அப்பர் தேவாரம் - 6.28.10 - "ஊழி பலகண் டிருந்தார் போலும்");

ஆழி உமிழ் நஞ்சை அமுதா உண்டானை - கடல் கக்கிய ஆலகாலத்தை அமுதம்போல் உண்டவனை; (ஆழி - கடல்); (அமுதா - அமுதாக; கடைக்குறை விகாரம்);

ஆழித்தேர் ஊரும் ஆரூர் மேயானை - "ஆழித்தேர்" என்ற தேர் ஓடுகின்ற திருவாரூரில் உறைகின்றவனை; (ஆழித்தேர் - திருவாரூர்த் தேரின் பெயர்); (ஊர்தல் - செல்லுதல்; ஏறுதல்); (அப்பர் தேவாரம் - 4.19.7 - "ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே");

வாழி என நாளும் வாழ்த்த வரும் இன்பே - "வாழ்க" என்று தினந்தோறும் பக்தியோடு வாழ்த்தினால் இன்பமே வந்தடையும்; (வாழி - வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோட்சொல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment