Wednesday, July 9, 2025

V.049 - புனை சேவடியே புகல் - இரதபந்தம்

2018-01-27

புனை சேவடியே புகல் - (இரதபந்தம்)

---------------------------------

(வெண்பா)


முற்குறிப்பு - இந்தப் பாடலைப் படிக்கும் முறை:

1. தேரின் இடப்பக்கம் உள்ள சக்கர இடத்திலிருந்து தொடங்கி மேலேறி அடுத்த சக்கரத்தில் இறங்கிப் பின் மீண்டும் மேலேறி, வரி வரியாகச் சுற்றிச்சுற்றி மேல்நோக்கிச் சென்று, பின் நடுவே மேலிருந்து கீழ்நோக்கி இறங்க வேண்டும்.

2. பந்த-அமைப்புக் கருதிப் பாடலின் எழுத்துகள் புணர்ச்சி பிரியாத வடிவத்தில் படத்தின் கட்டங்களில் காட்டப்பெற்றுள்ளன.


கல்வில்லி கச்சிப் புராண ரரவையே

நல்ல அணியா முடிபூண வல்லா

ரனைவ ரிறையெழில் சேர்பூ வனைய

புனைசே வடியே புகல்.


பதம் பிரித்து:

கல்வில்லி; கச்சிப் புராணர்; அரவையே

நல்ல அணியா முடி பூண வல்லார்;

அனைவர் இறை; எழில்சேர் பூ அனைய

புனை சேவடியே புகல்.


கல்-வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவர்; (கல் - மலை);

கச்சிப்-புராணர் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய தொன்மையானவர்;

அரவையே நல்ல அணியா முடி பூண வல்லார் - பாம்பையே நல்ல ஆபரணமாகத் தலையில் அணிந்தவர்; (இலக்கணக் குறிப்பு : "முடிப் பூணவல்லார்" என்பது இங்கே பந்தத்தைக் கருதி "முடி பூணவல்லார்" என்று ப் கெட்டு வந்தது);

னைவர் இறை - எல்லாருக்கும் தலைவர்;

எழில்சேர் பூ அனைய புனை சேவடியே புகல் - அப்பெருமானாரின் பூப் போன்ற அழகிய சிவந்த திருவடியே நமக்குப் பற்றுக்கோடு; (புனை - அழகு); (புகல் - துணை; பற்றுக்கோடு; சரண்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment