Tuesday, July 8, 2025

P.421 - பேரூர் - திருமலியும் தமிழ்பாடி

2017-12-25

P.421 - பேரூர்

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

1)

திருமலியும் தமிழ்பாடிச் சேவித்தார் இடர்தீர்ப்பான்,

அருமறையின் பொருள்விரிக்க ஆலநிழல் அமர்ந்தபிரான்,

கருமுகிலின் வண்ணத்தைக் கண்டத்திற் காட்டுமரன்,

பெருமதில்சூழ்ந் தழகாரும் பேரூரெம் பெருமானே.


திரு மலியும் தமிழ் பாடிச் சேவித்தார் இடர் தீர்ப்பான் - திரு மிகுந்த தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வணங்கியவர் துன்பத்தைத் தீர்ப்பவன்;

அருமறையின் பொருள் விரிக்க ஆலநிழல் அமர்ந்த பிரான் - அரிய வேதப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருந்த தலைவன்;

கருமுகிலின் வண்ணத்தைக் கண்டத்தில் காட்டும் அரன் - கரிய மேகத்தின் நிறத்தைக் கண்டத்தில் காட்டுகின்ற ஹரன்;

பெருமதில் சூழ்ந்து அழகு ஆரும் பேரூர் எம் பெருமானே - பெரிய மதிலால் சூழப்பெற்று அழகு மிகும் பேரூரில் உறையும் எம்பெருமான்;


2)

போதையடி இட்டுமிகப் போற்றிடுவார் இடர்தீர்ப்பான்,

வாதையுறு வானவர்கள் வாழவிடம் உண்டபிரான்,

சீத(ம்)மலி கங்கைநதித் திரைமோது செஞ்சடையான்,

பேதையொரு பங்கமரும் பேரூரெம் பெருமானே.


போதை அடி இட்டு மிகப் போற்றிடுவார் இடர் தீர்ப்பான் - திருவடியில் பூக்களைத் தூவி மிகவும் போற்றி வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (போது - பூ);

வாதையுறு வானவர்கள் வாழ விடம் உண்ட பிரான் - துன்புற்ற தேவர்கள் வாழும் பொருட்டு ஆலகாலத்தை உண்டருளிய தலைவன்; (வாதை - துன்பம்); (உறுதல் - அனுபவித்தல்);

சீத(ம்)மலி கங்கைநதித் திரை மோது செஞ்சடையான் - குளிர்ச்சி மிகுந்த கங்கையாற்றின் அலைகள் மோதுகின்ற சிவந்த சடையுடையவன்; (திரை - )லை;

பேதை ஒரு பங்கு அமரும் பேரூர் எம் பெருமானே - உமை ஒரு பாகம் விரும்பும், பேரூரில் உறையும் எம்பெருமான்; (பேதை - பெண்);


3)

அரியதமிழ் பாடியடி அடைந்தார்தம் இடர்தீர்ப்பான்,

திரியரணம் மூன்றெய்யச் சிலையாக மலைவளைத்தான்,

வரியரவ அரைநாணன், வார்சடைமேல் மதிசூடி,

பெரியவிடை ஒன்றேறும் பேரூரெம் பெருமானே.


திரி அரணம் மூன்று எய்யச் சிலையாக மலை வளைத்தான் - எங்கும் திரிந்த முப்புரங்களை எய்ய மேருமலையை வில்லாக வளைத்தவன்;

வரி-ரவ அரைநாணன் - வரியுடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

வார்-சடைமேல் மதிசூடி - நீள்சடைமேல் சந்திரனைச் சூடியவன்;


4)

பன்னியிரு பாதமலர் பணிவார்தம் இடர்தீர்ப்பான்,

மின்னலென முப்புரிநூல் மிளிர்மார்பில் வெண்ணீற்றன்,

தன்னிகரில் தலைவன்,முன் தக்கன்செய் வேள்விசெற்றான்,

பின்னுசடைப் பிறைசூடி, பேரூரெம் பெருமானே.


பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்;

தன் நிகர் இல் தலைவன் - தனக்கு எவ்வொப்பும் இல்லாத தலைவன்;

தக்கன் செய் வேள்வி செற்றான் - தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்;

பின்னு-சடைப் பிறைசூடி - பின்னுகின்ற (முறுக்குண்ட) சடையின்மேல் பிறையை அணிந்தவன்;


5)

மறவாது நாள்தோறும் வழிபடுவார் இடர்தீர்ப்பான்,

இறவாது மார்க்கண்டர் இருக்கநமன் தனையுதைத்தான்,

மறையோது திருநாவன், மலைமங்கை மணவாளன்,

பிறவாத பெருமையினான், பேரூரெம் பெருமானே.


மறை ஓது திருநாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;


6)

கடிமலரிட் டடிவாழ்த்தும் காதலர்தம் இடர்தீர்ப்பான்,

துடிபறைகள் பலவார்க்கச் சுடலைதனில் நடமாடி,

கடியவிடை ஊர்தியினான், காமனைக்காய் கண்ணுதலான்,

பிடிநடையாள் ஒருபங்கன், பேரூரெம் பெருமானே.


கடிமலர் இட்டு அடிவாழ்த்தும் காதலர்தம் இடர் தீர்ப்பான் - வாசமலர்களைத் தூவித் திருவடியை வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

துடி பறைகள் பல ஆர்க்கச் சுடலைதனில் நடமாடி - உடுக்கை, பறை முதலிய வாத்தியங்கள் பல ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்தாடுபவன்; (ஆர்த்தல் - ஒலித்தல்);

கடிய விடை ஊர்தியினான் - விரைந்து செல்லும் இடபவாகனம் உடையவன்; (கடி - விரைவு);

காமனைக் காய் கண்ணுதலான் - மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (காய்தல் - கோபித்தல்; எரித்தல்);

பிடி-நடையாள் ஒரு பங்கன் - பெண்யானை போன்ற நடையை உடைய உமையைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவன்; (பிடி - பெண்யானை);

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


7)

அறைகழலை அனுதினமும் அருச்சிப்பார் இடர்தீர்ப்பான்,

மறைமுதல்வன், அந்தகனை மாய்த்ததிரி சூலத்தன்,

கறையொளிரும் கண்டத்தன், களிற்றுரிவை போர்த்தபிரான்,

பிறைமதியைச் சடைக்கணிந்த பேரூரெம் பெருமானே.


அறைகழலை - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை;

மறைமுதல்வன் - வேதமுதல்வன்;

அந்தகனை மாய்த்த திரிசூலத்தன் - அந்தகாசுரனை அழித்த சூலபாணி; (அந்தகன் - அந்தகாசுரன்);

கறை ஒளிரும் கண்டத்தன் - நீலகண்டன்;

களிற்று-உரிவை போர்த்த பிரான் - யானைத்தோலைப் போர்த்த தலைவன்;


8)

நித்த(ம்)மலர் தூவியடி நினைவார்தம் இடர்தீர்ப்பான்,

பத்துமுடி அரக்கனழப் பாதவிரல் ஊன்றியவன்,

மத்த(ம்)மதி திகழ்முடிமேல் வாளரவும் வைத்துகந்த

பித்தனெனும் பேருடையான், பேரூரெம் பெருமானே.


நித்தம் மலர் தூவி அடி நினைவார்தம் இடர் தீர்ப்பான் - தினமும் பூக்களைத் தூவித் திருவடியை நினைந்து தொழும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

பத்துமுடி அரக்கன் அழப் பாதவிரல் ஊன்றியவன் - பத்துத்தலை இராவணன் அழும்படி திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்;

மத்தம் மதி திகழ் முடிமேல் வாளரவும் வைத்து உகந்த பித்தன் எனும் பேர் உடையான் - ஊமத்த-மலரும் சந்திரனும் விளங்கும் தலையின்மேல் கொடிய பாம்பையும் தாங்கி மகிழ்பவன், பித்தன் (பேரருளாளன்) என்ற பெயரை உடையவன்;

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


9)

கண்ணிபல புனைந்தேத்திக் கைதொழுவார் இடர்தீர்ப்பான்,

மண்ணிடந்த மாயவனும் வானிலுயர் மலரோனும்

நண்ணலரும் சோதியினான், நால்வேதப் பொருளானான்,

பெண்ணிடமாம் பெற்றியினான், பேரூரெம் பெருமானே.


கண்ணி பல புனைந்து ஏத்திக் கைதொழுவார் இடர் தீர்ப்பான் - பல மாலைகள் (பூமாலை / பாமாலை) தொடுத்துத் துதித்து வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை; சிலவகைப் பாடல்களில் வரும் இரண்டடி உள்ள பகுதி);

மண் இடந்த மாயவனும் வானில் உயர் மலரோனும் நண்ணல் அரும் சோதியினான் - நிலத்தை அகழ்ந்த திருமாலாலும் உயரப் பறந்த பிரமனாலும் அடைவதற்கு அரிய ஜோதி; (நண்ணல் - நண்ணுதல் - நெருங்குதல்);

நால்வேதப்-பொருள் ஆனான் - நாள்வேதங்கள் கூறும் மெய்ப்பொருள் ஆனவன்;

பெண் இடம் ஆம் பெற்றியினான் - உமையை இடப்பாகத்தில் உடைய பண்பினன்;

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


10)

நெற்றிமிசை நீறணிந்து நினைவார்தம் இடர்தீர்ப்பான்,

குற்ற(ம்)மிகு மொழிபேசிக் கூட்டஞ்சேர் கொள்கையினார்

சற்றுமறி யாத்தலைவன், தண்மதிசேர் தாழ்சடையன்,

பெற்றமிவர் பெருமையினான், பேரூரெம் பெருமானே.


நெற்றிமிசை நீறு அணிந்து நினைவார்தம் இடர் தீர்ப்பான் - நெற்றியில் திருநீற்றைப் பூசி எண்ணி வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

குற்ற(ம்)மிகு மொழி பேசிக் கூட்டம் சேர் கொள்கையினார் சற்றும் அறியாத் தலைவன் - குற்றம் மிகுந்த புன்மொழிகள் பேசிக் கூட்டத்தைச் சேர்க்கும் கொள்கை உடையவர்கள் அறியாத தலைவன்;

தண்மதி சேர் தாழ்சடையன் - குளிர்ந்த திங்களைத் தாழும் சடையில் அணிந்தவன்;

பெற்றம் இவர் பெருமையினான் - இடபத்தின்மேல் ஏறும் பெருமை உடையவன்; (பெற்றம் - எருது); (இவர்தல் - ஏறுதல்);

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


11)

பண்தங்கு பாடலினால் பரவிடுவார் இடர்தீர்த்து

விண்தங்கு வாழ்வளிப்பான், விரிசடைமேல் வெண்பிறையன்,

கண்தங்கு நெற்றியினாற் காமனைமுன் காய்ந்தபிரான்,

பெண்தங்கு மேனியினான், பேரூரெம் பெருமானே.


பண் தங்கு பாடலினால் பரவிடுவார் இடர் தீர்த்து விண் தங்கு வாழ்வு அளிப்பான் - இனிய இசை பொருந்திய பாமாலைகளால் துதிக்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து அவர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தருபவன் (/ தருவான்);

விரிசடைமேல் வெண்பிறையன் - விரிந்த சடைமேல் வெண்திங்களை அணிந்தவன்;

கண் தங்கு நெற்றியினால் காமனை முன் காய்ந்த பிரான் - நெற்றிக்கண்ணால் மன்மதனை முன்பு எரித்த தலைவன்;

பெண் தங்கு மேனியினான் - உமையொரு பங்கன்;

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment