2017-11-18
T.205 - பழனம் - இனிய சொற்றொடை
(திருவையாறு அருகே உள்ள தலம்)
---------------------------------
(வண்ணவிருத்தம்;
தனதனத் தனனத் .. தனதான)
(இருவினைப் பிறவி - திருப்புகழ் - கொடுமுடி)
1)
இனியசொற் றொடையிட் .. டிருதாளை
.. இளகுளத் தொடுபற் .. றிடுவேனோ
கனியெனப் புகழப் .. படுவோனே
.. கரியுரித் துரியைப் .. புனைவோனே
தனியெனச் சொலுதற் .. குரியோனே
.. தனுவளைத் தெயிலைச் .. சுடுவோனே
பனிமதிச் சடையிற் .. புனலானே
.. பருமதிற் பழனப் .. பெருமானே.
பதம் பிரித்து:
இனிய சொற்றொடை இட்டு இருதாளை
.. இளகு-உளத்தொடு பற்றிடுவேனோ?
கனி எனப் புகழப்படுவோனே;
.. கரி உரித்து உரியைப் புனைவோனே;
தனி எனச் சொலுதற்கு உரியோனே;
.. தனு வளைத்து எயிலைச் சுடுவோனே;
பனி-மதிச் சடையிற் புனலானே;
.. பருமதிற் பழனப் பெருமானே.
இனிய சொற்றொடை இட்டு இருதாளை இளகு-உளத்தொடு பற்றிடுவேனோ - இனிய பாமாலைகளால் துதித்து உன் இரு-திருவடிகளை உருகும் மனத்தோடு பற்றுமாறு அருள்வாயாக; (சொற்றொடை - பாமாலை); (இளகுதல் - நெகிழ்தல்); (உளம் - மனம்); (பற்றுதல் - பிடித்தல்; மனத்துக்கொள்தல்);
கனி எனப் புகழப்படுவோனே - கனி என்று கற்றவர்களால் புகழப்படுபவனே; (அப்பர் தேவாரம் - 6.32.1 – "கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி"); (சேந்தனார் அருளிய திருவிசைப்பா - 9.5.2 - "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்");
கரி உரித்து உரியைப் புனைவோனே - யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தவனே; (உரி - தோல்);
தனி எனச் சொலுதற்கு உரியோனே - ஒப்பற்றவன் என்று சொல்லத் தக்கவனே; (தனி - ஒன்று; ஒப்பின்மை); (சொலுதற்கு - சொல்லுதற்கு - இடைக்குறை விகாரம்);
தனு வளைத்து எயிலைச் சுடுவோனே - வில்லை வளைத்து முப்புரங்களை எரித்தவனே; (தனு - வில்);
பனி-மதிச் சடையிற் புனலானே - குளிர்ந்த சந்திரன் இருக்கும் சடையில் கங்கையை உடையவனே;
பரு-மதிற் பழனப் பெருமானே - பெரிய மதில்கள் சூழ்ந்த திருப்பழனத்தில் உறையும் பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment