Tuesday, July 1, 2025

P.410 - கள்ளில் - (திருக்கண்டலம்) - கூர்மழு வாளினன்

2017-10-30

P.410 - கள்ளில் - (திருக்கண்டலம்)

(சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

கூர்மழு வாளினன் கூவி ளங்குரா

நீர்மலி வேணியன் நெற்றிக் கண்ணினன்

கார்வயல் சூழ்திருக் கள்ளில் மேயவன்

ஊர்விடை யான்கழல் உன்னு நெஞ்சமே.


கூர் மழுவாளினன் - கூர்மையுடைய மழுவை ஏந்தியவன்;

கூவிளம் குரா நீர் மலி வேணியன் - வில்வம், குராமலர், கங்கை இவற்றைச் சடையில் தரித்தவன்;

நெற்றிக் கண்ணினன் - முக்கண்ணன்;

கார்வயல் சூழ் திருக் கள்ளில் மேயவன் - நீர்வளம் மிக்க பசிய வயல்கள் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கார் - மேகம்; மழை; நீர்; பசுமை);

ஊர்-விடையான் கழல் - இடபத்தை வாகனமாக உடையவன் திருவடியை; (ஊர்தல் - ஏறுதல்);

உன்னு நெஞ்சமே - நெஞ்சே நினைவாயாக; (உன்னுதல் - நினைதல்);


2)

மறையுரை நாவினன் மாது பங்கமர்

இறையவன் முப்புரம் எய்த வில்லினன்

கறையணி கண்டனம் கள்ளில் மேயவன்

பிறையணி அரனடி பேணு நெஞ்சமே.


மறை உரை நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

மாது பங்கு அமர் இறையவன் - உமையை ஒரு பங்கில் விரும்பிய இறைவன்;

முப்புரம் எய்த வில்லினன் - திரிபுரங்களை எரிக்க வில்லேந்தியவன்;

கறை அணி கண்டன் அம் கள்ளில் மேயவன் - நீலகண்டன்; அழகிய திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (அம் - அழகு); (கண்டனம் கள்ளில் மேயவன் = "கண்டன், நம் கள்ளில் மேயவன்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளல் ஆம்);

பிறை அணி அரன் அடி பேணு நெஞ்சமே - சந்திரனைச் சூடிய ஹரனது திருவடியைப் போற்று நெஞ்சே;


3)

கொடிமிசை ஏற்றினன் கொடிய கூற்றுதை

அடியினன் பாம்பினை அரையில் ஆர்த்தவன்

கடிமலர்ப் பொழிலணி கள்ளில் மேயவன்

பொடியணி கோன்கழல் போற்று நெஞ்சமே.


கொடிமிசை ஏற்றினன் - இடபச்-சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

கொடிய கூற்று உதை அடியினன் - கொடிய நமனைக் காலால் உதைத்தவன்;

பாம்பினை அரையில் ஆர்த்தவன் - நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

கடிமலர்ப் பொழில் அணி கள்ளில் மேயவன் - மணம் மிக்க பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கடி - வாசனை);

பொடி அணி கோன் கழல் போற்று நெஞ்சமே - திருநீற்றைப் பூசிய தலைவனது திருவடியைப் போற்று நெஞ்சே;


4)

மழவிடை ஊர்தியன் மார்பில் நூலினன்

தழலொரு கையினில் தாங்கி ஆடுவான்

கழனிகள் சூழ்தரு கள்ளில் மேயவன்

அழல்நிறத் தரனடி அடையென் நெஞ்சமே.


மழ விடை ஊர்தியன் - இளைய எருதை வாகனமாக உடையவன்;

மார்பில் நூலினன் - மார்பில் பூணூல் அணிந்தவன்;

தழல் ஒரு கையினில் தாங்கி ஆடுவான் - ஒரு கையில் தீயை ஏந்தி ஆடுபவன்;

கழனிகள் சூழ்தரு கள்ளில் மேயவன் - வயல்கள் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கழனி - வயல்); (தருதல் - ஒரு துணைவினை);

அழல் நிறத்து அரன் அடி அடை என் நெஞ்சமே - தீப் போல் செம்மேனி உடைய ஹரனது திருவடியை, என் நெஞ்சே, அடைவாயாக;


5)

விளித்துளம் நைபவர் வினைகள் தீர்த்துவான்

அளிப்பவன் கிளைகளில் ஆடி மந்திகள்

களித்திடு காவணி கள்ளில் மேயவன்

ஒளிச்சடை யான்கழல் உன்னு நெஞ்சமே.


விளித்துளம் நைபவர் வினைகள் தீர்த்து வான் அளிப்பவன் - வாயார ஈசன் திருநாமங்களைச் சொல்லி அழைத்து உள்ளம் உருகும் பக்தர்களது வினைகளையெல்லாம் தீர்த்து அவர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தருபவன்; (விளித்தல் - அழைத்தல்; சொல்லுதல்; பாடுதல்); (வான் - வானுலகம் - சிவலோகம்); (அப்பர் தேவாரம் - 6.31.1 - "ஆரமுதே ஆதீ என்றும், ஆரூரா என்றென்றே அலறா நில்லே");

கிளைகளில் ஆடி மந்திகள் களித்திடு கா அணி கள்ளில் மேயவன் - மரக்கிளைகளில் குரங்குகள் ஆடி மகிழும் சோலை சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கா - சோலை);

ஒளிச்சடையான் கழல் உன்னு நெஞ்சமே - பிரகாசிக்கும் சடையை உடைய சிவபெருமான் திருவடியை நினை நெஞ்சே; (ஒளிச்சடை - ஒளி உடைய சடை); (அப்பர் தேவாரம் - 4.76.10 - "கிளரொளிச் சடையினீரே");


6)

புவியினர் விண்ணவர் போற்று பூரணன்

அவிதலி லாச்சுடர் ஆய பெற்றியன்

கவினுறு வயலணி கள்ளில் மேயவன்

சிவனவன் அடியிணை சிந்தி நெஞ்சமே.


புவியினர் விண்ணவர் போற்று பூரணன் - மண்ணுலகோரும் விண்ணுலகோரும் போற்றுகின்ற முழுமுதற்பொருள்;

அவிதல் இலாச் சுடர் ஆய பெற்றியன் - என்றும் அவியாத ஜோதி என்ற பெருமை உடையவன்; (பெற்றி - இயல்பு; பெருமை); (அவிதல் - அணைந்துபோதல்; சாதல்);

கவின் உறு வயல் அணி கள்ளில் மேயவன் - அழகிய வயல் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (கவின் - அழகு);

சிவன்அவன் அடியிணை சிந்தி நெஞ்சமே - சிவபெருமானது இரு-திருவடிகளை, நெஞ்சே, எண்ணுவாயாக;


7)

மாமணம் ஆர்மலர் வாளி ஐந்துடைக்

காமனைப் பொடிபடக் கண்ட கண்ணுதல்

காமரம் ஆர்பொழிற் கள்ளில் மேயவன்

தூமலர் அடியிணை துதியென் நெஞ்சமே.


மா-மணம் ஆர் மலர்-வாளி ஐந்துடைக் - அழகிய, மணம் நிறைந்த மலரம்புகள் ஐந்தினை உடைய; (வாளி - அம்பு);

காமனைப் பொடிபடக் கண்ட கண்ணுதல் - மன்மதனைச் சாம்பல் ஆக்கிய நெற்றிக்கண்ணன்;

காமரம் ஆர் பொழில் கள்ளில் மேயவன் - வண்டுகள் இசை பாடுகின்ற சோலை சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்றவன்; (காமரம் - ஒரு பண்ணின் பெயர்; இசை); (ஆர்த்தல் - ஒலித்தல்);

தூ-மலர் அடியிணை துதி என் நெஞ்சமே - அப்பெருமானது தூய மலர் போன்ற இரு-திருவடிகளை, என் நெஞ்சே, துதிப்பாயாக;


8)

திண்ணிய தசமுகன் சென்னி தோளவை

புண்ணுற ஒருவிரல் பொருப்பில் ஊன்றினான்

கண்ணியல் நெற்றியன் கள்ளில் மேயவன்

புண்ணியன் பொன்னடி போற்று நெஞ்சமே.


திண்ணிய தசமுகன் சென்னி தோளவை புண்ணுற ஒருவிரல் பொருப்பில் ஊன்றினான் - வலிமை மிக்க இராவணனது தலைகளும் புஜங்களும் புண்ணாகும்படி திருவடி-விரல் ஒன்றைக் கயிலைமலைமேல் ஊன்றியவன்;

கண் இயல் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்; (இயல்தல் - தங்குதல்; பொருந்துதல்);

கள்ளில் மேயவன் - திருக்கள்ளிலில் உறைகின்றவன்;

புண்ணியன் பொன்னடி போற்று நெஞ்சமே - புண்ணியமூர்த்தியான அப்பெருமானது பொன் போன்ற திருவடியை, நெஞ்சே, போற்றுவாயாக;


9)

கரியவன் நான்முகன் காணொ ணாதுயர்

எரியவன் அடியவர்க் கென்றும் எளியவன்

கரியுரி போர்த்தவன் கள்ளில் மேயவன்

புரிசடை யான்கழல் போற்று நெஞ்சமே.


கரியவன் நான்முகன் காணொணாதுயர் எரி அவன் - திருமால் பிரமன் இவர்களால் காண்பதற்கு அரிதாகி ஓங்கிய ஜோதி; (கரியவன் - திருமால்); (காணொணாது - காண ஒண்ணாது; தொகுத்தல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 3.33.9 - "அயனொடு மாலுக்கும் காணொணா வண்ணத்தான்");

அடியவர்க்கு என்றும் எளியவன் - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்;

கரி-உரி போர்த்தவன் - யானைத்தோலைப் போர்த்தவன்; (உரி - தோல்);

கள்ளில் மேயவன் - திருக்கள்ளிலில் உறைகின்றவன்;

புரிசடையான் கழல் போற்று நெஞ்சமே - முறுக்கிய சடையை உடைய அப்பெருமானது திருவடியை, நெஞ்சே, போற்றுவாயாக; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்);


10)

பொய்யுரை வீணர்சொல் போற்றி டேன்மினீர்

மையணி மிடறினன் வன்னி மான்மறி

கையினில் ஏந்திய கள்ளில் மேயவன்

செய்யவன் அடிதொழச் சேரும் இன்பமே.


பொய் உரை வீணர் சொல் போற்றிடேன்மின் நீர் - பொய்களை உரைக்கின்ற வீணர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவற்பன்மை விகுதி);

மைணி மிடறினன் - நீலகண்டன்;

வன்னி மான்மறி கையினில் ஏந்திய - தீயையும் மான்கன்றையும் கையில் ஏந்திய; (வன்னி - நெருப்பு);

கள்ளில் மேயவன் - திருக்கள்ளிலில் உறைகின்றவன்;

செய்யவன் அடிதொழச் சேரும் இன்பமே - செம்மேனி உடைய சிவபெருமானது திருவடியை வழிபட்டால் இன்பமே வந்தடையும்; இன்பமே மிகும்; (செய் - சிவப்பு);


11)

புதியவன் பழையவன் புற்ற ராவணி

பதியவன் வெண்மழுப் படையை ஏந்தினான்

கதிர்மதி முடியினன் கள்ளில் மேயவன்

அதிர்கழல் தொழுதெழ ஆரும் இன்பமே.


புதியவன் பழையவன் - என்றும் புதியவன்; மிகத் தொன்மையானன்;

புற்று-அரா அணி பதி அவன் - புற்றில் வாழும் இயல்பை உடைய பாம்பை அணியும் தலைவன்;

வெண்மழுப் படையை ஏந்தினான் - கையில் ஒளி வீசும் மழுவாயுதத்தை ஏந்தியவன்; (படை - ஆயுதம்);

கதிர்மதி முடியினன் - கதிர் வீசும் சந்திரனை முடிமேல் அணிந்தவன்; (கதிர் - கிரணம்; ஒளி);

கள்ளில் மேயவன் - திருக்கள்ளிலில் உறைகின்றவன்;

அதிர்-கழல் அடி தொழ ஆரும் இன்பமே - அப்பெருமானது அதிர்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டால் இன்பமே மிகும்; (அதிர்தல் - முழங்குதல் - ஒலித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment