2017-11-24
P.412 - கன்றாப்பூர்
---------------------------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")
1)
முறைமுறை ஏத்தும் அன்பர் .. முன்வினை நீக்கி இன்பம்
நிறையருள் நீல கண்டர் .. நெற்றியிற் கண்ணர் பூதம்
பறைமுழ வார்க்க ஆடும் .. பரமனார் சோலை சூழ்ந்து
நறைகமழ் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
முறைமுறை ஏத்தும் அன்பர் முன்வினை நீக்கி இன்பம் நிறை அருள் நீலகண்டர் - முறைப்படி நாள்தோறும் வழிபடும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து இன்பமும் நிறைவும் அருளும் நீலகண்டர்; (நிறை - மாட்சிமை; மனவடக்கம்); (நிறையருள் - 1. நிறை அருள்; / 2. "நிறைய அருள்" - நிறைய என்பதில் ஈற்று அகரம் தொக்குப் புணர்ந்தது என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 6.56.1 - "நிறையுடைய நெஞ்சினிடையாய் போற்றி");
நெற்றியில் கண்ணர் - முக்கண்ணர்;
பூதம் பறை முழவு ஆர்க்க ஆடும் பரமனார் - பூதகணங்கள் பறைகளையும் முழவுகளையும் ஒலிக்கத் திருநடம் செய்யும் பரமர்;
சோலை சூழ்ந்து நறை கமழ் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர், பொழில்களால் சூழப்பெற்று மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (நறை - வாசனை);
2)
குறைகளைக் கூறி நின்று .. குரைகழல் வாழ்த்தி னார்க்குக்
குறைவறக் கொடுக்கும் வள்ளல் .. குஞ்சரத் துரிவை போர்த்தார்
சிறையளி நாடு கொன்றைச் .. சென்னியர் தேவ தேவர்
நறைகமழ் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
குறைகளைக் கூறி நின்று குரைகழல் வாழ்த்தினார்க்குக் குறைவறக் கொடுக்கும் வள்ளல் - தம் குற்றங்களைச் சொல்லி அருள்வேண்டி நின்று, ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் அவர்;
குஞ்சரத்து உரிவை போர்த்தார் - யானைத்தோலைப் போர்த்தவர்; (குஞ்சரம் - யானை); (உரிவை - தோல்);
சிறை-அளி நாடு கொன்றைச் சென்னியர் தேவ தேவர் - சிறகுடைய வண்டுகள் அடையும் கொன்றைமலரைத் தலையில் சூடியவர், தேவர்க்கெல்லாம் தேவர் (மகாதேவர்); (சிறை - சிறகு); (அளி - வண்டு);
நறை கமழ் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர், (பொழில்களால் சூழப்பெற்று) மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;
3)
கறையணி கண்ட என்று .. கைதொழும் அன்பர்க் கன்பர்
மறையது பாடு நாவர் .. வந்தடி போற்றி செய்த
பிறைதனைச் சூடு பண்பர் .. பிடிநடை மங்கை பங்கர்
நறைகமழ் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
"கறை அணி கண்ட" என்று கைதொழும் அன்பர்க்கு அன்பர் - "நீலகண்டனே" என்று கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவர்;
மறையது பாடு நாவர் - வேதத்தைப் பாடியருளியவர்; (மறையது - மறை; அது - பகுதிப்பொருள்விகுதி);
வந்து அடி போற்றிசெய்த பிறைதனைச் சூடு பண்பர் - வந்து திருவடியை வணங்கிய தேய்ந்த சந்திரனைத் திருமுடிமேல் சூடிய அருளாளர்;
பிடி-நடை மங்கை பங்கர் - பெண்யானை போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்காக உடையவர்; (பிடி - பெண்யானை);
நறை கமழ் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர், (பொழில்களால் சூழப்பெற்று) மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;
4)
மறையவன் உயிரைக் காத்து .. மறலியைச் செற்றார் பாலைத்
துறையணி அன்பில் ஆலந் .. துறைதவத் துறைய மர்ந்த
இறையவர் ஓடொன் றேந்தி .. இடுபலிக் குழலும் செல்வர்
நறைகமழ் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
மறையவன் உயிரைக் காத்து மறலியைச் செற்றார் - மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் கூற்றுவனை உதைத்தவர்; (மறலி - நமன்; மறலுதல் - கொல்லுதல்); (செறுதல் - அழித்தல்);
பாலைத்துறை, அணி அன்பில் ஆலந்துறை, தவத்துறை அமர்ந்த இறையவர் - திருப்பாலைத்துறை, அழகிய அன்பில் ஆலந்துறை, திருத்தவத்துறை முதலிய தலங்களில் விரும்பி எழுந்தருளிய இறைவர்; (திருப்பாலைத்துறை (பாபநாசம் - காவிரித் தென்கரைத் தலம்), அன்பில் ஆலந்துறை (அன்பில்), திருத்தவத்துறை (லால்குடி) - தலங்கள் பெயர்கள்);
ஓடு ஒன்று ஏந்தி இடுபலிக்கு உழலும் செல்வர் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்குத் திரியும் செல்வர்;
நறை கமழ் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர், (பொழில்களால் சூழப்பெற்று) மணம் கமழும் கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;
5)
எறும்பியூர் திருவா னைக்கா .. எனப்பல தலங்கள் மேயார்
உறும்பெரு விடங்கண் டஞ்சும் .. உம்பரைக் காத்து நீலம்
பெறும்திரு மிடற்றர் நாகம் .. பிறையொடும் சூடு பித்தர்
நறும்பொழிற் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
எறும்பியூர் திருவானைக்கா எனப் பல தலங்கள் மேயார் - திருவெறும்பூர், திருவானைக்கா எனப் பல தலங்களில் உறைகின்றவர்;
உறும் பெரு-விடம் கண்டு அஞ்சும் உம்பரைக் காத்து நீலம் பெறும் திரு-மிடற்றர் - தோன்றிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சிய தேவர்களைக் காத்து நீலநிறம் பெற்ற கண்டத்தை உடையவர்; (உறுதல் - நிகழ்தல்; மிகுதல்);
நாகம் பிறையொடும் சூடு பித்தர் - பாம்பைப் பிறைச்சந்திரனோடு சூடியவர், பித்தர் எனப்படும் பேரருளாளர்;
நறும்-பொழில் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - மணம் கமழும் சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;
6)
குளிர்புனல் ஆட்டும் அன்பர் .. கோரிய எல்லாம் ஈவார்
மிளிர்விட நாகத் தாரர் .. மேருவில் ஏந்து வீரர்
தளிர்மதி தாங்கு கின்ற .. சடையிடைக் கங்கை ஆற்றர்
நளிர்பொழிற் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
குளிர்-புனல் ஆட்டும் அன்பர் கோரிய எல்லாம் ஈவார் - குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபடும் பக்தர்கள் வேண்டும் வரங்களையெல்லாம் அருள்வார்;
மிளிர்-விட-நாகத் தாரர் - ஒளியுடைய விஷப்பாம்பை மாலையாக அணிந்தவர்; (மிளிர்தல் - பிரகாசித்தல்); (தார் - மாலை);
மேரு-வில் ஏந்து வீரர் - மேருமலையை வில்லாக ஏந்திய வீரர்;
தளிர்-மதி தாங்குகின்ற சடையிடைக் கங்கை ஆற்றர் - தளிர் போன்ற இளந்திங்களைச் சூடிய சடையில் கங்கையாற்றை அடைத்தவர்;
நளிர்-பொழில் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - குளிர்ந்த சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (நளிர்தல் - குளிர்தல்);
7)
ஓடிடு பலிக்கென் றேந்தி .. ஊர்பல சென்றி ரப்பார்
பாடிடு பத்தர்க் கின்பம் .. பயப்பவர் சுடலை தன்னில்
ஆடிடு செம்பொற் பாதர் .. அஞ்சிறை வண்டி னங்கள்
நாடிடு கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
ஓடு இடுபலிக்கு என்று ஏந்தி ஊர் பல சென்று இரப்பார் - பிச்சைக்கு என மண்டையோட்டை ஏந்திப் பல ஊர்களுக்குச் சென்று யாசிப்பவர்;
பாடிடு பத்தர்க்கு இன்பம் பயப்பவர் - தேவாரம் முதலிய பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இன்பம் தருபவர்; (பயத்தல் - கொடுத்தல்);
சுடலை-தன்னில் ஆடிடு செம்பொற்-பாதர் - சுடுகாட்டில் கூத்தாடும் அழகிய பொற்பாதம் உடையவர்;
அஞ்சிறை வண்டினங்கள் நாடிடு கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் நாடுகின்ற (சோலை சூழ்ந்த) கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (அஞ்சிறை - அம் சிறை; அம் - அழகு; சிறை - சிறகு);
8)
மற்புயம் நாலைந் துன்னி .. நனிசின நெஞ்ச னாகி
வெற்பினைப் பெயர்த்தான் தன்னை .. விரலிறை வைத்த டர்த்தார்
பற்பல பெயர்கள் பாடிப் .. பரவிட வாளும் ஈந்தார்
நற்பொழிற் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
மல்-புயம் நாலைந்து உன்னி, நனி சின நெஞ்சன் ஆகி வெற்பினைப் பெயர்த்தான்-தன்னை விரல் இறை வைத்து அடர்த்தார் - தனது வலிய புஜங்கள் இருபதை எண்ணி, மிகுந்த சினத்தோடு கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை, ஒரு விரலைச் சிறிதளவு ஊன்றி நசுக்கினார்; (மல் - வலிமை); (நாலைந்து = 4 x 5 = 20); (நனி - மிகுந்த); (வெற்பு - மலை); (இறை - சிறிதளவு); (அடர்த்தல் - நசுக்குதல்);
பற்பல பேர்கள் பாடிப் பரவிட வாளும் ஈந்தார் - (பிறகு) அவன் ஈசனாரின் திருநாமங்கள் பலவற்றைப் பாடி அழுது தொழக் கண்டு அவனுக்கு இரங்கி (நீண்ட ஆயுளும், இராவணன் என்ற பெயரும்,) சந்திரஹாஸம் என்ற வாளும் கொடுத்தவர்; (வாளும் - உம் - எச்சவும்மை);
நற்பொழில் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - நல்ல சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (நல்ல – நன்மையான; சிறந்த; பெரிய); (அப்பர் தேவாரம் - 6.33.7 - "இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத் தினிதமரும் பெருமானை");
9)
நேடரி பிரமன் அன்று .. நிலம்விசும் போடி வாட
நீடெரி ஆன நாதர் .. நித்தியர் முடிமேல் திங்கள்
மாடெறி புனலர் ஏற்றர் .. மாதுமை யாளோர் பங்கர்
நாடறி கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
நேடு அரி பிரமன் அன்று நிலம் விசும்பு ஓடி வாட நீடு எரி ஆன நாதர் - தேடுகின்ற விஷ்ணுவும் பிரமனும் முன்பு மண்ணை அகழ்ந்தும் வானில் பறந்து சென்றும் அடிமுடி காணாமல் வாடும்படி நீண்ட ஜோதி ஆன தலைவர்; (நேடுதல் - தேடுதல்); (விசும்பு - ஆகாயம்); (நீடுதல் - நீள்தல்);
நித்தியர் - அழிவற்றவர்;
முடிமேல் திங்கள் மாடு எறி புனலர் - திருமுடிமேல் சந்திரன் பக்கத்தில் அலைமோதும் கங்கையை உடையவர்; (மாடு - பக்கம்); (எறிதல் - அலையெறிதல்);
ஏற்றர் - இடபவாகனம் உடையவர்;
மாதுமையாள் ஓர் பங்கர் - உமையை ஒரு பங்கில் உடையவர்; (* மாதுமை - திருக்கன்றாப்பூர் இறைவி திருநாமம்);
நாடு அறி கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - புகழுடைய கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;
10)
புன்மையார் சொல்லே பேசும் .. பொய்ந்நெறி யோர்கட் கெட்டாத்
தன்மையார் நீறு பூசித் .. தாள்தொழு வாரைத் துன்பம்
இன்மையார் ஆக்கும் இன்பர் .. எருதுகந் தேறும் ஈசர்
நன்மையார் கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
புன்மை ஆர் சொல்லே பேசும் பொய்ந்நெறியோர்கட்கு எட்டாத் தன்மையார் - குற்றமுடைய இழிந்த பேச்சே பேசும் பொய்ந்நெறியோர்களால் அடைய ஒண்ணாதவர்; (புன்மை - குற்றம்; இழிவு; சிறுமை); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (நெறி - மார்க்கம்; வழி; சமயம்);
நீறு பூசித் தாள் தொழுவாரைத் துன்பம் இன்மையார் ஆக்கும் இன்பர் - திருநீற்றைப் பூசி அன்போடு திருவடியை வணங்கும் பக்தர்களைத் துன்பம் அற்றவர்கள் ஆக்கி அருள்பவர், இன்பவடிவினர்;
எருது உகந்து ஏறும் ஈசர் - இடபவாகனத்தை விரும்பிய ஈசர்;
நன்மையார் கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - நன்மையுடையவர்; நன்மை மிக்க கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (நன்மையார் - 1. நன்மையுடையவர்; 2; நன்மை + ஆர் = நன்மை மிக்க); (ஆர் - மரியாதைப் பன்மை விகுதி); (ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்);
11)
பலமலர் தூவி நாளும் .. பைங்கழல் ஏத்து பத்தர்
நிலமிசைப் பிறவா வண்ணம் .. நீள்விசும் பாள வைப்பார்
சலமலி சடையர் வெண்ணூல் .. தாங்கிய பவள மார்பர்
நலமலி கன்றாப் பூரில் .. நடுதறி அப்ப னாரே.
பல மலர் தூவி நாளும் பைங்கழல் ஏத்து பத்தர் நில(ம்)மிசைப் பிறவா வண்ணம் நீள்-விசும்பு ஆளவைப்பார் - தினமும் பல பூக்களைத் தூவி அழகிய கழல் அணிந்த திருவடியை வழிபடும் பக்தர்கள் மீண்டும் இப்பூமியில் பிறவிகள் அடையாதபடி (அவர்களது வினைகளை அழித்து), அவர்களைச் சிவலோகத்தில் இருக்கும்படி அருள்பவர்; (பைங்கழல் - பசிய கழலை அணிந்த திருப்பாதம்); (பைம்மை - பசுமை - அழகு); (விசும்பு - விண்ணுலகம்); (அப்பர் தேவாரம் - 4.49.6 - "சாக்கியனார் நெல்லினார் சோறுணாமே நீள்விசும் பாள வைத்தார்");
சல(ம்) மலி சடையர் - சடையில் கங்கையை உடையவர்; (சலம் - ஜலம் - நீர்);
வெண்ணூல் தாங்கிய பவள-மார்பர் - பவளம் போன்ற செந்நிறம் திகழும் திருமார்பில் பூணூல் தரித்தவர்;
நல(ம்) மலி கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - நன்மை மிக்க கன்றாப்பூரில் உறைகின்ற "நடுதறி அப்பன்" என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்; (மலிதல் - மிகுதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment